' மேஜிக் ஷூ '

புதன், செப்டம்பர் 29, 2010

              சுட்டி டிவி-ல ' மேஜிக் ஷூ 'ன்னு ஒரு ப்ரோக்ராம் வருது. அந்த கார்ட்டூன் இப்போ என்னோட பையனோட ஃபேவரைட் ப்ரோக்ராமாக ஆகிடுச்சு. அந்தக் கார்ட்டூன் ரொம்ப நல்லா இருக்கு.        ' டோரா ' அளவுக்கு இது பிரபலம் ஆகலேன்னாலும், அதே மாதிரி இதுவும் பிரபலம் ஆகிடும்னு நினைக்கிறேன். இப்போ  ' டோரா ' சுட்டி டிவி-ல ஒளிபரப்பாகுறது இல்ல. அதனால இததான் விரும்பி குழந்தைங்க பார்க்குறாங்க.



              இந்த ' மேஜிக் ஷூ ' ப்ரோக்ராம்ல ' ப்ராணி '  ( பேரே அதுதான் ) தான் ஹீரோயின். அவளுடைய தாத்தா பழைய ஷூக்களை ரிப்பேர் பண்ணிக் குடுப்பார். அப்படி தினமும் சரி செய்றதுக்காக கஸ்டமர் கொண்டு வர்ற ஷூவை ப்ராணி போட்டதும், அது மேஜிக் ஷூவா மாறி, அவளை வெவேறு இடங்களுக்கு தூக்கிட்டுப் போகுது.



                  ஒவ்வொரு நாளும், பனிப்பிரதேசம், மலைப்பிரதேசம், பாலைவனம்னு ஒவ்வொரு இடத்துக்குப் போகுறா. அங்க இருக்குறவங்களுக்கு உதவுறா. புதுசா எதாச்சும் கத்துக்குறா. அதை வந்து அவளோட தாத்தாகிட்ட சொல்றா. இதுபோல ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கதை நடக்குது. நல்லா விதவிதமா யோசிச்சு எடுக்கறாங்க. குட்டீஸ்க்கெல்லாம் இது ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராமாக இருக்கும்னு நினைக்கிறேன். ' அலெர்ட் ஆறுமுகம் ' , ' டெலக்ஸ் பாண்டியன் ' இது மாதிரி வடிவேலுவை மையமா வச்சு எடுக்குற கார்ட்டூன்களுக்கு மத்தியில இந்த ' மேஜிக் ஷூ ' ஒரு வித்தியாசமான கார்ட்டூனாக இருக்கு. நேரம் இருந்தா பாருங்க!

அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்

திங்கள், செப்டம்பர் 27, 2010

வில்லுப்பாட்டு 



கரகாட்டம்



 


மயிலாட்டம்



பொய்க்கால்குதிரை ஆட்டம் 


தப்பாட்டம்



மாடு ஆட்டம்


தெருக்கூத்து 


பொம்மலாட்டம் அல்லது பாவைக்கூத்து


காவடியாட்டம்


இந்தப் படங்கள்ல இருக்குற கலைகளையெல்லாம் நாம
பெரும்பாலும் டிவிலயும், போட்டோக்கள்லயும் தான்
பார்த்திருப்போம். அந்த அளவுக்கு இந்தக்கலைகள் எல்லாம்
கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது.  இதைப் பற்றி நான்
எழுதிய கட்டுரையை கழுகு - இல்  படிக்கலாம்.

வேலைக்குச் செல்லும் அம்மாக்களின் ஏக்கம்...

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

            நான் காலேஜ் முடிச்சிட்டு வேலை தேடிக்கிட்டு இருந்தப்போ ,ஒருநாள் என் ஃப்ரண்ட் ஒருத்தியை பார்த்துப் பேசிட்டுருந்தேன். அவளுக்கு வேலை கிடைச்சு, கல்யாணம் ஆகியிருந்துச்சு. எனக்கு இன்னும் வேலை கிடைக்கலைனு அவகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தப்போ, உடனே அவ , " வேலை கிடைச்சா நல்லது; கிடைக்காட்டி ரொம்ப நல்லது " னு சொன்னா. அவளுக்கு வேலை கிடைச்சிட்டதால இப்படி அவ பேசுறானு நான் அப்போ நெனச்சேன். திரும்ப சமீபத்துல அவளப் பார்த்தப்போ,அவ என்னைப் பத்திக் கேட்டா. "நான் இப்போ இல்லத்தரசியா, ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கேன்"னு சொன்னவுடனே, "நீ ரொம்ப குடுத்து வச்சவடி" அப்படினு
சொன்னா.


             "உனக்கென்ன குறைச்சல்? நல்ல வேலைல இருக்க; அன்பான ஹஸ்பண்ட், குழந்தை. அப்புறம் என்ன?னு கேட்டேன். அதுக்கு அவ, "மெட்டர்னிட்டி லீவு முடிஞ்சி,  3 மாசக்குழந்தைய விட்டுட்டு, ஆஃபீசுக்கு ஒடினேன். குழந்தை என்ன செஞ்சுச்சோனு ஒரே கஷ்டமா இருக்கும். அப்போலாம் வாழ்க்கையே வெறுத்து போறமாதிரி இருக்கும். ஆறு மாசத்தில் குழந்தைக்கு இட்லி பிசைஞ்சு ஊட்டினதில்ல. முதன்முதலா குழந்தை நடந்தப்போ அத பார்த்து ரசிச்சதில்ல; முதன்முதலா 'அம்மா' னு சொன்னதக் கேட்கல. காலையில அரக்கப் பரக்க சமைச்சு வச்சிட்டுப் போறதை ஆயாம்மா, டிவி சீரியல் பாத்துகிட்டே ஊட்டிவிட, அதை சாப்பிட்டுட்டு, நான் வீடு திரும்பும்போது குழந்தை ஒடி வந்து என் காலை, ஏக்கத்தோட கட்டிப்பிடிச்சுக்குவா. சிலசமயம் என்ன விட, அதிக நேரம் இருக்குற, ஆயாம்மாகிட்ட ஒட்டிக்கிட்டு, எங்கிட்ட வரமாட்டா.


             கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிக்கவும், 'அகில் அம்மா மட்டும் அவனோடயே இருக்காங்க; நீ மட்டும் என்னைய விட்டுட்டு ஆஃபீசுக்கு போற" னு என்னையே வெறுக்க ஆரம்பிச்சுட்டா. என் கணவருக்கு ஷுகர் ஆரம்ப நிலையில இருக்குறது தெரிஞ்சதும், காலையில அரைமணி நேரம் முன்னாடியே, எழுந்திருச்சு அவரோட வாக்கிங் போகனும். காலைலயும், சாயந்தரமும் ஓட்ஸ் கஞ்சி வச்சுக் குடுக்கனும். வெந்தயத்தை ஊற வச்சு மறுநாள் காலைல குடிக்கக் குடுக்கனும்' அப்படினு எடுத்த தீர்மானங்கள் ஒன்னைக் கூட செய்ய முடியாமப் போச்சு. இந்த லட்சணத்தில எனக்கு நிரந்தரமாவே வலிச்சிட்டு இருக்குற இடுப்புக்கும், காலுக்கும் ஒத்தடம் எப்படி குடுக்க நேரம் இருக்கும்?

               அதிர்ஷ்டவசமா கிடைச்ச ஒருநாள் லீவுல, சித்தி மகள்
கல்யாணத்துக்குத் தெரியாத்தனமா, போயிட்டேன். அது நடந்து ஒரு வருஷம் ஆகியும், "ஒன் வீட்டு விசேஷம்னா மட்டும் லீவு கெடைக்குது"னு புகுந்த வீட்டுல இன்னும் சொல்லிக்காட்டிக்கிட்டு இருக்காங்க. அதுக்குப் பிறகு நடந்து முடிஞ்ச நூறு எங்க வீட்டு விசேஷங்களுக்கு லீவு கிடைக்காம நான் போகாததை இவங்க ' ஞாபகமா ' மறந்துடறாங்க. எந்த விசேஷத்துக்கும் போகமுடியாம, "என்னவோ சீமையில இல்லாத வேலையப் பார்க்குறாளாம்." னு சாபத்த வேற வாங்கிக்கட்டிக்க வேண்டிருக்கு. இதனால ஆசை இருந்தும் ஒரு குழந்தையே போதும்னு முடிவு பண்ணியாச்சு.



           என்னோட அறுந்து போன கொலுசைக்கடையில் போட்டுட்டு, புதுக்கொலுசு வாங்கனும். அடுத்த மாசம் பாத்துக்கலாம்னு ஆறு மாசத்துக்கு முன்னால முடிவுபண்ணேன். ஆனா, நாத்தனார் பிறந்த நாள், மாமனாரோட உடைஞ்ச பல் செட், ஸ்கூல் டெர்ம்  ஃபீஸ் னு அடுத்தடுத்த மாசம் வரிசையா செலவு வந்துகிட்டுதான் இருக்கு. சம்பளம் அதிகமா வாங்கினாலும் நெலம இப்படித்தான் இருக்கு. வெளிநாட்டில இருந்து வந்திருக்குற, தம்பிய ஒருநாள் பாத்திட்டு வரக்கூட நேரம் இருக்காது. அப்படியே ஏதாச்சும் ஒரு ஞாயித்துக்கிழம போலாம்னு நினைக்கும்போது எங்க வீட்டுக்கு யாராச்சும் கெஸ்ட் வந்திருவாங்க. அஞ்சு வயசுவரை தூக்கி சுமந்து, கதை சொல்லி வளர்த்த தாத்தா இறந்துட்டார்னு நியூஸ் வந்தும்.உடனே போக முடியாமல், அவர் முகத்தையே பார்க்கமுடியாமல் போயிடுச்சு. இவ்வளவு ஏன்? இன்னிக்கு உன்ன பார்த்திருக்கேன்.இனிமே எப்போ திரும்ப பார்க்கப்போறேன்னு தெரியல இப்போ சொல்லு நான் குடுத்து வச்சவளா, நீயா" அப்படினு அவளோட மனக்குமுறலை கொட்டித் தீர்த்துட்டா.
அப்புறமாத்தான் எனக்குப் புரிஞ்சது "ஆமால்ல? அவ சொன்ன மாதிரியே உண்மையிலயே நம்ம குடுத்துவச்சவதான்"னு.....

                                ================================================
பி.கு.
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html
வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்ததற்கு, திரு. ஜெய்லானி அவர்களுக்கு மிக்க நன்றி...

உலக ரோஜா தினம்

புதன், செப்டம்பர் 22, 2010

இன்னிக்கு ரோஜாக்கள் தினம். அதனால எல்லாருக்கும் கலர்கலரா ரோஜாக்கள் கொடுக்கறேன்.


           ரோஜானாலே எல்லாருக்கும் பிடிக்கும். ( மணிரத்னம் படத்தை சொல்லல! ). ரோஜாப்பூவைப் பிடிக்காதவங்க யாருமே இருக்கமாட்டாங்க. நம்ம முன்னாள் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்களுக்குக் கூட ரோஜான்னா அவ்வளவு இஷ்டமாம். அதனாலதான் அவருக்கு "ரோஜாவின் ராஜா" அப்படிங்கற பேரும் உண்டு. கலர்கலராப் பூத்துக்குலுங்கும் ரோஜாக்களைப் பார்க்கும்போதே, கண்களுக்குக் குளிர்ச்சியாகவும், மனசுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதனாலதான், வெற்றிபெற்றவங்களை பாராட்டுவதிலிருந்து, நோயுற்றவர்களுக்கு ஆறுதல் சொல்றவரை எல்லாத்துக்கும் ரோஜாப்பூங்கொத்து கொடுக்கறோம். கல்யாணம் போன்ற எந்த ஒரு
விழாவுக்கும் ' ரோஸ் பொக்கே' கொடுக்கறதுதான் இப்போ  ஃபேஷன்.


              இந்த ரோஜாக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, ஐரோப்பாவுல கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அதுக்கப்புறம், 1798-ல் வடஅமெரிக்கவுல, ஜோஸ்ஃபின் அப்படிங்கறவங்க 250 வகையான ரோஜாப்பூக்களை அவங்க ரோஜாத்தோட்டத்தில வச்சிருந்தாங்களாம். ரோஜாக்கள் பல வடிவங்களிலயும் பல கலர்களிலயும் இருக்கு. இதுல, மஞ்சள் கலர் ரோஜா நட்பையும், வெள்ளை கலர் ரோஜா சமாதானத்தையும் குறிக்கிறது.


              ஃப்ரான்ஸ் நாட்டோட தேசிய மலர் இந்த ரோஜா தான்.
உலகிலேயே நெதர்லாந்துதான் ரோஜா ஏற்றுமதியில் முனனனியில் இருக்கு. சின்ன, குட்டியான ரோஜாவுல இருந்து, பெரிய ரோஜா வரைப் பல வகைகள் இந்த உலகம் முழுக்க இருக்கு. மேலும், நம்ம நாட்டுல, காஷ்மீர் ரோஜா, ஊட்டி ரோஜா என பல வகைகள் இருக்கு. வெள்ளை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என பல கலர்களிலயும் நாம ரோஜாக்களைப் பார்த்திருப்போம். ஆனா கறுப்பு கலர் ரோஜாதான் ஊட்டி மலர்க்கண்காட்சியில் ஃபேமஸ்.
இதுபோல மலர்க்கண்காட்சிகளுக்கு, ரோஜாக்களினால்தான்
பெருமையே! கல்யாணம் போன்ற விழாக்களை, அலங்கரிப்பதிலயும் ரோஜாக்களின் பங்கு ரொம்ப முக்கியமானது. பரிசாகக் கொடுப்பதற்கு ரோஜாப் பூங்கொத்தையும் ஒற்றை ரோஜாவையும் தவிர சிறந்தது வேற இல்லை. அதனால இன்னிக்கு, இந்த ரோஜா தினத்தில், எல்லாரும் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ரோஜாக்களைப் பரிசாக கொடுத்து மகிழ்வோம்.

பெண்கள் விரும்புவது...

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

              ' திருமணமான பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' அப்படிங்கற தலைப்பைப் பார்த்த உடனே, ஆஹா! நமக்குத் தேவையானதாச்சேனு படிச்சேன். படிச்சதும் இதைக் கண்டிப்பா, ப்ளாக்ல எழுதணும்னு தோணுச்சு. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'..இனி படித்ததிலிருந்து...


               "அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் ' பேகோ அண்டர்கில் ' என்பவர், ' திருமணமான பெண்கள் விரும்புவது என்ன? ' என்ற கேள்விக்கு, " பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் வெறுப்படைகின்றனர். இதற்கு வெறும் 25 விஷயங்களைச் செய்துவிட்டால் போதும் அவர்கள் உற்சாகமாக இருப்பர் " என்று அந்த 25 விஷயங்களைப் பற்றிக் கூறியுள்ளார். அவை:

1. கொழுப்பு குறைய வேண்டும் : உடலில் சதை போடுவது பெண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையைக் குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலைக் கணவர் பாராட்ட வேண்டும் : உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆஹா, ஓஹோ எனப் பாராட்ட வேண்டும். அவர்களும்  நன்றாக சமையலைக் கற்றுக்கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல : வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக்கூடாது. சினிமாவில்தான் அப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான் வாழ்க்கையில் மனைவியையும் சரிசமமாக நடத்த வேண்டும்.

4. ஆண்மகன் : சிறந்த ஆண்மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்கவேண்டும். திறமையை வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும்.

5. பொறுப்பு : காலையில் வேலைக்குச் செல்லும்போது, கண்ணாடி எங்கே? சாவி எங்கே? என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக்கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ளவேண்டும்.

6. கட்டுப்பாடு : உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்குத்  தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக்கூடாது.

7. விடுமுறை : விடுமுறை நாட்களில் விரும்பியபடி, ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக்கூடாது.

8. தொந்தரவு : எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் எனத் தொந்தரவு செய்யக்கூடாது.

9. உதவி : சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு : 'இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது ...' எனப் பாராட்டவேண்டும்.

11. இளமை : நாம் எப்போதும் இளமையாக இருக்கமாட்டோம். அதை நினைவில் கொள்ளவேண்டும்

12. டிரைவிங் : கணவன் கார் ஓட்டும்போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும்போது கணவனோ, பின்சீட்டில் உட்காரக்கூடாது.

13. ஒத்துழைப்பு : குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மனைவியைத் திட்டக்கூடாது. குழந்தையைப் பராமரிக்கும்          பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு : தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்கவேண்டும்.

15. சம உரிமை : வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை
ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

16. அவசரம்கூடாது : படுக்கைஅறையில் போர் அடிக்கும் வகையில் கணவன் நடந்து கொள்ளக்கூடாது.

17. ஆச்சர்யம் : வைரமோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளைக் கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ் : ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கமுடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை
எடுத்துக் கொடுக்கவேண்டும்.

19. குழந்தைகள் : நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்லவேண்டும். குழந்தைகளை அடிமைபோல் நடத்தக்கூடாது. இதில் கணவரின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம் : நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்கவேண்டும். உள்ளாடை வெளியே தெரியும்படி அவலட்சணமாக இருக்கக்கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர் : ' ஐயோ... டெலிபோன் பில் அதிகமாகிவிட்டதே! ' எனக் கூச்சல் போடக்கூடாது.

22. சுற்றுலா : அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்லவேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம் : படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல், ஷெகேசில் உள்ள பொம்மைகள்,பொருட்களையும் சுத்தம் செய்யவேண்டும்.

24. சிக்கல் : பெண்களுக்கு தலைவலி வருவதே, டிரஸுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவவேண்டும்.

25. பொழுதுபோக்கு : சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் ,நண்பர் களுடன் விருந்துக்குச் செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்கவேண்டும். ' வேலை இருக்கிறது, 'டிவி' யை பார்த்துக்கொண்டு தூங்கு! ' என கணவர்கள் சொல்லக்கூடாது.

               பெண்கள் விரும்புவது இவ்வளவுதான்; இவற்றை நிறைவேற்றினாலே போதும். அந்தக் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம்தான்" என்று சொல்லியிருக்கிறார்.
              சர்வே பண்ணி,அவர் சொல்லியிருக்கிற, இந்த இருபத்தஞ்சும் செய்ய வேண்டாம்.( அதிகமா ஆசைப் படல!!! ) இதுல இருந்து ஒரு சில விஷயங்கள மட்டும்கூட, இந்த ஹஸ்பண்ட்கள் பண்ணினாப் போதும்; நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்..அப்படித்தான???

ஸ்ரீவில்லிபுத்தூரின் திருவண்ணாமலை

சனி, செப்டம்பர் 18, 2010

              பொதுவாக, புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷம். அதனால்,அன்று எல்லா பெருமாள் கோவில்களிலும் விசேஷ பூஜை உண்டு. கூட்டம் அலை மோதும். எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஒரு விசேஷமான பெருமாள் கோவில் உள்ளது.






               அந்தக் கோவில் பெயர் திருவண்ணாமலை. இது சென்னைக்குப் பக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலை கிடையாது. அது சிவன் கோவில். இது பெருமாள் கோவில்.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் கோவில்தான்  அனைவரது நினைவுக்கும் வரும்.
ஆனால் " கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழும் ஊர் " என்ற அடைமொழியே இந்த ஊருக்கு உண்டு. எங்கள் ஊர் திருவண்ணாமலை கோவிலுக்குத் தென் திருப்பதி என்ற ஒரு பெயரும் உண்டு. திருப்பதியில் இருக்கும் சாமி வெங்கடாசலபதி மாதிரியே இங்கே உள்ள சாமியும் இருக்கும். அங்கே வேண்டிக்கொண்டு போகமுடியாதவர்கள், எல்லாரும் இங்கே வருவார்கள். இங்கே பிரசாதமாக துளசி இலை கொடுக்கிறார்கள். கோவிலுக்கு வரும் அனைவருக்கும் நாமம் போட்டு விடுவார்கள். சின்ன வயதில் இதற்காகவே கோவிலுக்குப் போவது உண்டு.


இந்தக் கோவில் ஒரு சின்ன மலை மேல் உள்ளது. மலை மேல் ஏறி கோவிலுக்குப் போவதற்கு சுமார் இருனூறு படிகள் இருக்கும். கோவிலின் மலை அடிவாரத்தில் ஒரு அரசமரத்தடிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது. அந்தப் பிள்ளையார், நல்ல பெரியதாக, பார்ப்பதற்கு பிள்ளையார்பட்டி பிள்ளையார் மாதிரி இருப்பார். அந்தப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னே ஒரு பெரிய குளம் உள்ளது. அந்தக் குளத்தில்தான் இந்தப்பிள்ளையார் சிலையைக்,  கண்டெடுத்ததாக சொல்கிறார்கள். எல்லா சனிக்கிழமையும் இந்தத் திருவண்ணாமலையிலுள்ள பெருமாளுக்கு விசேஷம். கூட்டமும் நிறைய வரும்.


         அதிலும் குறிப்பாக, புரட்டாசி மாத ஐந்து சனிக்கிழமைகளும் ரொம்ப விசேஷம் என்பதால், எக்கச்சக்கக் கூட்டம் வரும். மலை முழுவதும் மனிதத் தலைகளாகத் தெரியும். எள் போட்டால்கூட எடுக்க முடியாது. அந்த அளவுக்குக் கூட்டம் வரும். பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து எல்லாம் டிராக்டரிலும், லாரியிலும் முந்தின நாளே வந்து தங்கி, மக்கள் தரிசனம் செய்வார்கள். அங்கேயே சமையல் செய்து அன்னதானம் வழங்கப்படும். பலர் வேண்டிக்கொண்டு மொட்டை போட்டுக்கொள்வார்கள்.இந்த புரட்டாசி மாதத்தில், வெளியூர்களிலிருந்து மக்கள் கோவிலுக்கு வர சிறப்பு பஸ்கள் உண்டு. ஊரே ஜே ஜே என இருக்கும். கடைகளிலும் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். எனவே இந்த புரட்டாசி மாதத்தில்,  ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து பெருமாளைத் தரிசித்து, அவரது அருளைப் பெறுங்கள்.

அன்னை ஸ்ரீ சாரதாதேவி

வியாழன், செப்டம்பர் 16, 2010

              எனது கல்யாணத்திற்கு, அன்பளிப்பாக வந்த அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, கொஞ்ச நாள் முன்புதான் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரையும், அவரது சீடரான சுவாமி விவேகானந்தரையும்
பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த எனக்கு, அந்தப் புத்தகத்தின் பதிப்புரையிலேயே, "இந்த நூலைத் தமிழன்பர்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆவல்" என்று கொடுத்திருந்தது ஆர்வத்தைத் தூண்டியது.




             அந்தப் புத்தகம் பக்தையாகவும், கர்ம வீராங்கனையாகவும், யோகினியாகவும், ஞானியாகவும் வாழ்ந்த ஒரு பெண்மணியின் வரலாறு. "அந்தப் பெண்தான் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரோட மனைவி ஸ்ரீ சாரதா தேவி. ஒரு பெண்ணுக்கு அஞ்சு வயசுல கல்யாணம் ஆகுது. பதினாறு வயசு வரைக்கும்  பிறந்த வீட்டுலதான் வாழ்க்கை. அதுக்கப்புறம் அவளை அழைச்சுட்டுப் போய் புருஷன் வீட்டுல விடறாங்க. ஆனா, அதுக்குள்ள அவ புருஷன், மகாபுருஷரா ஆகியிருக்கார். ஒரு யோகி மாதிரி கடவுளுக்குப் பக்கத்துல நின்னு பல பேருக்கு ஞானம் தர்றார். 'சுவாமி'னு கூப்பிட வேண்டிய ஆளு, நிஜமாவே சாமி மாதிரி பேசறார். இவ வீட்டுக்கு வந்த உடனே 'நீ என் மனைவி இல்ல.. அம்பிகை'னு சொல்லி பூஜை செய்யறார். அந்தப் பதினாறு வயசுப் பொண்ணு பாவம்! என்ன பண்ணுவா? ஸ்ரீ சாரதா தேவி அம்மாவோட வாழ்க்கையில நடந்தது இதுதான்.
.


            அந்த வயசுல அவங்க எடுத்த முடிவை என்னால கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியலை. ' நான் ராமகிருஷ்ணருக்கு மனைவியாதானே இருக்க முடியாது... அவருக்கு அம்மாவா இருக்கலாமே'னு கடைசிவரைக்கும் ஒரு தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்காங்க அந்தம்மா! ஸ்ரீராமகிருஷ்ணரின் மனைவியாக இருந்தாலும் ஆயிரக்கணக்கானோர் 'அம்மா' என்று அழைக்கிற கன்னித்தாயாக வாழ்ந்தார். அவர் காலத்துக்கு அப்புறம் அவரோட நல்ல காரியங்களைத் தொடர்ந்து செஞ்சு, இன்னிக்கு 'ராமகிருஷ்ணா மிஷன்'னு ஒரு சாம்ராஜ்யமே உருவாகறதுக்கு விதையா இருந்தவங்க அவங்கதான். இன்று உலகமெல்லாம் பரவி நிற்கின்ற 'ராமகிருஷ்ண மடம்' மற்றும் 'ராமகிருஷ்ணா மிஷன்' தோற்றத்திலும், வளர்ச்சியிலும் அன்னையின் பங்கு மகத்தானது.
 


              துறவியா இருக்குறது கஷ்டம்தான். ஆனா, அதைவிட துறவியோட மனைவியா இருக்குறது ரொம்பக் கஷ்டம். இதேபோலத்தான் சீதையின் தியாகமும். காட்டுக்குப்போகனும்னு இருந்தது ராமரோட விதி; சீதையும் கூடப்போனதுதான் மனோதிடம். லக்ஷ்மணன் காட்டுக்கு வந்தது அவரோட ரத்தப்பாசம்; ஆனா, ஊர்மிளா அவரை அனுப்பிவைத்ததுதான் அவளது தியாகம். இப்படி வாழ்க்கையையே தியாகம் பண்ணி நம்ம நாட்டுல நிறைய பெண்கள் வாழ்ந்திருக்காங்க. அந்த வரிசையில்தான் சாரதாதேவி அன்னையும் வாழ்ந்திருக்காங்க. அதனால் ஸ்ரீசாரதா தேவி அன்னை, என்னைப் பொருத்தவரை, ராமகிருஷ்ணபரமஹம்சருக்கும் ஒரு படி மேலதான் தெரியறாங்க!"


                                                  

ஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகம்

செவ்வாய், செப்டம்பர் 14, 2010

               முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்வதற்கு மாவட்டத் தலைநகருக்குத்தான் செல்ல வேண்டும். கால் கடுக்க நின்று பதிவு செய்வதற்குள் போதும்,போதும் என்றாகி விடும். இதனால் ஒரு நாள் முழுவதும் வீணாகிவிடும். ஆனால் இனி அந்தத் தொந்தரவு இல்லை; வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லவேண்டாம்; வீட்டில் இருந்தே கம்ப்யூட்டரில் பதிவு செய்யலாம். 




              தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், "கம்ப்யூட்டர் நெட் ஒர்க்' மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி (நாளை ) முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இதை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிந்ததும் 10, பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர்.

              இவர்கள் தவிர பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. பதிவு, புதுப்பித்தல் போன்றவையே பிரதான பணியாக இங்கு உள்ளது. இப்பணியை எளிமைப்படுத்த தற்போது அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்தது. இதையொட்டி அனைத்து அலுவலகங்களிலும் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இப்பணிகள் முடிவடைந்து, ஆன்லைனில் பதிவு செய்யும் வகையில் தயார் நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. இப்புதிய வசதியை நாளை (செப். 15) காலை 11 மணிக்கு  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்கிறார்.
               இவ்வசதி மூலம் இனி கல்வித் தகுதியை, அவரவர் வீட்டில் இருந்தபடியே "ஆன்லைனில்' பதிவு செய்யலாம். அதற்கான இணையதள முகவரி:  www.tnvelaivaaippu.gov.in    வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கமிஷனர் ஜீவரத்தினம் கூறியதாவது: "புதிய வசதி மூலம் மாணவர்கள் சிரமமின்றி கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். கம்ப்யூட்டரில் அதற்காக விண்ணப்பிக்கும்போது, சான்றிதழ்களையும் 'ஸ்கேன்' செய்து அனுப்ப வேண்டும். அப்போது மாணவர்களுக்கு உடனே தற்காலிக எண் தரப்படும்.  மாணவர்களின் தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டதும், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள எண் (ஐ.டி. எண்) வழங்கப்படும். நேரடியாக அலுவலகத்திற்கு வந்தும் பதிவு செய்யலாம். இதனால் இனி பதிவுமூப்பு பிரச்னையோ, பதிவு எண்ணில் குழப்பமோ, தவறோ வரவாய்ப்பில்லை,''  என்றார்.
இந்த வசதியால் இனி நேரம் வீணாவது தவிர்க்கப்படும் என நம்பலாம்.

மனித வணக்கம்

சனி, செப்டம்பர் 11, 2010

           
                நடிகர். திரு. கமல்ஹாசன் அவர்கள் சினிமாத்துறையில் , நடிப்பில் மட்டுமல்லாமல் அனைத்திலும் திறமை மிக்கவர்; ஈடுபாடு உள்ளவர் என்பதுதான் நானறிந்த விஷயம். ஆனால் அவர் பிற துறைகளிலும் ஆர்வம் உடையவர் என்பதை சமீபத்தில் அவரது கவிதை ஒன்றைப் படித்ததன் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.
மனித உறவுகளைப் பற்றி அவரெழுதியுள்ள அந்தக் கவிதை:

தாயே. என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல...
எனைப்பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத்
தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்  
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும் , குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால வாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்,
நாளை உன் வரியில்
நான் தெரிவேன்.

 









பீப்ளி- லைவ் (PEEPLI- Live)

செவ்வாய், செப்டம்பர் 07, 2010

              அமீர்கான் தயாரிப்பில், அனுஷா ரிஸ்வி அன்ற அறிமுகப்பெண் இயக்குனரின் படைப்பில், புதிதாக வெளியாகி இருக்கும் ஹிந்தித் திரைப்படம் " பீப்ளி- லைவ் " (Peepli- Live). இந்தத் திரைப்படத்தை நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், தனது பிரதமர் வேலையில் இருந்து, சிறு விடுப்பு எடுத்துக்கொண்டு பார்த்தார், என்பது கடந்த வாரம் முழுக்க மீடியாக்களின் ஹாட் நியூஸ்!



வட இந்தியாவில் ' பீப்ளி ' என்ற பெயரில் பல கிராமங்கள் இருக்கின்றன. அவ்வாறு உள்ள ' பீப்ளி ' என்ற ஒரு சிறிய கிராமத்தில் வாழும் நத்தா, புதியா என்ற இரண்டு சகோதர, விவசாயிகளைப் பற்றியக் கதை! இது சிறிய படம்தான் என்றாலும், சொல்லும் செய்தி மிகப்பெரியது! இந்த இரண்டு விவசாயிகளும் கடும் வறுமையில் வாடுகின்றனர். அவர்கள் நிலத்தை அடகு வைத்து அரசிடம் கடன் வாங்குகின்றனர். ஆனால் அந்தக்கடனை அவர்களால் திருப்பிச்செலுத்த முடியவில்லை. உடனே அரசு நிலத்தைக் கையகப்படுத்தப் போவதாக அறிவிக்கிறது. நிலத்தைத் தக்க வைத்துக்கொள்ள நத்தாவும், புதியாவும் போராடுகின்றனர். என்ன செய்தும் அவர்களால் பணம் புரட்ட முடியவில்லை. அந்த நிலையில், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு அரசு, நஷ்ட ஈடாகப் பணம், ஒரு லட்சம் ரூபாய்  என அறிவிக்கிறது. உடனே, யாராவது ஒருவர் தற்கொலை செய்துகொண்டு அந்த லட்சரூபாயை வாங்குவது என்றும், இன்னொருவர் அந்தப் பணத்தைக் கொண்டு நிலத்தைத் தக்க வைத்துக் கொள்வது எனவும் முடிவு செய்கின்றனர்.




நத்தா தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிடுகிறார். இந்த விஷயம் வெளியில் பரவ, அந்த கிராமத்தை நோக்கி மீடியாக்கள் படையெடுக்கின்றனர். ஒரு தற்கொலையை 'லைவ் டெலிகாஸ்ட்' செய்வதுதான் அவர்களது திட்டம்! அதன்படி, நத்தாவின் ஒவ்வொரு நடவடிக்கையும், டிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு, மீடியாக்கள் அங்கேயே தங்கிவிட, திருவிழா மாதிரி அந்தக் கிராமம் புதியக் கடைகளுடன் காட்சியளிக்கிறது. "ஒரு தற்கொலையை நீங்கள் நேரடியாகப் பார்க்கப்போகிறீர்கள்; உலகத்தொலைக்காட்சிகளிலேயே இவ்வாறு ஒளிபரப்பு செய்வது இதுதான் முதல்முறை" என டிவி ரிப்போர்ட்டர்கள் மைக்கைப் பிடித்துக்கொண்டு பேசுகின்றனர்.



இதற்கிடையே, அரசியல்வாதிகளும், சாதிக்கட்சியைச் சேர்ந்தவர்களும் நத்தாவைச் சந்தித்து, டிவிக்களுக்குப் பேட்டி கொடுத்து, தங்களுக்குப் பரபரப்பைத் தேடிக்கொள்கின்றனர். சாப்பிடவே வழியில்லாத நத்தாவின் குடும்பத்திற்கு 'பெரிய டிவி' ஒன்று பரிசாக வழங்கப்படுகிறது. இவ்வாறு நத்தாவின் எல்லா செய்கைகளும் படமாக்கப்படுவதால், ஒருநாள் அவர் இதிலிருந்துத் தப்பித்து ஓடிக் காணாமல் போகிறார். அவரை எல்லோரும் தேடிக் கடைசியில், அந்தக் கிராமத்திலிருந்து மீடியாக்கள் வெளியேறுகின்றன.கேமரா கிராமத்திலிருந்து பின்னோக்கி நகர்ந்து நகரத்துக்குள் நுழைகிறது. அங்கு பெரியக் கட்டடம் ஒன்றின் கட்டுமான வேலைகள்
நடக்குமிடத்தில் பரிதாபமாக நத்தா கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். 'இந்தியாவில் 1991 முதல் 2001 வரை எட்டுமில்லியன் விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்' என்ற செய்தியுடன் படம் முடிகிறது.
               உயிரோடு இருக்கும்போது பணத்துக்காக நிலத்தைப் பிடுங்கும் அரசு, செத்தால் லட்சரூபாய் பணம் தருகிறது என்ற முரண்பாடுதான் படத்தின் கதை. விவசயிகளின் கஷ்டங்களைப் பறைசாற்றும் படம் என்றாலும், அரசாங்கத்தின் சுயநலத்தையும்,
மீடியாக்களின் சில போலித்தனங்களையும் நகைச்சுவையாக, கிண்டலாகப் படத்தில் கூறப்பட்டுள்ளது. 'நத்தாவின் இந்த நிலைக்குக் காரணம், முஸ்லிம் தீவிரவாதிகள்தான்' என ஒரு கேரக்டர் பேசுவது இந்தக் கிண்டலுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!  டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காக தொலைக்காட்சிகள் அடிக்கும் கூத்துகளையும் சொல்லியிருக்கிறார்கள்.


ஆரம்பத்தில் நத்தா கேரக்டரில், அமீர்கான் தான் நடிப்பதாக இருந்ததாம். பின் கதைக்குப் பொருத்தமாக 'ஓம்கார் தாஸ் மானிக்புரி' என்ற புது நடிகர் கிடைத்ததும் அவரையே நடிக்க வைத்துவிட்டனர். 'லகான்', 'ரங் தே பசந்தி',  'தாரே ஜமீன் பர்', '3 இடியட்ஸ்' என்று வரிசையாக சமூகநலப் பார்வை கொண்ட படங்களில் நடித்துவரும் அமீர்கான் தயாரித்த இந்தப் படமும் அவர் இதில் நடிக்காவிட்டாலும் அவருக்கு ஒரு மைல்கல்லாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆசிரியர் தினம்...

ஞாயிறு, செப்டம்பர் 05, 2010

              இன்று ஆசிரியர் தினம். ஆசிரியர் தினம் என்றாலே நமக்கு நமது முன்னாள் ஜனாதிபதி. திரு. டாக்டர்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்தான் நினைவுக்கு வரும்.

 ஆனால் என் நினைவில் வருவது எனது பள்ளி நாட்களே! நான் படித்தது, பெண்கள் மட்டுமே படிக்கும் கான்வென்ட்டில். அங்கு ஆசிரியர்கள் அனைவரும் பெண்களே! பள்ளியில் படிக்கும்போது, ஒவ்வொரு வருடமும், ஆசிரியர் தினத்தையொட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, நடனம், நாடகம் எனப் பல போட்டிகள் நடக்கும். அதில் கலந்துகொண்டு, ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே, Practice-க்காக, Class-ஐக் Cut அடித்துவிட்டுச் செல்வதில் அப்பொழுதெல்லாம் பயங்கர ஆர்வமாக இருக்கும். 
ஆசிரியர் தினத்தன்று, நடனம், நாடகம் முதலியக் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் அன்று வழங்கப்படும். அன்று Uniform-க்கு விடுமுறை. எனவே எல்லோரும் கலர் கலராக உடைகள் அணிந்து வருவோம். ஆசிரியர்களுக்கு Gift கொடுப்பதற்காக அனைவரிடமும் ஒரு வாரம் முன்பே பணம் வசூலிக்கப்படும்; அன்று, ஆசிரியர்களுக்கு சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்படும். பின்னர் ஆசிரியர்களுக்கு இடையேயும் விளையாட்டுகள், போட்டிகள் நடைபெறும். இதுதவிர, அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு, அந்த வகுப்பில் படிக்கும் மாணவர்கள் Gift வாங்கிக் கொடுப்பர். முக்கியமாக அன்று எந்த வகுப்புகளும் நடைபெறாது; ஒரேக் கொண்டாட்டமாக இருக்கும்.


                  முதல் வகுப்பிலிருந்து, கல்லூரி இறுதியாண்டு வரை எனக்குப் பாடம் கற்பித்த அனைத்து ஆசிரியர்கள் பெயரும் இன்றுவரை நினைவில் உள்ளது. ஆனால் அவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை. அவர்களுள் எனக்கு முதலாம் வகுப்பெடுத்த, மங்களம் டீச்சரும் அடங்குவார். எத்தனையோ ஆசிரியர்கள் எனக்குப் பாடம் எடுத்திருந்தாலும்,

 முதல் வகுப்பெடுத்த மங்களம் டீச்சருக்கே இன்று எனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். அவர் இன்று உயிருடன் இல்லை என்றாலும், அவர் சொல்லிக்கொடுத்த உயிர் எழுத்துகளும், மெய்யெழுத்துகளும்தான் எனக்கு ஆரம்பக் கல்வியாக அமைந்தது. இன்று நான் இந்த வலைப்பக்கம் ஆரம்பிப்பதற்கே உதவியாகவும் உள்ளது. இதுவரை அவருக்காக நான் எதுவும் செய்யவில்லை எனினும், இன்று அவரை நினைத்து, அவரைப் பற்றி எழுதுவது பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இந்தப்பதிவின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காதல் கல்யாணம் - II

சனி, செப்டம்பர் 04, 2010

                போன பதிவின் தொடர்ச்சியாக, என் தோழியின் காதல் வாழ்க்கைக் கதையின் மீதிப்பகுதியை இதில் எழுதுகிறேன்.
இனி அவள் கூறியவை, " குழந்தைப் பிறந்ததுக்கப்புறமாவது, எல்லாம் சரியாகும்னு நெனச்சேன். அந்த நம்பிக்கையிலதான், டெலிவரிக்கப்புறம் குழந்தையத் தூக்கிக்கிட்டுப் போனேன். அதுக்கப்புறமும் மாறவேயில்லை. அவர் செய்றதுதான் சரின்னு சொல்வார்; நான் ஏதாவது நல்ல விஷயம் சொன்னாக்கூட, அவர் நல்லதுக்குத்தான சொல்றோம்னு ஏத்துக்கமாட்டார்; பதிலுக்கு வார்த்தைகளாலக் காயப்படுத்துவார்; இதுவரைக்கும் என் வாழ்நாளில், அப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டிருக்கவே மாட்டேன். என் பணம், நான் சம்பாதிக்கிறேன்; அதவச்சு நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொல்வார். அவர் ஒண்ணு முடிவுபண்ணிட்டா, இடியே விழுந்தாலும் அத மாத்தவும் மாட்டார்; மாத்திக்கவும் மாட்டார். இப்படி ஒருநாள் எங்களுக்குள்ளப் பேச்சுவார்த்தை முற்றி, கடுமையான வார்த்தைகளை, ' நான் சொல்லாதீங்க எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு' னு சொல்லியும், சொன்னார். எனக்கு ரொம்ப மனசுக்குக் குத்திக்குத்திக் காண்பிக்குற மாதிரி இருந்தது. சொல்லாதீங்கன்னு கெஞ்சியும் அவர் கேட்கல. உன்மையிலயே, என் மேல பாசம் அவருக்கு இருக்கானு தெரியல. எதிரி மாதிரிதான் நடத்தினார். இதக்கேட்டா, 'நான் உனக்கு அது வாங்கிக்குடுக்கலையா? இது வாங்கிக்குடுக்கலையா?' னு சொல்றார். ' உங்ககிட்ட அன்பையும், பாசத்தையும்தான எதிர்ப்பாக்குறேன்; அதவிட வேற எனக்கு என்ன பெரிசு?' னு சொன்னா, அதக்கேட்கல. அதனால, குழந்தையத்தூக்கிக்கிட்டு, அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.

 படிக்கிற காலத்துல, எங்கூடப் படித்த ஒரு பையன், அவரோட Friend. அந்தப் பையன் என்னைக் காதலித்ததாகவும், அவனிடம் இவர், ' அவள் உனக்குக் கிடைக்கமாட்டாள்; நான் அவளைக் காதலித்துக் கல்யாணம் செஞ்சுகாட்டறேன்' னு Bet கட்டியிருக்கார். ' இதெல்லாம் விளையாட்டுக்குத்தான் அவனிடம் சொன்னேன். ஆனா, உண்மையிலயே உன்னைக் காதலிக்கிறேன்' னு ஒருநாள் சொன்னார். அவர் இப்படி நடந்துக்கிறதையெல்லாம் பார்க்கும்போது, அது உண்மையோனு எனக்குத் தோணுதுடி; ரொம்பப் பயமாயிருக்கு. இப்போ ரெண்டு வீட்டுலயும் பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு. ஒரு முன்னேற்றமும் இல்ல. நான் வந்து ரொம்ப நாளாகியும்,  ஃபோன்ல பேசும்போதுகூட, அன்பா, ஆதரவா பேசுறதில்ல. ஃபோன் பேசினாக்கூட சண்டதான்; சமாதானமாப் பேசமாட்டேங்கிறார்" என அவளுடைய நீண்ட கதையை, சொல்லிமுடித்தாள்.
 

               நானும் அவளிடம், " சண்ட வரும்போது நீயாவது விட்டுக்குடுத்துப் போயிருக்கலாமே" என்று கேட்டேன். அதற்கு அவள், " உனக்குத்தான் என்னப்பத்தித் தெரியுமேடி, நான் விட்டுக்குடுத்தாலும் அவர் என்னை  வார்த்தைகளாலக் கொல்லுறார்" எனக் கூறினாள். "இப்போ என்ன முடிவு பண்ணியிருக்க? அவர்கிட்டயிருந்து பிரியப்போறியா? இப்படிப்பட்டவரோட நீ வாழ்ந்து காலம்பூரா அழுதுக்கிட்டிருக்கப் போறியா?" எனக் கேட்டேன். "ஆசை ஆசையாக் கல்யாணம் பண்ணினது, பிரியறதுக்குத்தானா? அப்புறம் இந்தக் குழந்தையோட எதிர்காலம் என்ன ஆகும்?                 
               என்னடா, அவரப்பத்திக் குறையா சொல்றேன்னு நீ நெனைக்கலாம். நல்ல விஷயங்கள் நிறைய செஞ்சாலும், அவர் பேசற வார்த்தைகள் முன்னாடி அதெல்லாம் அழிஞ்சு போயிடுது. எங்கிட்டயும் நிறைய தவறுகள் இருக்கு. அதையெல்லாம் நானும் மாத்திக்கிட்டு, அவரோட சேர்ந்து வாழணும்னுதான் ஆசை. தினமும் அவர்கிட்டயிருந்து ஒரு SMS வராதா,  Phone call வராதானு காத்துக்கிட்டிருக்கேன். அவர் பிசியா இருக்கறதால், நான் அவருக்கு Call பண்ணாலோ, SMS பண்ணாலோ அவருக்குக் கோபம்தான் வரும்; சண்ட போடுவார். திரும்பத்திரும்ப அவர்கிட்ட நான் கெஞ்சிக்கேட்குறது இதுதான், கடுமையான, மனசுப்புண்படும்படியான வார்த்தைகளைச் சொல்லாதீங்க; என்னைப் புரிஞ்சிக்கோங்கன்னுதான். அவருக்கு அந்தச்சொற்கள் சாதாரணமா இருந்தாலும், கேட்குற எனக்கு ரொம்பக் காயப்படுத்துதுடி. எவ்வளவு நாளானாலும், அவர் மனசுமாறி, என்னைத்தேடி வருவார்; அவரை நம்பி, அவருக்காகவே நான் இருக்கேங்கிறதப் புரிஞ்சிக்கிட்டு, நான் தேவைனு வருவார்; அதுக்காகக் காத்துட்டிருக்கேன்" என அவரை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

 நானும் அவளிடம், " உன் நம்பிக்கை வீண்போகாது; கண்டிப்பாகச் சீக்கிரம் அவர் உன்னைப் புரிந்துகொண்டு உன்னைத்தேடி வருவார்; நீயும் சந்தோஷமாக அவருடன் போகப்போகிறாய்" என ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். வீட்டிற்கு வந்ததும் இரவெல்லாம் அவளை நினைத்துத் தூக்கமே வரவில்லை. நானும் அவளும் சேர்ந்துப் படிக்கும்போது, அவள் ரொம்ப அமைதியான, பயந்த சுபாவமுள்ள பெண்; யாரிடமும், அதிர்ந்தும் பேசமாட்டாள்; அதிகமாகவும் பேசமாட்டாள். எல்லா ஆசிரியர்களிடமும் நன்கு படிக்கும் பெண்; நல்ல ஒழுக்கமுள்ள மாணவி என்று பெயரெடுத்தவள். அவளுக்கா இந்த நிலைமை? என நினைக்கும்போது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. இப்படி எல்லாரிடமும் நல்ல பெயர் எடுத்து என்ன பிரயோஜனம்? கணவனிடம் அவளால் நல்ல பெயர் எடுக்கமுடியவில்லையே? இருப்பினும், அவளது நம்பிக்கை வீண்போகாது. இன்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் விவாகரத்துத் தொடர்பாக ஏகப்பட்ட செய்திகள் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை காதல் கல்யாணங்கள்தான். காதலித்துக் கல்யாணமும் பண்ணி, பிரிவதற்குத்தானா வாழ்க்கை? இந்தத் தோல்வியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் தான் மறக்கமுடியுமா? இதைப் புரிந்துகொள்ளுமா. இன்றைய சமுதாயம்? இந்த நிலைமை என் தோழிக்கு வந்துவிடக்கூடாது. அவளது நம்பிக்கையின்படி, அவளது கணவன் சீக்கிரம் மனது மாறி, அவளைக் கூட்டிச்செல்ல வேண்டுமெனத் தினமும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். என்னைப் பொருத்தவரை லவ் மேரேஜோ, அரேஞ்ஜுடு மேரேஜோ ஒருவருக்கொருவர் நன்குப் புரிந்து கொண்டால் சண்டைகள் வராது; வாழ்க்கையும் இனிக்கும். இதற்காக தினமும் சிறிது நேரமாவது அவர்கள் ஒதுக்க வேண்டும். அதைச் செய்வார்களா?

காதல் கல்யாணம் - I

வெள்ளி, செப்டம்பர் 03, 2010

              சமீபத்தில் என் தோழி ஒருத்தியைச் சந்திக்க நேரிட்டது. நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்ததால், ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்தாள். அவள், அவளுடன் படித்த மாணவனையேக் காதலித்து, இரண்டு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவளுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. என்னால் அவளது கல்யாணத்திற்குப் போக முடியாததால், அவள் ஊருக்கு வந்திருப்பது தெரிந்து, அவளைப் பார்க்கச் சென்றேன். அவளோ அழாதக் குறையாக அவளது கதையைக் கூறினாள், " நான் பெரிய தப்புப் பண்ணிட்டேண்டி; 'கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்' கிற மாதிரி, இப்போதான் எனக்குத் தெரிய வருது. கண்டிப்பா ஒரே வயசுல இருக்கிறவங்க கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது, அப்படி செஞ்சுக்கிட்டா ஏகப்பட்ட பிரச்னைகள் வரும்; சண்டைகள் வரும். அப்படிச் சண்டை வரும்போது நீமட்டும் செய்யலாம் , நான் செய்யக் கூடாதானு ரெண்டு பேரும் ஏட்டிக்குப் போட்டியாப் பேசி பிரச்னை பெருசாகும். இதே ரெண்டு பேருக்கும் இடையில வயசு வித்தியாசம் இருந்தா, யாராவது ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போற மாதிரி இருக்கும், இந்த மாதிரி சண்டைகள் வரும்போது, சின்னப்பொண்ணு தானேனு கணவர் விட்டுக்கொடுப்பார்; மனைவியும் வயதுக்கு மரியாதை கொடுத்து, நம்மவிடப் பெரியவங்கனு மதிச்சு நடந்துக்குவாங்க. ஆனா, நாங்க ஒரே வயசுங்கிறதால, எங்களுக்குள்ள அப்படி விட்டுக்கொடுக்கிற மனப்பக்குவம் ரெண்டு பேருக்குமே இல்லை.


              நம்மை நம்பி வந்தவளை மனசுக்கஷ்டப்படுத்தாம வச்சுக்கணும்னு அவருக்குத் தோணவேயில்லை. காதலிக்கும்போது, எல்லாரையும் மாதிரி, ' உன்னைக் கண் கலங்காமப் பாத்துக்குவேன்,கஷ்டப்படாம வச்சுக்குவேன்; நல்லாப் பாத்துக்குவேன்;
என்னை நம்பு' னு வழக்கமான டயலாக்குகள் எல்லாம் சொன்னார். இதெல்லாம் எப்படியோ, கல்யாணத்துக்கப்புறம் எனக்கு எல்லாமே அவர்தான்னு நம்பி, அவரோட, அவர் வேலை செஞ்சுகிட்டிருக்கிற ஊருக்குப் போனேன். ஆனா, அத அவர் புரிஞ்சிக்கல. கல்யாணமான மறுநாள்ல இருந்தே, காரணமே தெரியாமல் நான் புறக்கணிக்கப்பட்டேன். மிகக் கொடுமையான தண்டனை புறக்கணிப்புதான்; நம்மைக் கண்டுக்காம விட்டுறதுதான். அதை அனுபவிச்சவங்களுக்கு கண்டிப்பா அதன் வலி புரியும். ஆசை ஆசையா இதுக்குத்தானா, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு தோணுச்சு. யாருமே, கூட இல்லாத வீட்டில், பகல் பூரா இத நெனச்சு அழுதுகிட்டிருப்பேன். ஏன் என் கூடப் பேசாம, புறக்கணிக்குறீங்கன்னு கேட்டா, ' இவ்ளோ நாள் உங்கூடப் பேசுனது பத்தாதா?' னு கேட்பார். இப்படியே நான் அழுது கேட்டதால், கொஞ்சம் அவர மாத்திக்கிட்டார். ஆனாலும் அடுத்து, ஏதாவது சண்டை வந்தா, ' நீ என்னோட சுதந்திரத்தப் பறிச்சுக்கிட்ட; அழுது, அழுது உன் காரியத்த சாதிச்சுக்கிற' னு சொல்வார். சண்டை வந்துட்டா, அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொண்ணும் ஈட்டி மாதிரி விழுந்து நம்ம மனசக் குத்தும். எத்தனையோ தடவ. ' கையால அடிச்சாக்கூட வலி கொஞ்சநாள்ள மறஞ்சுடும்; வார்த்தைகளாலக் காயப்படுத்தாதீங்க' னு கெஞ்சுவேன். ஆனா அவர் அத கேட்கவே இல்ல.


                 காதலிச்சுக்கிட்டிருக்கும்போது, ' நம்ம ரெண்டு பேரும் வேற, வேற கலாச்சாரத்துல வளர்ந்தவங்க; கல்யாணத்துக்கப்புறம் ஒத்துவருமா?'னு நான் கேட்டப்போ, ' இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? எத்தனையோ பேர் சாதி மாறி, மதம் மாறி கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க ஒற்றுமையா வாழலையா?' னு எனக்கு ஆறுதல் சொன்னார். ஆனா, கல்யாணத்துக்கப்புறம் அந்த மாதிரி நடந்துக்கவேயில்ல; சமையல்ல இருந்து எல்லாத்துக்கும் குற்றம் சொல்ல ஆரம்பிச்சார். அவர்தான, அவங்க குடும்பம் பத்தியும், கலாச்சாரம் பத்தியும் எனக்குப் புரியவைக்கனும். அத விட்டுட்டு, ' நீ ஏன் அப்படி நடந்துக்கல?' னு சண்ட போடுறார். எந்த ஒரு விஷயத்துக்கும் என்னை Support பண்ணல. இப்படியே போய்கிட்டிருந்த எங்க வாழ்க்கையில குழந்தையும் பிறந்துச்சு" எனத் தனது கதையைத் தோழி சொல்லிக்கொண்டிருந்தாள். இன்னும் அவளது கதை ரொம்ப நீளமாக இருந்ததால், மீதியை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.
Related Posts with Thumbnails