எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பக்கத்தில்
இருக்கும் ஊர் இந்த ராஜபாளையம். இது மதுரையிலிருந்து
85 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊருக்குள் நுழையும்
பொழுதே "நாய்களின் நகரம்" உங்களை வரவேற்கிறது
என்றுதான் போர்டு வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு
ராஜபாளையத்து நாய்கள் மிகவும் புகழ் பெற்றவை.
பல வருடங்களுக்கு முன்பு, ஆந்திராவிலிருந்து
'ராஜூக்கள்' என்னும் சமூகத்தினர் இங்கு புலம்பெயர்ந்து
ஆட்சிபுரிந்ததால் ராஜாக்களின் கோட்டை அதாவது
"ராஜபாளையம்" என்று அழைக்கப்படுவதாக
படித்திருக்கிறேன். மேலும் இங்கு சஞ்சீவி மலை என்ற ஒரு
மலை உள்ளது. இது லக்ஷ்மனனுக்காக, அனுமன் எடுத்து
வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்கிறார்கள்.
ராஜபாளையத்திற்கு அருகில் அய்யனார்கோவில் என்ற
ஒரு இடம் உள்ளது. இது மேற்குத்தொடர்ச்சி மலையின்
அடிவாரத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதி. இங்கு அருவியும், பல
அரிய வகை மூலிகைகளும், உயிரினங்களும் உள்ளன. இது
பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடம். ராஜபாளையத்தைச் சுற்றி
பல காட்டன் மில்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலோர்
வேலை பார்ப்பது இந்த ஆலைகளில்தான்.
இந்த ராஜபாளையத்தைப் பற்றி சமீபத்தில் படித்த கட்டுரை :
சரித்திரங்களின் சங்கமம் ராஜபாளையம் :-
' தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை
அழித்திடுவோம்...' என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரான
முண்டாசுக் கவிஞர் பாரதியார், ஒருமுறை பாழடைந்த தனது
வீட்டை சீரமைக்க எண்ணி, மனைவி செல்லம்மாள்
வற்புறுத்தலால், ராஜபாளையம் ஜமீன்தாரை பார்க்க வந்தார்.
அவர் ஊரில் இல்லாததால், பசியும், களைப்புமாய்
ராஜபாளையத்தில் எழுதிய அனல் வரிகள்தான் இவை. கி.பி.15
ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னரின் தலைமுறையைச்
சேர்ந்த சின்னராஜா இங்கு கோட்டை கட்டி ராஜ்ஜியம்
செய்ததால், இந்த ஊரின் பெயர் ராஜபாளையமாயிற்று.
பாளையம் என்றால் கோட்டை என்று பொருள்.
ஆரம்பத்தில் கீழராஜகுலராமன் என்ற பகுதியில் தங்கி நகரை
விரிவுபடுத்தினர். பின், கி.பி. 1483 ல் ராஜபாளையத்தில் உள்ள
சஞ்சீவி மலையில் இருப்பிடத்தை மாற்றினர்.
விஜயநகரத்தில் நடந்த கள்ளிக்கோட்டை போரால்
மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதனால்
அங்கிருந்து ராஜூக்கள் சமூகத்தினர் ராஜபாளையத்தில்
குடியேறினர். இதன் அடையாளமாக தற்போதும்
சமுதாயசாவடி இருக்கிறது. இங்கு கி.பி.12 ம்
நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னர்களால்
விரிவு படுத்தப்பட்ட வெங்கடேசப் பெருமாள் கோவில்
உள்ளது. மதுரையை ஆண்ட முதலாம் ஜடாவர்ம
குலசேகரபாண்டியன் இக்கோயிலின் பராமரிப்பு
செலவுகளுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார்.
இவ்விபரங்கள் கோயில் கர்ப்பகிரகத்தில் கல்வெட்டுகளாக
பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் தாமரைக்கண்ணன் என்பவர்,
தினமும் எண்ணெய் விளக்கேற்றும் செலவுக்காக, தனது
ஆஸ்தியை வழங்கிய விவரமும் கல்வெட்டில் உள்ளது.
முகமண்டபத்தின் தூண்கள் கிருஷ்ணமாராஜா மற்றும்
சோழராஜா என்பவர்களால் உருவாக்கப்பட்டன.
மதுரை ரோட்டில் வடுக ஊரணி என்னும் ஊரணி
உள்ளது. பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக
கருதப்படும் இந்த ஊரணி சமீபத்தில் தூர்
வாரப்பட்டிருக்கிறது. அப்போது சிவலிங்கம், நந்திகள்
உட்பட பல சிலைகள் கிடைத்துள்ளன.
மேலும் 600 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று
இன்றும் ராஜபாளையத்தில் இருக்கிறது. இதன் பெயர்
"ஆப்பிரிக்கன் போபாப்". ஆப்பிரிக்கக் காடுகளில் மட்டுமே
காணப்படும் இந்த மரம், அதிக வயதுடைய மரங்களில்
ஒன்று. பிற்கால பாண்டிய மன்னர்கள் தங்களது கடல்
பயணத்தின் மூலம் இதைக் கொண்டு வந்திருக்கலாம்
எனக் கூறப்படுகிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், வீரர்கள் நமது
தேசியக் கொடியை சஞ்சீவி மலையின் உச்சியில் பறக்க
விட்டு புரட்சி செய்தனர். இவ்வாறு திரும்பும் இடமெல்லாம்
வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் ராஜபாளையம்,
சரித்திரங்களின் சங்கமமாக உள்ளது.