ஆயுத பூஜையின் அவஸ்தை...

திங்கள், அக்டோபர் 18, 2010


              ஒவ்வொரு வருடமும் ஆயுதபூஜை எங்களுக்கு
அவஸ்தைபூஜையாகத்தான் இருக்கும். ஆயுதபூஜையன்று
தொழிலாளர்கள்,  ஆயுதங்களான, தொழிலுக்குப் பயன்படும்
சாதனங்களை வைத்து, பூஜை செய்து கொண்டாடுவதுதான்
வழக்கம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும், முன்புறமும்,
பின்புறமும் கார், லாரி போன்றவாகனங்களின் ரிப்பேர்களை
சரிசெய்யும் மெக்கானிக் கடைகள் உள்ளன. அங்கு வேலை
செய்பவர்கள், ஆயுதபூஜையைக் கொண்டாடுவதற்காக,
வெள்ளிக்கிழமை காலையிலேயே ஸ்பீக்கர்கள் வைத்து பாட்டு
போட ஆரம்பித்துவிட்டார்கள். அது நேற்று மாலை வரை
தொடர்ந்தது. இதனால் இந்த மூன்று நாட்களும் பக்கத்திலுள்ள
எங்களைப் போன்ற வீடுகளிலுள்ளவர்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. போட்டிபோட்டுகொண்டு அவர்கள் சத்தமாக பாட்டு ஒலிபரப்பியது, மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது.
 
             முன்பெல்லாம் இது போன்ற விழாக்களிலும்,
திருமணங்களிலும் குழாய் போன்ற ஒலிப்பெருக்கிகள்
பயன்படுத்தப்பட்டன. அவற்றைப் பயன்படுத்துவதால்,
இரைச்சல் அதிகமாக உள்ளதென, அவற்றைப் பயன்படுத்தத்
தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் அந்தக் குழாய்
ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படாவிட்டாலும், இப்பொழுது
பெட்டி போன்ற ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதில் குறைந்தது 4 ஒலிப்பெருக்கிகளாவது இருக்கிறது. இதனால்
சத்தம் மிக அதிகமாக உள்ளது. இதுபோல உள்ள, இரண்டு
பெட்டி ஒலிப்பெருக்கிகளை கடை வாசலுக்கு இரண்டு
பக்கமும் வைத்து, இரவு 10 அல்லது 10.30 வரை
பாட்டுபோட்டு, ஆயுதபூஜையைக் கொண்டாடினர். இதனால்
வீட்டிலுள்ளவர்களுடன் பேசக்கூட முடியவில்லை. எனது
குழந்தை இந்த மூன்றுநாட்களாக சரியாகத் தூங்க முடியாமல்
ரொம்பக் கஷ்டப்பட்டது. பக்கத்து வீடுகளில் உள்ள
வயதானவர்களும், நோயுற்றவர்களும் இதனால் மிகவும்
கஷ்டப்பட்டனர். அவர்களிடம் சத்ததைக் குறைத்து வைக்கச்
சொல்லிக்கூட பயனில்லை. ' நாங்கள் வருடத்திற்கு
ஒருதடவைதானே இதுமாதிரி கொண்டாடுறோம்' என்று
கூறுகின்றனர். அது சத்ததைக் குறைத்து வைத்து அவர்களுக்கு
மட்டும் கேட்குமாறு கொண்டாடலாமே?


              எல்லா இடங்களிலும் அன்று இதே நிலைமைதான்.
எங்கள் ஊர் அரசு பொது மருத்துவமனை வாசலில்தான்
ஆட்டோஸ்டாண்ட் இருக்கிறது. அந்த ஆட்டோஸ்டாண்ட்டிலும்
இதுபோலத்தான், அலங்கார விளக்குகளெல்லாம் போட்டு,
ஒலிப்பெருக்கிகள் வைத்துக் கொண்டாடினர். மருத்துவமனையில்
நோயாளிகளுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்?
அன்று பள்ளிகளுக்கு விடுமுறையாதலால், மாணவர்களுக்குப்
பிரச்சனையில்லை. ஆனால் இதுபோன்ற கஷ்டத்தை
வருடந்தோறும், எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள், 
முக்கியமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனுபவித்திருப்பர்;
அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றனர். எங்கள் பள்ளிக்குப்
பக்கத்தில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு
ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் மாதம் பூக்குழித்திருவிழா
நடக்கும். அப்போது இதுபோல, பத்துநாட்கள் ஒலிப்பெருக்கிகளில்
பாட்டுப்போட்டுக் கொண்டிருப்பர். அப்போது சரியாக பத்தாம்
வகுப்பு பொதுதேர்வு நடந்துகொண்டிருக்கும் சமயம். ஒழுங்காகத்
தேர்வு எழுதவே முடியாது. சத்தத்தால் யோசிக்கவே முடியாது.
ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.


                     வெளிநாடுகளிலெல்லாம் பொது இடங்களில்
இதுபோன்றெல்லாம் செய்யக்கூடாது என சட்டம் உள்ளது.
அதை மக்கள் அங்கு ஒழுங்காக பின்பற்றுகின்றனர். மீறினால்
கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அங்கு பொது
இடங்களில் ஹாரன் கூட ஒலிப்பதில்லை. நமது நாட்டிலும்
இது போலச் சட்டமிருந்தாலும் யாரும் பின்பற்றுவதில்லை.
இரவு பத்து மணிக்கு மேல் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக்
கூடாது எனவும் சட்டம் உள்ளது. யாருமே இதைப்
பின்பற்றுவதில்லை. இனி அடுத்து தீபாவளி வரப்போகிறது.
அதற்காவது, இதுபோல ஒலிப்பெருக்கிகளைப்
பயன்படுத்தாமலும், இரவு பத்து மணிக்கு மேல் வெடிகளை
வெடிக்காமலும் ஒலிச் சீர்கேட்டைத் தவிர்ப்போம்.

16 comments:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

உண்மை தான்... பெரும்பாலான விழாக்கள் இது போன்ற சில செய்கைகளால் வெறுக்கப்படுகிறது...

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ஹ்ம்.. எதுவுமே அளவோடு கொண்டாடப்பட்டால் நல்லது..

Unknown சொன்னது…

நியுசன்ஸ் கேசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்...

Chitra சொன்னது…

இனி அடுத்து தீபாவளி வரப்போகிறது.
அதற்காவது, இதுபோல ஒலிப்பெருக்கிகளைப்
பயன்படுத்தாமலும், இரவு பத்து மணிக்கு மேல் வெடிகளை
வெடிக்காமலும் ஒலிச் சீர்கேட்டைத் தவிர்ப்போம்


...... Yes, it is a polite thing to do.

எல் கே சொன்னது…

/பெரும்பாலான விழாக்கள் இது போன்ற சில செய்கைகளால் வெறுக்கப்படுகிறது... /

repeatt

Unknown சொன்னது…

வாங்க.. வருகைக்கு நன்றி வெறும்பய.

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி.

Unknown சொன்னது…

கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் சில சமயம் பலனில்லாமல் போய்விடுகிறது ஆகாயமனிதன்.
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

கருத்துக்கு நன்றி சித்ரா.

Unknown சொன்னது…

வாங்க LK .. வருகைக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விஷயத்தை சொல்லி இருக்கீங்க! ஆனால் இவர்கள் திருந்துவது தான் இல்லை. அடுத்து தீபாவளி வரப்போவது - தில்லியில் பட்டாசு சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டு இருப்பது எரிச்சலான ஒரு அனுபவம்.

ஹுஸைனம்மா சொன்னது…

ம்ம்.. நம் நாட்டில் மட்டும் எல்லா தரப்பிலும் இத்தொல்லை உண்டு.. பரிட்சை சமயத்தில் தேர்தல் அலபப்ரைகளோடு அவஸ்தைப்பட்ட நினைவுகள்..

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ் .. கருத்துக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க ஹுஸைனம்மா...வருகைக்கு நன்றி.
எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும் போல.

stella சொன்னது…

enum namaloda 10th standarda marakalaya good

Unknown சொன்னது…

ஆமா ஸ்டெல்லா.பள்ளி ஞாபகங்களை மறக்க முடியுமா?வருகைக்கு நன்றி.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails