எனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் 135 ஆண்டு
பழமைவாய்ந்த நூலகம் ஒன்று உள்ளது. பென்னிங்டன்
நூலகம் எனப் பெயர்பெற்ற இந்த நூலகம் தமிழகத்திலுள்ள
பெரிய நூலகங்களில் 2-வது இடத்தை வகிக்கிறது. 1875-ம்
ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த
பென்னிங்டன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம்,
அதன்பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த
சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமச்சந்திரராவ், டி. ராமஸ்வாமி
ஐயர், டி. கிருஷ்ணராவ், முத்து ஐயங்கார் மற்றும்
முத்துச்சாமி பிள்ளை ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், நகரில்
தர்மசிந்தனை உள்ளவர்களையும், நூலக வளர்ச்சிக்குப்
பாடுபடும் மனப் பக்குவம் கொண்டவர்களையும்
உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்களில்
துணைத்தலைவர், செயலர், பொருளாளர் கொண்ட குழு
இந்நூலகத்தை நிர்வகித்து வருகிறது. தற்போது மாவட்ட
ஆட்சியரையும் சேர்த்து 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நூலகத்தில், 1951-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த
தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன. மேலும் இங்கு தமிழில் 27800 புத்தகங்களும்,
ஆங்கிலத்தில் 25200 புத்தகங்களும் என மொத்தம் 53000
புத்தகங்கள் உள்ளன. நூலகத்தில் கலித்தொகை (1887),
த்ருவ சரித்திர கீர்த்தனை (1890), இங்கித மாலை மூலமும்
உரையும் (1904), தியாகராச லீலை (1905), வள்ளலார்
சாஸ்திரம் (1907), திருமந்திரம் (1912) போன்ற அரிய தமிழ்ப்
புத்தகங்கள் உள்ளன. மேலும் 'பென்னி சைக்ளோபீடியா(1833)'
என்ற மிக அரிய வகை நூல் மொத்தம் 26 பாகங்களாக இங்கு
மட்டும்தான் உள்ளது. இதுபோக பல அபூர்வமான தமிழ்
மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.
தினசரி சராசரியாக 360 வாசகர்கள் நூலகத்துக்கு வந்து
பயனடைந்து செல்கின்றனர். நூலகத்துக்கு தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் 17 நாளிதழ்களும், மாத மற்றும் வார இதழ்கள்
தமிழில் 69-ம் வருகின்றன. ஆங்கிலத்தில் மாத மற்றும் வார
இதழ்கள் 47-ம், ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்புடைய
இதழ்கள் 46-ம் வருகின்றன. இந்த எண்ணிக்கை வருடாவருடம்
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
1344 சதுர அடியில் சொந்தக்கட்டடத்தில் இயங்கிவரும்
இந்த நூலகத்தில், ஆங்கிலப்பிரிவும், அரிய புத்தகங்கள்
அடங்கிய பிரிவும், பழைய இலக்கியங்களைத்
தேடுபவர்களுக்கும்,போட்டித் தேர்வுக்குத் தயார்
செய்பவர்களுக்கும் மிகப்பெரும் புதையலாக உள்ளது.
வாசகர் உபயோகத்திற்காக, பழமையான அரிய புத்தகங்கள்
சிடியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நூலகத்தின் கீழ்த்தளத்தில் மாத, வாரபத்திரிக்கைகளும்,
தமிழ் நாவல்களும் வைக்கப்பட்டுள்ளன.மேல்தளத்தில்
ஆங்கிலப்புத்தகங்களும், போட்டித்தேர்வுக்கான
புத்தகங்களும், அரிய வகைப் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவுகள் உள்ளன.
சிறுவர்களுக்கெனத் தனிப்பிரிவு அமைத்து அவர்களே
நூலகளை எடுத்துப் படிக்கும் விதத்தில் வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. மேலும். இவர்களுக்கு நல்லறிவையும்,
ஒருமைப்பாட்டினையும் வளர்க்கும் பொருட்டு வாரந்தோறும்
நீதிக்கதைகள், ஆன்மீகக்கதைகள், சுதந்திரப் போராட்டக்
காலக்கதைகள் ஆகியன தொலைக்காட்சியில் படமாகக்
காட்டப்படுகின்றன.
குடியரசுத்தலைவராக இருந்தபோது
டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் நூலகத்தைப் பார்வையிட்டு,
பார்வையாளர்கள் பதிவேட்டில் நூலகத்தின் செயல்பாடுகள்
மிக நன்றாக இருப்பதாக தன் கைப்பட எழுதியுள்ளார்.
இதுபோல, திரு.தென்கச்சி சுவாமிநாதன், திரு. வேலுக்குடி
க்ருஷ்ணன் மற்றும் பல பிரபலங்கள் இந்நூலகத்திற்கு வந்து
நூலகத்தைப் பற்றி தங்கள் கருத்துக்களை தங்கள் கைப்படப்
பதிந்துள்ளனர். மேலும், இந்த நூலகத்துக்கு உயர்நீதிமன்ற
நீதிபதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இன்றும் வருகின்றனர்.
மேலும் இந்த நூலகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள,
http://www.penningtonlibrary.com/home.aspx
வில் ஹென்றியின் அதிர்ஷ்டம்
21 மணிநேரம் முன்பு
16 comments:
உபயோகமான தகவல் ஜிஜி. தொடர்ந்து வித்யாசமான பதிவுகளை தருகிறீர்கள் வாழ்த்துக்கள்
இதுவரை நான் அறியாதது.நல்ல தகவல் !! :-)
//'பென்னி சைக்ளோபீடியா(1833)'//
பார்க்கணும் படிக்கணும் போல இருக்கு. ;-) உபயோகமான பதிவு..
தெரியாத விஷயம். இத்தனை பழைய நூலகத்தினைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி சகோ
நல்ல அறிமுகம்
உங்கள் அனுபவங்களையும் வாசிப்புகளையும் இணைத்து பகிரும்போது பதிவு இன்னும் சுவாரசியப்படும் என்பது என் தாழ்மையான கருத்து
நன்றி!
ரொம்ப நன்றிங்க L.K.
வருகைக்கு நன்றி.
வாங்க ஜெய்லானி.
வருகைக்கு நன்றிங்க.
அதுக்கு நீங்க ஸ்ரீவில்லிபுத்துருக்கு வரணும் RVS.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.
நன்றி.. பயனுள்ள தகவல்தான் இது..! இதுவரை அந்த ஊர்ப் பக்கம் போனதில்லை. போகும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் இங்கே செல்லாமல் வர மாட்டேன்..!
நூ்லக்் ்்்றி ்ல்ல த்்வல்.
அரிய தகவலுக்கு நன்றி. தமிழ்த் தாத்தா உ.வே.சாவின் 'என் சரித்திரம்' படித்த பிறகு அதில் குறிப்பிட்ட இடங்களை, மனிதர்களைப் பற்றித் தேடித் தேடிப் படிப்பது என் வழக்கமாகி விட்டது. உ.வே.சா, பென்னிங்டன் துரையைத் திருநெல்வேலி-குற்றாலம் பயணம் வந்தபோது சந்தித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி என் 'ராத்திரி வண்டி' குறுநாவலில் ஒரு முக்கியமான தருணத்தில் வந்து போகும்.
'என் சரித்திரம்' புத்தகத்தில் இருந்து -
குற்றாலக் காட்சிகள் (ஈசுவர வருடம் தை மாதம் - 1877 ஜனவரி)
அப்பால் தேசிகர் சங்கர நயினார் கோயிலில் நடைபெறும் ஆடித் தவசு
உத்ஸவத்தையும், திருச்செந்தூர் ஆவணி உத்ஸவத்தையும் தரிசித்து விட்டுத்
திருப்பெருந்துறை செல்ல எண்ணிப் பரிவாரங்களுடன் புறப்பட்டார்.
வழக்கப்படியே இடையிலுள்ளவர்களால் சிறப்புக்கள் செய்விக்கப்பெற்றுக்
குற்றாலம் சென்று தம்முடைய மடத்தில் சில நாள் தங்கி இருந்தார்.
நான் முதல் முதலாகத் திருக்குற்றாலத்தைக் கண்ட காலமாதலின்
அங்குள்ள இயற்கையழகை நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றேன். அருவியின்
தூய்மையும் அழகும் அங்கே வந்து கூடுவோர்களின் பக்தியும் ஆனந்தத்தை
உண்டு பண்ணின. பல வருஷங்களாகச் செழித்து ஓங்கி வளப்பம் குறையாமல்
வளர்ந்து நின்ற மரங்களும் அவற்றிற்கு அழகையும் வளர்ச்சியையும்
கொடுக்கும் சாரலும் அவ்விடத்தின் தனிச் சிறப்புக்களாக இருந்தன.
திருநெல்வேலி ஜில்லாவுக்குப் பெருமை உண்டாக்கக் குற்றாலம் ஒன்றே
போதும். அங்குள்ள காற்றும் அருவி நீரும் மனிதர் உள்ளத்தையும் உடலையும்
ஒருங்கே பரிசுத்தமாக்கும். பலவருஷ காலம் அங்கே வாழ்ந்திருந்தாலும்
சலிப்பே ஏற்படாது.
பென்னிங்டன் துரை
வெள்ளைக்காரர்கள் பலர் தங்கள் குடும்பத்தோடு அருவியில் ஆடும்
பொருட்டு அங்கே வந்து தங்கியிருந்தனர். திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக
இருந்த பென்னிங்டன் துரையென்பவரும் அங்கே வந்திருந்தார். அவருக்கும்
சுப்பிரமணிய தேசிகருக்கும் முன்பே பழக்கம் உண்டு. ஆதலால் தேசிகரது
வரவை அறிந்த கலெக்டர் ஒருநாள் மடத்திற்கு வந்து அவரைக் கண்டார்.
கலெக்டருடன் ஒரு முனிஷியும் வந்திருந்தார். தேசிகருடைய கட்டளையின்படி
கலெக்டரைப் பாராட்டி நானும் பிறரும் சில பாடல்களை இயற்றிச்
சொன்னோம். அவற்றின் பொருளை அந்த முனிஷி கலெக்டருக்கு
விளக்கினார். நான் இயற்றிய பாடல்களில் ஒன்றன் கடைசிப் பகுதி வருமாறு:
“,,,,,,,பென்னிங்டன் துரையே நின்னைக்
குற்றாலந் தனிற்கண்ட குதுகலமிங் கெவராலுங்
கூறொணாதே.”
அன்புடன்
இரா.முருகன்
www.eramurukan.in
கண்டிப்பாக இந்த நூலகத்துக்கு வந்து பயன் பெறுங்க உண்மைத்தமிழன்.வருகைக்கு நன்றி.
வாங்க ஜலீலா .
வருகைக்கு நன்றிங்க.
எனக்குத் தெரியாத அரிய தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி இரா.முருகன். வருகைக்கு நன்றி.
பக்கத்து ஊருல இருந்தும் பாக்காம விட்டுப்புட்டேங்க ! அடுத்து போகும் போது வெங்கடேஷ்வராவோட பென்னிங்க்டன்னையும் பார்த்துடனும். தகவலுக்கு நன்றிங்க !
நூலகத்தை தொடர்பு கொள்ள அதன் தொலைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டுகிறேன்
கருத்துரையிடுக