ஊரில் எனது வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு கரும்புத்
தோட்டம் இருந்தது. தைப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு,பொங்கலுக்காக கரும்பு எல்லாம் அறுத்து விட்டு, வயல்
முழுவதும் தீ வைத்துக் கொளுத்திவிட்டிருந்தார்கள். பின் அந்த
வயலை உழுது விட்டு, வேறு ஏதேனும் பயிர் போடுவார்கள்.
இதுதான் வருடம்தோறும் நான் பார்ப்பது. இந்த வருடமும்
அதேபோல, கரும்பு எல்லாம் அறுத்து முடித்து,வயலை சுத்தம்
செய்திருந்தார்கள். பின்னர் பொங்கல் முடிந்து, பத்து நாட்கள்
கழித்துப் பார்த்தால், அந்த வயல் இருந்த இடம் முழுவதும்
அளந்து, ஆங்காங்கே கற்களை ஊன்றி இருந்தார்கள்.
பற்றாக்குறைக்கு, "ஸ்ரீமான் நகர்- பிளாட்டுகள் விற்பனைக்கு"
என்று போர்டு வேறு மாட்டியிருந்தது .
எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில்,
சுற்றியுள்ள அந்த ஏரியா முழுவதிலும், இந்த ஒரு இடம்தான்
வயல்வெளியாக, பசுமையாக, பம்புசெட்டுடன் குளுமையாக
இருந்தது. மற்ற இடங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறிக்
கொண்டு இருந்தன. இப்போது இந்த வயல் இருந்த இடமும்
இன்று பிளாட்டாக மாறி விட்டது. இப்படியாக விளைநிலங்கள்
எல்லாமே இன்று கட்டிடங்களாகவும், பிளாட்டுகளாகவும்
மாறிவருகின்றன.
இன்று ரியல் எஸ்டேட் தொழில்தான் கொடிகட்டிப்
பறக்கிறது. டிவி சேனல்களில் கூட, எந்த சேனல் வைத்தாலும்,
அதில் இங்கு பிளாட்டுகள் உள்ளன, என்று நடிகர், நடிகைகளை
வைத்து விளம்பரம்தான். விவசாயம் பண்ணவேண்டும் என
நினைத்தால் கூட, இந்த ரியல் எஸ்டேட்காரர்கள், மிரட்டி
நிலத்தை வாங்கிவிடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் இப்போதெல்லாம் விவசாயம் செய்ய ஆள்
கிடைப்பதில்லை. விவசாய நிலங்கள் அழிந்துவருகின்றன
என்று கூறுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இப்படி
பிளாட்டுகளாக மாறுவதும், விவசாயம் செய்ய ஆள்
கிடைக்காததும்தான். களை எடுப்பதற்கு, பூச்சி மருந்து அடிக்க
என வயல் வேலைகளுக்கு எல்லாம் இப்போது ஆட்கள்
வருவது இல்லை. சம்பளம் அதிகமாக கிடைக்கும் என,
கிராமங்களில் உள்ளவர்கள் எல்லாம் நகரங்களுக்கு, வீடு
கட்டுவதற்கும், கடைகளில் வேலை செய்யவும் சென்று
விடுகின்றனர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று
விடுகின்றனர்.
மேலும் கஷ்டப்பட்டு விவசாயம் செய்யப்படும்
பயிர்களும் வியாபாரிகளால் குறைந்த விலைக்கே
வாங்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்குத்தான்
பெரும் நஷ்டம். பெரும்பாலும் போட்ட காசு அவர்களுக்கு
கிடைப்பதில்லை. இதனாலும் விளைநிலங்கள் இன்று
விற்கப்படுகின்றன. இன்று அரசு இதற்காக பெருமுயற்சி
எடுத்து வந்தாலும், இந்நிலை மாறவில்லை. எனது பாட்டி
ஊரில், முன்பெல்லாம் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள்
இருந்தனவாம். இன்று அவை எல்லாம் கட்டடங்களாக மாறி
வருகின்றன. குளத்தில் கட்டடம் கட்டுவதால், மழைக்
காலங்களில் கட்டடங்களைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும்.
வீடுகளில் இருப்பவர்கள் எல்லாம் நீந்தி போகிற மாதிரி
நிலைமை இருக்கும். இப்படி இயற்கைக்கு மாறாக, எல்லாம்
செய்வதால்தான இயற்கைச் சீரழிவுகளும் அதிகமாகிக்
கொண்டே வருகிறது. வேறு என்ன சொல்ல?
26 comments:
பெரும்பாலான ஊர்களில் இந்த நிலை தான் ஜிஜி! விளைநிலங்களை எல்லாம் அழித்துவிட்டு சாப்பாட்டுக்கு மாத்திரை சாப்பிடும் காலம் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! :(
இதில் அரசாங்கத்துக்கும் பங்கு உண்டு ஜி ஜி. தினமும் வேலை திட்டத்தில் குறைவான பளு உடைய வேளையில் அதிக சம்பளம் கிடைப்பதால் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் அதிகம் கூலி கேட்கிறார்கள் அப்படி கொடுத்து பின் லாபம் வருவதில்லை என்பதால் இவ்வாறு நடக்கிறது
போகிறபோக்கை பார்த்தால் விவசாயப்பொருள்களை வேற நாட்டிலிருந்துதான் வாங்கனும் போலிருக்கு :-(
வாஸ்தவமான பேச்சு தான்! நிச்சயம் இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து விவசாயம் கொடி கட்டிப் பறக்கும். பெரிய பெரிய கட்டிடங்களில் மழை நீர் சேமிப்பு போல மேல் தளத்தில், மொட்டை மாடியில் நெல்லோ கரும்போ பயிரிட்டுக் கொண்டிருப்பார்கள். கவலையை விடுங்க.
நல்ல சமூக அக்கறையுள்ள பதிவு/பகிர்வு. ;-)
உங்களின் இந்தப்பதிவு மிகவும் நியாயமான விஷயத்தைச்சொல்வதாக உள்ளது. அனைவருமே சிந்தித்துப்பார்க்க வேண்டிய பதிவு தான். விளைநிலங்களை மேலும் அழியாமல் காப்பாற்ற அரசாங்கம் தான் ஏதாவது தீவிர சட்டங்கள் கொண்டுவந்து காத்திட வேண்டும்.
பதிவுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.
மிக நல்ல பகிர்வுங்க,2020 உணவிற்கே பஞ்சம் வரும்னு சொல்றாங்க,உங்கள் பகிர்வும் அந்தச்சொல்லும் ஒத்துப்போகுது ஜிஜி.
ஹ்ம்.. ஆனாலும் டீவியில் வர ப்ளாட் விற்பனை நாடகங்கள் தான் பகீர் ந்னு இருக்கு..:(
வாங்க வெங்கட்நாகராஜ்,
ஆமாங்க.விண்வெளி வீரர்கள் சாப்பாட்டுக்கு மாத்திரை சாப்பிட்டுக்கறது போல எல்லாரும் சாப்பிடப் போகுற நாள் சீக்கிரம் வந்துவிடும் போல.
வாங்க எல் கே,
தற்போது விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்பது மிகவும் சரிங்க.
//களை எடுப்பதற்கு, பூச்சி மருந்து அடிக்க
என வயல் வேலைகளுக்கு எல்லாம் இப்போது ஆட்கள்
வருவது இல்லை. சம்பளம் அதிகமாக கிடைக்கும் என,
கிராமங்களில் உள்ளவர்கள் எல்லாம் நகரங்களுக்கு, வீடு
கட்டுவதற்கும், கடைகளில் வேலை செய்யவும் சென்று
விடுகின்றனர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று
விடுகின்றனர்.
//
வருகைக்கு நன்றிங்க.
வாங்க RVS,
நீங்க சொல்லி இருக்குற மாதிரி நடந்தா ரொம்ப நல்லா இருக்கும்.நடக்கணும்.இல்லாவிட்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.இந்த மாதிரி புதிய உத்திகளைப் பயன்படுத்தியாவது விவசாயத்தைப் பெருக்க வேண்டும்.
வருகைக்கு நன்றிங்க.
வாங்க வை.கோபாலகிருஷ்ணன்,
கண்டிப்பாக அப்படி அரசாங்கம் கொண்டு வருகிற சட்டம் கடுமையானதாக இருக்க வேண்டும்.
வருகைக்கு நன்றிங்க.
வாங்க ஜெய்லானி,
இப்பொழுதே நிறைய உணவுப் பொருட்கள் இறக்குமதிதான் பண்ணிட்டிருக்கோம்.நாம் சாம்பாருக்கு உபயோகிக்கிற துவரம்பருப்பு, ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் களைப்பயிர் போல அப்படி விளைந்து கிடைக்குமாம். ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவில் இருந்தும் நியூசிலாந்தில் இருந்தும் அந்தத் துவரம் பருப்பை இறக்குமதி பண்ணுகிறாங்களாம். சாம்பாருக்கு மட்டுமே இப்படி என்றால்,மற்ற உணவுகளுக்கு நினைத்துப் பாருங்க.
வருகைக்கு நன்றிங்க.
வாங்க ஆசியா,
2020க்குள்ளாகவே பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுடுச்சுங்க.
வருகைக்கு நன்றிங்க.
வாங்க முத்துலெட்சுமி,
எந்த சேனலை மாத்தினாலும் இந்தத் தொல்லை தாங்க.
இது எங்கபோய் முடியப் போகுதோ தெரியலை.
வருகைக்கு நன்றிங்க.
அருமையான பகிர்வு. இன்னும் சில ஆண்டுகளில் காய்கறிகளே இருக்காது என்று தான் சொல்கிறார்கள். விளைநிலங்களை எல்லாம் ப்ளாட்களானால் எங்கே விவசாயம் செய்வது? மொட்டை மாடியில் தான் விவசாயம் செய்யணும். VERTICAL GARDEN , TRAY GARDEN இதெல்லாம் அதற்குத் தான்.
வாஸ்தவம்தான் சார்.விளை நிலங்களெல்லாம் விலை நிலங்களாகிப்போய் தவணை முறை
விற்பனைக்காரர்களின் சிக்கி சீரழிகிறது.
அந்த சீரழிவை நிறுத்தவேண்டியவர்கள் யார் என்பதுதான் இந்த நேரத்துக் கேள்வியாக உள்ளது.அந்த கேள்வியை எழுப்பிய உங்களுக்கு நன்றி.
உங்கள் கவலை பலருக்கும் இருக்கிறது. ஒரேயடியாக மனம் தளரக்கூடாது. விளைநிலங்களே இல்லாத வளைகுடா நாடுகளில் எல்லாமே இறக்குமதிதான், இந்தியாவிலிருந்து உட்பட. அதற்காக விளை நிலங்கள் விலை நிலங்களாகமாறுவது சரியென்று சொல்லவில்லை. இருக்கும் நிலத்தில் உற்பத்தி பெருக்க வழிகள் காண வேண்டும். சோர்ந்து போனால் எப்படி.?
விளை நிலங்கள் வீடுகளாவது ரொம்ப கொடுமைங்க.. கன்னியாகுமரி மாவட்டத்தைப்பொறுத்தவரை இப்போல்லாம் ஒரு வயலை அவ்வளவு சட்ன்னு வித்துடமுடியாது. விவசாயம் செய்யத்தான் வாங்குறோம்ன்னு ஸ்டாம்ப் பேப்பர்ல எழுதி பதிவும் செஞ்சாத்தான் விக்கவே முடியுதாம். மீறி ப்ளாட் போட்டு விக்க நினைச்சாங்கன்னா அரசாங்கம் நடவடிக்கையும் எடுக்குதாம்..
தெளிவான பார்வையுடன் சிறப்பாக எழுதியிருக்கீங்க...
பகிர்வுக்கு நன்றி
வாங்க கோவை2தில்லி,
இப்போவே கலப்பின (ஒட்டு) முறையில் விளைந்த காய்களிலும் பழங்களிலும் எந்தவித ருசியும் இருப்பதில்லை.வரும்காலத்தில் நீங்க சொல்லி இருப்பது போன்ற தோட்டங்களில், குறைவான இடத்தில் அதிக விளைச்சலைப் பெற கையாளும் யுக்திகளால் எவ்வளவு தீமைகள் வரப்போகின்றனவோ தெரியவில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
வாங்க விமலன் சார்,
இப்படி கேள்விமட்டும் தான் எல்லோராலும் இன்று எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.அதற்கான தீர்வு தான் என்ன என்று தெரியவில்லை.
வருகைக்கு நன்றிங்க.
வாங்க பாலசுப்ரமணியம் ஐயா,
இப்படி சோர்ந்து போகாமல் இருக்க,இருக்கும் நிலத்தையாவது காப்பாற்ற வேண்டுமே ஐயா.அதற்கே இங்கு வழியில்லையே?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
வாங்க அமைதிச்சாரல்,
அப்படியா?புதிய செய்தி சொல்லி இருக்கீங்க.கேட்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.என் கணவரும் கன்னியாகுமரி மாவட்டம்தான்.இது பற்றி அவர் சொன்னது இல்லை.இப்படி சில இடங்களில்தான் நிலங்கள் காப்பாற்றப்படுகின்றன போலும்.
வருகைக்கும் தகவலுக்கும் நன்றிங்க.
வாங்க மாணவன்,
முதல்முறையாக வந்ததற்கு நன்றிங்க.தொடர்ந்து படிங்க.உங்களது ஆதரவையும் கருத்துக்களையும் தெரிவியுங்க.நன்றி.
நல்ல பதிவு.
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் முடிய எல்லாம் பிளாட்டுக்களாகி விட்டன.
அதே மாதிரி ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி முடிய பிளாட்டுக்களாகி வருகின்றன.
வாங்க ரத்னவேல் ஐயா,
இந்த நிலைமையில போனா எல்லா ஊர்களும் ஒண்ணாயிடும்.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.
கருத்துரையிடுக