டெல்லி குளிர்

புதன், நவம்பர் 02, 2011

                      டெல்லியில குளிர் ஆரம்பமாயிடுச்சு. இனி பிப்ரவரி
வரை இங்க இருக்குறங்கவங்க எல்லாம் எந்திரன் தான்.
அதாங்க ரோபோ. முகம் மட்டும்தான் வெளியில் தெரியும்.
தலையில இருந்து கால் வரை உல்லன்னால மூடி, குல்லா,
மப்ளர், ஸ்வட்டர், தெர்மல்ஸ், சாக்ஸ் என ரோபோ மாதிரி
அலைய வேண்டி இருக்கும். வெறும் காலால் நடக்க முடியாது.
தரையெல்லாம் அவ்வளவு சில்லென்று இருக்கும்.தண்ணீரில்
கை வைக்க முடியாது. கை நனைத்த பிறகு கொஞ்ச நேரத்திற்கு
பல் டைப் அடித்துக் கொண்டு இருக்கும். காலையில
எழுந்திருக்கவே கஷ்டமாக இருக்கும். இன்னும் கொஞ்ச நேரம்
இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க மாட்டோமா என்று
இருக்கும்.



                   நான் கல்யாணமாகி முதன்முதலில் டெல்லி வந்தது
டிசம்பர் மாதக் குளிரில். குழந்தை பிறந்து முதன்முதலில்
குழந்தையைத் தூக்கி வந்ததும் ஜனவரி மாதம் குளிரில்தான். அதனால்தானோ என்னவோ எங்களுக்கு குளிர் பழகிவிட்டது.
சம்மர்தான் எங்களைப் பாடாய் படுத்துகிறதே தவிர, குளிர்
பழகித்தான் விட்டது.  சம்மருக்கு பயந்துதான் ஊருக்குப் போக
வேண்டியதாய் உள்ளது.


 

                 இந்தக் குளிரில் டெல்லி பார்க்கவே அழகாய் இருக்கும்.
'இண்டியா கேட்'டை பனிமூட்டத்தில் பார்க்கும்போது அழகாக
இருக்கும். தூசி குறைந்து காற்று சுத்தமானதாக இருக்கும்.
பூங்காக்களில் எல்லாம் பூக்கள் கண்காட்சி நடக்கும்.முக்கியமாக
இந்த சீசனில் காய்கறிகளும் பழங்களும் விலை மலிவாகக்
கிடைக்கும். கேரட், பட்டாணி, கத்தரிக்காய்,கீரைகள் எல்லாம்
பிரெஷ்ஷாக பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். 
                     கோதுமை உணவுகள் உஷ்ணத்தைக் கொடுக்கும்
என்பதால்,  இந்த சீசனில் கோதுமை ரொட்டிதான்
பெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். அதுபோல கடுகு எண்ணெய்
உடலுக்கு சூட்டைக் கொடுக்கும் என்பதால், சாப்பாட்டிற்கு
பெரும்பாலும் கடுகு எண்ணெய் தான். குழந்தைகளுக்குக் கூட
இந்த எண்ணையைக் கொண்டு மசாஜ் செய்யச்
சொல்லுகிறார்கள். இதனால் உடல் சூடாகுமாம். 
குழந்தைகளுக்கு குளிர் தெரியாது. ஜலதோஷம் பிடிக்காது 
எனக் கூறுகிறார்கள். 




                  இந்த சீசனில் பிளாட்பாரவாசிகளின் நிலைமைதான் 
பாவமாக இருக்கும். ரோட்டிலேயே நெருப்பு பற்ற வைத்துக் 
குளிர்காய்வார்கள். வருடந்தோறும் குளிர்கால முடிவில் 
பத்து நாட்களுக்கு குடியரசு மாளிகையில் உள்ள மொகல் 
கார்டனைப் பொதுமக்கள் பார்வைக்கு விடுவார்கள். 
அப்போது அங்குள்ள பூக்களைப் பார்ப்பதற்குக் 
கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதேபோல குளிர்கால
முடிவில்தான் இங்கு ஹோலிப் பண்டிகையும்  
கொண்டாடப்படுகிறது.
                 டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடு இரவில் குளிர் 
மைனசில் செல்லும். டெல்லிக்கு வடக்கில் உள்ள இடங்களில், 
இமாச்சல பிரதேசங்களில் எல்லாம் பனிப் பொழிவைக் 
காணலாம். இவ்வாறு குளிரை ரசிக்க விரும்புபவர்கள் 
முன்பனிக் காலமாகிய அக்டோபர், நவம்பரிலும், பின்பனிக் 
காலமாகிய பிப்ரவரி, மார்ச்சிலும் இங்கு வந்து ரசிக்கலாம்.
 

 

 

14 comments:

குறையொன்றுமில்லை. சொன்னது…

இதுபோலத்தான் ஜபல் பூரிலும் 4-மாதங்கள் குளிர் வாட்டி எடுக்கும். வாய்மூக்கு வழியாக புகை வரும். தேங்கா எண்ணை கூட நெய் போல உறைந்து விடும். ஆனால் காய்கறிகள் ஃப்ரெஷா கிடைப்பது இந்த குளிர் சீசனில்தான்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குளிர் ஆரம்பித்து விட்டது. விதவிதமாய் காய்கறிகள் வந்து விடும்... :) நல்ல பகிர்வு....

கோவை நேரம் சொன்னது…

ஸ்வெட்டர் ரெடி பண்ணிட்டு டெல்லி வருகிறேன்.டெல்லி பத்தின தகவல் அருமை..

ப.கந்தசாமி சொன்னது…

வந்துடறமுங்க. ஆளுக்கு நாலு கம்பளி கொண்டு வந்தா போதுமுங்களா?

அமுதா கிருஷ்ணா சொன்னது…

சென்னையிலும் குளிர் அடிக்கும் ஆனால், டில்லி அளவு கிடையாது.வெயில் அடிக்கும் அதிலும் டில்லியினை மிஞ்ச முடியாது.படிக்கும் போதே குளிர் அடிக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

படிக்கும் போதே ஜில்லென்று இருந்தது. குளிரோ வெப்பமோ மழையோ காற்றோ எதுவுமே அளவுக்கு அதிகமானால் கஷ்டமாகத்தான் உள்ளது.

அழகிய படங்களுடன் அருமையான பதிவு. நன்றி.

pudugaithendral சொன்னது…

இங்கே ஹைதையிலும் குளிர் ஆரம்பிச்சாச்சு. ஹைதை வெயில் இரண்டு மாதம் மட்டும்தான் எனக்கும் கஷ்டம். மற்றபடி எஞ்சாயிங். ஆனந்தமா குளிர்காலத்தை எஞ்சாய் செய்ய வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இவ்வாறு குளிரை ரசிக்க விரும்புபவர்கள்
முன்பனிக் காலமாகிய அக்டோபர், நவம்பரிலும், பின்பனிக்
காலமாகிய பிப்ரவரி, மார்ச்சிலும் இங்கு வந்து ரசிக்கலாம்.

பனிப் பொழிவாய் குளிரடிக்கும் பகிர்வு!

போத்தி சொன்னது…

ஆகா. டில்லியை பற்றி அருமையாக கூரி விட்டீர்கள். 5 வரூடம் முன்பு டில்லி போக வாய்ப்பிருந்தும் போகாததை நினைவு படுத்திவிட்டீர்கள்.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நல்ல தகவல்கள்.
வாழ்த்துக்கள்.

ஆமினா சொன்னது…

லக்னோவில் வெயில்ல கூட சமாளிச்சுட்டேன். குளிர் நேரத்துல ஊருக்கு அனுப்பிவைக்கிறீங்களா இல்லையான்னு என்னவருடன் ஒரே சண்ட......

கொடும்பனி

இங்கே மார்கழி மாசத்துக்கே சொட்டர் போட்டுட்டு போறவங்கள இப்ப பாக்கும் போது காமெடியா இருக்கு!

ADHI VENKAT சொன்னது…

குளிர் ஆரம்பிச்சுடுச்சு. காய்கறிகளும் ஃப்ரெஷ்ஷா கிடைக்குது. வெளில கூட குளிர் தெரியாது.ஆனா வீட்டுக்குள்ளே ரொம்ப குளிர் தெரியும்.

துளசி கோபால் சொன்னது…

எங்க ஊர்லே சம்மர் வந்துருச்சாம்! தினசரிகள் சொல்லுது. இன்னிக்கு 20 டிகிரி!

டில்லிக் குளிர் காலம் நடைபாதை வாசிகளுக்கும் கஷ்டம்தான்:( சண்டிகரில் வெய்யிலும் குளிரும் கூடுதல். வீடுகளில் ஏர்கண்டிஷன் வச்சுருக்காங்களே தவிர ஹீட்டிங் செஞ்சுக்க ஒரு வசதியும் இல்லை.

படுக்கைக்கு எலெக்ட்ரிக் ப்ளாங்கெட் கிடைக்குதா அங்கே?

பெயரில்லா சொன்னது…

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails