டெல்லி கிளைமேட்

செவ்வாய், ஜூலை 12, 2011





                 டெல்லி வெயில்ல இருந்து தப்பிக்கிறதுக்காக ஒரு
மாசம் ஊருக்குப் போயாச்சு. அங்க போனா இதை விடக்
கொடூரமா இருந்தது வெயில். கடைசியா ஊருக்கு
கிளம்பும்போதுதான் குற்றால சீசனால கொஞ்சம் கிளைமேட்
நல்லா இருந்தது.

                நாகர்கோவில் போயிருந்தபோதும் , அங்க இப்போ
ஆணிஆடிச் சாரல். குளுகுளு காற்றோட சாரல் சூப்பரா இருந்தது.
வரவே மனசு இல்லை. ஒரு மாசம் போனதே தெரியலை.
டெல்லி வந்தாச்சு. இங்க இப்போ வெயில் குறைஞ்சிடுச்சு. ஆனா,
புழுக்கம் தாங்க முடியலை. மழையும் பெய்யாம, வெயிலும்
இல்லாம கிளைமேட் கொல்லுது. வீட்டுக்குள்ள இருக்க
முடியலை. வியர்வைக் குளியலா இருக்கு தினமும். இதனால்
சீக்கிரமே டயர்டாகி எரிச்சல்தான் வருது. இங்க அடிக்கிற
அதிகமான வெயிலையும், குளிரையும் கூட சமாளிச்சிடலாம்
போல இதுக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி
இருக்குமோ தெரியலை? படுத்தி எடுக்குது மனுஷனை.
             ஊருக்கு போயிட்டு வந்தாச்சு. போயிட்டு வந்த
இடங்களைப் பத்தி எழுதவேண்டாமா? அடுத்த பதிவுகளில்
எழுதறேன்.

டெல்லி மெட்ரோ ரயில் திட்டம்

வெள்ளி, ஜூன் 24, 2011

             
              இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டம் முதன்முதலில்
கொல்கத்தாவில்தான் 1984ல் தொடங்கப்பட்டது. டெல்லியில் 
இந்தத் திட்டமானது, 1995ல் ரெஜிஸ்டர் செய்யப்பட்டு, 1998ல் 
தான் ஆரம்பிக்கப்பட்டது. இது டெல்லி மக்களுக்கு ஒரு மிகப்
பெரிய வரப் பிரசாதம். இதன் சேர்மன் திரு. நவீன் குமார் மற்றும்
மேனேஜிங் டைரக்டர் திரு.டாக்டர்.E.ஸ்ரீதரன். டெல்லி மெட்ரோ
திட்டத்தின் வெற்றிக்கு முழுக் காரணமும் திரு,ஸ்ரீதரனையே
சாரும். 2021க்குள் டெல்லி முழுவதையும் மெட்ரோ மூலமாக
இணைப்பதே இவரது நோக்கம்.



              டெல்லி மெட்ரோவானது, டெல்லி,குர்கான் மற்றும்
நொய்டா இந்த மூன்று  NCR (National Capital Region)
நகரங்களையும்  இணைக்கிறது. இது ஆறு லைன்களாக
189.63 கி.மீ தூரத்தைக் கொண்டுள்ளது. இதில் 142 மெட்ரோ
ஸ்டேஷன்கள் உள்ளன. அவற்றுள் 32 கீழ்த்தள
ஸ்டேஷன்களும் அடங்கும். தினமும் 2700 ட்ரிப்புகள் காலை
6 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படுகிறது. இந்த
ரயிலானது 25 கி.வாட்,50 ac ஆற்றலால் இயக்கப்படுகிறது.


               மூன்று முக்கிய லைன்களில் சிவப்பு லைன்
(தில்ஷத் கார்டன் முதல் ரிதலா வரை இயக்கப்படுகிறது)
2002லும், மஞ்சள் லைன் (ஜஹாங்கீர்புரி முதல் ஹூடா
சிட்டி சென்டர் வரை) 2004லும், நீல லைன் (துவாரகா
செக்டர்-21 முதல் ஆனந்த் விஹார்/ நொய்டா சிட்டி சென்டர்
வரை) 2005லும் செயல்படத்துவங்கியது. மேலும் கிளை
லைன் களாக பச்சை லைன் 2009லும் வயலட் லைன்
2010லும் ஆரஞ்சு லைன் 2011லும் செயல்படத்
துவங்கியுள்ளது.

              பாதுகாப்பு, வசதிகள், நேரந்தவறாமை, தூய்மை
மற்றும் பயணிகளின் திருப்தி போன்றவற்றில் டெல்லி
மெட்ரோவே உலகத்தரத்தில் உள்ளது. மெட்ரோவில்
பணிபுரியும் ஊழியர்களும் பொதுமக்களுக்கு உதவும்
வகையில் அன்பாகவும் மரியாதையாகவும்
நடந்துகொள்கின்றனர். படிக்காத பாமர மக்களுக்கு
இன்முகத்துடன் வழிகாட்டுகின்றனர். இந்தியாவிலேயே
முதன்முறையாகதானியங்கி டோக்கன் டிக்கட் சிஸ்டம்
அறிமுகப்பட்டுள்ளது. இந்த டோக்கன் முறையால் கூட்டம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

            ஸ்மார்ட் கார்ட் முறையாலும் மூன்று நிமிட
நிறுத்தத்தினாலும்  மெட்ரோ பயணம் இனிமையாக
அமைகிறது. ரயில் நிலையம் மற்றும் ரயிலின் பெட்டிகள்
முழுவதும் ஏசி செய்யப்பட்டிருக்கிறது. பெட்டியில் ஏறும்
வழியும் இறங்கும் வழியும் தானியங்கி மடிப்புக் கதவின்
மூலம் எளிதாகவும் விரைவாகவும் நடக்கிறது. அவசர
உதவிக்கு ரயில் ஓட்டுநரை நேரடியாக தொடர்பு
கொள்ளவும் வசதி உள்ளது.

             ரயில் வந்ததும் பெட்டிக்குள் ஏறுபவர்களுக்கு தனி
லைனும் இறங்குபவர்களுக்கு தனி லைனும்
வரையப்பட்டுள்ளது. அதன்படி வரிசையில் நின்றே ஏற
வேண்டும். இதனால் ஒழுங்குமுறை கடைபிடிக்கப்படுகிறது.
கூட்டமாக இருக்கும் சமயங்களில் முதியவர்களுக்கும்
பெண்களுக்கும் இடம் தருவதற்கு அறிவுறுத்தப்படுகிறது.
ரயிலில் ஏறியதும் ஒவ்வொரு நிறுத்தத்தின் பெயரும்
ரயிலினுள்ளே ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்படுகிறது.
மேலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளே மானிட்டரில்
ஓடுகிறது. எந்தப் பக்கம் இறங்க வேண்டும் என்பதையும்
அறிவிப்பு செய்கிறார்கள். பெட்டியின் உள்ளே இரண்டு
பக்கங்களிலும் அந்த ரயில் நிற்கும் நிறுத்தங்களின்
வரைபடமும் வரையப்பட்டிருக்கிறது.

               மெட்ரோ நிலையத்தில் எஸ்கலேட்டர்களின்
எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் விரைவாக செல்ல
முடிகிறது. மெட்ரோ ரயில் டெல்லி மக்களின் போக்குவரத்திற்கு
கிடைத்துள்ள ஒரு மைல் கல். விரைவான போக்குவரத்தால்
நேரமும் மிச்சமாகிறது. போக்குவரத்து நெரிசலும் கட்டுக்குள்
உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு குறைகிறது. தற்போது சென்னையிலும் பெங்களூருவிலும் மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் டெல்லி மெட்ரோ
ரயில் திட்டமே ஒரு முன்னோடியாக செயல்படுகிறது எனலாம்.

                     கடந்த ஜூன் 3 ஆம் தேதி, தில்லியில் இருந்து
வெளியான, முதல் தினமணி  நாளிதழின் சிறப்பு மலரில் இந்தக்
கட்டுரை வெளியானது. இக்கட்டுரையை வெளியிட்ட தினமணி
நாளிதழுக்கு மிக்க நன்றி.

வறுமையால் படிப்பைத் தொடர முடியாமல் கஷ்டப்படும் மாணவி

புதன், ஜூன் 01, 2011


              இந்தக் கட்டுரையை சமீபத்தில் நாளிதழ் ஒன்றில்
படித்தேன். எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே
பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து வறுமையில் வாடும்
மாணவி ஒருவர், தனது கல்லூரி படிப்பிற்கு உதவி
கோரியுள்ளார்.


            ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, அத்திகுளம் கிராமத்தைச்
சேர்ந்தவர் சொர்ணத்தாய். இவரது மகன் ஏ. தேவதாஸ்.
இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களது மகள்
ஆனந்தஜோதி. இவருக்கு இரண்டரை வயது இருக்கும்போதே
தாயும், ஏழு வயதாகும் போது தந்தையும் இறந்துவிட்டனர்.
இதனையடுத்து பாட்டி சொர்ணத்தாயுடன் ஒரு குடிசை
வீட்டில் ஆனந்தஜோதி வசித்து வருகிறார். பாட்டி கூலி வேலை
செய்து ஆனந்தஜோதியைப் படிக்க வைத்து வருகிறார்.

              சொர்ணத்தாயிக்கு வயது முதிர்வு காரணமாக ஒரு
கண்பார்வை முற்றிலும் இழந்துவிட்டது. ஆனந்தஜோதி
படிப்பு தவிர்த்து ஏனைய நேரங்களில் ஒரு தீப்பெட்டி ஆலையில்
வேலைக்குச் சென்று பாட்டிக்கு உதவி வருகிறார்.

            எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 427 மதிப்பெண்கள் பெற்ற
ஆனந்தஜோதி, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 889
மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பட்டதாரி ஆசிரியராகி
சமுதாயத்திற்கு செவை செய்ய வேண்டும் என்று
ஆனந்தஜோதிக்கு ஆசை. சிவகாசி எஸ்.எஃப்.ஆர். மகளிர்
கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிக்க
விண்ணப்பித்துள்ளார். கல்லூரியில் ஒரு செமஸ்டருக்கு
கட்டணம் ரூ.2390. ஒரு செமஸ்டருக்கு கல்லூரிப் பேருந்துக்
கட்டணம் ரூ.3500. இது தவிர்த்து சாப்பாடு, புத்தகங்கள்,
துணிகள் உள்ளிட்ட செலவு உள்ளது. மூன்று ஆண்டுகள்
இப்படிப்பை முடித்துவிட்டு, பி.எட். படிக்க வேண்டும்.

             பாட்டி சொர்ணத்தாய் கூறுகையில், "இனிமேல்
ரேஷனில் 20கிலோ இலவச அரிசி தருவார்களாம் அதை
வைத்து ஓரளவிற்கு நான் பிழைப்பு நடத்திக் கொள்வேன்.
பேத்தி ஏதாவது படித்து வேலைக்குச் சென்று வாழ்க்கை
அமைத்துக் கொள்ள வேண்டும். அது தான் எனது விருப்பம்"
என்றார்.

            இவர்களுக்கு எந்த தொலைபேசி வசதியும் இல்லை.
இவர்களின் நிலை குறித்து தகவல் கொடுத்தவரின்
தொலைபேசி எண் 9994742465. ஆதரவு இன்றி வறுமையில்
தவிக்கும் ஆனந்தஜோதியின் முகவரி தே.ஆனந்தஜோதி,
காப்பாளர் பெயர். சொர்ணத்தாய், 127, வேதக்கோவில் தெரு,
(நடுத் தெரு), அத்திக்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழி, 626125,
விருதுநகர் மாவட்டம்.

இவரது நிலையில் இன்று பல மாணவர்கள் இருக்கின்றனர்.
இவர்களுக்கு நம்மால் இயன்ற  உதவியைச் செய்வோம்.

Related Posts with Thumbnails