யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே...

ஞாயிறு, ஜனவரி 30, 2011

        
              சின்ன வயதில் யானையைப் பிடிக்காதவங்க
இருக்கமாட்டாங்க. நான் சிறு வயதில் மிகவும் ரசித்த, மலைத்த,
பிரம்மாண்டமான மிருகம் அது. கோயிலில் பார்க்கும் போதும்,
தெருவில் காசு வாங்க வரும் போதும், அதனிடம் ஆசிர்வாதம்
வாங்கத் தவறுவதில்லை. ஆனால் அதன் மேல் ஏறுவதற்கு
பயம். இப்போதுகூட ஊரில், தெருவிற்கு யானை வரும்போது,
மணிச்சத்தம் கேட்டால் வெளியே வந்து பார்க்கத் தோணுகிறது. 
கோவிலில் பார்க்கும்போது கூட ஒரு நிமிடமாவது அதன்
அழகை, கம்பீரத்தை நின்று பார்த்துவிட்டுத்தான் செல்லத்
தோணும். இப்படி நமக்கெல்லாம் பிடித்த யானையைப் பற்றி
நான் சேகரித்த தகவல்கள் இவை.




               ஆசிய யானை என அன்பாக அழைக்கப்படும், இந்திய
யானைகளில் பல, தமிழக - கேரள எல்லையில் மேற்குத்
தொடர்ச்சி மலைகளில் வசிக்கின்றன. ஆப்ரிக்க யானைகளை
விட, உயரம் குறைவாகவும், காதுகள் சிறியதாகவும் இவை
இருக்கும். அதிகபட்சம் 6.6 அடி முதல் 11.8 அடி உயரம் வரை
வளரும். 3000 முதல் 5000 கிலோ வரை எடை இருக்கும். ஆண்
யானைக்கு மட்டுமே பெரிய தந்தங்கள் இருக்கும். பெண்
யானைக்கு வெளியே தெரியாத வகையில் சிறு தந்தம் இருக்கும்.
சில ஆண் யானைகளுக்கு தந்தம் இருக்காது, இவை ' மக்னா '
யானைகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தோல் 3
முதல் 5 செ.மீ., வரை தடிப்பானவை. ஒரு நாளைக்கு 150 கிலோ
முதல் 170 கிலோ வரை உட்கொள்ளும்.



                சீசனுக்கு ஏற்ப இடம் மாறும் இவை, தங்களுக்கு என
தனி பாதையை வைத்திருக்கும். இந்தப் பாதையை மனிதர்கள்
ஆக்கிரமிக்கும் போது தான், குடியிருப்புகளுக்குள் யானைகள் புக
வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கூட்டம் கூட்டமாக வாழும்
தன்மையுடைய யானைகளுக்கு, மூத்த ஆண்யானை தலைமை 
ஏற்று நடத்திச் செல்லும். கெல்லும் பாதையை நினைவு வைத்துக்
கொள்ள வேண்டிய பொறுப்பு, தலைமை யானைக்கு உண்டு.
நன்கு வளர்ந்த யானைக்கு மனிதர்களைத் தவிர, வேறு எதிரிகள்
கிடையாது. குட்டி யானைகளைத்தான் புலி வேட்டையாடும்.
காட்டில் அதிகபட்சம் 60 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
யானைகள், வளர்க்கப்படும்போது, 80 ஆண்டுகள் வரை
உயிர்வாழும். ஒருநாளைக்கு 80 முதல் 200 லிட்டர் தண்ணீர்
இவற்றுக்குத் தேவை. இதில் பெரும்பாலனதை குளிக்கப்
பயன்படுத்தும்.


            ' இன்ஃப்ரா சவுண்ட் ' மூலம் தங்களுக்குள் யானைகள்
பேசிக்கொள்ளும். இந்திய ஆராய்ச்சியாளர் எம்.கிருஷ்ணன்
என்பவர்தான் இதை முதலில் கண்டுபிடித்தார். பெண் யானை,
9 முதல் 15 ஆண்டுகளுக்குள் பருவத்தை எட்டும். 18 முதல் 22
மாதங்கள், இதற்கு கர்ப்பகாலம். 19 மாதங்களிலேயே, தாய்
வயிற்றில் குட்டி, முழு வளர்ச்சியை எட்டிவிடும். இருப்பினும்,
அதன்பிறகும் சில மாதங்கள் கழித்துதான், குட்டியை தாய் ஈனும்.
இது ஒரு இயற்கை விநோதம். இதற்குக் காரணம், ஈன்ற உடனே,
எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்கும் உயரத்தை குட்டி எட்ட
வேண்டும் என்பதற்காக.


             பிறந்த உடன், யானைக்குட்டி  100 கிலோ எடை
இருக்கும். ஒருமுறைக்கு ஒன்று அல்லது அரிதாக இரண்டு
குட்டிகளைத் தாய் ஈனும். குட்டி ஓரளவு பெரிதாகும் வரை தாய்
மீண்டும் கருத்தரிக்காது. இதற்கு ஐந்து ஆண்டுகள் வரை
ஆகுமாம். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் யானைக்கு
' ஹார்மோன் ' அதிகம் சுரக்கும் போது, ' மதம் ' பிடிக்கிறது.
ஜோடி கிடைக்காவிட்டால், மூர்க்கத்தனமாக மற்ற
யானைகளைத் தாக்கும். சில நேரங்களில், இதற்கு பெண்
யானைகள் பலியாவது உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை தான்
இது நிகழும்.

             நாமெல்லாம் ஊர்களில், கோவில்களில், தெருக்களில்
பார்த்த யானையை, இப்போதுள்ள சந்ததியினரால் வெறும்
புத்தகங்களில் படமாகவும், டிவியிலும் மிருகக்காட்சி
சாலையிலும் மட்டுமே பார்க்க முடிகிறது. சிறுவயதில்
நமக்கெல்லாம் மிகவும் பிடித்த, யானை இனம் கொஞ்ச
கொஞ்சமாக அழிந்து வருவது மிகுந்த வேதனைக்கு உரிய
விஷயம்.

குடியரசு தின அணிவகுப்பு

புதன், ஜனவரி 26, 2011

             
              இன்று நம் நாட்டின்  62 ஆவது குடியரசு தினம்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!  இதையொட்டி,
பல்வேறு துறைகளில் நம் நாடு கண்டுள்ள வளர்ச்சியை
பிரதிபலிக்கும் வகையில் டெல்லியில், அணிவகுப்பு
நடப்பது வழக்கம். ராஜ பாதையில் தொடங்கி செங்கோட்டை
வரை 8 கி.மீ. தூரம் இந்த அணிவகுப்பு நடக்கும். ராஜபாதையில்
இருந்து செங்கோட்டை வரை நடைபெறும் இந்த அணிவகுப்பும்,
அலங்கார ஊர்திகளின் ஊர்வலமும், கலை நிகழ்ச்சிகளும்
கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும்.



 
              முதன் முதலாக 2009 ஆம் ஆண்டு இந்த அணிவகுப்பைப் 
பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.  அது 60 வது குடியரசு 
தினம். காலையில் அந்தக் குளிரில் ஆறு மணிக்கே புறப்பட்டுச்
சென்றோம். நான், என் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என 
12 பேர் சென்றோம். இந்த அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பிற்காக 
பல ரோடுகள் ப்ளாக் பண்ணப்பட்டிருந்தன. சுற்றி சுற்றி ஒரு 
வழியாக போய்ச் சேர்ந்து, செக்யூரிட்டி சோதனைகளெல்லாம் 
முடித்து, எங்களுக்கான இடங்களில் போய் உட்கார்ந்து 
கொண்டோம். மொபைல், கேமரா, உணவுப் பண்டங்கள் எதுவும்
எடுத்துச் செல்லக்கூடாது. குழந்தைகளுக்கான பால்
பாட்டிலைக்கூட, பாலை வாயில் ஊற்றிக் காண்பித்தபிறகே 
அனுமதிக்கின்றனர். அந்த அளவிற்கு கடுமையான பாதுகாப்பு.



          ள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளின் ஆடல், 
பாடல் நிகழ்ச்சிகளும், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. 
ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பம்சங்களுடனும், அந்தந்த 
மாநிலத்தின் நடனங்களும் அருமையாக இருந்தது. 
விமானப் படை வீரர்களின் சாகசத்தைப் பார்க்கக் 
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மொத்த நிகழ்ச்சியின் 
சிறப்பம்சமே இதுதான். ராணுவப்படை, கடற்படை, விமானப் 
படை, எல்லைப் பாதுகாப்புப் படை முதலிய படைகளின் 
அணிவகுப்பு பார்க்கவே மெய்சிலிர்க்க வைத்தது. இறுதியாக 
வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் விருது
வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
             குடியரசுத்தலைவர் கடைசியில் நமது நாட்டின்
மூவண்ணக் கொடியை குண்டுகள் முழங்க ஏற்றும்போது,
மெய் சிலிர்த்துவிட்டது. இந்த அணிவகுப்பைப் பார்க்கும் போது,
இந்தியன் என்ற உணர்வு தலைதூக்கிற்று. வார்த்தைகளால்
அதை விவரிக்க முடியவில்லை. அப்படி ஒரு அனுபவம்.
திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் அனுபவம். இந்த இரண்டு
வருடங்களாக பார்க்க செல்ல முடியவில்லை. அடுத்த
வருடமாவது சென்று பார்க்கும் ஆவலில் இருக்கிறேன்.

பொங்கல்

சனி, ஜனவரி 15, 2011

           

             இன்று தைத்திருநாள் ;தமிழர்த்திருநாள். அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


            இன்று பானைப் பொங்கல் இல்லை.சூரியப் பொங்கலும்
இல்லை. சின்ன வயதில் பொங்கல்னாலே ரொம்ப ஜாலியா
இருக்கும். பாட்டிவீட்டுக்குப் போவோம். பொங்கலன்று
காலையில் பொங்கல் வச்சதும், நாங்க சாப்பிடறோமோ
இல்லையோ, அதை கொண்டு போய் தெருவில் உள்ள
பக்கத்து வீடுகளுக்கெல்லாம் கொடுக்க ஓடுவோம். பொங்கலுக்கு
முந்தின நாள் மாமா ஒரு தள்ளு வண்டியில் ஒரு கட்டு அல்லது
இரண்டு கட்டு கரும்பு வாங்கி கொடுத்து விடுவாங்க. அதைக்
காலி பண்ண ஒரு போட்டியே நடக்கும். பொங்கலன்று புது
ட்ரெஸ் போட்டு, பக்கத்து வீடுகளின் பொங்கலை சாப்பிடவே
சரியாக இருக்கும். பாட்டி வீட்டுக்கு முன்னாடி இருக்குற அம்மன்
கோவிலிலும் பிரசாதம் கொடுப்பாங்க. கோவில் பிரசாதம்னாலே
அதுக்கு தனி டேஸ்ட்தான். அதானால பிரசாதம் வாங்குறதுக்கும்
போட்டி நடக்கும்.
              பொங்கல் அன்று மதியம் வெண் பொங்கல் சாதம்
செய்வாங்க. வெண் பொங்கல்னா, மிளகுப் பொங்கல் இல்லை.
பச்சரிசி சாதம் வைத்து. 13 வகை அல்லது 15 வகை  காய்கள்
போட்டு அன்று மட்டும் வித்தியாசமான ஒரு வகை சாம்பார்
வைப்பாங்க. அதுக்கு 'கிள்ளிப் போட்ட சாம்பார்'ன்னு பேர். நல்ல
சுவையா இருக்கும். வெள்ளை வெளேர்ன்னு பச்சரிசி சாதத்துக்கு
அந்த கிள்ளிப் போட்ட சாம்பார் சாப்பிட ஆசையா இருக்கும்.
மத்தியானம் தலை வாழை இலையில இந்த விருந்தை
முடிச்சிட்டு, சாயங்காலம் சின்னப் பிள்ளைகள் எல்லாரும்
சேர்ந்து உட்கார்ந்து கரும்பு சாப்பிடுவோம். அதுலயும் போட்டி
நடக்கும் யாரு முதலில் ஒரு துண்டு கரும்பை சாப்பிடறதுன்னு.
 

               மறுநாள் மாட்டுப் பொங்கல் ரொம்ப விசேஷமாக
இருக்கும்.பாட்டி வீட்டில் மாடு கிடையாது. ஆனால் பக்கத்து
வீடுகளிலெல்லாம் மாடுகள் உண்டு. அன்று அந்தத் தெருவில்
உள்ளகுளத்தில் மாடுகளை எல்லாம் குளிப்பாட்டி, கொம்புக்கு
எல்லாம் வண்ணம் பூசுவார்கள். மாட்டுக்கு அலங்காரம்
ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதை
வேடிக்கை பார்ப்பதற்காகவே போவோம். சாயங்காலம்தான்
மாட்டுப்பொங்கல் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும்
ஒரு நேரம் வைத்து கொண்டாடுவார்கள். அதனால் சாயங்காலம்
இத்தனை மணிக்கு பொங்கல் கொண்டாட வந்துடுங்கன்னு,
எங்களுக்கெல்லாம் அழைப்பு வந்திடும். இது மாடுகளுக்கு
மட்டுமல்ல.சின்ன பிள்ளைகளான எங்களுக்கும் பொங்கல்தான்.
              சாயங்காலம் ஆனதும், அழைப்பு வந்த வீடுகளுக்கு , ஒரு
தாம்பாளமும் ஒரு குச்சியும் கொண்டு செல்வோம். அந்த வீட்டில்
மாடுகளுக்கு அலங்காரம் பண்ணி, மாட்டிற்கு முன்பாக,
மாட்டுக்காகவே ஸ்பெஷல்லாக உப்பில்லாத பச்சரிசி சாதம்
செய்வார்கள். அப்போது பொங்கல் பொங்கி வரும்போது,
கொண்டு போயிருந்த தாம்பாளத்தில் குச்சியால் தட்டிக்கொண்டே
'பொங்கலோ பொங்கல்' ன்னு கத்த வேண்டும். பிள்ளைகள்
நிறைய பேர் போயிருந்தோமானால், சத்தம் பயங்கரமாக
இருக்கும். மாடே மிரண்டு விடும். பின்னர் மாட்டிற்கு மாலை
எல்லாம் போட்டு, பூஜை  எல்லாம் செய்து விட்டு , அந்த
சாதத்தை மாட்டிற்கு ஊட்டி விடுவார்கள். ஒரு வீட்டில் இது
முடிந்ததும்,  அடுத்த வீட்டிற்கு செல்வோம். அந்த வயதில் இது
பயங்கர ஜாலியாக, விளையாட்டாக இருக்கும்.



            அடுத்த நாள் காணும் பொங்கலன்று, புளி சாதம்,
எலுமிச்சை சாதம் என ஐந்து வகை அல்லது ஏழு வகை கலவை
சாதங்கள் செய்து, சாயங்காலமாக ஆற்றங்கரையில் உட்கார்ந்து
கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம். கடல் உள்ள ஊர்களில்
கடற்கரைக்குப் போவார்கள். அல்லது பூங்காக்கள்,
அணைக்கட்டுக்களுக்குப் போவார்கள். சாப்பிட்டு விட்டு, சிறிது
நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்கு வருவோம்.அந்த மூன்று
பொங்கல் நாட்களுமே, மிக ஜாலியாக இருக்கும். அடுத்த
பொங்கலுக்காக மனம் ஏங்கும்.
           ஆனால் இன்று, இவற்றில் எதுவுமே இல்லை. டெல்லியில்
எல்லாம் அப்பார்ட்மென்ட் வீட்டில், சூரியனைக் கூடப் பார்க்க
முடியவில்லை. குளிர் காலம் வேறு. கேட்கவே வேண்டாம்.
பொங்கலன்று ஒரு மஞ்சள் கொத்து வாங்க முடியவில்லை.
ஆசையாக வாழை இலையில் சாப்பிட முடியவில்லை. நல்ல
கரும்புகூட  சாப்பிட முடியவில்லை. இப்பொழுதெல்லாம்
பொங்கல்த்திருநாள் இப்படித்தான் கழிகிறது.
Related Posts with Thumbnails