ஆயகலை - 65

வெள்ளி, பிப்ரவரி 04, 2011


             ஆய கலைகள் 64 இருக்குனு நம்ம எல்லாருக்கும்
தெரியும். 65 ஆவதா ஒரு கலை இருக்கு. அது என்ன தெரியுமா?
அதுதாங்க குழந்தைகளை சாப்பிட வைக்கிறது. அந்தக் கலையை
நான் இப்போதான் கத்துகிட்டு இருக்கேன். அப்பப்பா! எவ்வளவு
கஷ்டம்? இதுக்கு நாம IAS எக்ஸாம் பாஸ் பண்ணிடலாம் போல.


            
             முன்னாடியெல்லாம், நாம சின்னக் குழந்தைகளா
இருக்கும்போது, நம்ம அம்மா எல்லாம், இடுப்புல உட்கார வச்சு,
'காக்கா', 'நாய்'னு காட்டி நமக்கு சாப்பாடு ஊட்டினாங்க. ஆனா,
இப்போ உள்ள பிள்ளைங்க இடுப்புல உட்காரவச்சா, உட்கார்றது
இல்ல. இறங்கி நடக்கணும்; ஓடணும். நாமளும் அவங்க
பின்னாடியே ஓடி, சாப்பாடு ஊட்டிவிட்டா, ஒரு வாய் வாங்குறது,
அடுத்த வாய் கீழே துப்பிடறாங்க. சரி, வெளியில வச்சு
ஊட்டினாதான் இவ்வளவு போராட்டமா இருக்குனு வீட்டுக்குள்ள
வச்சு, சாப்பாடு குடுக்கலாம்னு 'வாக்கர்'ல உட்கார வச்சு
ஊட்டுனா, அந்தப் பக்கமா தலைய திருப்பிக்கிறது, இல்ல,
வாயை இறுக்கமா மூடிக்கிட்டு திறக்கமாட்டேன்னு அடம்
பிடிக்கிறது இப்படி எல்லாம் பண்றாங்க.

            எப்படியாவது சாப்பிட்டா சரின்னு, டிவியில, கார்ட்டூன்
சேனல் போட்டுவிட்டா,  போனாப் போகுதுன்னு அப்போதான்
ஒரு வாய் வாங்கறாங்க. அப்படியே ஏமாத்தி சாப்பிட
வைக்கலாம்னு பார்த்தா, அதுவும் அவங்களுக்கு போரடிச்சிடுது.
ஒருவேளை, டேஸ்ட் பிடிக்கலையோனு நினைச்சு, நாம வேற
ஏதாவது கொடுத்தாலும் சாப்பிடறது இல்லை. டெய்லி இட்லியே
குடுக்காம, ஒருநாள் தோசை, ஒருநாள் சப்பாத்தினு மாத்தி,
வேற, வேறவகையாத்தான் நானும் குடுத்துப் பார்க்கறேன்.
நல்லா சாப்பிட்டாதான, நமக்கும் வேற வேற செய்து கொடுத்து,
சாப்பிட வைக்க ஆசையா இருக்கும்? ஒரு இட்லி சாப்பிட
வைக்கிறதுக்குள்ள நம்ம பாடு திண்டாட்டம்தான். அந்த ஒரு
இட்லில பாதி, தட்டிவிட்டு கீழே விழுந்துடும் அல்லது
துப்பிடறதுனால கீழே போகும்.

               எனக்கு தினமும் மூணு வேளையும் என்னோட
ஒன்றரை வயசுப் பையனால போராட்டம்தான். என்னோட
பையன்தான் இப்படி சாப்பிட மாட்டேங்கறானோனு நினைச்சா,
ஃப்ரெண்ட்ஸோட குழந்தைகள், உறவுக்கார குழந்தைகளும்
இப்படித்தான் பண்றாங்கனு கம்ப்ளைண்ட் பண்றாங்க.
எங்கம்மா, ' நீயே இப்படித்தான் இருந்த'ன்னு என்னைச்
சொல்றாங்க. இன்னும் பையன் சரியா பேச ஆரம்பிக்கல.
பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் சாப்பிடறதுக்கு என்ன
என்னவெல்லாம் பண்ணப்போறான்னு நினைச்சா இப்பவே
பயமா இருக்கு. சாப்பிடறதுக்கு மட்டும் ஏன் குழந்தைகள் இப்படி
அடம் பிடிக்குறாங்கன்னு தெரியலை. நாமும் அந்த ஸ்டேஜைத்
தாண்டித்தான் வந்திருக்கோம். இப்படித்தான் நம்ம
அம்மாவுக்கும் கஷ்டத்தை கொடுத்திருப்போம். சாப்பாடை
பார்த்தவுடனே, இப்படி பண்றானேனு டாக்டர்கிட்ட கேட்டா,
விளையாடற குழந்தைகள், விளையாட்டு நினைப்பில்
இப்படித்தான் பண்ணுவாங்கன்னு சொல்றார்
            
           இனி, ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டா, அவசர அவசரமா
சாப்பிட வேண்டியிருக்கும். அப்பவும் ஒழுங்கா சாப்பிட
மாட்டங்க.எப்போதான் ஒழுங்கா சாப்பிட போறாங்களோ
தெரியலை. தானா சாப்பிட ஆரம்பிச்ச பிறகு, தட்டுல வச்சு,
ஏதாவது கதை சொல்லி, ஏமாத்திதான் சாப்பிடவைக்கணும்.
இப்போ என் பையனுக்குக் கதை எதுவும் புரியாது.
மிருகங்களைக் காட்டினாலும் அவனுக்கு எல்லா மிருகங்களுமே,
'ஆடு'னாலும் சரி, 'மாடு'னாலும் சரி,  'பா...பா..'தான்;
பறவைகள்னா 'போ..போ..'தான். இப்போ இருக்குற
சூழ்நிலையில், கார்ட்டூன் சேனலும், டிஸ்கவரி சேனலும்தான்
அவனுக்கு சாப்பாடு கொடுக்க உதவுகிறது.


யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே...

ஞாயிறு, ஜனவரி 30, 2011

        
              சின்ன வயதில் யானையைப் பிடிக்காதவங்க
இருக்கமாட்டாங்க. நான் சிறு வயதில் மிகவும் ரசித்த, மலைத்த,
பிரம்மாண்டமான மிருகம் அது. கோயிலில் பார்க்கும் போதும்,
தெருவில் காசு வாங்க வரும் போதும், அதனிடம் ஆசிர்வாதம்
வாங்கத் தவறுவதில்லை. ஆனால் அதன் மேல் ஏறுவதற்கு
பயம். இப்போதுகூட ஊரில், தெருவிற்கு யானை வரும்போது,
மணிச்சத்தம் கேட்டால் வெளியே வந்து பார்க்கத் தோணுகிறது. 
கோவிலில் பார்க்கும்போது கூட ஒரு நிமிடமாவது அதன்
அழகை, கம்பீரத்தை நின்று பார்த்துவிட்டுத்தான் செல்லத்
தோணும். இப்படி நமக்கெல்லாம் பிடித்த யானையைப் பற்றி
நான் சேகரித்த தகவல்கள் இவை.




               ஆசிய யானை என அன்பாக அழைக்கப்படும், இந்திய
யானைகளில் பல, தமிழக - கேரள எல்லையில் மேற்குத்
தொடர்ச்சி மலைகளில் வசிக்கின்றன. ஆப்ரிக்க யானைகளை
விட, உயரம் குறைவாகவும், காதுகள் சிறியதாகவும் இவை
இருக்கும். அதிகபட்சம் 6.6 அடி முதல் 11.8 அடி உயரம் வரை
வளரும். 3000 முதல் 5000 கிலோ வரை எடை இருக்கும். ஆண்
யானைக்கு மட்டுமே பெரிய தந்தங்கள் இருக்கும். பெண்
யானைக்கு வெளியே தெரியாத வகையில் சிறு தந்தம் இருக்கும்.
சில ஆண் யானைகளுக்கு தந்தம் இருக்காது, இவை ' மக்னா '
யானைகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தோல் 3
முதல் 5 செ.மீ., வரை தடிப்பானவை. ஒரு நாளைக்கு 150 கிலோ
முதல் 170 கிலோ வரை உட்கொள்ளும்.



                சீசனுக்கு ஏற்ப இடம் மாறும் இவை, தங்களுக்கு என
தனி பாதையை வைத்திருக்கும். இந்தப் பாதையை மனிதர்கள்
ஆக்கிரமிக்கும் போது தான், குடியிருப்புகளுக்குள் யானைகள் புக
வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கூட்டம் கூட்டமாக வாழும்
தன்மையுடைய யானைகளுக்கு, மூத்த ஆண்யானை தலைமை 
ஏற்று நடத்திச் செல்லும். கெல்லும் பாதையை நினைவு வைத்துக்
கொள்ள வேண்டிய பொறுப்பு, தலைமை யானைக்கு உண்டு.
நன்கு வளர்ந்த யானைக்கு மனிதர்களைத் தவிர, வேறு எதிரிகள்
கிடையாது. குட்டி யானைகளைத்தான் புலி வேட்டையாடும்.
காட்டில் அதிகபட்சம் 60 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
யானைகள், வளர்க்கப்படும்போது, 80 ஆண்டுகள் வரை
உயிர்வாழும். ஒருநாளைக்கு 80 முதல் 200 லிட்டர் தண்ணீர்
இவற்றுக்குத் தேவை. இதில் பெரும்பாலனதை குளிக்கப்
பயன்படுத்தும்.


            ' இன்ஃப்ரா சவுண்ட் ' மூலம் தங்களுக்குள் யானைகள்
பேசிக்கொள்ளும். இந்திய ஆராய்ச்சியாளர் எம்.கிருஷ்ணன்
என்பவர்தான் இதை முதலில் கண்டுபிடித்தார். பெண் யானை,
9 முதல் 15 ஆண்டுகளுக்குள் பருவத்தை எட்டும். 18 முதல் 22
மாதங்கள், இதற்கு கர்ப்பகாலம். 19 மாதங்களிலேயே, தாய்
வயிற்றில் குட்டி, முழு வளர்ச்சியை எட்டிவிடும். இருப்பினும்,
அதன்பிறகும் சில மாதங்கள் கழித்துதான், குட்டியை தாய் ஈனும்.
இது ஒரு இயற்கை விநோதம். இதற்குக் காரணம், ஈன்ற உடனே,
எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்கும் உயரத்தை குட்டி எட்ட
வேண்டும் என்பதற்காக.


             பிறந்த உடன், யானைக்குட்டி  100 கிலோ எடை
இருக்கும். ஒருமுறைக்கு ஒன்று அல்லது அரிதாக இரண்டு
குட்டிகளைத் தாய் ஈனும். குட்டி ஓரளவு பெரிதாகும் வரை தாய்
மீண்டும் கருத்தரிக்காது. இதற்கு ஐந்து ஆண்டுகள் வரை
ஆகுமாம். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் யானைக்கு
' ஹார்மோன் ' அதிகம் சுரக்கும் போது, ' மதம் ' பிடிக்கிறது.
ஜோடி கிடைக்காவிட்டால், மூர்க்கத்தனமாக மற்ற
யானைகளைத் தாக்கும். சில நேரங்களில், இதற்கு பெண்
யானைகள் பலியாவது உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை தான்
இது நிகழும்.

             நாமெல்லாம் ஊர்களில், கோவில்களில், தெருக்களில்
பார்த்த யானையை, இப்போதுள்ள சந்ததியினரால் வெறும்
புத்தகங்களில் படமாகவும், டிவியிலும் மிருகக்காட்சி
சாலையிலும் மட்டுமே பார்க்க முடிகிறது. சிறுவயதில்
நமக்கெல்லாம் மிகவும் பிடித்த, யானை இனம் கொஞ்ச
கொஞ்சமாக அழிந்து வருவது மிகுந்த வேதனைக்கு உரிய
விஷயம்.

குடியரசு தின அணிவகுப்பு

புதன், ஜனவரி 26, 2011

             
              இன்று நம் நாட்டின்  62 ஆவது குடியரசு தினம்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!  இதையொட்டி,
பல்வேறு துறைகளில் நம் நாடு கண்டுள்ள வளர்ச்சியை
பிரதிபலிக்கும் வகையில் டெல்லியில், அணிவகுப்பு
நடப்பது வழக்கம். ராஜ பாதையில் தொடங்கி செங்கோட்டை
வரை 8 கி.மீ. தூரம் இந்த அணிவகுப்பு நடக்கும். ராஜபாதையில்
இருந்து செங்கோட்டை வரை நடைபெறும் இந்த அணிவகுப்பும்,
அலங்கார ஊர்திகளின் ஊர்வலமும், கலை நிகழ்ச்சிகளும்
கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும்.



 
              முதன் முதலாக 2009 ஆம் ஆண்டு இந்த அணிவகுப்பைப் 
பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.  அது 60 வது குடியரசு 
தினம். காலையில் அந்தக் குளிரில் ஆறு மணிக்கே புறப்பட்டுச்
சென்றோம். நான், என் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என 
12 பேர் சென்றோம். இந்த அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பிற்காக 
பல ரோடுகள் ப்ளாக் பண்ணப்பட்டிருந்தன. சுற்றி சுற்றி ஒரு 
வழியாக போய்ச் சேர்ந்து, செக்யூரிட்டி சோதனைகளெல்லாம் 
முடித்து, எங்களுக்கான இடங்களில் போய் உட்கார்ந்து 
கொண்டோம். மொபைல், கேமரா, உணவுப் பண்டங்கள் எதுவும்
எடுத்துச் செல்லக்கூடாது. குழந்தைகளுக்கான பால்
பாட்டிலைக்கூட, பாலை வாயில் ஊற்றிக் காண்பித்தபிறகே 
அனுமதிக்கின்றனர். அந்த அளவிற்கு கடுமையான பாதுகாப்பு.



          ள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளின் ஆடல், 
பாடல் நிகழ்ச்சிகளும், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. 
ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பம்சங்களுடனும், அந்தந்த 
மாநிலத்தின் நடனங்களும் அருமையாக இருந்தது. 
விமானப் படை வீரர்களின் சாகசத்தைப் பார்க்கக் 
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மொத்த நிகழ்ச்சியின் 
சிறப்பம்சமே இதுதான். ராணுவப்படை, கடற்படை, விமானப் 
படை, எல்லைப் பாதுகாப்புப் படை முதலிய படைகளின் 
அணிவகுப்பு பார்க்கவே மெய்சிலிர்க்க வைத்தது. இறுதியாக 
வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் விருது
வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
             குடியரசுத்தலைவர் கடைசியில் நமது நாட்டின்
மூவண்ணக் கொடியை குண்டுகள் முழங்க ஏற்றும்போது,
மெய் சிலிர்த்துவிட்டது. இந்த அணிவகுப்பைப் பார்க்கும் போது,
இந்தியன் என்ற உணர்வு தலைதூக்கிற்று. வார்த்தைகளால்
அதை விவரிக்க முடியவில்லை. அப்படி ஒரு அனுபவம்.
திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் அனுபவம். இந்த இரண்டு
வருடங்களாக பார்க்க செல்ல முடியவில்லை. அடுத்த
வருடமாவது சென்று பார்க்கும் ஆவலில் இருக்கிறேன்.
Related Posts with Thumbnails