வறுமையால் படிப்பைத் தொடர முடியாமல் கஷ்டப்படும் மாணவி

புதன், ஜூன் 01, 2011


              இந்தக் கட்டுரையை சமீபத்தில் நாளிதழ் ஒன்றில்
படித்தேன். எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே
பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து வறுமையில் வாடும்
மாணவி ஒருவர், தனது கல்லூரி படிப்பிற்கு உதவி
கோரியுள்ளார்.


            ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, அத்திகுளம் கிராமத்தைச்
சேர்ந்தவர் சொர்ணத்தாய். இவரது மகன் ஏ. தேவதாஸ்.
இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களது மகள்
ஆனந்தஜோதி. இவருக்கு இரண்டரை வயது இருக்கும்போதே
தாயும், ஏழு வயதாகும் போது தந்தையும் இறந்துவிட்டனர்.
இதனையடுத்து பாட்டி சொர்ணத்தாயுடன் ஒரு குடிசை
வீட்டில் ஆனந்தஜோதி வசித்து வருகிறார். பாட்டி கூலி வேலை
செய்து ஆனந்தஜோதியைப் படிக்க வைத்து வருகிறார்.

              சொர்ணத்தாயிக்கு வயது முதிர்வு காரணமாக ஒரு
கண்பார்வை முற்றிலும் இழந்துவிட்டது. ஆனந்தஜோதி
படிப்பு தவிர்த்து ஏனைய நேரங்களில் ஒரு தீப்பெட்டி ஆலையில்
வேலைக்குச் சென்று பாட்டிக்கு உதவி வருகிறார்.

            எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 427 மதிப்பெண்கள் பெற்ற
ஆனந்தஜோதி, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 889
மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பட்டதாரி ஆசிரியராகி
சமுதாயத்திற்கு செவை செய்ய வேண்டும் என்று
ஆனந்தஜோதிக்கு ஆசை. சிவகாசி எஸ்.எஃப்.ஆர். மகளிர்
கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிக்க
விண்ணப்பித்துள்ளார். கல்லூரியில் ஒரு செமஸ்டருக்கு
கட்டணம் ரூ.2390. ஒரு செமஸ்டருக்கு கல்லூரிப் பேருந்துக்
கட்டணம் ரூ.3500. இது தவிர்த்து சாப்பாடு, புத்தகங்கள்,
துணிகள் உள்ளிட்ட செலவு உள்ளது. மூன்று ஆண்டுகள்
இப்படிப்பை முடித்துவிட்டு, பி.எட். படிக்க வேண்டும்.

             பாட்டி சொர்ணத்தாய் கூறுகையில், "இனிமேல்
ரேஷனில் 20கிலோ இலவச அரிசி தருவார்களாம் அதை
வைத்து ஓரளவிற்கு நான் பிழைப்பு நடத்திக் கொள்வேன்.
பேத்தி ஏதாவது படித்து வேலைக்குச் சென்று வாழ்க்கை
அமைத்துக் கொள்ள வேண்டும். அது தான் எனது விருப்பம்"
என்றார்.

            இவர்களுக்கு எந்த தொலைபேசி வசதியும் இல்லை.
இவர்களின் நிலை குறித்து தகவல் கொடுத்தவரின்
தொலைபேசி எண் 9994742465. ஆதரவு இன்றி வறுமையில்
தவிக்கும் ஆனந்தஜோதியின் முகவரி தே.ஆனந்தஜோதி,
காப்பாளர் பெயர். சொர்ணத்தாய், 127, வேதக்கோவில் தெரு,
(நடுத் தெரு), அத்திக்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழி, 626125,
விருதுநகர் மாவட்டம்.

இவரது நிலையில் இன்று பல மாணவர்கள் இருக்கின்றனர்.
இவர்களுக்கு நம்மால் இயன்ற  உதவியைச் செய்வோம்.

கூடு கட்டும் குருவி

செவ்வாய், மே 31, 2011

              எனக்கு மெயிலில் வந்த படங்கள் இவை. அவற்றை
இங்குபகிர்கிறேன். எவ்வளவு அழகாக கூடு கட்டுகிறது
இந்தக் குருவி? மண்ணையும் குச்சிகளையும் வைத்து,
கஷ்டப் பட்டு அவை கட்டும் அழகைக் காண்பதற்கு
கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இப்படி 
நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டுவதற்கு யாரிடம்
கற்றுக்கொண்டிருக்கும்? ஆச்சரியமாகவும்
அதிசயமாகவும் இருக்கிறது.
























எனது பள்ளி - எனக்குப் பெருமை

திங்கள், மே 30, 2011



             இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்,
எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது.
நான் படித்த பள்ளியின்  மாணவி செல்வி.M.நித்யா 496
மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதல் மாணவியாக
தேர்ச்சி பெற்று எனது பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளாள்.
எங்கள் பள்ளி மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்திருப்பது
இதுவே முதல் முறை.


          எங்கள் பள்ளி, கன்னியாஸ்த்ரீகளால் நடத்தப்படும்,
கான்வென்ட் என்றழைக்கப்படும் திரு இருதய பெண்கள்
மேல்நிலைப் பள்ளி. இது ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம்
வகுப்பு வரை முழுக்க, முழுக்க பெண் ஆசிரியர்களால்,
பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி. நானும் எனது தங்கையும்
ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில்
தான் படித்தோம்.


          1992ஆம் ஆண்டு இந்தப் பள்ளியின் பொன்விழா
ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. அதில் பரிசு வாங்கியது எனக்கு
மிகப் பெரிய பெருமை. கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக
இயங்கிக் கொண்டிருக்கும் இப்பள்ளியில் முழுவதும் தமிழ்வழிக்
கல்விதான். ஆனால் மாணவிகள் ஆங்கிலமும் கற்க வேண்டும்
என்பதற்காக, ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
நான் படிக்கும் பொழுதெல்லாம், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு
மாணவிகளுக்கு தனிவகுப்புகள் உண்டு. ஜனவரி மாதம் முதல்
தினமும் இரவு வகுப்புகள் நடக்கும். இந்த இரவு வகுப்பு எல்லா மாணவிகளுக்கும் இரவு 8.30 மணி வரை உண்டு. படிப்பில்
மந்தமானவர்களுக்கு காலை 7மணி வரை இருக்கும்.
ஞாயிறன்றும் சிறப்பு வகுப்புகள் இருக்கும். இந்த
தனிவகுப்புகளுக்கெல்லாம் மாணவிகளுடன் சேர்ந்து
ஆசிரியர்களும் இருப்பர். எந்த நேரமானாலும் பாடங்களின்
சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும். கிளாஸ் டெஸ்ட்,
மன்த்லி டெஸ்ட், ரிவிஷன் டெஸ்ட் என பல டெஸ்ட்டுகள்
வைக்கப்படும். இதன் மூலம் மாணவிகள் திறமை
வெளிப்படும். படிப்பு மட்டுமல்லாமல், விளையாட்டுப்
போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி,
கட்டுரைப் போட்டி போன்ற பல தனிதிறன்களுக்கும்
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பள்ளியின்
ஆசிரியர்கள் கொடுக்கும் ஊக்கமும், அறிவுரைகளும் தான்
இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம். இப்படிப்பட்ட இந்தப்
பள்ளியில் படித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
             மேலும் இந்த வருடம் ஐந்து பெண்கள் மாநிலத்திலேயே
முதல் மதிப்பெண்ணும் 11பேர் இரண்டாவது மதிப்பெண்ணும்
பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இரண்டாம்
இடம்பெற்ற 11பேர்களில், எங்கள் ஊர், ஸ்ரீவில்லிப்புத்தூரின்
மற்றொரு பள்ளியான மங்காபுரம் நாடார் பள்ளி மாணவியும்
ஒருவர். இந்த இரண்டு பள்ளிகளிலுமே தமிழ்வழிக்கல்விதான்
என்பது குறிப்பிடத்தக்க விஷயம். எங்கள் ஊரின் பெருமை
சேர்த்த அந்த இரண்டு மாணவிகளுக்கும் மற்றும் வெற்றி
பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

Related Posts with Thumbnails