மருத்துவமனை அனுபவம்

திங்கள், செப்டம்பர் 26, 2011

                
 
               டெல்லியில் உள்ள மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளில் சப்தர்ஜ்ங் மருத்துவமனையும் ஒன்று. 10 நாட்களுக்கு முன்பு, எங்கள் பக்கத்து வீட்டு பெண் ஒருவருக்கு அங்குதான் டெலிவரி ஆனது. அவரைப் பார்க்க சென்ற போது, தனது மருத்துவமனை அனுபவத்தைக் கூறினார். கேட்க கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

               


                  அங்கு அட்மிட் ஆகும் நபர்களை, ஒரு பெட்டுக்கு இரண்டு பேர் என படுக்க வைப்பார்களாம். பிரசவ வலியிலும் ஒரு பெட்டில் இரண்டு பேர் படுத்துக் கொள்ள வேண்டுமாம். பிரசவம் சிசெரியனாக இருந்தால் மட்டும் ஒரு பெட்டுக்கு ஒருவராம்.

              அப்படி இவங்க அட்மிட் ஆன சமயத்தில், இவங்க பக்கத்து பெட்டில் ஒரு பெண்மணியும் அட்மிட் ஆனாங்களாம். சிறிது நேரத்தில் அந்தப் பெண்மணிக்கு நார்மல் டெலிவரி ஆகிவிட, குழந்தையையும் தாயையும் ஒரு கட்டிலில் வந்து போட்டு விட்டு சென்றுவிட்டனராம். தாயும் குழந்தையும் அலுப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்மணிக்கு துணையாக ஒரு வயதான பாட்டி வந்திருந்ததாம். பாவம் அதற்கு கண் வேறு சரியாக தெரியாதாம்.

             அந்தப் பாட்டியும் கட்டிலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து நன்கு தூங்கி விட்டது போல. திடீரென்று அந்தப் பெண்மணியின் சத்தம் ஆஸ்பத்திரியே அதிரும் அளவு கேட்டதாம். என்னவென்று நர்ஸ்கள் எல்லாம் ஓடிப் போய்ப் பார்த்தால், குழந்தை இறந்து விட்டது. விசாரித்ததில், அந்தப் பெண்மணி தூக்கத்தில், குழந்தையின் முகத்தில், கையைப் போட்டு தூங்கி இருக்கிறாள். அந்த அழுத்தத்தில் குழந்தையின் மூக்கு நசுங்கி, மூச்சு முட்டி, குழந்தை இறந்திருக்கிறது.


                                       (இது அந்தக் குழந்தை அல்ல.)

              பாவம் இது அந்தப் பெண்மணியின் முதல் குழந்தையாம். அஜாக்கிரதையினால் பாவம் ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிர் போய்விட்டது. பக்கத்து வீட்டுப் பெண்மணி இதைச் சொன்னதில் இருந்து எனக்கு மனதே சரியில்லை. அன்று இரவெல்லாம் இதே ஞாபகமாகவே இருந்தது. 

இடைவெளி

வியாழன், செப்டம்பர் 22, 2011

              

           பிளாக்கில் கடைசியாக எழுதி,கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. சில அலுவல்கள் காரணமாக எழுத முடியவில்லை. இதனால் வலைப் பக்கங்களில் பின்னூட்டம் எழுத கூட நேரமில்லை. இந்த சிறு இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் எழுத வந்துள்ளேன் உங்களது ஆதரவுடன் .

நாகர்கோவில் - முட்டம் பீச்

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

          முட்டம் பீச் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது
சினிமாதான். இங்கே கடலோரக் கவிதைகள், அலைகள்
ஓய்வதில்லை போன்ற பல படங்கள் எடுத்திருக்காங்க.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில்
இதுவும் ஒன்று. இந்த பீச் நாகர்கோவிலில் இருந்து 16 கி.மீ 
தூரத்தில் உள்ளது.  நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 
நிறைய பஸ்கள் அடிக்கடி இருக்கின்றன.








        
                  சொத்தவிளை பீச்சைப் போல இது குளிப்பதற்கு ஏற்ற
கடற்கரை இல்லை. இங்க அலையின் வேகம் அதிகமாக இருக்கு.
பாறைகள் அதிகமா இருக்குற இந்த  பீச்சுல, அலைகள் வேகமா
வந்து பாறைகளில் மோதறது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கு, பெரிய பெரிய அலைகளாக, ஆள் உயர  அலைகளாக
வருது. அலைகள் ஒவ்வொன்றும் ஆக்ரோஷமா வந்தது.
பார்ப்பதற்கே பயமா இருந்தது. அதையும் மீறி, தைரியமா கால்
நனைக்கப் போனா, என் கால் கொலுசை அலை எடுத்திட்டு
போயிடுச்சு. எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியலை.
குளிப்பதற்காக வந்து வாரம் ஒருத்தராவது, கடலில் மூழ்கி
இறந்துடராங்கன்னு அந்த ஊர்க்காரர் ஒருவர் எங்களை
எச்சரித்தார். அலைகளின் சீற்றத்தினால், கடலுக்குள் போகக்
கூடாது என்பதற்காக ஆங்காங்கு இரும்புக் கம்பியால் வேலிகள் போடப்பட்டிருக்கிறது. அந்த வலிமையான இரும்புக் கம்பிகள்
வளைந்தும், உடைந்தும் போயிருப்பதைப் பார்த்தாலே, அது
நமக்குப் புரியும்.


             
 
 
           இங்க ரொம்ப பழமையான கலங்கரைவிளக்கம் ஒன்று
இருக்கு. மேலும் கரையிலிருந்து பீச்சைப் பார்க்க, நிறைய
சிமென்ட் பெஞ்சுகள் அழகாக கட்டப்பட்டிருக்கின்றன. குடில்கள்
போல அமைத்து, அதுல வட்ட வடிவ பெஞ்சுகள்
கட்டியிருக்காங்க. இதனால பீச் அழகாகவும், சுத்தமாகவும்
இருக்கு. முட்டம் பீச்சுக்குப் போற வழியில் செம்மண் கரடு
ஒன்று இருக்கு. செக்கச்செவேல்னு பார்க்கவே அவ்வளவு
அழகாக இருக்கிற இங்கும் நிறைய சினிமா ஷூட்டிங்
எடுத்திருக்காங்க.

          முட்டத்திற்கு அடுத்தாற்போல , கடியாப்பட்டினம் என்ற
பீச் இருக்கு. அங்க, நாங்க முட்டத்திற்கு போனதற்கு சில நாட்கள்
முன்பு, ஒரு  வெளிநாட்டுக் கப்பல் பாறையில் மோதி உடைந்து, மூழ்கிவிட்டதாம். மூழ்கியதால் சேதம் எதுவும் இல்லை என
அங்கிருந்தவங்க சொன்னாங்க. நேரமில்லாததால போய்ப்பார்க்க
முடியலை. முட்டத்திலிருந்து பார்த்தால், உடைந்த கப்பலின்
மேல் பாகம் மட்டும் தெரிந்தது. அதை மட்டும் பார்த்துவிட்டு
வந்தோம்.




Related Posts with Thumbnails