இன்று ஆசிரியர் தினம். ஆசிரியர் தினம் என்றாலே நமக்கு நமது முன்னாள் ஜனாதிபதி. திரு. டாக்டர்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்தான் நினைவுக்கு வரும்.
ஆனால் என் நினைவில் வருவது எனது பள்ளி நாட்களே! நான் படித்தது, பெண்கள் மட்டுமே படிக்கும் கான்வென்ட்டில். அங்கு ஆசிரியர்கள் அனைவரும் பெண்களே! பள்ளியில் படிக்கும்போது, ஒவ்வொரு வருடமும், ஆசிரியர் தினத்தையொட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, நடனம், நாடகம் எனப் பல போட்டிகள் நடக்கும். அதில் கலந்துகொண்டு, ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே, Practice-க்காக, Class-ஐக் Cut அடித்துவிட்டுச் செல்வதில் அப்பொழுதெல்லாம் பயங்கர ஆர்வமாக இருக்கும்.
ஆசிரியர் தினத்தன்று, நடனம், நாடகம் முதலியக் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் அன்று வழங்கப்படும். அன்று Uniform-க்கு விடுமுறை. எனவே எல்லோரும் கலர் கலராக உடைகள் அணிந்து வருவோம். ஆசிரியர்களுக்கு Gift கொடுப்பதற்காக அனைவரிடமும் ஒரு வாரம் முன்பே பணம் வசூலிக்கப்படும்; அன்று, ஆசிரியர்களுக்கு சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்படும். பின்னர் ஆசிரியர்களுக்கு இடையேயும் விளையாட்டுகள், போட்டிகள் நடைபெறும். இதுதவிர, அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு, அந்த வகுப்பில் படிக்கும் மாணவர்கள் Gift வாங்கிக் கொடுப்பர். முக்கியமாக அன்று எந்த வகுப்புகளும் நடைபெறாது; ஒரேக் கொண்டாட்டமாக இருக்கும்.
முதல் வகுப்பிலிருந்து, கல்லூரி இறுதியாண்டு வரை எனக்குப் பாடம் கற்பித்த அனைத்து ஆசிரியர்கள் பெயரும் இன்றுவரை நினைவில் உள்ளது. ஆனால் அவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை. அவர்களுள் எனக்கு முதலாம் வகுப்பெடுத்த, மங்களம் டீச்சரும் அடங்குவார். எத்தனையோ ஆசிரியர்கள் எனக்குப் பாடம் எடுத்திருந்தாலும்,
முதல் வகுப்பெடுத்த மங்களம் டீச்சருக்கே இன்று எனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். அவர் இன்று உயிருடன் இல்லை என்றாலும், அவர் சொல்லிக்கொடுத்த உயிர் எழுத்துகளும், மெய்யெழுத்துகளும்தான் எனக்கு ஆரம்பக் கல்வியாக அமைந்தது. இன்று நான் இந்த வலைப்பக்கம் ஆரம்பிப்பதற்கே உதவியாகவும் உள்ளது. இதுவரை அவருக்காக நான் எதுவும் செய்யவில்லை எனினும், இன்று அவரை நினைத்து, அவரைப் பற்றி எழுதுவது பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இந்தப்பதிவின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வில் ஹென்றியின் அதிர்ஷ்டம்
1 மணிநேரம் முன்பு
0 comments:
கருத்துரையிடுக