சமீபத்தில் என் தோழி ஒருத்தியைச் சந்திக்க நேரிட்டது. நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்ததால், ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டிருந்தாள். அவள், அவளுடன் படித்த மாணவனையேக் காதலித்து, இரண்டு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவளுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. என்னால் அவளது கல்யாணத்திற்குப் போக முடியாததால், அவள் ஊருக்கு வந்திருப்பது தெரிந்து, அவளைப் பார்க்கச் சென்றேன். அவளோ அழாதக் குறையாக அவளது கதையைக் கூறினாள், " நான் பெரிய தப்புப் பண்ணிட்டேண்டி; 'கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்' கிற மாதிரி, இப்போதான் எனக்குத் தெரிய வருது. கண்டிப்பா ஒரே வயசுல இருக்கிறவங்க கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது, அப்படி செஞ்சுக்கிட்டா ஏகப்பட்ட பிரச்னைகள் வரும்; சண்டைகள் வரும். அப்படிச் சண்டை வரும்போது நீமட்டும் செய்யலாம் , நான் செய்யக் கூடாதானு ரெண்டு பேரும் ஏட்டிக்குப் போட்டியாப் பேசி பிரச்னை பெருசாகும். இதே ரெண்டு பேருக்கும் இடையில வயசு வித்தியாசம் இருந்தா, யாராவது ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போற மாதிரி இருக்கும், இந்த மாதிரி சண்டைகள் வரும்போது, சின்னப்பொண்ணு தானேனு கணவர் விட்டுக்கொடுப்பார்; மனைவியும் வயதுக்கு மரியாதை கொடுத்து, நம்மவிடப் பெரியவங்கனு மதிச்சு நடந்துக்குவாங்க. ஆனா, நாங்க ஒரே வயசுங்கிறதால, எங்களுக்குள்ள அப்படி விட்டுக்கொடுக்கிற மனப்பக்குவம் ரெண்டு பேருக்குமே இல்லை.
நம்மை நம்பி வந்தவளை மனசுக்கஷ்டப்படுத்தாம வச்சுக்கணும்னு அவருக்குத் தோணவேயில்லை. காதலிக்கும்போது, எல்லாரையும் மாதிரி, ' உன்னைக் கண் கலங்காமப் பாத்துக்குவேன்,கஷ்டப்படாம வச்சுக்குவேன்; நல்லாப் பாத்துக்குவேன்;
என்னை நம்பு' னு வழக்கமான டயலாக்குகள் எல்லாம் சொன்னார். இதெல்லாம் எப்படியோ, கல்யாணத்துக்கப்புறம் எனக்கு எல்லாமே அவர்தான்னு நம்பி, அவரோட, அவர் வேலை செஞ்சுகிட்டிருக்கிற ஊருக்குப் போனேன். ஆனா, அத அவர் புரிஞ்சிக்கல. கல்யாணமான மறுநாள்ல இருந்தே, காரணமே தெரியாமல் நான் புறக்கணிக்கப்பட்டேன். மிகக் கொடுமையான தண்டனை புறக்கணிப்புதான்; நம்மைக் கண்டுக்காம விட்டுறதுதான். அதை அனுபவிச்சவங்களுக்கு கண்டிப்பா அதன் வலி புரியும். ஆசை ஆசையா இதுக்குத்தானா, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு தோணுச்சு. யாருமே, கூட இல்லாத வீட்டில், பகல் பூரா இத நெனச்சு அழுதுகிட்டிருப்பேன். ஏன் என் கூடப் பேசாம, புறக்கணிக்குறீங்கன்னு கேட்டா, ' இவ்ளோ நாள் உங்கூடப் பேசுனது பத்தாதா?' னு கேட்பார். இப்படியே நான் அழுது கேட்டதால், கொஞ்சம் அவர மாத்திக்கிட்டார். ஆனாலும் அடுத்து, ஏதாவது சண்டை வந்தா, ' நீ என்னோட சுதந்திரத்தப் பறிச்சுக்கிட்ட; அழுது, அழுது உன் காரியத்த சாதிச்சுக்கிற' னு சொல்வார். சண்டை வந்துட்டா, அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொண்ணும் ஈட்டி மாதிரி விழுந்து நம்ம மனசக் குத்தும். எத்தனையோ தடவ. ' கையால அடிச்சாக்கூட வலி கொஞ்சநாள்ள மறஞ்சுடும்; வார்த்தைகளாலக் காயப்படுத்தாதீங்க' னு கெஞ்சுவேன். ஆனா அவர் அத கேட்கவே இல்ல.
காதலிச்சுக்கிட்டிருக்கும்போது, ' நம்ம ரெண்டு பேரும் வேற, வேற கலாச்சாரத்துல வளர்ந்தவங்க; கல்யாணத்துக்கப்புறம் ஒத்துவருமா?'னு நான் கேட்டப்போ, ' இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? எத்தனையோ பேர் சாதி மாறி, மதம் மாறி கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க ஒற்றுமையா வாழலையா?' னு எனக்கு ஆறுதல் சொன்னார். ஆனா, கல்யாணத்துக்கப்புறம் அந்த மாதிரி நடந்துக்கவேயில்ல; சமையல்ல இருந்து எல்லாத்துக்கும் குற்றம் சொல்ல ஆரம்பிச்சார். அவர்தான, அவங்க குடும்பம் பத்தியும், கலாச்சாரம் பத்தியும் எனக்குப் புரியவைக்கனும். அத விட்டுட்டு, ' நீ ஏன் அப்படி நடந்துக்கல?' னு சண்ட போடுறார். எந்த ஒரு விஷயத்துக்கும் என்னை Support பண்ணல. இப்படியே போய்கிட்டிருந்த எங்க வாழ்க்கையில குழந்தையும் பிறந்துச்சு" எனத் தனது கதையைத் தோழி சொல்லிக்கொண்டிருந்தாள். இன்னும் அவளது கதை ரொம்ப நீளமாக இருந்ததால், மீதியை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.
வில் ஹென்றியின் அதிர்ஷ்டம்
1 நாள் முன்பு
0 comments:
கருத்துரையிடுக