பொதுவாக, புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷம். அதனால்,அன்று எல்லா பெருமாள் கோவில்களிலும் விசேஷ பூஜை உண்டு. கூட்டம் அலை மோதும். எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஒரு விசேஷமான பெருமாள் கோவில் உள்ளது.
அந்தக் கோவில் பெயர் திருவண்ணாமலை. இது சென்னைக்குப் பக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலை கிடையாது. அது சிவன் கோவில். இது பெருமாள் கோவில்.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் கோவில்தான் அனைவரது நினைவுக்கும் வரும்.
ஆனால் " கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழும் ஊர் " என்ற அடைமொழியே இந்த ஊருக்கு உண்டு. எங்கள் ஊர் திருவண்ணாமலை கோவிலுக்குத் தென் திருப்பதி என்ற ஒரு பெயரும் உண்டு. திருப்பதியில் இருக்கும் சாமி வெங்கடாசலபதி மாதிரியே இங்கே உள்ள சாமியும் இருக்கும். அங்கே வேண்டிக்கொண்டு போகமுடியாதவர்கள், எல்லாரும் இங்கே வருவார்கள். இங்கே பிரசாதமாக துளசி இலை கொடுக்கிறார்கள். கோவிலுக்கு வரும் அனைவருக்கும் நாமம் போட்டு விடுவார்கள். சின்ன வயதில் இதற்காகவே கோவிலுக்குப் போவது உண்டு.
இந்தக் கோவில் ஒரு சின்ன மலை மேல் உள்ளது. மலை மேல் ஏறி கோவிலுக்குப் போவதற்கு சுமார் இருனூறு படிகள் இருக்கும். கோவிலின் மலை அடிவாரத்தில் ஒரு அரசமரத்தடிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது. அந்தப் பிள்ளையார், நல்ல பெரியதாக, பார்ப்பதற்கு பிள்ளையார்பட்டி பிள்ளையார் மாதிரி இருப்பார். அந்தப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னே ஒரு பெரிய குளம் உள்ளது. அந்தக் குளத்தில்தான் இந்தப்பிள்ளையார் சிலையைக், கண்டெடுத்ததாக சொல்கிறார்கள். எல்லா சனிக்கிழமையும் இந்தத் திருவண்ணாமலையிலுள்ள பெருமாளுக்கு விசேஷம். கூட்டமும் நிறைய வரும்.
அதிலும் குறிப்பாக, புரட்டாசி மாத ஐந்து சனிக்கிழமைகளும் ரொம்ப விசேஷம் என்பதால், எக்கச்சக்கக் கூட்டம் வரும். மலை முழுவதும் மனிதத் தலைகளாகத் தெரியும். எள் போட்டால்கூட எடுக்க முடியாது. அந்த அளவுக்குக் கூட்டம் வரும். பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து எல்லாம் டிராக்டரிலும், லாரியிலும் முந்தின நாளே வந்து தங்கி, மக்கள் தரிசனம் செய்வார்கள். அங்கேயே சமையல் செய்து அன்னதானம் வழங்கப்படும். பலர் வேண்டிக்கொண்டு மொட்டை போட்டுக்கொள்வார்கள்.இந்த புரட்டாசி மாதத்தில், வெளியூர்களிலிருந்து மக்கள் கோவிலுக்கு வர சிறப்பு பஸ்கள் உண்டு. ஊரே ஜே ஜே என இருக்கும். கடைகளிலும் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். எனவே இந்த புரட்டாசி மாதத்தில், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து பெருமாளைத் தரிசித்து, அவரது அருளைப் பெறுங்கள்.
வில் ஹென்றியின் அதிர்ஷ்டம்
2 நாட்கள் முன்பு
11 comments:
nice.
இந்த மாதத்திற்கு தேவையான தகவல்
நன்றி சித்ரா ..
தங்கள் கருத்துக்கு நன்றி திரு.சௌந்தர்
நல்லா எழுதியிருக்கீங்க ஜிஜி.
அங்க போடுற 'நாமம்' தான் சிறு வயதில் விருப்பத்திற்குரிய விஷயமாயிருந்தது.சனிக்கிழமை காலையில் அப்பாவுடன் கோயில் சென்று திரும்பிய பின், சாயந்திரம் வரைக்கும் நெற்றி நாமத்தை அழியாமல் பாதுகாக்க மெனக்கெட்ட நாட்கள் கண்முன்னே நிழலாடுகிறது.
அது குளம் இல்ல ஜிஜி.. ஒரு 'ஏரி'யோட ஒரு முனை.அதோட பெயர் "கோண ஏரி" -ன்னு சொல்றதா ஞாபகம். :-)
நல்ல தரிசனம்.. நன்றி..எனக்கும் அந்த பக்கமெல்லாம் போகனும்ன்னு ரொம்ப நாள் ஆசை . பார்க்கலாம் எப்பத்தான் முடியுதுன்னு..
நாங்கள் சில வருடங்கள் (84-87) ஸ்ரீவியில் இருந்தபோது புரட்டாசியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவன்னமலைக்குச் செல்வோம்.
இப்பொழுது (சில வருடங்களுக்கு முன்பு) மலையேறும் வழியில் கூரை வேய்ந்திருக்கிரார்கள் - இல்லையேல் வெயிலில் படிகள் சுடும். அதற்காகவே வேகமாக மலை ஏறுவோம்.
கடைசியாக 2008-இல் சென்றது. இன்னும்கூட ஸ்ரீவியிலிருந்து திருவண்ணாமலைக்கு தார்சாலை இல்லை.
தகவலுக்கு நன்றி சிவா. ஆமாம் ..ஸ்கூல் படிக்கும்போது, காலைல கோவிலுக்கு போயிட்டு வந்து, நாமம் அழிஞ்சிரும்னு ,முகம் கூட
கழுவாம . பிரெண்ட்ஸ்கிட்ட காமிக்க போயிடுவோம்.
வாங்க முத்துலட்சுமி.. ஸ்ரீவில்லிபுத்தூர் கண்டிப்பா வாங்க. நம்ம தமிழ்நாட்டு சின்னமான ஆண்டாள் கோவிலும் பார்க்கலாம். வந்தா கண்டிப்பா சொல்லுங்க.நான் உங்கள கூட்டிட்டுப்போறேன் .
பகிர்வுக்கு நன்றி ஒரு காசு.ஆமாம் ..நீங்கள் சொன்னது போல இப்போ கூரை போட்டிருக்காங்க. இன்னும் நெறைய வசதிகள் செஞ்சிருக்காங்க.முன்னாடி,எப்போவாவதுதான் பஸ் இருக்கும்.இப்போலாம் அடிக்கடி இருக்கு.ஆனா நீங்க சொன்னதுபோல ரோடு இன்னும் குண்டும், குழியுமாதான் இருக்கு
Madam,
I belong to Srivilliputtur. You have highlighted our Temple very well.
Thank you very much.
rathnavel_n@yahoo.co.in
கருத்துரையிடுக