மெரைன் டிரைவ் (Marine drive)- கொச்சி

புதன், மார்ச் 04, 2015

பயணக் கட்டுரை

மெரைன் டிரைவ் - கொச்சி

கொச்சிக்கு நாங்கள் வந்து ஒன்றரை வருடங்களாகிறது. இங்கு வந்ததும் முதலில் நாங்கள் பார்க்கச் சென்ற இடம் மெரைன் டிரைவ் (Marine drive). இது கொச்சியின் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான ஒன்று. பல திரைப்படங்களில் இதைக் காணலாம். இதேபோல (Marine drive - Queens necklace)மும்பையிலும் உள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன் . அது அரபிக் கடற்கரையைச் சுற்றி அமைந்துள்ளது.

கொச்சியிலுள்ள இந்த மெரைன் டிரைவ்,  வேம்பநாடு என்ற ஏரி கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது.    இந்த இடத்தில் ஏகப்பட்ட கடைகளும் ஷாப்பிங் மால்களும் அமைந்துள்ளன. இங்கு சூரியன் மறைவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த ஏரியின் ஒரு பகுதி இந்தியக் கப்பற்படை மற்றும் துறைமுகத்தின்  கட்டுப்பாட்டில் உள்ளது.  மற்ற பகுதியில் படகுப் போக்குவரத்து நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளுக்காக தனியாருக்கு சொந்தமான படகுகளும் அரசாங்கமே நடத்தும் 'ஜெட்டி' (jetty ) எனப்படும் படகுப் போக்குவரத்தும் உள்ளது. தனியார் படகுகளில் சுற்றிப் பார்க்க கட்டணமாக ஒரு நபருக்கு குறைந்தது 100 ரூபாய் வசூலிக்கிறார்கள்.  படகின் அளவைப் பொறுத்து 20 முதல் 50 நபர்கள் வரை உட்காரலாம் .இதில் ஏறி உட்கார்ந்தால் ஒரு மணி நேரம் படகில் பயணம். வழிகாட்டியும் கூட வந்து அங்குள்ள இடங்களைப் பற்றி விளக்குகிறார்.

அரசாங்க ஜெட்டியில் ஒரு நபருக்கு 4ரூபாய் வசூலிக்கிறார்கள்.  அரைமணி நேரத்திற்கு ஒரு படகு கிளம்புகிறது. இது மெரைன் டிரைவில் இருந்து  ஃபோர்ட் கொச்சி, மட்டஞ்செர்ரி, வைப்பின் என்ற மூன்று இடங்களுக்கும் செல்கிறது. வேலைக்கு தினமும் சென்று வருவோருக்கு இந்த ஜெட்டி படகுப் போக்குவரத்து மிகவும் பயன்படுகிறது. சுமார் 20 கிமீ சாலைவழி பயணத்தை நான்கு ரூபாயில் 20 நிமிடத்தில் அடைந்துவிடலாம். அனைத்து படகுகளிலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக உயிர்காக்கும் மிதவை ஆடைகளும் ( life jacket ) வழங்கப்படுகின்றன. எனவே அனைத்து மக்களின் விருப்பமும் இந்தப் படகு போக்குவரத்தாகவே உள்ளது. 

இத்தகைய இயற்கை எழில்மிகு படகுப் பயணத்திற்கு எல்லோரும் வாங்க கொச்சி மெரைன் டிரைவிற்கு. பள்ளிவிடுமுறை வரப்போகிறது. விடுமுறையை இயற்கையுடன் கழியுங்கள் ....அனுபவித்து மகிழுங்கள்.


Related Posts with Thumbnails