கூடு கட்டும் குருவி

செவ்வாய், மே 31, 2011

              எனக்கு மெயிலில் வந்த படங்கள் இவை. அவற்றை
இங்குபகிர்கிறேன். எவ்வளவு அழகாக கூடு கட்டுகிறது
இந்தக் குருவி? மண்ணையும் குச்சிகளையும் வைத்து,
கஷ்டப் பட்டு அவை கட்டும் அழகைக் காண்பதற்கு
கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இப்படி 
நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டுவதற்கு யாரிடம்
கற்றுக்கொண்டிருக்கும்? ஆச்சரியமாகவும்
அதிசயமாகவும் இருக்கிறது.
எனது பள்ளி - எனக்குப் பெருமை

திங்கள், மே 30, 2011             இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்,
எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது.
நான் படித்த பள்ளியின்  மாணவி செல்வி.M.நித்யா 496
மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதல் மாணவியாக
தேர்ச்சி பெற்று எனது பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளாள்.
எங்கள் பள்ளி மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்திருப்பது
இதுவே முதல் முறை.


          எங்கள் பள்ளி, கன்னியாஸ்த்ரீகளால் நடத்தப்படும்,
கான்வென்ட் என்றழைக்கப்படும் திரு இருதய பெண்கள்
மேல்நிலைப் பள்ளி. இது ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம்
வகுப்பு வரை முழுக்க, முழுக்க பெண் ஆசிரியர்களால்,
பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி. நானும் எனது தங்கையும்
ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில்
தான் படித்தோம்.


          1992ஆம் ஆண்டு இந்தப் பள்ளியின் பொன்விழா
ஆண்டாகக் கொண்டாடப்பட்டது. அதில் பரிசு வாங்கியது எனக்கு
மிகப் பெரிய பெருமை. கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக
இயங்கிக் கொண்டிருக்கும் இப்பள்ளியில் முழுவதும் தமிழ்வழிக்
கல்விதான். ஆனால் மாணவிகள் ஆங்கிலமும் கற்க வேண்டும்
என்பதற்காக, ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
நான் படிக்கும் பொழுதெல்லாம், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு
மாணவிகளுக்கு தனிவகுப்புகள் உண்டு. ஜனவரி மாதம் முதல்
தினமும் இரவு வகுப்புகள் நடக்கும். இந்த இரவு வகுப்பு எல்லா மாணவிகளுக்கும் இரவு 8.30 மணி வரை உண்டு. படிப்பில்
மந்தமானவர்களுக்கு காலை 7மணி வரை இருக்கும்.
ஞாயிறன்றும் சிறப்பு வகுப்புகள் இருக்கும். இந்த
தனிவகுப்புகளுக்கெல்லாம் மாணவிகளுடன் சேர்ந்து
ஆசிரியர்களும் இருப்பர். எந்த நேரமானாலும் பாடங்களின்
சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும். கிளாஸ் டெஸ்ட்,
மன்த்லி டெஸ்ட், ரிவிஷன் டெஸ்ட் என பல டெஸ்ட்டுகள்
வைக்கப்படும். இதன் மூலம் மாணவிகள் திறமை
வெளிப்படும். படிப்பு மட்டுமல்லாமல், விளையாட்டுப்
போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி,
கட்டுரைப் போட்டி போன்ற பல தனிதிறன்களுக்கும்
முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பள்ளியின்
ஆசிரியர்கள் கொடுக்கும் ஊக்கமும், அறிவுரைகளும் தான்
இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணம். இப்படிப்பட்ட இந்தப்
பள்ளியில் படித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
             மேலும் இந்த வருடம் ஐந்து பெண்கள் மாநிலத்திலேயே
முதல் மதிப்பெண்ணும் 11பேர் இரண்டாவது மதிப்பெண்ணும்
பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இரண்டாம்
இடம்பெற்ற 11பேர்களில், எங்கள் ஊர், ஸ்ரீவில்லிப்புத்தூரின்
மற்றொரு பள்ளியான மங்காபுரம் நாடார் பள்ளி மாணவியும்
ஒருவர். இந்த இரண்டு பள்ளிகளிலுமே தமிழ்வழிக்கல்விதான்
என்பது குறிப்பிடத்தக்க விஷயம். எங்கள் ஊரின் பெருமை
சேர்த்த அந்த இரண்டு மாணவிகளுக்கும் மற்றும் வெற்றி
பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

டெல்லியின் ஆம்பியன்ஸ் மால் (Ambience Mall)

திங்கள், மே 23, 2011

              கடந்த சில நாட்களாக டெல்லியின் வெயில் கொஞ்சம்
குறைந்து, மாலையில் குளிர்ந்த காற்றுடன் லேசான சாரல் 
பெய்கிறது. அதனால் கிளைமேட் சூப்பராக இருக்கிறது. 
நேற்றும் இன்றும் காலையிலேயே வானம் மேக மூட்டத்துடன் 
இருந்தது. குளிர்ந்த காற்றுடன், வீட்டு பால்கனியில் 
நின்று வேடிக்கை பார்ப்பதற்கு அவ்வளவு சுகமாக இருந்தது.
 
            
             எங்கள் ஏரியாவிற்கு பக்கத்தில் வசந்த்குன்ச் என்கிற 
ஏரியாவில் புதிதாக ஒரு மால் கட்டியிருக்கிறார்கள். நேற்று 
மாலை எனது பையனுக்காக அந்த மாலுக்குப் போனோம். அந்த 
ஏரியாவில் பக்கத்து பக்கத்தில் மூன்று மால்கள் இருக்கின்றன.
நாங்கள் போனது ஆம்பியன்ஸ் மால் (Ambience Mall). இதே 
போல ஆம்பியன்ஸ் மால் குர்கானிலும் ஒன்று இருக்கிறது.
அதைப் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன். நேற்று,
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயங்கரக் கூட்டம். 
டெல்லியில் பீச் எதுவும் இல்லாததால் , பெரும்பாலான 
மக்களுக்கு பொழுதுபோக்கும் இடம் இப்படிப்பட்ட மால்கள் 
தான். எதுவும் வாங்குகிறார்களோ இல்லையோ, 
மால்களுக்குள் நுழைந்து விட்டால், ஓசியாக ஏசியில்  
வெயிலை நன்கு சமாளிக்கலாம். அதனால் நேற்றும், நாங்கள்
சென்ற ஆம்பியன்ஸ் மால் கார்களாலும், மக்களாலும் 
நிரம்பியிருந்தது.

  
          இந்த மால் இப்போதுதான் கட்டப் பட்டிருப்பதால், 
மேல்தளங்களில் எல்லாம் இன்னும் வேலை நடந்து 
கொண்டிருக்கிறது. கடைகள் இன்னும் மேல்தளங்களில் 
எல்லாம் வரவில்லை.   Shoppers Stop, Life Style, Pantaloons, 
BigBazaar போன்ற கடைகளும் MC Donald, Haldirams போன்ற 
உணவகங்களும் அங்குள்ள கடைகளில் குறிப்பிடத்தக்கவை. 
மேலும் அங்கு "FUN WORLD" என்றொரு இடம் இருக்கிறது. 
இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 
விளையாடுவதற்கான விளையாட்டுக்கள் பல உள்ளன. 
அதனால் கூட்டம் நிரம்பி வழிகிறது இங்கு. இப்போது சம்மர் 
லீவு வேறா, கேட்கவே வேண்டாம். பெற்றோர் காசு 
கரியாகிறது. பெரும்பாலும் வீடியோ கேம்ஸ் தான் 
இருக்கிறது. என் பையன் போன்ற சின்னக்குழந்தைகளுக்கு 
என எதுவும் விளையாட்டு இருக்கிறதா என்று பார்த்தோம். 
அவை கம்மியாக தான் உள்ளன. கார், சறுக்கு போன்றவை
மட்டும்தான் இருந்தது. ரோலர் கோஸ்டர்,டாஷ் கார் 
தவிர்த்து மற்றவை எல்லாம் வீடியோ கேம்ஸ் தான். பைக் 
ரேஸ்,கார் ரேஸ், ஷூட்டிங் கேம் எனப் பல இருந்தன. 
பெரியவர்களும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

              இங்கு முதலிலேயே பணம் கட்டவேண்டும். மினிமம் 
அமவுண்ட் 300 ரூபாய். நாம் கட்டும் பணத்திற்கு ஏற்ப 
ஒரு கார்டு தருகிறார்கள். அந்த கார்டை வைத்து, நாம் 
ஒவ்வொரு விளையாட்டாக தேர்ந்தெடுத்து விளையாட 
வேண்டும். உதாரணத்திற்கு ரோலர் கோஸ்டரில் செல்ல 
வேண்டும் என்றால், அங்கு கார்டை ஸ்கிராட்ச் செய்ய 
வேண்டும். ரோலர் கோஸ்டரில் செல்ல ஒருவருக்கு 120 
ரூபாய். நாம் அங்கு கார்டை ஸ்கிராட்ச் செய்தால் 
நம்முடைய கார்டில் இருந்து 120 ரூபாய் சென்று விடும். 
இப்படியாக கரைகிறது பணம். வீடியோ கேம்ஸ் என்றால்
விளையாடி முடிக்கும் போது, டிக்கெட்டுகள் கிடைக்கும். 
அதை சேர்த்து வைத்து கடைசியில் கொடுத்தால், பரிசுகள்
கொடுக்கிறார்கள்.  1000 டிக்கட்டுகள் என்றால் ஒரு சிறிய 
டெடி பியரும், 3000 டிக்கெட்டுகளுக்கு ஒரு ஸ்கூல் பேக்கும் 
தருகிறார்கள்.  ஆனால் இத்தனை டிக்கட்டுகள் கிடைக்க நாம்
பல முறை விளையாட வேண்டும். அதற்கு குறைந்தது 
மூவாயிரம் ரூபாய்க்காவது கார்டு வாங்க வேண்டும். இதுவும்
சூதாட்டம் போலத்தான் இருக்கிறது. ஒருமுறை நுழைந்து 
விட்டால் வெளியே வர மனமே இல்லை. நமக்கே இப்படி 
இருந்தால், பாவம் குழந்தைகள். அவர்களைச் சொல்லி என்ன
செய்ய?

மழலைப் பட்டாளம்...

புதன், மே 11, 2011

              இப்போது ஸ்கூல்குழந்தைகளுக்கு எல்லாம் சம்மர்லீவு 
விட்டாச்சு...  டெல்லியில மே, ஜூன்  இரண்டு மாதங்களில் 
வெயில் கடுமையாக இருப்பதால், அந்த இரண்டு 
மாதங்களில்தான் சம்மர் லீவு விடுறாங்க. இங்கே டெல்லியில 
நாங்க குடியிருக்குற அப்பார்ட்மென்ட்ல முக்கால்வாசி தமிழ்க் குடும்பங்கள்தான். அந்தக் குழந்தைகள் எல்லாம் என்னுடைய 
ஒன்றரை வயதுப் பையனோட விளையாட வருவாங்க.
           ஒரு நர்சரி ஸ்கூல் வச்சு நடத்தலாம் போல... ஒரே 
சத்தமும் சண்டையுமா இருக்கும். சண்டைய விலக்கி 
விடுறதுக்கே நேரம் சரியா இருக்கும். இந்தக் குழந்தைகளால
எனக்கு பொறுமை குணம் அதிகமாயிருக்கு. தினம் தினம் ஏழு, 
எட்டுக் குழந்தைகளைப் பார்த்துக்கணும்னா எவ்வளவு  
கஷ்டமா இருக்கு? எப்படித்தான் ஸ்கூல்ல டீச்சர்ஸ்
பார்த்துக்கறாங்களோ? அதுவும் நர்சரி ஸ்கூல் டீச்சர்ஸ்க்குத் 
தான் ரொம்ப ரொம்ப பொறுமை வேணும். ஒருத்தருக்குத் 
தண்ணீர் தாகம் எடுத்தா, வரிசையா எல்லாருக்கும் தண்ணீர் 
தாகம் எடுத்துடும். ஒருத்தருக்கு டாய்லெட் வந்தா, 
எல்லாருக்கும் வரிசையா வந்துடும்.

              அப்புறம் அவங்க கேட்குற கேள்விகள் இருக்கே? அதை
சமாளிக்கறதுக்குத் தனி திறமை வேணும். அப்படி என்கிட்ட  
கேட்கப்பட்ட  சில கேள்விகள்:

ஆண்ட்டி ! (இதைப் பத்தி தனிப் பதிவு போடறேன்) 
ஜஷ்வின்னுக்கு (என் பையன் பெயர்) இப்போ எத்தன வயசு?
நான் : ஒரு வயசு.

அவனுக்கு போன வருஷம் ஜீரோ வயசுதான ஆண்ட்டி?
நான் : ??? (என்ன பதில் சொல்லன்னு தெரியல) ஆமா. 

அடுத்து அவனுக்கு எப்போ டூ வயசு ஆகும் ஆண்ட்டி?
நான் : ஆகஸ்ட்ல அவனுக்கு பர்த்டே வரும் போது டூ வயசு 
ஆகிடும்.

அவன் அப்போ டூ வயசு ஆனதும் ஸ்கூல் போவானா?
நான் : இல்லை. அவனுக்கு மூணு வயசு முடிஞ்சதும் போவான்.

த்ரீ வயசுல போவானா?
நான்: ஆமா.

அப்புறம், ஃபோர் வயசுல போவானா?போக மாட்டானா?
நான் : போவான்.

ஃபைவ்  வயசுலயும்   போவானா ஆண்ட்டி?
நான் : அதுக்கப்புறம் எல்லா வயசுலயும் போவான்.

அவன் எப்போ ஆண்ட்டி பேசுவான்?
நான் : அவனுக்கு ரெண்டு வயசானதும் நல்லா பேசுவான்.

 அப்புறம், எங்க கூட எல்லாம் சண்ட போடுவானா?
நான் : ஆமா.
 
ஆண்ட்டி! அப்புறம், அவன் த்ரீ வயசுலயும் பேசுவானா?
நான் : ???

            இப்படிக் கேள்விகள் போய்கிட்டே இருந்தது. இந்தக் 
கேள்விகள் எப்போ முடியும்னு இருந்தது. 
இண்டர்வியூவிலையோ, பிராக்டிகல் வைவாவுலையோ
 கூட இவ்வளவு கேள்விகள் கேட்டிருக்க மாட்டாங்க.
இந்தக் கேள்விகளை நினைச்சு  ரசிப்பதா, அழுவதான்னு   
எனக்குத் தெரியலை. இது ஒருநாள் என்கிட்ட
கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பில் சிலதான்.
இப்படித் தினமும் நிறைய கேள்விகள் இருக்கும் அவங்ககிட்ட.  

           இப்போதுள்ள குழந்தைகள் பயங்கர சுட்டியாகவும்,
துடுக்குத்தனமாகவும் இருக்காங்க. கேள்விகளை 
சமாளிக்க முடியலை. இன்னும் என் பையன் பேச 
ஆரம்பிச்சு என்னென்ன கேட்கப்போறானோ?
எப்படி சமாளிக்கப் போறேனோ? தெரியலை.  

       இப்போ, ஒவ்வொருத்தரா லீவுக்கு ஊருக்குப்
போக ஆரம்பிச்சுட்டாங்க. கலகலன்னு இருந்த 
எங்க வீடு இப்போ வெறிச்சோடிப் போக ஆரம்பிச்சிடுச்சு.
பாவம்! என் பையனுக்குத்தான் இப்போ போர் 
அடிக்க ஆரம்பிச்சுடுச்சு... அடுத்து அவங்கல்லாம் 
ஊருக்கு வந்தப்புறம்தான் திரும்ப வீடு களை கட்டும். 
அதுவும் அடுத்து லீவு விடும்போதுதான். ஸ்கூல் 
நாட்களில் அவங்க எல்லாம் ஒவ்வொரு கிளாஸ் என
பிசியாகிடுவாங்க. அதனால நானும் என் பையனும் 
அவங்களோட அடுத்த லீவுக்காக காத்திருக்கிறோம்.    
கேள்விகளுக்காகவும்தான்.
Related Posts with Thumbnails