அட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (ADVENTURES OF TINTIN-2011)

செவ்வாய், நவம்பர் 29, 2011

                        
                                           (1907 - 1983 )

                       பெல்ஜியமைச் சேர்ந்த கலைஞர் ஜார்ஜஸ் ரெமி
என்பவர் 'ஹெர்ஜ்' என்ற புனைப்பெயரில் எழுதிய காமிக்ஸ்
கதைகள்தான் டின்டின்னின் சாகசங்கள். 


டின்டின் 
  
                    முதன்முதலில் 1929 ஆம் ஆண்டுதான் டின்டின் என்ற
கதாப்பாத்திரம் உருவானது. இருபதாம் நூற்றாண்டில்,
ஐரோப்பிய மொழிகளில் வெளியான  மிகப் புகழ்பெற்ற காமிக்ஸ்
கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதைகள் கிட்டத்தட்ட 80
மொழிகளில் உலகெங்கும் வெளிவந்தது. அனேகமாக நம்மில்
பலர் இந்தக் கதைகளைப் படித்திருப்போம். பின்னர் இந்தக்
கதைகள் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும்
எடுக்கப்பட்டன. இதில் டின்டின் தான் ஹீரோ. அவன் மிகவும்
புத்திசாலியான இளம் நிருபர். துப்பறியும் நிபுணரும் கூட.
அவனுக்கு ஸ்னோவி என்றொரு நாயும் உண்டு. கேப்டன்
ஹட்டோக், டின்டின்னின் நெருங்கிய நண்பன். அவர் ஒரு
குடிகாரர். அவர் செய்யும் செயல்கள் அனைத்தும்
நகைச்சுவையாக இருக்கும். இவர்கள் மூவரும்தான்
கதையின் முக்கியக் கதாப்பாத்திரங்கள்.

                   இந்த வருடம் எடுக்கப்பட்டிருக்கும் 'அட்வென்ச்சர்ஸ்
ஆப் டின்டின்' என்கிற இந்த அனிமேஷன் திரைப் படத்தை
எடுத்தவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
மேலும் இந்தப் படம் 3டி யிலும் வெளிவந்துள்ளதால்
போய்ப்பார்த்தோம்.
               பலவருடங்களுக்கு முன் மூழ்கிய யூனிகார்ன் என்ற
கப்பலில் இருந்த புதையலைத் தேடிச் செல்லும் டின்டினுக்கும்
வில்லனுக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை. புதையலை
யார் எடுக்கிறார்கள், எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பதுதான்
கிளைமாக்ஸ்.
குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம். அதுவும் 3டி யில்
பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. எனது 2வயது பையனே பொறுமையாக உட்கார்ந்து, ரசித்துப் பார்த்தான்.

டெல்லி குளிர்

புதன், நவம்பர் 02, 2011

                      டெல்லியில குளிர் ஆரம்பமாயிடுச்சு. இனி பிப்ரவரி
வரை இங்க இருக்குறங்கவங்க எல்லாம் எந்திரன் தான்.
அதாங்க ரோபோ. முகம் மட்டும்தான் வெளியில் தெரியும்.
தலையில இருந்து கால் வரை உல்லன்னால மூடி, குல்லா,
மப்ளர், ஸ்வட்டர், தெர்மல்ஸ், சாக்ஸ் என ரோபோ மாதிரி
அலைய வேண்டி இருக்கும். வெறும் காலால் நடக்க முடியாது.
தரையெல்லாம் அவ்வளவு சில்லென்று இருக்கும்.தண்ணீரில்
கை வைக்க முடியாது. கை நனைத்த பிறகு கொஞ்ச நேரத்திற்கு
பல் டைப் அடித்துக் கொண்டு இருக்கும். காலையில
எழுந்திருக்கவே கஷ்டமாக இருக்கும். இன்னும் கொஞ்ச நேரம்
இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க மாட்டோமா என்று
இருக்கும்.                   நான் கல்யாணமாகி முதன்முதலில் டெல்லி வந்தது
டிசம்பர் மாதக் குளிரில். குழந்தை பிறந்து முதன்முதலில்
குழந்தையைத் தூக்கி வந்ததும் ஜனவரி மாதம் குளிரில்தான். அதனால்தானோ என்னவோ எங்களுக்கு குளிர் பழகிவிட்டது.
சம்மர்தான் எங்களைப் பாடாய் படுத்துகிறதே தவிர, குளிர்
பழகித்தான் விட்டது.  சம்மருக்கு பயந்துதான் ஊருக்குப் போக
வேண்டியதாய் உள்ளது.


 

                 இந்தக் குளிரில் டெல்லி பார்க்கவே அழகாய் இருக்கும்.
'இண்டியா கேட்'டை பனிமூட்டத்தில் பார்க்கும்போது அழகாக
இருக்கும். தூசி குறைந்து காற்று சுத்தமானதாக இருக்கும்.
பூங்காக்களில் எல்லாம் பூக்கள் கண்காட்சி நடக்கும்.முக்கியமாக
இந்த சீசனில் காய்கறிகளும் பழங்களும் விலை மலிவாகக்
கிடைக்கும். கேரட், பட்டாணி, கத்தரிக்காய்,கீரைகள் எல்லாம்
பிரெஷ்ஷாக பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். 
                     கோதுமை உணவுகள் உஷ்ணத்தைக் கொடுக்கும்
என்பதால்,  இந்த சீசனில் கோதுமை ரொட்டிதான்
பெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். அதுபோல கடுகு எண்ணெய்
உடலுக்கு சூட்டைக் கொடுக்கும் என்பதால், சாப்பாட்டிற்கு
பெரும்பாலும் கடுகு எண்ணெய் தான். குழந்தைகளுக்குக் கூட
இந்த எண்ணையைக் கொண்டு மசாஜ் செய்யச்
சொல்லுகிறார்கள். இதனால் உடல் சூடாகுமாம். 
குழந்தைகளுக்கு குளிர் தெரியாது. ஜலதோஷம் பிடிக்காது 
எனக் கூறுகிறார்கள். 
                  இந்த சீசனில் பிளாட்பாரவாசிகளின் நிலைமைதான் 
பாவமாக இருக்கும். ரோட்டிலேயே நெருப்பு பற்ற வைத்துக் 
குளிர்காய்வார்கள். வருடந்தோறும் குளிர்கால முடிவில் 
பத்து நாட்களுக்கு குடியரசு மாளிகையில் உள்ள மொகல் 
கார்டனைப் பொதுமக்கள் பார்வைக்கு விடுவார்கள். 
அப்போது அங்குள்ள பூக்களைப் பார்ப்பதற்குக் 
கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதேபோல குளிர்கால
முடிவில்தான் இங்கு ஹோலிப் பண்டிகையும்  
கொண்டாடப்படுகிறது.
                 டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடு இரவில் குளிர் 
மைனசில் செல்லும். டெல்லிக்கு வடக்கில் உள்ள இடங்களில், 
இமாச்சல பிரதேசங்களில் எல்லாம் பனிப் பொழிவைக் 
காணலாம். இவ்வாறு குளிரை ரசிக்க விரும்புபவர்கள் 
முன்பனிக் காலமாகிய அக்டோபர், நவம்பரிலும், பின்பனிக் 
காலமாகிய பிப்ரவரி, மார்ச்சிலும் இங்கு வந்து ரசிக்கலாம்.
 

 

 

அசோகா அல்வா

செவ்வாய், அக்டோபர் 25, 2011

நாளைக்கு தீபாவளி. எல்லாரும் அநேகமா புது ட்ரஸ், பட்டாசுகள் 
வாங்கி இருப்போம். இப்போது ஸ்வீட்ஸ் எல்லாம்
கடைகளிலேயே வாங்க ஆரம்பித்து விட்டோம். நேரமின்மையே 
இதற்கு காரணம். சிலர் மட்டும்தான் சாஸ்திரத்திற்காக வீட்டில்
செய்கின்றனர்.

அதுபோல நேரம் இல்லாமல் செய்யமுடியாதவர்களுக்கும், 
புதிதாக செய்ய நினைப்பவர்களுக்குமான ரொம்ப ஈசியான 
அல்வா இது.

பாசிப்பருப்பில் செய்யும் இந்த அல்வா, தஞ்சாவூர் மாவட்டத்தில் 
ரொம்ப பேமஸ். இது மிகவும் சத்தானதும் கூட. ஆனால் 
அசோகா அல்வா என ஏன் பெயர்வந்தது எனத் தெரியவில்லை.


(படம் கூகிளில் இருந்து எடுத்தது. நன்றி:கூகிள். கேமரா 
பழுதடைந்திருப்பதால், செய்யும் போது என்னால் படம்
எடுக்க முடியவில்லை.)

செய்யத் தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு- 1 கப்
கோதுமை மாவு - 2 ஸ்பூன்
கலர் - ஒரு சிட்டிகை 
சீனி - 1 கப்
நெய் - 1 கப்

முதலில் பாசிப் பருப்பை நன்கு குழைய வேக வைத்து,
அதை நன்கு மசித்துக் கொள்ளவும். கோதுமை மாவை
சிறிது நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். பின்
சீனியை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,
கொதிக்கவிடவும். சீனித் தண்ணீர் கொதித்து நுரையாக 
வரும்போது, மசித்த பருப்பையும், கோதுமை மாவையும் சிறிது 
நெய்விட்டு நன்கு கிளறவும்.இது போல சிறிது சிறிதாக நெய்யை
ஊற்றி கிளறவும். தேவையெனில், இப்போது கலர் சேர்த்துக் கொள்ளலாம்.பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு 
வரும்போது, சிறிது நெய்விட்டு இறக்கவும்.நெய்யில் வறுத்த
முந்திரி, கிஸ்மிஸ் பழங்களை மேலாகத் தூவவும்.
மிகவும் எளிமையாக செய்யக் கூடிய இந்த அல்வாவை உங்கள்
வீட்டிலும் இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

பாலை அருந்துவது ஆரோக்கியமா?

திங்கள், அக்டோபர் 03, 2011


                 இது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

             பால் பற்றிய தவறான கருத்து நம்மில் அனைவருக்கும்
இருக்கிறது. பெரியவர்கள் பால் எடுத்துக்கொள்ளக் கூடாது. அது
சிறிய குழந்தைகளுக்குத்தான். வெள்ளைப் பொருட்கள் உடலுக்கு
நல்லதல்ல. அதில் பாலும் ஒன்று என்றும், இதுபோல் நிறைய
செய்திகளை நாம் படிக்கிறோம், கேட்கிறோம். இப்போது பால்
நமக்கு நல்லதா? கெட்டதா?  என்று அறியலாம்.
              


                பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு ஆறுமாதம் வரை கண்டிப்பாக
தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். அதன்பிறகு குழந்தைகளின்
6 மாதம் முதல் 100 வயது பெரியவர்கள் அனைவரும் பால்
அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற
பலவிதமான சத்துக்கள் உள்ளன. மற்ற பொருட்களில் இல்லாத
சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும்
500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக்
கொள்ளலாம்.
              6%,3%,1.5% கொழுப்பு உள்ள பால் கிடைப்பதால்
நமக்குத் தேவையான கொழுப்பு அளவின்படி நாம் எடுத்துக்
கொள்ள வேண்டும். பாலில் தண்ணீர் சேர்க்க கூடாது. பாலில்
70% தண்ணீர் இருப்பதால் பாலில் தண்ணீர் கண்டிப்பாக சேர்க்க
வேண்டாம். கொழுப்பு குறைக்க வேண்டும் என்றால், கொழுப்பு
குறைவாக உள்ள பாலை பயன்படுத்தவேண்டுமே தவிர
தண்ணீர் ஊற்றிக் காய்ச்சக் கூடாது. ஆவின் பால் ஒரு சிறந்த
பதப்படுத்தப்பட்ட பால் என்று சொல்லப்படுகின்றது. 3%
கொழுப்பு உள்ள ஆவின் பாலை நாம் எல்லோரும்
பயன்படுத்தினால் போதுமானது.

   பால் அருந்துவதால் வரும் நன்மைகள்:

   எலும்பு சக்திக்கு:
               பால் பொருட்கள் சுண்ணாம்புச் சத்தினைக்
கொடுக்கின்றன. இச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
எலும்பு வளர்ச்சி குழந்தை மற்றும் இளம் பருவத்தில் அதிக
முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இளம்பருவத்தினர் பால்
மற்றும் பால் பொருட்களை எடுத்துக் கொள்வது மிக முக்கியமான
ஒன்று. கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பிட்ட அளவில் பால்
எடுக்கவேண்டும். ஏனெனில், குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு
அது மிக முக்கியமான ஒன்று. ஆப்டிமைசிங் போன் மாஸ் எனவே
இளம் பருவத்தினருக்கு எலும்பு முறிவு வராமால் குறைக்கின்றது.
அதே போன்று மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக
500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

  பல்:
             பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள சுண்ணாம்பு சத்து
மற்றும் பிற சத்துக்கள் பற்களுக்கு நண்பன். அச்சத்துக்கள்
பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகமிக
முக்கியமானது. இவை தவிர இரத்தக் கொதிப்பு
கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய
நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும்
பால் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சி முடிவில் தெரிய
வந்துள்ளது.

            பாலின் முக்கியத்துவம் பற்றி நாம் தெரிந்து கொண்டோம்.
பால் நம் தினசரி உணவில் ஒரு பங்காக இருக்க வேண்டும்.
பாலில் உள்ள சத்துக்கள், நன்மைகள் தெரிந்தபின் நாம், பால்
நமக்கு நல்லதல்ல என்று சொல்வது சரியா? அதிக அளவில்
கண்டிப்பாக எடுக்கக் கூடாது. சிலர் ஒரு லிட்டர் பாலை சுண்டக்
காய்ச்சி பயன்படுத்துவார்கள். முன்பே சொன்னது போல பாலை
சுண்டக் காய்ச்சி பயன்படுத்துவது தவறு. பாலை சூடு செய்து
அளவோடு எடுத்துக் கொள்வதுதான் சிறந்தமுறை ஆகும்.
பாலை குளிர்சாதனப் பெட்டியில் பல நாட்கள் வைத்து
நல்லதல்ல். அன்றைய தினப் பாலை அன்றைக்கே
பயன்படுத்துவது சிறந்தது. பால் வெகுவிரைவில் கெட்டுப்
போகக்கூடிய ஒரு உணவு. ஆகையால், பாலை அதிக நாட்கள்
குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைப்பது நல்லதல்ல.
இவ்வாறு பாலை சரியான முறையில் பயன்படுத்தி உடம்பை
நல்லமுறையில் பாதுகாக்க, பால் ஒரு சிறந்த முழு உணவாக கருதப்படுகின்றது. எனவே, பாலை தினசரி உணவில் அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென விரும்புகிறோம்.

          நான் தெரிந்து கொண்டது போல நீங்களும் பாலைப் பற்றி
பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டீர்களா?


மருத்துவமனை அனுபவம்

திங்கள், செப்டம்பர் 26, 2011

                
 
               டெல்லியில் உள்ள மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளில் சப்தர்ஜ்ங் மருத்துவமனையும் ஒன்று. 10 நாட்களுக்கு முன்பு, எங்கள் பக்கத்து வீட்டு பெண் ஒருவருக்கு அங்குதான் டெலிவரி ஆனது. அவரைப் பார்க்க சென்ற போது, தனது மருத்துவமனை அனுபவத்தைக் கூறினார். கேட்க கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

               


                  அங்கு அட்மிட் ஆகும் நபர்களை, ஒரு பெட்டுக்கு இரண்டு பேர் என படுக்க வைப்பார்களாம். பிரசவ வலியிலும் ஒரு பெட்டில் இரண்டு பேர் படுத்துக் கொள்ள வேண்டுமாம். பிரசவம் சிசெரியனாக இருந்தால் மட்டும் ஒரு பெட்டுக்கு ஒருவராம்.

              அப்படி இவங்க அட்மிட் ஆன சமயத்தில், இவங்க பக்கத்து பெட்டில் ஒரு பெண்மணியும் அட்மிட் ஆனாங்களாம். சிறிது நேரத்தில் அந்தப் பெண்மணிக்கு நார்மல் டெலிவரி ஆகிவிட, குழந்தையையும் தாயையும் ஒரு கட்டிலில் வந்து போட்டு விட்டு சென்றுவிட்டனராம். தாயும் குழந்தையும் அலுப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்மணிக்கு துணையாக ஒரு வயதான பாட்டி வந்திருந்ததாம். பாவம் அதற்கு கண் வேறு சரியாக தெரியாதாம்.

             அந்தப் பாட்டியும் கட்டிலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து நன்கு தூங்கி விட்டது போல. திடீரென்று அந்தப் பெண்மணியின் சத்தம் ஆஸ்பத்திரியே அதிரும் அளவு கேட்டதாம். என்னவென்று நர்ஸ்கள் எல்லாம் ஓடிப் போய்ப் பார்த்தால், குழந்தை இறந்து விட்டது. விசாரித்ததில், அந்தப் பெண்மணி தூக்கத்தில், குழந்தையின் முகத்தில், கையைப் போட்டு தூங்கி இருக்கிறாள். அந்த அழுத்தத்தில் குழந்தையின் மூக்கு நசுங்கி, மூச்சு முட்டி, குழந்தை இறந்திருக்கிறது.


                                       (இது அந்தக் குழந்தை அல்ல.)

              பாவம் இது அந்தப் பெண்மணியின் முதல் குழந்தையாம். அஜாக்கிரதையினால் பாவம் ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிர் போய்விட்டது. பக்கத்து வீட்டுப் பெண்மணி இதைச் சொன்னதில் இருந்து எனக்கு மனதே சரியில்லை. அன்று இரவெல்லாம் இதே ஞாபகமாகவே இருந்தது. 

இடைவெளி

வியாழன், செப்டம்பர் 22, 2011

              

           பிளாக்கில் கடைசியாக எழுதி,கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. சில அலுவல்கள் காரணமாக எழுத முடியவில்லை. இதனால் வலைப் பக்கங்களில் பின்னூட்டம் எழுத கூட நேரமில்லை. இந்த சிறு இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் எழுத வந்துள்ளேன் உங்களது ஆதரவுடன் .

நாகர்கோவில் - முட்டம் பீச்

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

          முட்டம் பீச் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது
சினிமாதான். இங்கே கடலோரக் கவிதைகள், அலைகள்
ஓய்வதில்லை போன்ற பல படங்கள் எடுத்திருக்காங்க.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில்
இதுவும் ஒன்று. இந்த பீச் நாகர்கோவிலில் இருந்து 16 கி.மீ 
தூரத்தில் உள்ளது.  நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 
நிறைய பஸ்கள் அடிக்கடி இருக்கின்றன.
        
                  சொத்தவிளை பீச்சைப் போல இது குளிப்பதற்கு ஏற்ற
கடற்கரை இல்லை. இங்க அலையின் வேகம் அதிகமாக இருக்கு.
பாறைகள் அதிகமா இருக்குற இந்த  பீச்சுல, அலைகள் வேகமா
வந்து பாறைகளில் மோதறது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கு, பெரிய பெரிய அலைகளாக, ஆள் உயர  அலைகளாக
வருது. அலைகள் ஒவ்வொன்றும் ஆக்ரோஷமா வந்தது.
பார்ப்பதற்கே பயமா இருந்தது. அதையும் மீறி, தைரியமா கால்
நனைக்கப் போனா, என் கால் கொலுசை அலை எடுத்திட்டு
போயிடுச்சு. எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியலை.
குளிப்பதற்காக வந்து வாரம் ஒருத்தராவது, கடலில் மூழ்கி
இறந்துடராங்கன்னு அந்த ஊர்க்காரர் ஒருவர் எங்களை
எச்சரித்தார். அலைகளின் சீற்றத்தினால், கடலுக்குள் போகக்
கூடாது என்பதற்காக ஆங்காங்கு இரும்புக் கம்பியால் வேலிகள் போடப்பட்டிருக்கிறது. அந்த வலிமையான இரும்புக் கம்பிகள்
வளைந்தும், உடைந்தும் போயிருப்பதைப் பார்த்தாலே, அது
நமக்குப் புரியும்.


             
 
 
           இங்க ரொம்ப பழமையான கலங்கரைவிளக்கம் ஒன்று
இருக்கு. மேலும் கரையிலிருந்து பீச்சைப் பார்க்க, நிறைய
சிமென்ட் பெஞ்சுகள் அழகாக கட்டப்பட்டிருக்கின்றன. குடில்கள்
போல அமைத்து, அதுல வட்ட வடிவ பெஞ்சுகள்
கட்டியிருக்காங்க. இதனால பீச் அழகாகவும், சுத்தமாகவும்
இருக்கு. முட்டம் பீச்சுக்குப் போற வழியில் செம்மண் கரடு
ஒன்று இருக்கு. செக்கச்செவேல்னு பார்க்கவே அவ்வளவு
அழகாக இருக்கிற இங்கும் நிறைய சினிமா ஷூட்டிங்
எடுத்திருக்காங்க.

          முட்டத்திற்கு அடுத்தாற்போல , கடியாப்பட்டினம் என்ற
பீச் இருக்கு. அங்க, நாங்க முட்டத்திற்கு போனதற்கு சில நாட்கள்
முன்பு, ஒரு  வெளிநாட்டுக் கப்பல் பாறையில் மோதி உடைந்து, மூழ்கிவிட்டதாம். மூழ்கியதால் சேதம் எதுவும் இல்லை என
அங்கிருந்தவங்க சொன்னாங்க. நேரமில்லாததால போய்ப்பார்க்க
முடியலை. முட்டத்திலிருந்து பார்த்தால், உடைந்த கப்பலின்
மேல் பாகம் மட்டும் தெரிந்தது. அதை மட்டும் பார்த்துவிட்டு
வந்தோம்.
நன்றி !!!

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

          
                  இன்றோடு வார்த்தைச்சித்திரங்கள் என்ற இந்த 
வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.. இந்த ஒரு
வருடத்தில், பலரது நட்பும், 74 ஃபாலோவர்களும் கிடைத்திருப்பது
மிகவும் மகிழ்ச்சி . இந்த வலைத்தளம் மூலம் பலரின் அன்பும், நட்பும், அறிமுகமும், பின்னூட்டங்களும் கிடைத்திருப்பது மனதை நெகிழவும், பெருமைப்படவும் வைக்கிறது. இந்த வலைத்தளத்தை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தவர் திருமதி.விக்னேஷ்வரி அவர்கள். முதலில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
        இதுவரை 71 இடுகைகள் எழுதி இருக்கிறேன். என்னையும்
எழுதவைத்து எனக்கு எழுத்தார்வத்தை உருவாக்கியவர் அவர்.
முதல் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வார்த்தைச்சித்திரங்களுக்கு உங்களது ஆதரவும் ஆசீர்வாதமும்
கண்டிப்பாக வேண்டும். இதுவரை எனது பதிவுகளை
பொறுமையாக வாசித்து பின்னூட்டங்கள் இட்டதற்கும், இன்ட்லி,
தமிழ்மணம் போன்றவற்றில் ஓட்டுக்கள் போட்டு என்னை உற்சாகப்படுத்தியதற்கும் மிகவும் நன்றி. இந்த ஆதரவும்
ஊக்கமளிப்பும் இனியும் தொடரவேண்டும் என  விரும்புகிறேன்.

நன்றியுடன்,
ஜிஜி.

நாகர்கோவில் - சொத்தவிளை பீச்

புதன், ஆகஸ்ட் 03, 2011

            கடல்னாலே அழகுதான். கடல்னு சொல்லும்போதே மனசு குழந்தை மாதிரி குதூகலிக்குது. இந்த தடவை ஊருக்குப் போனபோது, நான்கு பீச்சுக்கு போனோம். அவ்வளவு ஜாலியா இருந்தது.
             முதலில் நாங்க போனது, சொத்தவிளை பீச். இது நாகர்கோவிலில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கடற்கரையைப் பற்றி நாகர்கோவிலில் உள்ளவர்கள் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. இது நான்கு கி.மீ. நீளமுள்ள இந்தியப் பெருங்கடலின் கடற்கரை. முன்பெல்லாம் இந்த பீச்சுக்கு யாரும் வர மாட்டார்களாம். இங்கு வருபவர்களிடம் வழிப்பறி, கொலை போன்ற சமூக சீர்கேடுகள் நடக்கும் இடமாக இருந்திருக்கிறது . மேலும் சுனாமியினாலும் இந்த பீச் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போதுதான் இம் மாவட்டக் கலெக்டரின் உதவியால், இது செப்பனிடப் பட்டு, சிறுவர் பூங்காக்களும் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பலரும் வருமாறு, வழிசெய்யப்பட்டுள்ளது.            வெள்ளை மணல் பரப்புடன் பார்ப்பதற்கு அழகாக , மிக நீளமாக இந்தக் கடற்கரை இருக்கிறது. கடல் தண்ணீரும் பார்ப்பதற்கு நீலக் கலரில் ஜொலிக்கிறது.             கரையோரத்தில் நிறைய குடில்களும், செடிகளும் அழகாக
இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில்
ஒன்றாக இது மாறிவருகிறது.

            நாங்கள் போனது ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால்,
கூட்டம் அதிகமாக இருந்தது.  பேருந்தில் செல்வதானால்,
புத்தளம் என்ற ஊருக்கு அடுத்த ஸ்டாப்பான சொத்தவிளையில்
இறங்கி, பீச்சிற்கு , அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து செல்ல
வேண்டும். கடலைப் பார்த்ததும் கால் நனைக்கலாமென
ஆசையாகப் போனால்,  கடலுக்கு என்மேல என்ன கோபமோ
தெரியலை. ஒரு பெரிய அலை வந்து கீழ தள்ளிடுச்சு. அப்புறம்
என்ன? முழுக்க நனைஞ்சாச்சு. நனைஞ்சது நனைஞ்சாச்சு,
அப்படியே குளிச்சிடுவோம்னு, சூப்பரா ஒரு குளியலையும்
போட்டாச்சு. ஜாலியா இருந்தது.  இந்த சொத்தவிளை பீச்
அவ்வளவாக ஆழமில்லாததால், குளிப்பதற்கு ஏற்றதாக
இருக்கிறது. நிறைய பேர் நீச்சல் அடித்து குளித்தார்கள்.
இருட்டும்வரை இருந்துவிட்டு, பின் திரும்பிவிட்டோம்.
           கேமரா கொண்டுபோக மறந்துவிட்டதால்,  கூகுள்
மூலம்தான் இந்தப் படங்களை எடுக்க முடிந்தது.
நன்றி AdmirableIndia.comநானும் மூணு சக்கர சைக்கிள் ஓட்டப் போறேன் - மூணு மூணு பதில்கள் சொல்லி... (தொடர் பதிவு)

வியாழன், ஜூலை 28, 2011இது நான் எழுதும் முதல் தொடர்பதிவு. என்னையும் இந்தத் தொடர்
ஓட்டத்தில் கலந்து கொள்ள அழைத்த கோவை2தில்லி 
அவர்களுக்கு நன்றி.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
* அதிகாலை அமைதியில் படிப்பது.
* பௌர்ணமி நிலவில் மொட்டை மாடியில் பால் சாதம் சாப்பிட.
* இரவுநேரம் ஜன்னலோர இருக்கைப் பயணம்.
 
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?  
* நம்மைப் பேசவிடாமல் பேசிக்கொண்டே இருப்பவர்கள்.
* அதிக சத்தத்துடன் பாட்டுக் கேட்பது, டிவி பார்ப்பது.
* முதுகுக்குப் பின் நம்மைப் பற்றி பேசுபவர்கள்.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
* ராட்டினம், ரோலர்கோஸ்டர் இவற்றில் போக.
* பஸ் பயணங்களில் சில்மிஷம் செய்யும் ஆசாமிகள்.
* கூட்டம்.  

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
* சில விளம்பரங்கள் மற்றும் சில கவிதைகள்.
* அறிமுகம் இல்லாத நபரிடம் தன்னைப் பற்றி எல்லா
விஷயங்களையும் சொல்வது. (சொந்த விஷயங்கள் உட்பட)
* எல்லா நாட்களிலும் பேருந்து, ரயில், விமானம் என
எல்லாவற்றிலும் இருக்கும் பயணிகளின் கூட்டம்.
(எங்கதான் போவாங்களோ?)
 
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
* லேப்டாப்.
* பென் ஸ்டாண்ட்.
* நிறைய புத்தகங்கள்.

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்?
* எனது குழந்தையின் சேட்டைகள்.
* வடிவேலுவின் சில காமெடிக் காட்சிகள்.
* என் கணவர் பாடுவது.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
* என் குழந்தையுடன் விளையாடுவது.
* திரு. கி.ராஜநாராயணன் அவர்களின் "கோபல்ல கிராமம்"
புத்தகம் படித்துக் கொண்டிருப்பது. 
* அக்கவுண்ட்ஸ் பற்றிய அடிப்படை விஷயங்களைத்
தெரிந்து கொள்வது.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
* சொந்தமாக ஒரு வீடு.
* அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுப்பது.
* சச்சின் டெண்டுல்கரைச் சந்திப்பது.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
* பள்ளி நாட்களில் விட்ட, ஓவியம் வரைதல், கட்டுரை
எழுதுதல் இவற்றைத் தொடர வேண்டும். 
* படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
வேண்டும். ( மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று என) 
* பத்திரிக்கைகளுக்கு எழுதுவது.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
* பொய் பேசுவதை.
* மனம் புண்படும்படியாக பேசுவதை.
* கேட்ட வார்த்தைகளால் திட்டுவதை.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
* நிறைய மொழிகள். (தற்போதைக்கு சரளமாக ஹிந்தி பேச)
* நீச்சல்.
* வீணை.

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
பிடிக்காதென்று எதுவும் இல்லை. இருந்தாலும் மூன்று...
* கேக் வகைகள்.
* கோபி மஞ்சூரியன்.
* அசைவ உணவுகள்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
* எந்தப் பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக் காளை)
* பூங்காற்று உன் பேர்சொல்ல... (வெற்றி விழா)
* உயிரே உயிரே என் உயிரே... (தொட்டி ஜெயா)
 
14) பிடித்த மூன்று படங்கள்?
* மௌனராகம்.
* பம்பாய்.
* ரிதம்.

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
* அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம்,
காற்று, நீர், தூக்கம்.
* வெளி உலக தொடர்பு.
* புத்தகங்கள்.

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்? 

அப்பா! ஒரு வழியா முடிச்சாச்சு. தொடர்ல பாஸாகிட்டேனான்னு
தெரியலை.

சர்க்கஸ்

ஞாயிறு, ஜூலை 24, 2011

இந்தியன் சர்க்கஸ்

             சமீபத்தில் சர்க்கஸ் ஒன்றிற்கு சென்றிருந்தேன். மால்களும் சினிமாக்களும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் சர்க்கஸ்
கலைஞர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. பார்வையாளர்கள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.
மொத்தமாக சர்க்கஸ் கலைஞர்கள் சுமார் நூறு பேராவது இருப்பர்.
அதில் பெண் கலைஞர்கள் மட்டுமே சுமார் இருபத்தைந்து பேர்
இருந்தனர்.  மேலும் யானைகள், ஒட்டகங்கள், நாய்கள்  போன்ற விலங்குகளும் இருந்தன.
             இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு,உடை மற்றும்
தங்குவதற்கான செலவுகளுக்கு கண்டிப்பாக வரும் வருமானம்
பற்றாது. கிழிந்த உடைகளுடன் அவர்களைப் பார்க்கும்போதே
கஷ்டமாக இருந்தது. அவர்கள் செய்யும் கஷ்டமான
சாகசங்களுக்கெல்லாம் சாப்பிடும் சாப்பாடு போதுமானதாக
இருக்காது. கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இருவரும்,
ஊஞ்சலில் தொங்கி சாகசங்களைக் காண்பிக்கும் ஆண்களும்
பெண்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மை
மகிழ்விக்கின்றனர்.
             முன்பெல்லாம் யானை,சிங்கம், நாய்களைப் பயன்படுத்தி
பல சாகசங்கள் செய்து காண்பிப்பர். ஆனால் இப்பொழுது
மிருகவதைத் தடுப்புச் சட்டத்திலிருந்து விலங்குகளை
சாகசங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என ஆணையிட்டிருப்பதால், விலங்குகளைப்  பயன்படுத்துவதும் குறைந்துவிட்டது.
இதனால்தானோ என்னவோ , பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
           நமது நாட்டில் இந்தியன் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ்
போன்ற சில சர்க்கஸ்களே தற்போது உள்ளன.  இவையும்
அழிந்துவிடாமல் நாம்  பாதுகாக்கவேண்டும்.
சர்க்கஸ்களுக்கும் சர்க்கஸ் கலைஞர்களுக்கும் வாழ்வளிக்க
வேண்டும்.

        


டெல்லி கிளைமேட்

செவ்வாய், ஜூலை 12, 2011

                 டெல்லி வெயில்ல இருந்து தப்பிக்கிறதுக்காக ஒரு
மாசம் ஊருக்குப் போயாச்சு. அங்க போனா இதை விடக்
கொடூரமா இருந்தது வெயில். கடைசியா ஊருக்கு
கிளம்பும்போதுதான் குற்றால சீசனால கொஞ்சம் கிளைமேட்
நல்லா இருந்தது.

                நாகர்கோவில் போயிருந்தபோதும் , அங்க இப்போ
ஆணிஆடிச் சாரல். குளுகுளு காற்றோட சாரல் சூப்பரா இருந்தது.
வரவே மனசு இல்லை. ஒரு மாசம் போனதே தெரியலை.
டெல்லி வந்தாச்சு. இங்க இப்போ வெயில் குறைஞ்சிடுச்சு. ஆனா,
புழுக்கம் தாங்க முடியலை. மழையும் பெய்யாம, வெயிலும்
இல்லாம கிளைமேட் கொல்லுது. வீட்டுக்குள்ள இருக்க
முடியலை. வியர்வைக் குளியலா இருக்கு தினமும். இதனால்
சீக்கிரமே டயர்டாகி எரிச்சல்தான் வருது. இங்க அடிக்கிற
அதிகமான வெயிலையும், குளிரையும் கூட சமாளிச்சிடலாம்
போல இதுக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி
இருக்குமோ தெரியலை? படுத்தி எடுக்குது மனுஷனை.
             ஊருக்கு போயிட்டு வந்தாச்சு. போயிட்டு வந்த
இடங்களைப் பத்தி எழுதவேண்டாமா? அடுத்த பதிவுகளில்
எழுதறேன்.

டெல்லி மெட்ரோ ரயில் திட்டம்

வெள்ளி, ஜூன் 24, 2011

             
              இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டம் முதன்முதலில்
கொல்கத்தாவில்தான் 1984ல் தொடங்கப்பட்டது. டெல்லியில் 
இந்தத் திட்டமானது, 1995ல் ரெஜிஸ்டர் செய்யப்பட்டு, 1998ல் 
தான் ஆரம்பிக்கப்பட்டது. இது டெல்லி மக்களுக்கு ஒரு மிகப்
பெரிய வரப் பிரசாதம். இதன் சேர்மன் திரு. நவீன் குமார் மற்றும்
மேனேஜிங் டைரக்டர் திரு.டாக்டர்.E.ஸ்ரீதரன். டெல்லி மெட்ரோ
திட்டத்தின் வெற்றிக்கு முழுக் காரணமும் திரு,ஸ்ரீதரனையே
சாரும். 2021க்குள் டெல்லி முழுவதையும் மெட்ரோ மூலமாக
இணைப்பதே இவரது நோக்கம்.              டெல்லி மெட்ரோவானது, டெல்லி,குர்கான் மற்றும்
நொய்டா இந்த மூன்று  NCR (National Capital Region)
நகரங்களையும்  இணைக்கிறது. இது ஆறு லைன்களாக
189.63 கி.மீ தூரத்தைக் கொண்டுள்ளது. இதில் 142 மெட்ரோ
ஸ்டேஷன்கள் உள்ளன. அவற்றுள் 32 கீழ்த்தள
ஸ்டேஷன்களும் அடங்கும். தினமும் 2700 ட்ரிப்புகள் காலை
6 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படுகிறது. இந்த
ரயிலானது 25 கி.வாட்,50 ac ஆற்றலால் இயக்கப்படுகிறது.


               மூன்று முக்கிய லைன்களில் சிவப்பு லைன்
(தில்ஷத் கார்டன் முதல் ரிதலா வரை இயக்கப்படுகிறது)
2002லும், மஞ்சள் லைன் (ஜஹாங்கீர்புரி முதல் ஹூடா
சிட்டி சென்டர் வரை) 2004லும், நீல லைன் (துவாரகா
செக்டர்-21 முதல் ஆனந்த் விஹார்/ நொய்டா சிட்டி சென்டர்
வரை) 2005லும் செயல்படத்துவங்கியது. மேலும் கிளை
லைன் களாக பச்சை லைன் 2009லும் வயலட் லைன்
2010லும் ஆரஞ்சு லைன் 2011லும் செயல்படத்
துவங்கியுள்ளது.

              பாதுகாப்பு, வசதிகள், நேரந்தவறாமை, தூய்மை
மற்றும் பயணிகளின் திருப்தி போன்றவற்றில் டெல்லி
மெட்ரோவே உலகத்தரத்தில் உள்ளது. மெட்ரோவில்
பணிபுரியும் ஊழியர்களும் பொதுமக்களுக்கு உதவும்
வகையில் அன்பாகவும் மரியாதையாகவும்
நடந்துகொள்கின்றனர். படிக்காத பாமர மக்களுக்கு
இன்முகத்துடன் வழிகாட்டுகின்றனர். இந்தியாவிலேயே
முதன்முறையாகதானியங்கி டோக்கன் டிக்கட் சிஸ்டம்
அறிமுகப்பட்டுள்ளது. இந்த டோக்கன் முறையால் கூட்டம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

            ஸ்மார்ட் கார்ட் முறையாலும் மூன்று நிமிட
நிறுத்தத்தினாலும்  மெட்ரோ பயணம் இனிமையாக
அமைகிறது. ரயில் நிலையம் மற்றும் ரயிலின் பெட்டிகள்
முழுவதும் ஏசி செய்யப்பட்டிருக்கிறது. பெட்டியில் ஏறும்
வழியும் இறங்கும் வழியும் தானியங்கி மடிப்புக் கதவின்
மூலம் எளிதாகவும் விரைவாகவும் நடக்கிறது. அவசர
உதவிக்கு ரயில் ஓட்டுநரை நேரடியாக தொடர்பு
கொள்ளவும் வசதி உள்ளது.

             ரயில் வந்ததும் பெட்டிக்குள் ஏறுபவர்களுக்கு தனி
லைனும் இறங்குபவர்களுக்கு தனி லைனும்
வரையப்பட்டுள்ளது. அதன்படி வரிசையில் நின்றே ஏற
வேண்டும். இதனால் ஒழுங்குமுறை கடைபிடிக்கப்படுகிறது.
கூட்டமாக இருக்கும் சமயங்களில் முதியவர்களுக்கும்
பெண்களுக்கும் இடம் தருவதற்கு அறிவுறுத்தப்படுகிறது.
ரயிலில் ஏறியதும் ஒவ்வொரு நிறுத்தத்தின் பெயரும்
ரயிலினுள்ளே ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்படுகிறது.
மேலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளே மானிட்டரில்
ஓடுகிறது. எந்தப் பக்கம் இறங்க வேண்டும் என்பதையும்
அறிவிப்பு செய்கிறார்கள். பெட்டியின் உள்ளே இரண்டு
பக்கங்களிலும் அந்த ரயில் நிற்கும் நிறுத்தங்களின்
வரைபடமும் வரையப்பட்டிருக்கிறது.

               மெட்ரோ நிலையத்தில் எஸ்கலேட்டர்களின்
எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் விரைவாக செல்ல
முடிகிறது. மெட்ரோ ரயில் டெல்லி மக்களின் போக்குவரத்திற்கு
கிடைத்துள்ள ஒரு மைல் கல். விரைவான போக்குவரத்தால்
நேரமும் மிச்சமாகிறது. போக்குவரத்து நெரிசலும் கட்டுக்குள்
உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு குறைகிறது. தற்போது சென்னையிலும் பெங்களூருவிலும் மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் டெல்லி மெட்ரோ
ரயில் திட்டமே ஒரு முன்னோடியாக செயல்படுகிறது எனலாம்.

                     கடந்த ஜூன் 3 ஆம் தேதி, தில்லியில் இருந்து
வெளியான, முதல் தினமணி  நாளிதழின் சிறப்பு மலரில் இந்தக்
கட்டுரை வெளியானது. இக்கட்டுரையை வெளியிட்ட தினமணி
நாளிதழுக்கு மிக்க நன்றி.
Related Posts with Thumbnails