தேவை... ரயிலில் போதிய மருத்துவ வசதி...

புதன், டிசம்பர் 29, 2010

                                                           
                 இது நடந்தது 2007 பிப்ரவரியில். நானும் என் 
அப்பாவும் எனது ஊரிலிருந்து சென்னைக்குச் சென்று 
கொண்டிருந்தோம். பின் அங்கிருந்து நான் ஹைதராபாத்தில் 
ஒரு இன்டர்வியூவுக்குச் செல்வதாக இருந்தது. எனக்கு சிறு 
வயதிலிருந்தே வீசிங் தொல்லை உண்டு. அன்றும் அந்த 
தொல்லையால் ஊரிலேயே டாக்டரிடம் காண்பித்துவிட்டு 
இன்டர்வியூ கண்டிப்பாக அட்டென்ட் பண்ண வேண்டுமென 
அன்றிரவே சென்னைக்குச் சென்று கொண்டிருந்தோம். 
நள்ளிரவில் திடீரென எனக்கு வீசிங் அதிகமாகியது. மற்ற 
பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பாவுக்கு 
என்ன செய்வதென்று தெரியவில்லை. கடுமையான மூச்சுத் 
திணறலுடன் இருந்த என்னைத் தனியாக விட்டுப் போக 
மனமின்றி, ரயிலில் உள்ள டாக்டரை ஒவ்வொரு பெட்டியாகத்
தேடிப் போனார். ரயிலில் டாக்டர் இல்லை. 
               பின் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. அப்பா 
அந்த ஸ்டேஷனில் இறங்கி ரயில்வே டாக்டரை அழைத்து வர 
ஓடினார். அங்கும் எவரும் இல்லை. ஸ்டேஷனில் அனைவரும் 
உறங்கிக் கொண்டிருந்தனர். ரயிலும் கிளம்பி விட்டது. எனவே 
அப்பா வண்டியில் ஏறி விட்டார். ஒரு வழியாக உயிரைக் 
கையில் பிடித்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன். பின்னர் 
சித்தப்பாவின் உதவியால் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை 
எடுத்துவிட்டு அன்றிரவே ஹைதராபாத் இன்டர்வியூவுக்குச் 
சென்றேன். என்னால் அந்த இரவுப் பயணத்தை முழுவதுமாக 
மறக்க முடியவில்லை.
               என் நிலைமை வயதானவர்களுக்கு நடந்திருந்தால் 
எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட 
பார்க்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து , நடிகரும் ,செய்தி
வாசிப்பாளருமான திரு. வரதராஜன் அவர்களின் பேட்டியை ஒரு 
பத்திரிகையில்  படித்தேன். கிட்டத்தட்ட இதே நிலையில், 
ரயிலில் போதிய மருத்துவ வசதி இல்லாமல், அவரது 
மனைவியை இழந்ததை அறிந்தேன். மிகவும் வருத்தமாக 
இருந்தது.
             இது நடந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகப் 
போகிறது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால்,
போன மாதம் கூட, என் அப்பா சென்னைக்கு சென்று 
கொண்டிருக்கும் போது இதே போல,ரயிலில் நெஞ்சு 
வலியால் கஷ்டப்பட்டிருக்கிறார். அப்போதும் ரயிலில்
மருத்துவர் யாரும் இல்லை. நாம் தேடும்போது, டிக்கட் 
பரிசோதகர் கூட இருப்பதில்லை. சிறிது நேரத்தில், வலி 
தானாகவே சரியானதால் பெரிதாகப் பிரச்சனை இல்லை 
அப்பாவுக்கு. இதே ஹார்ட் அட்டாக் போல, பெரியதாக 
ஏதும் இருந்திருந்தால் , நினைத்துக் கூடப் பார்க்க 
முடியவில்லை.
              ரயிலில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு டிக்கட் 
பரிசோதகர் இருக்கிறார். சில நேரங்களில்தான் அவர்கள் 
அந்தப் பெட்டியிலேயே தங்குகின்றனர். இந்த நிலை மாறி, 
அவர்கள் கண்டிப்பாக பெட்டியில்தான் இருக்க வேண்டும்.
அதே போல சில பெட்டிகளில்தான் போலீசும் இருக்கின்றனர்.
ஒவ்வொரு பெட்டியிலும் இருந்தால் தானே மக்கள் 
பாதுகாப்புடன் பயணிக்க முடியும்? கண்டிப்பாக ஒவ்வொரு 
பெட்டிக்கும் ஒரு மருத்துவரும், ஒரு முதலுதவிப்
பெட்டியும் அவசியம் தேவை.
            முன்பெல்லாம் ரயில் டிக்கெட் எடுக்கும்போதே  
டிக்கெட் எடுக்கும் பார்மில், மருத்துவராக இருந்தால்,
மருத்துவர் என்று குறிப்பிட வேண்டும். அப்படியாவது,
ரயிலில் ஒன்றிரண்டு மருத்துவர்கள், ஏதாவது ஒரு 
பெட்டியிலாவது இருந்தனர். இப்போது அதுவும் இல்லை.   
               வருடா வருடம் ரயில்வே பட்ஜெட்டில் பல புதிய 
திட்டங்கள் அறிமுகமாகின்றன; வசதிகள் 
மேம்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்றும் ரயில்களில் 
போதிய மருத்துவ வசதிகள் இல்லை.  கால் ஊனமுற்றவர்கள் 
மிகவும் கஷ்டப்பட்டுதான் இன்னமும் ரயிலில் ஏறுகிறார்கள். 
என்று மாறும் இந்த நிலை?

ஸ்ரீவில்லிபுத்தூர்-ஆண்டாள் திருத்தேர்

சனி, டிசம்பர் 25, 2010


              தமிழக அரசின் சின்னமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயில் குறித்து அறிந்தவர்களுக்கு,
தமிழகத்திலேயே திருவாரூர் தேரை அடுத்து, இரண்டாவது
பெரிய தேர் இக்கோயிலுக்கு சொந்தமானது என்ற விவரம்
நிச்சயம் ஆச்சரியத்தைத் தரும்.
              இத்தேர் பல நூறு ஆண்டுகளுக்கு முன், நாங்குநேரி
மடம் பரமஹம்ச பட்டர் பிரான் ராமானுஜ ஜீயர் சுவாமிகளால்
உபயமாக வழங்கப்பட்டது. தேர் முழுவதும் தேக்கு, கோங்கு
போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டது என்பதால்
இன்றளவும் உறுதியாக இருக்கிறது.
            இதன் விசேஷம் என்னவென்றால், ராமாயண, மகாபாரத
கதைகளைக் குறிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடியவமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,500 டன் எடையும், 112அடி
உயரமும் கொண்ட இத்தேரின் சக்கரம் முன்பு மரத்தால்
செய்யப்பட்டு இருந்தது. இதனால் தேரை நிலைக்குக் கொண்டு
வர பல மாதங்களாகும். தேரை இழுப்பதற்கு பக்கத்து ஊர்களில்
இருந்து எல்லாம் ஆட்களைத் திரட்டிக் கொண்டு வருவார்கள்.
இந்தத்தேரின் உச்சியில் இருக்கும் கொடி, பக்கத்து
ஊர்களிலிருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியுமாம்.
              திருச்சி 'பெல்' நிறுவனம் 1986ல் இரும்பு சக்கரங்களைப்
பொருத்தியது. இதன் பிறகு, புல்டோசரின் உதவியாலும் முன்று
மணி நேரத்தில் தேர் நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. மேலும்
சிகப்பு நிறத் துணியால் ஆன அடுக்குகளும் குறைந்து இப்போது
மூன்று அடுக்குகளே உள்ளன.
               இவ்வாறு பல பெருமைகளை உடைய ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயிலின் தேர், ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம்,
ஆடிப்பூரத்தன்று இழுக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - வரலாறு

வியாழன், டிசம்பர் 23, 2010

             
              எனது ஊரான  ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன்
ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த
ஊராதலால், 'ஸ்ரீ' என்னும் திருநாமத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூர்
என்றும் அழைக்கப்படுவதாக, பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன்.
ஆனால் எனக்குத் தெரியாத விஷயங்களை சமீபத்தில் நாளிதழில்
படித்தேன்.
            மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம்,
ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த 'நெற்கட்டுச் செவ்வல்'
பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, ஸ்ரீவில்லிபுத்தூரில்
முகாமிட்டார். 1756 மே 6 -ல் நடந்த போரில் அவரை வெல்ல
இயலாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார்.
பின், அதை தரைமட்டமாக்கினார். இப்போது எந்தத் தடயமும்
இல்லாத அந்த இடம் 'கோட்டைத்தலைவாசல்'
என்றழைக்கப்படுகிறது. (அந்த இடம் முழுவதும் இப்போது
வீடுகளாகி, கோட்டைத்தலைவாசல் தெருவாக மாறிவிட்டது.
இந்தத் தெருவில்தான் நாங்கள் 18 வருடங்கள் இருந்தோம். எனது
பள்ளி வாழ்க்கை முழுவதும் இங்குதான் கழிந்தது. ஆனால் அந்தத்
தெருவிற்கான வரலாறு இப்போதுதான் தெரிந்தது.)
              மதுரைக்கும் நெல்லைக்கும் நடுவில் ஸ்ரீவில்லிபுத்தூர்
கோட்டை இருந்ததால், ஆங்கிலேயர் ஆட்சியில் 'நடுமண்டலம்'
என்றழைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ராணுவ தளவாடமாகவும்
இருந்தது.
              ஸ்ரீவில்லிபுத்தூர் பெயர் காரணத்திற்கு புராணங்கள்
உண்டு. சாபத்திற்கு ஆளான வில்லி, கந்தன் என்ற இரு
முனிவர்கள், வேடர்களாக பிறந்து வளர்ந்தனர். ஒருநாள்
கந்தனை புலி அடித்துக் கொன்றது. சகோதரரைத் தேடி வில்லி
அலைந்தார். அன்றிரவு அவரது கனவில் கந்தன் தோன்றி, தான்
இறந்த செய்தியைத் தெரிவித்தார்.பின், கந்தன் இறந்த இடத்தை
சுத்தம் செய்து ஒரு நகரமாக மாற்றியதுதான், ஸ்ரீவில்லிபுத்தூர்
என்கின்றனர்.
              ஆண்டாள் கோயில் கி.பி. 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள
நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின்
தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -966 ) கல்வெட்டில்,
இக்கோயில் 'ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்'
என்றழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
             சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 -
1120 ) ஆட்சியில் இந்த ஊர், 'விக்கிரமசோழ சதுர்வேதி
மங்கலம்' என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர்
கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி
கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பின்,
கி.பி.13 ம் நூற்றாண்டில் இந்த ஊர், 'பிரம்மதேய குலசேகர
சதுர்வேதி மங்கலம்' என்ற பெரிய நகரமாக பிற்கால
பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. கோயிலைச் சுற்றி
கோட்டைச்சுவர் கட்ட ஸ்ரீவல்லபபாண்டியன் பொற்கிழி வழங்கி
உள்ளார்.
            புனர்வேலி என்ற ஊரைச் சேர்ந்த சங்கரன்முறி அருளக்கி
என்பவர் பாராங்குசபுத்தூர் குளத்தை சீர்படுத்தி,  வடக்குப் பகுதி
மதகை புதுப்பித்ததாக இங்கு ஆய்வு செய்த தொல்லியல்
நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த மதகை இப்போதும்
ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் காணலாம்.
             ஆண்டாள் கோயில் பல காலகட்டங்களில், பலரால்
புதுப்பிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டது. மதுரையை ஆண்ட
திருமலைநாயக்கர், குற்றாலத்திற்கு செல்லும் வழியில், இங்கு
தங்குவதற்கு ஒரு மாளிகை கட்டினார். பின்னர் அந்தக்கட்டடம்
கோர்ட் அலுவலமாக இருந்தது. தற்போது அதை நினைவுச்
சின்னமாக்க முயன்று வருகின்றனர்.             இக்கோயிலின் சிறப்பம்சமான 192 அடி உயர
ராஜகோபுரம் கி.பி.17ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. தமிழக
அரசின் முத்திரை சின்னமாக இருப்பதும் இக்கோபுரம்தான்.
புராணம், வரலாறுகளைத் தாங்கி நிற்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழகத்தின் கிரீடத்தில் வைரமாக ஜொலிக்கிறது.

சிறுவயது மழைக்காலம்

திங்கள், டிசம்பர் 20, 2010             
               எல்லா ஊர்களிலும் பரவலாக மழைபெய்து
இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்!
சின்னவயதில், இதுபோல மழையையும், தண்ணீரையும்
பார்க்கும்போது ஒரே குதூகலமாக இருக்கும்.
   
            சைக்கிளில் அப்பாவுடன் போகும் போது,  மழைநீரால்
தண்ணீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில், பள்ளம் என்று
தெரியாமல், ' தண்ணிக்குள்ள சைக்கிளை ஓட்டுங்கப்பா' என்று
ஒவ்வொரு தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தைப் பார்த்தும்
சொல்லுவேன். உடனே அப்பா, 'அது பள்ளம். சைக்கிளை அதுல
விட்டால் விழுந்துடுவோம்' என சொல்வாங்க. அப்பா என்னை
ஏமாற்றுவதற்காக அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்து நான்
அழுவேன். அதுதான் நிஜம் என்று அப்போது தெரியாது.
அப்புறமாக நான் சைக்கிளில் போகும்நாட்களில்,  இதுபோல
ஆசைப்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளத்தில் சைக்கிளை
ஓட்டி, கீழே விழுந்த பிறகுதான் தெரிய வந்தது.

             மழை நாட்களில் ஸ்கூலுக்கு குடை எடுத்துச் செல்வதும்,
மழைபெய்தால் குடைபிடித்துக் கொண்டு வருவதும் அவ்வளவு
ஆனந்தமாக இருக்கும். பெரிய மழை பெய்தால், ஸ்கூல் லீவாக
இருக்கும். ஸ்கூல் லீவு என ஒருபக்கம் சந்தோஷமாக
இருந்தாலும்,  மழையில் குடைபிடித்துக் கொண்டு போக
முடியவில்லையே எனவும், அம்மாவுக்குத் தெரியாமல்,
குடையை விலக்கிவிட்டு மழையில் நனைவதும்,  மழை நீரில்
கால் நனைத்துக் கொண்டு நடப்பதும் முடியவில்லையே எனவும்
வருத்தமாக இருக்கும்.

               அப்படி ஸ்கூல் லீவு என வீட்டில் இருக்கும்
போதெல்லாம், அம்மா எங்காவது வெளியில் கடைக்குப் போகச்
சொல்லமாட்டார்களா, விளையாட செல்லமாட்டோமா என்று
இருக்கும். மழை விட்டபிறகும் சாலையில் போகும் தண்ணீரில்
நடக்கப் பிடிக்கும். ஆனால் அதற்கும் கூட, கழிவுநீர் என
அனுமதிக்க மாட்டார்கள். எனவே, வீட்டிலேயே
ஜன்னலோரத்தில் உட்கார்ந்து, வேடிக்கைப் பார்த்துக்கொண்டு
இருப்பேன். அதுவும் ஒருவகையில் சந்தோஷமாகத்தான்
இருக்கும். அந்த வயதில், மழையை ரசிக்கத் தெரியாது. ஆனால்,
மழையைப் பார்க்க, நனைய பிடித்திருந்தது. இப்போது
அதேபோல, ஒரு மழைநாளில், வீட்டினுள் இருந்து மழையைப்
பார்த்துக்கொண்டிருக்கும் போது, இந்த ஞாபகங்கள் எல்லாம்
வந்தது. 'இப்படியெல்லாம் சின்னவயதில் அற்பமாக
ஆசைப்பட்டிருக்கிறோமே?' என்று நினைத்து சிரிப்புதான் வந்தது.


காதல்...

ஞாயிறு, டிசம்பர் 12, 2010


                எனக்கு மெயிலில் வந்த கதை இது.  ஒரு
ரெஸ்ட்டாரண்ட்டில் தன் எதிரில் வந்து அமர்ந்தவளின்
அழகில் மயங்கினான் அவன்.இதயம் துடிக்க,
கைகால்கள் படபடக்க.. உணர்ச்சிமயமாக இருந்தவனுக்கு..
பேச்சும் வரவில்லை.சர்வரை அழைத்து, 'காபிக்கு
கொஞ்சம் சர்க்கரை கொண்டு வா' என்று சொல்ல
நினைத்தவன், நாக்கு குழறி, " காபிக்கு கொஞ்சம் உப்பு
கொண்டு வா'  என்றான். சர்வர் இதைக் கேட்டு
திகைத்தார்.

              வார்த்தை தவறியது மறுவிநாடியே அவனுக்குப்
புரிந்துவிட்டது என்றாலும் அழகியின் எதிரில் தன் இமேஜைக்
காப்பாற்றிக்கொள்ள, 'ஆமா.. உப்புதான் கேட்டேன். கொண்டு
வா!" என்றான் சர்வரிடம். அழகிக்கு ஆச்சரியம். " காபியில்
உப்பு போட்டு சாப்பிடுவதா?" என்று விசாரித்தாள். அவனோ,
உடனடியாக கதை ஒன்றை அவிழ்த்துவிட்டான்.

            "கடலோர மீனவ கிராமம் ஒன்றில் பிறந்தவன் நான்.
இப்ப நகரத்துல வசதியா இருந்தாலும் அப்பாவும் அம்மாவும்
அந்தக் கிராமத்தை விட்டு வரமாட்டேங்கறாங்க. அவங்க
நினைப்பும், ஊரு நினைப்பும் என்னைவிட்டுப் போயிடக்
கூடாதுங்கிறதால, காபியில உப்பு போட்டுக்கறேன்!" என்றான்.
அவனது பெற்றோர் பாசமும், ஊர் பற்றுதலும் அவளை ஈர்த்தது.
அடுத்தடுத்து அவளே வந்து வலிய சந்தித்ததில் காதல் வளர்ந்து,
கல்யாணமும் முடிந்தது.

            நாற்பது ஆண்டு கால குடும்பவாழ்க்கைக்குப் பிறகு,
ஒருநாள் அவன் இறந்துவிட, அவனது பெட்டியில் ஒரு
கடிதத்தைக் கண்டாள் அவள்."ஸாரி டார்லிங்! ஒரு பொய்
சொல்லிட்டேன். நமது முதல் சந்திப்பின் போது, காபிக்கு
நான் உப்பு கேட்டது என் உளறல். சொன்ன சொல்லைக்
காப்பாற்ற வாழ்க்கை முழுக்க நான் காபியில் உப்பு
சேர்த்துக்கொண்டாலும்..அன்று சொன்ன பொய் என்னை
நெருடுகிறது...!"

பின் குறிப்பு : "நீ மட்டும் கிடைப்பதாக இருந்தால் அடுத்த
ஜென்மத்திலும் உப்பு காபி சாப்பிட நான் தயார்!"

            வேறொரு நாள்... அவள் காபியில் உப்பு சேர்த்துக்
கொண்ட போது, " உப்புக் கரிக்கலையா?" என்று கேட்டார் ஒருவர்.
"இனிப்பாக இருக்கிறது!" என்றாள் அவள்.

இவ்வாறாக முடிகிறது கதை. சுவை என்பது நாக்கில்
மட்டுமல்ல... மனதிலும் இருக்கிறது என்பதுதான் இந்தக்
கதையின் நீதியாக சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படியும் காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது....

நாகர்கோவில் -IV

ஞாயிறு, டிசம்பர் 05, 2010

மண்டைக்காடு               அடுத்து மண்டைக்காடு கோவிலுக்கு நாங்கள்
செல்லும்போது மழை பெய்யத்தொடங்கியது. நல்ல
வேளையாக கோவிலை அடையும்போது மழைவிட்டு
விட்டது. மண்டைக்காடு, நாகர்கோவிலில் இருந்து 22கி.மீ
தொலைவில் உள்ளது. இந்தக் கோவில் கி.பி.7ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு 12அடி உயரமும்,
ஐந்து கரங்களும் உடைய பகவதி அம்மன் சிலை உள்ளது.
இச்சிலை மேலும் மேலும் வளருவதாக நம்பப்படுகிறது.
மண்டைக்காடு கோவில் பெண்களின் சபரிமலை எனவும்
அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு கேரளாவிலிருந்தும்
மக்கள் பலர் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மார்ச்
மாதம், கேரளாவில் உள்ள ஆற்றிங்கால் பகவதி அம்மன்
கோவில் பொங்கல் திருவிழா முடிவடைந்ததும், இங்கு
பொங்கல் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அப்போது லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர்.
இந்தக் கோவில் கடற்புரத்தில் அமைந்துள்ளது. நாங்கள்
கோவிலுக்குப் போனபோது இருட்டிவிட்டதால் கடற்கரைக்குச்
செல்ல முடியவில்லை. மற்ற இடங்களை விட இங்கு கடலில்,
அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருக்குமாம்.

வெள்ளிமலை

             கடைசியாக நாங்கள் சென்றது வெள்ளிமலை. இது
நாகர்கோவிலிலிருந்து 7கிமீ தொலைவில் உள்ளது. இந்த 200அடி
உயர வெள்ளிமலையின் உச்சியில்  'பாலசுப்பிரமணிய சுவாமி'
திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில்
நந்திப்பாதமும், முருகப்பாதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆனால் நாங்கள் அதை பார்க்கவில்லை. மேலும் இந்த மலையின்
உச்சியிலிருந்து  பார்த்தால், வடக்குப்பக்கம் பச்சைப்பசேலென
மரங்களும், தெற்குப்பக்கம் கடலும் கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும். முருகனின் விசேஷ நாட்களான கந்த சஷ்டி, வைகாசி
விசாகம், தைப்பூசம் போன்ற எல்லா நாட்களும் இங்கு
விசேஷமாக உள்ளன. மேலும் ஒவ்வொரு தமிழ்மாதம் கடைசி
வெள்ளிக்கிழமை இங்கு சிறப்பாக உள்ளது. இந்தக் கோவிலிலும்
பிரசாதமாக கஞ்சி கொடுக்கப்படுகிறது.

இந்தமுறை, இதனுடன் நாகர்கோவில் பயணம் முடிந்தது.
அடுத்தமுறை வேறு சில இடங்களுக்குச் சென்று அவற்றைப்
பற்றி எழுதுகிறேன்.

நாகர்கோவில் - III

சனி, நவம்பர் 27, 2010

தொட்டிப்பாலம் 
            திருவட்டாறுக்கு அடுத்ததாக, அதற்கு அருகில், 3கிமீ
தூரத்தில், மாத்தூரிலுள்ள தொட்டிப்பாலத்திற்கு சென்றோம்.
இந்தத் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிக நீளமான
மற்றும் உயரமான பாலமான இது பரழியாறுக்குக் குறுக்கே
உள்ளது. பாலம் என்பது பெரும்பாலும் ஆற்றின் அல்லது
ஏதாவது ஒரு நீர்நிலையின் இருகரைகளை இணைப்பதாக
இருக்கும்;  பாலத்துக்கு மேலே நிலவழிப்போக்குவரத்தும்,
பாலத்துக்கு அடியில் நீரோட்டமும் இருக்கும். ஆனால் இந்தத்
தொட்டிப்பாலத்தில், ஒரு கால்வாயாக நீர் செல்கிறது. இது ஒரு
பெரிய அதிசயமாக எனக்குத் தெரிந்தது.  இது 115 அடி உயரமும்,
ஒரு கிமீ தூரமுமாக இரண்டு மலைகளுக்கு இடையில்
கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை மொத்தம் 28 பெரிய தூண்கள்
தாங்கியுள்ளன. 1966ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர்
திரு. காமராசர் அவர்களால் இந்தத் தொட்டிப்பாலம் கட்டப்பட்டு
இருக்கிறது. ஒருவர் பின் ஒருவராகத்தான் இந்தப் பாலத்தில்
போக முடிகிறது. அதிக எடையுள்ள மூட்டையைத் தூக்கிக்
கொண்டு, ஒருவர் மிக வேகமாக இதில் நடந்து சாதனை
செய்ததாக கூறப்படுகிறது. தொட்டிப்பாலத்திற்கு கீழிருந்து மேல்
வரை படிக்கட்டுகள் போடப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்கள்
விளையாட ஒரு பூங்காவும் இருக்கிறது. இது சிறந்த சுற்றுலாத்
தலமாகவும், படப்பிடிப்பு இடமாகவும் உள்ளது.

திற்பரப்பு
             மாத்தூருக்கு அடுத்ததாக, சென்ற இடம் திற்பரப்பு
நீர்வீழ்ச்சி. இந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர்
விழுந்து கொண்டே இருக்குமாம். நாங்கள் சென்ற சமயம்
மழை பெய்து கொண்டிருந்ததால், அருவியில் நிறைய
தண்ணீர் வரத்து இருந்தது. குளிக்கும்போது இருந்ததைவிட,
குளித்து முடித்து வெளியேறும் போது  மிக அதிகமாக
தண்ணீர் விழுந்தது. கோதையாறு என்ற ஆறுதான் திற்பரப்பு
அருவியாக விழுகிறது. அருவியின் மேலே இந்த ஆறு
சமதளத்தில் ஓடிவருகிறது. அங்கு ஒரு யானையைக்
குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அதை வேடிக்கைப் பார்ப்பது
நன்றாக இருந்தது. இங்கு ஒரு சிவாலயம் உள்ளது. மேலும் ஒரு
சிறுவர் பூங்காவும் உள்ளது. இதுவும் ஒரு சிறந்த சுற்றுலாத்
தலமாகவும், படப்பிடிப்பு இடமாகவும் உள்ளது.

நாகர்கோவில் - II

சனி, நவம்பர் 20, 2010

மேலங்கோடு

 
              மேலங்கோடு என்கிற இடத்திற்கு அடுத்ததாக
சென்றோம். இது குமாரகோவிலில் இருந்து ஒரு கி.மீ
தொலைவில் உள்ளது. இங்கு ஒரு சிவன் கோவில்
உள்ளது. இது 12 சிவாலயங்களில் எட்டாவது சிவாலயம்
ஆகும். இந்தக் கோவிலில் மாதாமாதம் சிவராத்திரியன்று
கூட்டம் நிறைந்து காணப்படும்.மேலும் இங்கு இசக்கி
அம்மன்களான அக்கா, தங்கச்சி கோயில்கள் உள்ளன.
இரண்டு இசக்கியம்மன் கோயில்கள், சிவன்கோயில் என
மூன்று சந்நிதிகள் ஒரே இடத்தில் தனித்தனி கோயில்களாக
உள்ளது. அந்த இரண்டு அம்மன் கோவில்களில், ஒரு கோவில்
அக்காவினுடைய கோவிலாம். மற்றொன்று
தங்கையினுடையதாம். அக்கா அம்மன் பெயர் செண்பகவல்லி
அம்மன். தங்கை அம்மன் பெயர் நீலாவதியம்மன். போனால்
அந்த இரண்டு கோவில்களுக்கும் போக வேண்டுமாம். ஒரு
கோவிலுக்குப் போய்விட்டு  மற்றொரு கோவிலுக்குப் போகாமல்
வரக்கூடாது என்று சொல்கிறார்கள். அதிலும் அக்காக்
கோவிலுக்குத்தான் முதலில் போய்விட்டு, பின்னர்தான் தங்கைக்
கோவிலுக்குப் போகவேண்டுமாம். அக்காவான செண்பகவல்லி
அம்மன் சாதுவான அம்மன் என்றும், தங்கையான நீலாவதி
அம்மன் ஆக்ரோஷமான அம்மன் என்றும் சொல்லப்படுகிறது.


 திருவட்டாறு             அடுத்தது திருவட்டாறு. இங்கு உள்ள கோவில்
ஆதிகேசவப்பெருமாள் கோவில். இது 108 வைணவத்
தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தக் கோவில்
தரையிலிருந்து 55அடி உயரத்தில் அமைந்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து 30 கிமீ தொலைவில் இந்தத்
திருவட்டாறு உள்ளது. இந்தக் கோவில் கோதை, பரளி
மற்றும் தாமிரபரணி என்ற மூன்று ஆறுகளால்
சூழப்பட்டுள்ளது. பரளியாறு இந்த இடத்தைச் சுற்றி ஓடுவதால்,
'வட்டாறு' என்றும், ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளதால்
'திருவட்டாறு' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில்
திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவிலை ஒத்துள்ளது.
மேலும் இந்தக் கோவில் பத்மனாப சுவாமி கோவிலை விடப்
பழமையானது. பத்மனாப சுவாமி சிலையும் ஆதிகேசவப்
பெருமாள் சுவாமியின் சிலையும் ஆதிசேஷனான பாம்பின்
மேல் சயன நிலையில், ஆனால் எதிரெதிர் திசையில்
அமைந்துள்ளது. அதாவது பத்மனாப சுவாமி சிலை சயன
நிலையில் கிழக்கு நோக்கியும், பத்மனாப சுவாமி சிலை சயன
நிலையில் மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இந்த
ஆதிகேசவப் பெருமாள் சிலை கல்லால் ஆன சிலையல்ல.
கருப்பட்டி,எள் மற்றும் பல பொருட்களால் செய்யப்பட்டது.
அதேபோல நாம் சுவாமியை மூன்று வாசல் மூலமாக, தலை
பாகம், உடல் பாகம் மற்றும் கால் பாகமாகத்தான் தரிசிக்க முடியும்.
                நாங்கள் கோவிலுக்குப் போன சமயம் 'ஷீவேலி'
என்ற பூஜை நடந்துகொண்டிருந்தது. அதனால் நடை
சாத்தப்பட்டிருந்தது. இந்தப் பூஜையின் போது, பெருமாளைத்
தூக்கிக் கொண்டு ஒருவர் பிரகாரத்தைச் சுற்றிவர,
மற்றொருவர் பிரகாரத்தைச் சுற்றியுள்ள பலிபீடங்களில்
மந்திரத்தைச் சொல்லி, சாதத்தாலும், பூவாலும் அர்ச்சனை
செய்தார். இது முடிந்த பிறகே சுவாமியைத் தரிசிக்க முடிந்தது.
இப்பூஜை தினமும் மதியம் 12 அல்லது 1 மணிக்கு நடக்குமாம்.
இங்கு ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் மிகவும்
சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மேலும் இங்குள்ள உதய
மார்த்தாண்ட மண்டபத்தில் கல்யாணகோலத்தில் உள்ள
வினாயகர் சிற்பமும், வெவ்வேறு கோலத்தில் உள்ள 222
பாவைவிளக்குகளும், பாற்கடலைக் கடையும் தேவர்கள்
மற்றும் அசுரர்கள் சிற்பமும் மிகச்சிறப்பு வாய்ந்ததாக
இருக்கிறது. பங்குனி உத்சவம் அன்று தங்கக் கருடன்
வாகனத்தில் சுவாமி ஆற்றில் இறங்குவது மிகச் சிறப்பாக
இருக்குமாம் .பால் பாயசமும், அவல் மற்றும் அப்பமும் இங்கு
பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நாகர்கோவில் - I

புதன், நவம்பர் 17, 2010

               நாகர்கோவிலுக்கு போனபோது நாகர்கோவிலிலும்
அதைச் சுற்றியும் சில இடங்களுக்குச் சென்றோம்.

கிருஷ்ணன்கோவில்
              முதலில் நாங்கள் சென்ற இடம் கிருஷ்ணன்கோவில்.
இந்தக் கோவில் நாகர்கோவிலில், ஊருக்குள்ளேயே உள்ளது.
 நாகர்கோவிலில் நாகராஜா கோவில்தான் மிகவும் பிரசித்தி
பெற்ற கோவில். அதனால் இந்தக் கோவிலைப் பற்றி
பலபேருக்குத் தெரியவில்லை. இந்தக் கிருஷ்ணன்கோவிலில்
உள்ள மூலவர் பாலகிருஷ்ணர். குழந்தை வடிவிலான இவர்
தோற்றத்திலும் மிகச் சிறிய சிலையாக உள்ளார். இந்தச் சிலை
கேரளாவிலுள்ள குருவாயூரப்பனை ஒத்துள்ளது.

 மேலும் இந்தக் கோவிலும் குருவாயூர் கோவிலின் சிறிய
வடிவமாகும். குருவாயூர் கோவிலைப் போன்றே சிறிய
வடிவில் கட்டப்பட்டுள்ளது. கேரளா குருவாயூருக்கு செல்ல
முடியாதவர்கள், கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரும்புபவர்கள்,
இந்தக் கோவிலுக்கு வந்து குட்டிக் கிருஷ்ணனை தரிசிக்கலாம்.

குமாரகோவில் 
அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் குமாரகோவில்.
இக்கோவில் 200 அடி உயரமான ஒரு மலையின் மேல்
கட்டப்பட்டுள்ளது.


               இந்தக் குமாரகோவில் கன்னியாகுமரியில் இருந்து
34 கிமீ தொலைவில் பத்மநாபபுரம் என்ற ஊரில் உள்ளது.
இங்குதான் முருகன் வள்ளியை மணந்ததாகக் கூறப்படுகிறது.
அதனால் இந்தமலை 'வேளிமலை' , 'மணமலை',
'கல்யாண மலை' என்றெல்லாம் கூறப்படுகிறது. முருகனும்
வள்ளியும் தான் இங்கு மூல விக்கிரகங்கள்.  வள்ளியை மணந்த
முருகன்ஆதலால் இங்குள்ள முருகனுக்கு 'மணவாள குமரன்'
என்று பெயர். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி திருவிழாவிற்கு
இந்த  மணவாள குமரன், பத்மநாபபுர அரண்மனையிலுள்ள
சரஸ்வதிமற்றும் பகவதி அம்மனுடன் திருவனந்தபுரத்திற்கு
எடுத்துச் செல்லப்படுகிறார். மேலும் வருடாவருடம் மார்கழி
மாதம், நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள சுசீந்திரம் கோவில்
திருவிழாவிற்கும் இந்த மணவாள முருகன் கொண்டு
செல்லப்படுகிறார். அங்கு திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.

 
            இந்தக் குமாரகோவில்  முருகனும், நாகர்கோவிலைச்
சுற்றியுள்ள ஊர்களான, மருங்கூர் என்கிற ஊரிலுள்ள முருகனும்,
கோட்டார் என்கிற ஊரிலுள்ள பிள்ளையாரும் சேர்ந்து அந்த 10
நாட்கள் திருவிழாவுக்கு சுசீந்திரம் சிவன் கோவிலுக்கு கொண்டு
செல்லப்படுகிறார்கள்.  இந்த மூன்று சாமிகளும் சுசீந்திரம் செல்ல
3 நாட்கள் ஆகுமாம். திருவிழா நாட்களில், தினமும் மாலையில்,
இந்த 3 சாமிகள் மற்றும் சுசீந்திரத்திலுள்ள சிவனும் பார்வதியும்
சேர்த்து, ஐந்து சாமிகளும் ஊர் முழுவதும் சுற்றிவரும். எட்டாவது
நாள் திருவிழா அன்று மாலை பூஜை முடிந்து,  முருகரும்,
பிள்ளையாரும், சிவன் பார்வதியிடம் பிரியாவிடை பெற்று
அவரவர் ஊருக்குத் திரும்பிவிடுவராம். இந்தப் பிரியாவிடை
காட்சி மிகவும் அருமையாக இருக்குமாம்.மேலும் எல்லா
முருகன் கோவிலிலும்  கொண்டாடப்படுகின்ற தைப்பூசம்,
கந்தசஷ்டி, வைகாசி விசாகம் போன்றவையும் இங்கு
கொண்டாடப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கது
முருகன்-வள்ளி திருமணம். ஒவ்வொரு தமிழ்மாதக்
கடைசி வெள்ளிக்கிழமையும் இங்கு விசேஷமாக
உள்ளது. இங்கு பிரசாதமாக கஞ்சி கொடுக்கப்படுகிறது.

இடைவெளி...

திங்கள், நவம்பர் 15, 2010


               இந்த வருடம் தீபாவளிப் பண்டிகையை எனது
கணவருடன் அவரது சொந்த ஊரான நாகர்கோயிலில்
கொண்டாடினோம். அதனால் பத்து நாட்களாக பதிவு
எதுவும் எழுத முடியவில்லை. நாகர்கோயிலைச்
சுற்றியுள்ள நிறைய இடங்களுக்குப் போனோம்.
அங்கு நிறைய கோவில்களுக்கும் போனோம் .
அவற்றைப் பற்றி எனது அடுத்த பதிவில் எழுதறேன்.

பென்னிங்டன் நூலகம் - ஸ்ரீவில்லிபுத்தூர்

சனி, நவம்பர் 06, 2010

             எனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் 135 ஆண்டு
பழமைவாய்ந்த நூலகம் ஒன்று உள்ளது. பென்னிங்டன்
நூலகம் எனப் பெயர்பெற்ற இந்த நூலகம் தமிழகத்திலுள்ள
பெரிய நூலகங்களில் 2-வது இடத்தை வகிக்கிறது. 1875-ம்
ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த
பென்னிங்டன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம்,
அதன்பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த
சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமச்சந்திரராவ், டி. ராமஸ்வாமி
ஐயர், டி. கிருஷ்ணராவ், முத்து ஐயங்கார் மற்றும்
முத்துச்சாமி பிள்ளை ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது.


               மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், நகரில்
தர்மசிந்தனை உள்ளவர்களையும், நூலக வளர்ச்சிக்குப்
பாடுபடும் மனப் பக்குவம் கொண்டவர்களையும்
உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்களில்
துணைத்தலைவர், செயலர், பொருளாளர் கொண்ட குழு
இந்நூலகத்தை நிர்வகித்து வருகிறது. தற்போது மாவட்ட
ஆட்சியரையும் சேர்த்து 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
                இந்நூலகத்தில், 1951-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த
தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன. மேலும் இங்கு தமிழில் 27800 புத்தகங்களும்,
ஆங்கிலத்தில் 25200 புத்தகங்களும் என மொத்தம் 53000
புத்தகங்கள் உள்ளன. நூலகத்தில்  கலித்தொகை (1887),
த்ருவ சரித்திர கீர்த்தனை (1890), இங்கித மாலை மூலமும்
உரையும் (1904), தியாகராச லீலை (1905), வள்ளலார்
சாஸ்திரம் (1907), திருமந்திரம் (1912) போன்ற அரிய தமிழ்ப்
புத்தகங்கள் உள்ளன. மேலும் 'பென்னி சைக்ளோபீடியா(1833)'
என்ற மிக அரிய வகை நூல் மொத்தம் 26 பாகங்களாக இங்கு
மட்டும்தான் உள்ளது. இதுபோக பல அபூர்வமான தமிழ்
மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.

             தினசரி சராசரியாக 360 வாசகர்கள் நூலகத்துக்கு வந்து
பயனடைந்து செல்கின்றனர். நூலகத்துக்கு தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் 17 நாளிதழ்களும், மாத மற்றும் வார இதழ்கள்
தமிழில் 69-ம் வருகின்றன. ஆங்கிலத்தில் மாத மற்றும் வார
இதழ்கள் 47-ம், ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்புடைய
இதழ்கள் 46-ம் வருகின்றன. இந்த எண்ணிக்கை வருடாவருடம்
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.            1344 சதுர அடியில் சொந்தக்கட்டடத்தில் இயங்கிவரும்
இந்த நூலகத்தில், ஆங்கிலப்பிரிவும், அரிய புத்தகங்கள்
அடங்கிய பிரிவும், பழைய இலக்கியங்களைத்
தேடுபவர்களுக்கும்,போட்டித் தேர்வுக்குத் தயார்
செய்பவர்களுக்கும் மிகப்பெரும் புதையலாக உள்ளது.
வாசகர் உபயோகத்திற்காக, பழமையான அரிய புத்தகங்கள்
சிடியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நூலகத்தின் கீழ்த்தளத்தில் மாத, வாரபத்திரிக்கைகளும்,
தமிழ் நாவல்களும் வைக்கப்பட்டுள்ளன.மேல்தளத்தில்
ஆங்கிலப்புத்தகங்களும், போட்டித்தேர்வுக்கான
புத்தகங்களும், அரிய வகைப் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவுகள் உள்ளன.
            சிறுவர்களுக்கெனத் தனிப்பிரிவு அமைத்து அவர்களே
நூலகளை எடுத்துப் படிக்கும் விதத்தில் வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. மேலும். இவர்களுக்கு நல்லறிவையும்,
ஒருமைப்பாட்டினையும் வளர்க்கும் பொருட்டு வாரந்தோறும்
நீதிக்கதைகள், ஆன்மீகக்கதைகள், சுதந்திரப் போராட்டக்
காலக்கதைகள் ஆகியன தொலைக்காட்சியில் படமாகக்
காட்டப்படுகின்றன.             குடியரசுத்தலைவராக இருந்தபோது
டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் நூலகத்தைப் பார்வையிட்டு,
பார்வையாளர்கள் பதிவேட்டில் நூலகத்தின் செயல்பாடுகள்
மிக நன்றாக இருப்பதாக தன் கைப்பட எழுதியுள்ளார்.
இதுபோல, திரு.தென்கச்சி சுவாமிநாதன், திரு. வேலுக்குடி
க்ருஷ்ணன் மற்றும் பல பிரபலங்கள் இந்நூலகத்திற்கு வந்து
நூலகத்தைப் பற்றி தங்கள் கருத்துக்களை தங்கள் கைப்படப்
பதிந்துள்ளனர். மேலும், இந்த நூலகத்துக்கு உயர்நீதிமன்ற
நீதிபதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இன்றும் வருகின்றனர்.

மேலும் இந்த நூலகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள,
http://www.penningtonlibrary.com/home.aspx 

மருத்துவமனையில் ஓர் அனுபவம்

புதன், நவம்பர் 03, 2010

             "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற
இந்த பழமொழிக்கு ஏற்ற மாதிரி நம்ம  வாழ்க்கையும்
அமைந்துவிட்டால் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைக்
கேட்டால், பெயர் தெரியாத பலவித நோய்கள் பரவிக்
கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், நோயற்ற வாழ்வை
விடப்பெரிய செல்வம் வேறு இல்லை என்றே சொல்வேன்.
இப்படி நான் சொல்வதற்குக் காரணம், என் குழந்தைக்கு
உடம்பு சரியில்லாத சமயத்தில் மருத்துவமனையில் அட்மிட்
செய்யும் நிலை ஏற்பட்டது. அப்போது அது, குழந்தைகள் நல
மருத்துவமனை என்பதால், நோயுற்றப் பல குழந்தைகளைப்
பார்க்க நேரிட்டது.


              ஆறு மாதக் குழந்தை ஒன்று, வெந்நீரில் விழுந்து
விட்டதாகத் தீப்புண்களோடு தூக்கி வந்திருந்தார்கள்; டெங்கு
காய்ச்சலால் பாதிக்கப்பட்டக் குழந்தைகள்,
வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டக் குழந்தைகள் எனப் பல
குழந்தைகளை அங்கு அட்மிட் செய்திருந்தார்கள். அந்தக்
குழந்தைகள் வலியினால் துடித்து அழுவதைப் பார்க்க, ரொம்பக்
கஷ்டமாக இருந்தது. குழந்தைகள் என்ன செய்யும் பாவம்!
பெரியவர்களாலேயே இவற்றையெல்லாம் தாங்கிக்
கொள்ளமுடியாது. ஆனால் அங்குள்ள நர்ஸ்களுக்கும்,
டாக்டர்களுக்கும் இது பழகிவிட்டதால், எந்தக்
கவலையுமில்லாமல் சிகிச்சையளிக்கிறார்கள். நாம்தான்
குழந்தைக்கு வலிக்குமோ எனப் பயந்து, பயந்து செய்கிறோம்.
அவர்கள் இதை மிக எளிதாக செய்கிறார்கள்.

            
              அதுபோல, 2மாதக் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு
என அந்தக் குழந்தையின் அப்பா ஒரு அழுக்குத்துணியில்
குழந்தையைச் சுற்றி எடுத்துவந்திருந்தார். அவர்
பார்ப்பதற்கு மிகவும் ஏழ்மையான, படிப்பறிவில்லாத,
கிராமத்து மனிதர் போல இருந்தார். அந்தக் குழந்தையை
அவர்பாட்டிற்கு தரையில் படுக்க வைத்துவிட்டு
மருந்து வாங்கப்போய்விட்டார். இதனால் அந்தக்
குழந்தையை ஈ மொய்த்துக்கொண்டிருந்தது. பக்கத்தில்
அதற்குக் கொடுக்கும் பால் பாட்டிலும் மூடி இல்லாமல்
இருந்தது. அந்தப் பாட்டில் ரப்பரையும் ஈ மொய்த்துக்
கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்தக்குழந்தை அழ
ஆரம்பித்தது. உடனே அவர் வந்து, அந்த பால் பாட்டிலில்,
கொண்டு வந்திருந்த பால்பவுடரைப் போட்டு, ஒரு அழுக்கு
தண்ணீர் பாட்டிலில் தான் குடிக்க வைத்திருந்த தண்ணீரை
ஊற்றி,  பால் பாட்டிலை நன்கு குலுக்கி, அதை குழந்தையின்
வாயில் வைத்தார். அதுவும் குடித்துவிட்டு தூங்கிவிட்டது.
அவர் வைத்திருந்த பால் பாட்டிலும் சுத்தம் இல்லை;
தண்ணீர் பாட்டிலும் சுத்தம் இல்லை. பின் எப்படி அந்தக்
குழந்தைக்கு வயிற்றுப்போக்கு குணமாகும்? அங்குள்ள
நர்ஸ்களோ, இதை வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு
இருந்தார்களே தவிர, ஒருவரும் இதைப் பற்றி
அத்தந்தையிடம் சொல்லவில்லை. படிப்பறிவில்லாத
அவருக்கு சொன்னால்தானே தெரியும்? அதுவும்,
டாக்டரோ அல்லது நர்ஸ்களோ முறையாக எடுத்துச்
சொன்னால்தான் இவரைப் போன்றவர்களுக்குப் புரியும்.
 

              பல மருத்துவமனைகளில், இதுபோன்ற
படிக்காதவர்களை மிகச்சுலபமாக ஏமாற்றியும்
விடுகிறார்கள். அவர்களுக்கு புரியாதமுறையில்
நோயின் பெயரைச் சொல்லி, பணத்தைக் கறந்து
விடுகிறார்கள். இப்படி அங்கு இருந்த ஒரு வாரத்தில்
பல சம்பவங்களைப் பார்க்க நேரிட்டது. இதனால்
மனதிற்கு மிகவும் கவலைதான் ஏற்பட்டது.
இப்பொழுதெல்லாம், கோவிலுக்குப் போனால்
நோயற்ற வாழ்வு  வேண்டும் என்றுதான் வேண்டிக்
கொள்ளத் தோன்றுகிறது. அனுபவப்பட்டதால்,
அதுவே மிகப்பெரும் செல்வமாக எண்ணத் தோன்றுகிறது.
Related Posts with Thumbnails