நாகர்கோவில் - II

சனி, நவம்பர் 20, 2010

மேலங்கோடு

 
              மேலங்கோடு என்கிற இடத்திற்கு அடுத்ததாக
சென்றோம். இது குமாரகோவிலில் இருந்து ஒரு கி.மீ
தொலைவில் உள்ளது. இங்கு ஒரு சிவன் கோவில்
உள்ளது. இது 12 சிவாலயங்களில் எட்டாவது சிவாலயம்
ஆகும். இந்தக் கோவிலில் மாதாமாதம் சிவராத்திரியன்று
கூட்டம் நிறைந்து காணப்படும்.மேலும் இங்கு இசக்கி
அம்மன்களான அக்கா, தங்கச்சி கோயில்கள் உள்ளன.
இரண்டு இசக்கியம்மன் கோயில்கள், சிவன்கோயில் என
மூன்று சந்நிதிகள் ஒரே இடத்தில் தனித்தனி கோயில்களாக
உள்ளது. அந்த இரண்டு அம்மன் கோவில்களில், ஒரு கோவில்
அக்காவினுடைய கோவிலாம். மற்றொன்று
தங்கையினுடையதாம். அக்கா அம்மன் பெயர் செண்பகவல்லி
அம்மன். தங்கை அம்மன் பெயர் நீலாவதியம்மன். போனால்
அந்த இரண்டு கோவில்களுக்கும் போக வேண்டுமாம். ஒரு
கோவிலுக்குப் போய்விட்டு  மற்றொரு கோவிலுக்குப் போகாமல்
வரக்கூடாது என்று சொல்கிறார்கள். அதிலும் அக்காக்
கோவிலுக்குத்தான் முதலில் போய்விட்டு, பின்னர்தான் தங்கைக்
கோவிலுக்குப் போகவேண்டுமாம். அக்காவான செண்பகவல்லி
அம்மன் சாதுவான அம்மன் என்றும், தங்கையான நீலாவதி
அம்மன் ஆக்ரோஷமான அம்மன் என்றும் சொல்லப்படுகிறது.


 திருவட்டாறு             அடுத்தது திருவட்டாறு. இங்கு உள்ள கோவில்
ஆதிகேசவப்பெருமாள் கோவில். இது 108 வைணவத்
தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தக் கோவில்
தரையிலிருந்து 55அடி உயரத்தில் அமைந்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து 30 கிமீ தொலைவில் இந்தத்
திருவட்டாறு உள்ளது. இந்தக் கோவில் கோதை, பரளி
மற்றும் தாமிரபரணி என்ற மூன்று ஆறுகளால்
சூழப்பட்டுள்ளது. பரளியாறு இந்த இடத்தைச் சுற்றி ஓடுவதால்,
'வட்டாறு' என்றும், ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளதால்
'திருவட்டாறு' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில்
திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவிலை ஒத்துள்ளது.
மேலும் இந்தக் கோவில் பத்மனாப சுவாமி கோவிலை விடப்
பழமையானது. பத்மனாப சுவாமி சிலையும் ஆதிகேசவப்
பெருமாள் சுவாமியின் சிலையும் ஆதிசேஷனான பாம்பின்
மேல் சயன நிலையில், ஆனால் எதிரெதிர் திசையில்
அமைந்துள்ளது. அதாவது பத்மனாப சுவாமி சிலை சயன
நிலையில் கிழக்கு நோக்கியும், பத்மனாப சுவாமி சிலை சயன
நிலையில் மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இந்த
ஆதிகேசவப் பெருமாள் சிலை கல்லால் ஆன சிலையல்ல.
கருப்பட்டி,எள் மற்றும் பல பொருட்களால் செய்யப்பட்டது.
அதேபோல நாம் சுவாமியை மூன்று வாசல் மூலமாக, தலை
பாகம், உடல் பாகம் மற்றும் கால் பாகமாகத்தான் தரிசிக்க முடியும்.
                நாங்கள் கோவிலுக்குப் போன சமயம் 'ஷீவேலி'
என்ற பூஜை நடந்துகொண்டிருந்தது. அதனால் நடை
சாத்தப்பட்டிருந்தது. இந்தப் பூஜையின் போது, பெருமாளைத்
தூக்கிக் கொண்டு ஒருவர் பிரகாரத்தைச் சுற்றிவர,
மற்றொருவர் பிரகாரத்தைச் சுற்றியுள்ள பலிபீடங்களில்
மந்திரத்தைச் சொல்லி, சாதத்தாலும், பூவாலும் அர்ச்சனை
செய்தார். இது முடிந்த பிறகே சுவாமியைத் தரிசிக்க முடிந்தது.
இப்பூஜை தினமும் மதியம் 12 அல்லது 1 மணிக்கு நடக்குமாம்.
இங்கு ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் மிகவும்
சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மேலும் இங்குள்ள உதய
மார்த்தாண்ட மண்டபத்தில் கல்யாணகோலத்தில் உள்ள
வினாயகர் சிற்பமும், வெவ்வேறு கோலத்தில் உள்ள 222
பாவைவிளக்குகளும், பாற்கடலைக் கடையும் தேவர்கள்
மற்றும் அசுரர்கள் சிற்பமும் மிகச்சிறப்பு வாய்ந்ததாக
இருக்கிறது. பங்குனி உத்சவம் அன்று தங்கக் கருடன்
வாகனத்தில் சுவாமி ஆற்றில் இறங்குவது மிகச் சிறப்பாக
இருக்குமாம் .பால் பாயசமும், அவல் மற்றும் அப்பமும் இங்கு
பிரசாதமாக வழங்கப்படுகிறது.

8 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படங்களும், கோவில் பற்றிய தகவல்களும் அருமை. நாகர்கோவில் வழியாக இரண்டு மூன்று முறை சென்றுள்ளேன், ஆனாலும் ஊரைச் சுற்றிப் பார்த்ததில்லை. பார்க்கணும்….

LK சொன்னது…

இதுவரை போனது இல்லை...

ஜிஜி சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ்,
வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா போய்ப்பாருங்க.
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க LK,
வருகைக்கு நன்றிங்க.
வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா நீங்களும் போய்ப்பாருங்க.பார்ப்பதற்கு அருமையான இடங்கள்.

வே.நடனசபாபதி சொன்னது…

திருவட்டாரை பற்றிய தகவலுக்கு நன்றி. நான் அறிந்த செய்தி: "திருவிதாங்கூர் மகாராஜா முதலில் தக்கலைக்கு அருகே பத்மநாபுரத்தில் இருந்து ஆட்சி செய்தபோது, திருவட்டார் பத்மநாபசாமி கோயிலுக்குத்தான் தினம் வருவாராம். அவரது தலை நகரத்தை திருவனந்தபுரத்திற்கு மாற்றியபோது தினம் திருவட்டார் வரமுடியாதென்பதால், திருவனந்தபுரத்தில், திருவட்டார் பத்மநாபசாமி கோயில் போல் கட்டி ,அங்கும் பத்மநாபசாமியை சயன கோலத்தில் எழுந்தருள செய்து தினம் வணங்கிவந்தாராம்."

கோவை2தில்லி சொன்னது…

படங்களும் தகவல்களும் அழகாக உள்ளது. நாகர்கோவில் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

ஜிஜி சொன்னது…

@ நடனசபாபதி,
வருகைக்கு நன்றிங்க.
தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி.

ஜிஜி சொன்னது…

வருகைக்கு நன்றிங்க கோவை2தில்லி.
வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா நீங்களும் போய்ப்பாருங்க.பார்ப்பதற்கு அருமையான இடங்கள்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails