மெரைன் டிரைவ் (Marine drive)- கொச்சி

புதன், மார்ச் 04, 2015

பயணக் கட்டுரை

மெரைன் டிரைவ் - கொச்சி

கொச்சிக்கு நாங்கள் வந்து ஒன்றரை வருடங்களாகிறது. இங்கு வந்ததும் முதலில் நாங்கள் பார்க்கச் சென்ற இடம் மெரைன் டிரைவ் (Marine drive). இது கொச்சியின் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான ஒன்று. பல திரைப்படங்களில் இதைக் காணலாம். இதேபோல (Marine drive - Queens necklace)மும்பையிலும் உள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன் . அது அரபிக் கடற்கரையைச் சுற்றி அமைந்துள்ளது.

கொச்சியிலுள்ள இந்த மெரைன் டிரைவ்,  வேம்பநாடு என்ற ஏரி கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது.    இந்த இடத்தில் ஏகப்பட்ட கடைகளும் ஷாப்பிங் மால்களும் அமைந்துள்ளன. இங்கு சூரியன் மறைவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த ஏரியின் ஒரு பகுதி இந்தியக் கப்பற்படை மற்றும் துறைமுகத்தின்  கட்டுப்பாட்டில் உள்ளது.  மற்ற பகுதியில் படகுப் போக்குவரத்து நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளுக்காக தனியாருக்கு சொந்தமான படகுகளும் அரசாங்கமே நடத்தும் 'ஜெட்டி' (jetty ) எனப்படும் படகுப் போக்குவரத்தும் உள்ளது. தனியார் படகுகளில் சுற்றிப் பார்க்க கட்டணமாக ஒரு நபருக்கு குறைந்தது 100 ரூபாய் வசூலிக்கிறார்கள்.  படகின் அளவைப் பொறுத்து 20 முதல் 50 நபர்கள் வரை உட்காரலாம் .இதில் ஏறி உட்கார்ந்தால் ஒரு மணி நேரம் படகில் பயணம். வழிகாட்டியும் கூட வந்து அங்குள்ள இடங்களைப் பற்றி விளக்குகிறார்.

அரசாங்க ஜெட்டியில் ஒரு நபருக்கு 4ரூபாய் வசூலிக்கிறார்கள்.  அரைமணி நேரத்திற்கு ஒரு படகு கிளம்புகிறது. இது மெரைன் டிரைவில் இருந்து  ஃபோர்ட் கொச்சி, மட்டஞ்செர்ரி, வைப்பின் என்ற மூன்று இடங்களுக்கும் செல்கிறது. வேலைக்கு தினமும் சென்று வருவோருக்கு இந்த ஜெட்டி படகுப் போக்குவரத்து மிகவும் பயன்படுகிறது. சுமார் 20 கிமீ சாலைவழி பயணத்தை நான்கு ரூபாயில் 20 நிமிடத்தில் அடைந்துவிடலாம். அனைத்து படகுகளிலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக உயிர்காக்கும் மிதவை ஆடைகளும் ( life jacket ) வழங்கப்படுகின்றன. எனவே அனைத்து மக்களின் விருப்பமும் இந்தப் படகு போக்குவரத்தாகவே உள்ளது. 

இத்தகைய இயற்கை எழில்மிகு படகுப் பயணத்திற்கு எல்லோரும் வாங்க கொச்சி மெரைன் டிரைவிற்கு. பள்ளிவிடுமுறை வரப்போகிறது. விடுமுறையை இயற்கையுடன் கழியுங்கள் ....அனுபவித்து மகிழுங்கள்.


மீண்டும்.....

வெள்ளி, பிப்ரவரி 20, 2015

             கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வலைப்பூவிற்கு வந்திருக்கிறேன். இடையில் பல மாற்றங்கள்.... இட மாற்றங்கள்.
ஆனாலும் அவ்வப்போது பல பதிவர்களின் பக்கங்களை படித்துக் கொண்டுதான் இருந்தேன்.  சிலர் தொடர்ந்து நன்றாக எழுதிக் கொண்டு இருக்கின்றனர். பலர் முகப்புத்தகத்தின் ஈர்ப்பினால் அதில் எழுதி வருகின்றனர். சிலர் ஜி + ல் எழுதுகின்றனர். எழுத்து ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பலருடைய எழுத்துக்களை புத்தகங்களிலும் புத்தகங்களாகவும் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.
இனியாவது தொடர்ந்து ஏதேனும் உருப்படியாக எழுதலாம் என நினைக்கிறேன். உங்களின் ஆதரவோடு...

21-12-2012

வெள்ளி, டிசம்பர் 21, 2012

21-12-2012 இன்று உலகம் அழியப் போவதாக உலகமெல்லாம்
ஒரு பேச்சு. உண்மையில் இன்றைக்கு உலகம் அழியப்
போகிறதோ, என்னவோ தெரியலை. ஆனால் கிட்டத்தட்ட
ஒரு வருடத்திற்கு பிறகு, இன்றைக்கு ஒரு பதிவு எழுதலாம்னு
தோணுது .

எல்லாரும் மயன் காலண்டர் பற்றிப் பேசிக்கிட்டிருக்காங்க.
அதில் போட்டிருப்பது பற்றிய முழு விவரம் தெரியலை.

அப்படியே அழிஞ்சா, அழியறதுக்கு முன்னாடி இதைப் படிச்சு
முடிச்சிடுங்க.

உலகம் முழுவதும் அழியாம, ஒவ்வொரு பகுதியாக அழிந்து
கொண்டுதான் இருக்கிறது.சுனாமியாலும், நிலநடுக்கத்தாலும்
மேலும் பல இயற்கை சீற்றங்களாலும் அழிந்து கொண்டுதான்
இருக்கிறது. நம்முடைய அதீத அறிவியல் வளர்ச்சியால்
முன்னேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும் புவிவெப்பமடைதல்
போன்ற இயற்கை அழிவுகளே அவற்றால் மிக அதிகம்.

காடுகளையும்,  மிக அரிதான காட்டு விலங்குகளையும்
அழிக்க முடிந்த நம்மால் கொசுக்களை அழிக்க முடியவில்லை.
அதனால் பெருகிவரும் நோய்களையும் கட்டுப்படுத்த
முடியவில்லை. தினமும் ஒரு புதிய நோய் உருவாகிக்
கொண்டுதான் இருக்கிறது.
அரசும், சமூக நல அமைப்புகளும் மரம் வளர்ப்பதைப் பற்றியும்
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத்  தடுக்கவும்  பல நடவடிக்கைகளைக் கூறினாலும் அவற்றில் செயல் வடிவமாகுவது மிகச்
சிலவைதான். குறைப்பதற்குதான் முயற்சி எடுத்துக்
கொண்டிருக்கிறோம். ஒழிப்பதற்கு  அல்ல.

இப்படி இயற்கை அழிவுகள் ஒருபுறம் இருந்தாலும் கொலை,
கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல் என தனி மனிதனால்
நடக்கும் அழிவுகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதான்
போகிறது.

இதைப் பற்றி ஒரு கார்ட்டூன் இன்றைய தினமணியில்
வெளியாகியுள்ளது.நன்றி: தினமணி

உண்மையில் இந்தப் படத்தில் உள்ளது போல  உலகத்தின்
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நாமே உலகத்தை
அழித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதைப் பற்றி நாசாவும் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச்
செய்தி:

2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உலகம் அழிந்துவிடுவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி தான் என்றும், உலகம் அழிந்துவிடாது என்றும் நாசா அறிவித்துள்ளது.
2012 என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் 2012 டிசம்பர் 21ம் தேதி
உலகமே அழிந்து விடும் என்று தகவல்கள் பரவின. மாயன்
கேலண்டரில் 21ம் தேதிக்குப் பிறகு எந்த விவரமும் இல்லாததே
இந்த புரளி உருவாகக் காரணம். இதுமட்டுமல்லாமல், பூமியுடன்
வேறொரு கிரகம் மோதவிருப்பதாகவும், அதனால் பூமி அழியக்
கூடும் என்றும் தகவல்கள் இணையதளங்களில் உலா வந்தன.
ஆனால் இதனை நாசா ஆராய்ச்சி மையம் மறுத்துள்ளது.
இன்னும்  4 பில்லியன் ஆண்டுகள் பூமி எந்த ஆபத்தும் இன்றி
இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Related Posts with Thumbnails