முகோபத்தியாயா- நமக்குத் தெரியாத உண்மை

சனி, அக்டோபர் 30, 2010

             இது ஒரு பத்திரிக்கையில் நான் படித்த செய்தி.
டெஸ்ட் டியூப் குழந்தைகளின் தந்தையான ராபர்ட்
எட்வர்ட்டுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசை
அறிவித்து இருக்கிறார்கள். குழந்தை இல்லை என்ற
காரணத்துக்காக கண்ணீர்விட்டுஅழுத... லட்சக்கணக்கான
தம்பதியினரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களின்
முகத்தில் புன்னகையைப் பூக்க வைத்த விஞ்ஞானி
ராபர்ட் எட்வர்ட்டின் வயது 85.


             1978-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, இங்கிலாந்தில் பிறந்த
லூயிஸ் பிரவுன் தான் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை.
இன்று வரை உலகம் முழுதும் 43லட்சம் டெஸ்ட் டியூப்
குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். லேப்ரோஸ்கோப்பி
முறையில் பெண்ணின் சினைப்பையில் இருந்து எடுத்த
முட்டையையும், ஆணிடம் இருந்து பெற்ற விந்துவையும் ஒரு
டெஸ்ட் ட்யூப்பில் செலுத்தி, அவை இரண்டும் செயற்கை
முறையில் கருவாக உருவெடுக்கும் வரை காத்திருந்து, இந்தக்
கருவை மீண்டும் ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி,
பெண்ணை கர்ப்பமுறச்செய்யும் இந்த முறையின் தந்தை..
ராபர்ட் எட்வர்ட். லூயிஸ் பிரவுன் என்ற அந்த டெஸ்ட் டியூப்
குழந்தை, இன்று 32 வயது பெண்ணாக வளர்ந்து, இயற்கை
முறையிலேயே ஒரு குழந்தையும் பெற்றுவிட்டாள். 32
ஆண்டுகள் கழித்து ராபர்ட்எட்வர்ட்டுக்கு இந்த
ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 
           "உயிர்களைப் படைக்கும் ஆற்றல்பெற்றவர்  கடவுள்
ஒருவரே. அவருடைய படைக்கும் தொழிலை விஞ்ஞானிகள்
என்ற பெயரில் மனிதர்கள் செய்வதை அனுமதிக்க முடியாது!"
என்று மதங்களும், சமூகமும், அரசாங்கமும் ஆரம்பக்
கட்டத்தில் அவருக்கு அடுக்கடுக்காக முட்டுக்கட்டைகளைப்
போட்டன. ஆனால், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி,
"குழந்தை இல்லாத தம்பதிகளின் நிலைமை பரிதாபமானது.
டெஸ்ட் டியூப் முறையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள
அவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு!". என்று வாதாடி,
அதற்கான வாய்ப்பினை விஞ்ஞானத்தின் துணைகொண்டு
நிரூபித்தார். ராபர்ட் எட்வர்ட்டின் கண்டுபிடிப்பு மனிதகுலம்
முழுமைக்கும் பயன்படும் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு
என்றாலும், இங்கிலாந்து அரசாங்கம் அவரது சாதனைகளை
இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை.
கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் தலைமை இடமான
வாட்டிகனோ, ராபர்ட் எட்வர்ட் நோபல் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, கமிட்டிக்குக் கடுமையான
கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறது.             இது ஒருபுறம் இருக்க, ராபர்ட் எட்வர்ட் போலவே
நமது நாட்டிலும் ஒரு விஞ்ஞானி இருந்தார். இவரும் அந்தக்
காலத்தில் டெஸ்ட் டியூப் குழந்தை பற்றிய ஆராய்ச்சியில்
தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர் பெயர் முகோபத்தியாயா.
இவரது முயற்சியின் வாயிலாக, ராபர்ட் உருவாக்கிய அதே
1978-ம் ஆண்டு கடும் நெருக்கடிகளுக்கு இடையில்,
எந்தவிதமான வசதிகளும் இல்லாத ஆராய்ச்சிக்கூடத்தில்
துர்கா என்ற டெஸ்ட் டியூப் குழந்தையை உருவாக்கினார்.

             இந்தியாவில் 100-க்கு 10 தம்பதிகள் குழந்தை இல்லாத
தம்பதிகள் என்கிறது புள்ளி விவரம். குழந்தைச்செல்வம்
இல்லாவிட்டால் ஒரு பெண்ணை 'மலடி' என்று தொடங்கி..
வாய்க்கு வந்தபடி அவதூறு சொல்லும் இந்த சமூகம்
இப்படிப்பட்ட பெண்களுக்குக் குழந்தைப்பேறு ஏற்பட வழி
சொன்னார் என்பதற்காக, அப்போது முகோபத்தியாயாவை
யாரும் பாராட்டவில்லை. கைதட்டி உற்சாகப்படுத்தப்பட
வேண்டியவரைக் கொடூரக் குற்றவாளியாக சித்தரித்தது
அப்போது ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் அரசு. இந்த
அவமானங்களைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை
செய்துகொண்டார். 'உலகம் தட்டையானது இல்லை...
உருண்டை வடிவிலானது' என்று சொன்னதற்காக
கலிலியோவைக் கல்லால் அடித்த இந்த உலகம் ஒரு நல்ல
விஞ்ஞானியைத் தனது அறியாமையால் இழந்துவிட்டது;
இந்த உண்மை இத்தனை ஆண்டுகளாக மறைக்கப்பட்டும்
விட்டது.

தீபாவளிக் கொண்டாட்டம்...

புதன், அக்டோபர் 27, 2010

               தீபாவளிக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன.
ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து
விட்டன. தீபாவளிக்குப் பொருட்கள் வாங்க எங்குபார்த்தாலும்
கூட்டம். இதனால் வாகன நெரிசல். சென்னையில் தி.நகரில்
மக்கள் கூட்டம் அலைமோதுவதாக செய்திகளிலெல்லாம்
காண்பிக்கிறார்கள். இது சிறுஊர்களையும் விட்டு வைக்கவில்லை.


            
             ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே எல்லாக் கடைகளிலும்
சலுகைகளும், தள்ளுபடிகளும் ஆரம்பித்துவிட்டது. துணிக்
கடைகள் மட்டுமல்லாமல் நகைக்கடைகள், எலக்ட்ரானிக்
கடைகள் என எல்லாக்கடைகளிலும் தீபாவளி விற்பனை
ஆரம்பித்துவிட்டது. ஆனால் இவற்றில் எத்தனை
உண்மையான விற்பனை எனத் தெரியவில்லை. 2 சட்டை
வாங்கினால் 2 சட்டை இலவசம்; 1 புடவை வாங்கினால்
1 புடவை இலவசம் எனத் துணிக்கடைகளிலும், 1சவரன்
வாங்கினால் 1கிராம் தங்கநாணயம் என நகைக்கடைகளிலும்,
டிவி வாங்கினால் டிவிடி ப்ளேயர் இலவசம் என எலக்ட்ரானிக்
கடைகளிலும் விற்கிறார்கள். இது போன்ற பண்டிகை காலச்
சலுகைகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் மிக அதிகமாக
இருக்கிறது. ஆடித்தள்ளுபடி, தீபாவளித் தள்ளுபடி, பொங்கல்
சிறப்புத் தள்ளுபடி என இப்படி ஏகப்பட்ட பண்டிகைச் சலுகைகள்
மக்களைக் குறிவைத்து ஏமாற்றும் வண்ணமே உள்ளது.

              இதுபோல பண்டிகைக்காலச் சலுகைகளில் வாங்கும்
பொருட்கள் பெரும்பாலும் தரக்குறைவாகவும், பழைய மற்றும்
விற்காத பொருட்களாகவுமே இருக்கின்றன. இதனால் எளிதில்
கிழிந்தும், உடைந்தும் போகின்றன. நகைகளில் கூட தங்கத்தில்
கலப்படம் செய்து தயாரிக்கப்படுகிறது. இதுபோன்ற சலுகைகளில்
வாங்கப்படும் நகைகள் பெரும்பாலும் சுத்தமான தங்கமாக
இருப்பதில்லை; கறுத்துப் போய்விடுகின்றன. எனினும்
இச்சலுகைகள் எளிதில் மக்களைக் கவரும் வண்ணம் உள்ளதால்,
மக்கள் இதுபோல ஏமாந்தும் திருந்துவதில்லை. பண்டிகை
காலச்சலுகை, விழாக்காலச் சலுகை என வெவ்வேறு
பெயர்களில் ஏமாற்றுகிறார்கள். இதை ஒரு விதத்தில்
திருட்டுத்தனம் என்றே சொல்லலாம்.


              இவ்வாறானத் தள்ளுபடிகள் ஒருபுறம் என்றால்,
அத்தியாவசியப் பொருட்களான மளிகைப்பொருட்கள்,
காய்கறிகள் இவற்றின் விலைகள் தீபாவளியை முன்னிட்டு
தாறுமாறாக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில்,
குறைந்த அளவு காய்கறிகள் வாங்கினாலே, 100ரூபாய்
ஆகிவிடுகிறது. இப்போது கேட்கவே வேண்டாம். இதேபோல
எண்ணெய் வகைகளும், பருப்பு வகைகளும் கூட விலை
உயர்ந்துள்ளது. இதற்கு 50சதவீதம் எண்ணெய் வகைகள்
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாவதாகக் காரணம்
கூறுகிறார்கள்.


            இந்தப் பொருட்களின் விலை உயர்வால்,
இனிப்புகளின் விலையும் உயர்கிறது. சாதாரண நாட்களில்
விற்பதைவிட தீபாவளிக்காக, இருமடங்கு விலை அதிகம்
வைத்து விற்கிறார்கள். இதை வாங்க வரிசையில் வேறு
நிற்கவேண்டி இருக்கிறது. பிரபல இனிப்புக்கடைகளில்
எல்லாம் தீபாவளியையொட்டி, பலகாரங்கள் வாங்குவதற்கு,
முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. முன்பெல்லாம் எல்லா
வீடுகளிலும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, தீபாவளிப்
பலகாரங்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால்
இப்போது நேரமின்மையால், பெரும்பாலும் யாரும்
செய்வதில்லை. கடைகளிலேயே வாங்குவதால், இதையே
சாக்காக வைத்து, அவர்கள் விலையை உயர்த்தி விடுகிறார்கள்.

               இதுபோலத்தான் பட்டாசுக்கடைகளிலும்.
200ரூபாய்க்குக் குறைந்து வெடிப்பார்சலே இல்லை. அவற்றை
அந்தப் பட்டாசு செய்பவர்களால் கூட வாங்க முடியாத நிலை
உள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில்
நிறைய பேருக்கு பட்டசு செய்வதுதான் முக்கியத் தொழில்.
பட்டாசுகளை வீட்டிலேயும், பட்டாசுத்தொழிற்சாலைக்குச்
சென்றும் செய்கிறார்கள். தீபாவளி சமயங்களில் அவர்களுக்கு
ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பட்டாசுத்தொழிற்சாலைகளில்
வேலை இருக்கும். ஆனால் அவர்களால் கூட ஆசைப்பட்ட
பட்டாசுகளை வாங்க முடியாது. இதுபோலத்தான்
துணிக்கடைகளில் வேலை பார்ப்பவர்களது நிலைமையும்.
இப்படித்தான் வருடாவருடம் தீபாவளி நமக்குத் தெரிந்தும்
தெரியாமல் கொண்டாடப்படுகிறது. தீபாவளி மட்டுமல்ல;
கிட்டத்தட்ட எல்லா விழாக்களுமே இப்படித்தான்
கொண்டாடப்படுகிறது, இருப்பவர்களால் சிறப்பாகவும்,
இல்லாதவர்களால் முடியாமலும்.

வாழை இலை விருந்து...

ஞாயிறு, அக்டோபர் 24, 2010

            
              வாழைனாலே 'மங்களம்'னு அர்த்தம். கல்யாணம்
போன்ற விசேஷங்களில் கூட வாழைமரத்தைத்தான் கட்டறோம்.
வாழைமரத்தோட எல்லா பாகங்களுமே நமக்குப் பயன்படுது.
அந்தக் காலத்துல பெரும்பாலும் எல்லா வீடுகள்லயும் வாழை
மரம் இருக்கும். அதனால் எல்லாரும் அப்போ தினமும் வாழை
இலையிலதான் சாப்பிடுவாங்க. வாழை இலையில சாப்பிட்டா
கண்ணுக்குக் குளிர்ச்சி. 'ஆல இலை, அரச இலை, தேக்கு
இலை'னு எத்தனையோ இலைகள் இருந்தாலும், வாழை
இலைக்கு மட்டும்தான் தனிப் பெருமையே இருக்கு. எதைச்
சாப்பிடறோம் அப்படிங்கற மாதிரி, எதுல சாப்பிடறோம்ங்கறதும்
முக்கியம்னு சொல்லுவாங்க. அதனால விருந்துன்னாலே
வாழை இலைதான்! ஆனால் இப்போ நம்ம ஊர்களிலயே
ஏதாவது விசேஷம்னாலோ, கல்யாண வீட்டுக்குப்
போனாலோ தான் நாம, வாழை இலையிலயே சாப்பிடறோம்.                எங்கப் பாட்டி வாழை இலையில சாப்பிடறது பத்தி
ஒரு கதை சொல்லியிருக்காங்க. " ஒரு முறை பரத்வாஜ
முனிவர் வீட்டுல ராமன் சாப்பிடும்போது, அவருக்குப்
பிரதிபலன் பார்க்காமல் உதவிய அனுமனுடன் ஒரே இலையில்
சாப்பிட்டாராம். அணில் முதுகில் போட்ட கோடு மாதிரி,
வாழை இலையின் நடுவுல இருக்குற கோடும் ராமன்
இலையை இரண்டு பகுதியாக பிரிக்குறதுக்கு தனது கையால்
போட்டக் கோடுதானாம். இலையின் ஒரு பகுதியில்
மனிதர் விரும்பி சாப்பிடும் உணவு வகையும்,
எதிர்ப்பகுதியில் குரங்குகள் விரும்பும்  காய்கறிகளும்
பரிமாறப்படுவதற்கு இதுதான் காரணமாம்.


               " அதேபோல, வாழை இலையில எப்படி உணவு
பரிமாறணும்னும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. " இலையின்
நுனிப்பகுதி இடதுபக்கமாகவும், அகலமான பகுதி
வலதுபக்கமாகவும் இருக்கணும். உடலில் கொஞ்சமாக
சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்
இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு,
காய்கள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும்
பரிமாறணும். அதேபோல, முற்றிய இலையைவிட தளிர்
இலைதான் நல்லது. இலை கருகுகிற மாதிரி, உணவு சூடாக
இருக்கக் கூடாது; சுத்தமாக ஆறியும் இல்லாமல் மிதமான
சூட்டில் பரிமாறணும். முதலில் பசியைத் தூண்டும் பருப்பு, நெய்
விடணும். அப்புறம் காரவகைக் குழம்புகளை ஊற்றணும்.
உணவின் செரிமானத்துக்கு உதவும் மல்லி, பூண்டு, மிளகு
உள்ள ரசம், தொடர்ந்து புளிப்பு சுவையுள்ள மோர் வழங்கணும்.
கடைசியா ருசிக்குப் பாயசம்" இப்படி ஒரு முறையே இருக்கு.


                ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலகூட வாழை
இலை பெரிதும் பயன்படுது. "அல்சர், குடல் நோய்கள் வராமல்
தடுக்க கைகண்ட மருந்து வாழை இலையில தொடர்ந்து
சாப்பிடறதுதான். சிறுநீரகப்பிரச்சனை, அலர்ஜி, உடலில்
இருக்குற நச்சுத்தன்மை நீங்க எனப் பல பிரச்னைகளுக்கு
நிவாரணம் வாழை இலையில சாப்பிடறதுதான். வாழை
மரத்தில் பதினெட்டு வகைகள் இருக்கு. அவை
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவகுணங்கள்
உண்டாம்". வாழை இலையில சாப்பிடறதே குறைஞ்சுட்டு
வருகிற இந்தக்காலத்துல, இவ்வளவு பெருமையாக பேசுற,
வாழை இனமே அழிஞ்சுக்கிட்டிருக்கு. நம்ம நாட்டுக்கேயுரிய
பாரம்பரிய ரகங்களான சிறுமலை வாழை, பூவன், கற்பூர
வாழை இப்படிப் பலரக வாழைகளும் ஒரேயடியாக
அழிஞ்சுக்கிட்டிருக்காம். வாழை இலைகள் பதப்படுத்தப்பட்டு
சருகாகவும், 'தொன்னை' அப்படிங்கற சிறுகிண்ணங்களாகவும்
பயன்படுத்தப்பட்டு வருது. என்னதான் இப்படிப்
பயன்படுத்தினாலும் பச்சை இலையில சாப்பிடறமாதிரி
இருக்குறதில்லை.

              இவ்வளவு மகத்துவம் இருக்கிற வாழை இலை,
இன்னைக்கு ஒரு பூட்டு, அதாவது ஐந்து இலைகள்,
10லிருந்து 15ரூபாய் வரை விற்கப்படுது. டெல்லியில போன
பொங்கலுக்கு, இலையில சாப்பிடலாம்கிற ஆசையில,
என் கணவரை வாங்கிகிட்டு வரச்சொன்னேன். ஒரே ஒரு
இலைதான் இருந்ததுனு வாங்கிட்டு வந்தார். அதுவும் ஐந்து
ரூபாய்னு சொன்னதும் அதிர்ந்தே போயிட்டேன். ஒரு பூட்டு
இலை 5ரூபாய்க்கு விற்ற காலம் போய் ஒரு இலை 5ரூபாய்க்கு
விற்கப்படுது. எவ்வளவு அநியாயமா இருக்கு? என்னைக்காவது
இலையில சாப்பிடற ஆசையும் கூட இதனால போயிடுது.
டெல்லியிலயே இந்த நிலைமை என்றால், வெளிநாடுகளில்
இருக்குறவங்களெல்லாம் வாழை இலையில சாப்பிடறதுக்கு
ஆசையே பட முடியாது போல!

காலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )

புதன், அக்டோபர் 20, 2010


பத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா?
புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள்.

ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா?
இறுதித் தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் அருமை தெரிய வேண்டுமா?
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் தாயைக் கேளுங்கள்.

ஒரு வாரத்தின் அருமை தெரிய வேண்டுமா?
வாராந்திர பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

ஒரு மணியின் அருமை தெரிய வேண்டுமா?
காத்திருக்கும் காதலர்களைக் கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் அருமை தெரிய வேண்டுமா?
விமானம், ரயில் அல்லது பஸ்ஸை தவற விட்டவர்களைக் கேளுங்கள்.

ஒரு நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

ஒரு மில்லி-நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

காலம் பொன்னானது.
ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமாகப் போற்றுங்கள்.
வெற்றிச் சிகரத்தில் கொடி நாட்டலாம்.

ஆயுத பூஜையின் அவஸ்தை...

திங்கள், அக்டோபர் 18, 2010


              ஒவ்வொரு வருடமும் ஆயுதபூஜை எங்களுக்கு
அவஸ்தைபூஜையாகத்தான் இருக்கும். ஆயுதபூஜையன்று
தொழிலாளர்கள்,  ஆயுதங்களான, தொழிலுக்குப் பயன்படும்
சாதனங்களை வைத்து, பூஜை செய்து கொண்டாடுவதுதான்
வழக்கம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும், முன்புறமும்,
பின்புறமும் கார், லாரி போன்றவாகனங்களின் ரிப்பேர்களை
சரிசெய்யும் மெக்கானிக் கடைகள் உள்ளன. அங்கு வேலை
செய்பவர்கள், ஆயுதபூஜையைக் கொண்டாடுவதற்காக,
வெள்ளிக்கிழமை காலையிலேயே ஸ்பீக்கர்கள் வைத்து பாட்டு
போட ஆரம்பித்துவிட்டார்கள். அது நேற்று மாலை வரை
தொடர்ந்தது. இதனால் இந்த மூன்று நாட்களும் பக்கத்திலுள்ள
எங்களைப் போன்ற வீடுகளிலுள்ளவர்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. போட்டிபோட்டுகொண்டு அவர்கள் சத்தமாக பாட்டு ஒலிபரப்பியது, மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது.
 
             முன்பெல்லாம் இது போன்ற விழாக்களிலும்,
திருமணங்களிலும் குழாய் போன்ற ஒலிப்பெருக்கிகள்
பயன்படுத்தப்பட்டன. அவற்றைப் பயன்படுத்துவதால்,
இரைச்சல் அதிகமாக உள்ளதென, அவற்றைப் பயன்படுத்தத்
தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் அந்தக் குழாய்
ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படாவிட்டாலும், இப்பொழுது
பெட்டி போன்ற ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதில் குறைந்தது 4 ஒலிப்பெருக்கிகளாவது இருக்கிறது. இதனால்
சத்தம் மிக அதிகமாக உள்ளது. இதுபோல உள்ள, இரண்டு
பெட்டி ஒலிப்பெருக்கிகளை கடை வாசலுக்கு இரண்டு
பக்கமும் வைத்து, இரவு 10 அல்லது 10.30 வரை
பாட்டுபோட்டு, ஆயுதபூஜையைக் கொண்டாடினர். இதனால்
வீட்டிலுள்ளவர்களுடன் பேசக்கூட முடியவில்லை. எனது
குழந்தை இந்த மூன்றுநாட்களாக சரியாகத் தூங்க முடியாமல்
ரொம்பக் கஷ்டப்பட்டது. பக்கத்து வீடுகளில் உள்ள
வயதானவர்களும், நோயுற்றவர்களும் இதனால் மிகவும்
கஷ்டப்பட்டனர். அவர்களிடம் சத்ததைக் குறைத்து வைக்கச்
சொல்லிக்கூட பயனில்லை. ' நாங்கள் வருடத்திற்கு
ஒருதடவைதானே இதுமாதிரி கொண்டாடுறோம்' என்று
கூறுகின்றனர். அது சத்ததைக் குறைத்து வைத்து அவர்களுக்கு
மட்டும் கேட்குமாறு கொண்டாடலாமே?


              எல்லா இடங்களிலும் அன்று இதே நிலைமைதான்.
எங்கள் ஊர் அரசு பொது மருத்துவமனை வாசலில்தான்
ஆட்டோஸ்டாண்ட் இருக்கிறது. அந்த ஆட்டோஸ்டாண்ட்டிலும்
இதுபோலத்தான், அலங்கார விளக்குகளெல்லாம் போட்டு,
ஒலிப்பெருக்கிகள் வைத்துக் கொண்டாடினர். மருத்துவமனையில்
நோயாளிகளுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்?
அன்று பள்ளிகளுக்கு விடுமுறையாதலால், மாணவர்களுக்குப்
பிரச்சனையில்லை. ஆனால் இதுபோன்ற கஷ்டத்தை
வருடந்தோறும், எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள், 
முக்கியமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனுபவித்திருப்பர்;
அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றனர். எங்கள் பள்ளிக்குப்
பக்கத்தில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு
ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் மாதம் பூக்குழித்திருவிழா
நடக்கும். அப்போது இதுபோல, பத்துநாட்கள் ஒலிப்பெருக்கிகளில்
பாட்டுப்போட்டுக் கொண்டிருப்பர். அப்போது சரியாக பத்தாம்
வகுப்பு பொதுதேர்வு நடந்துகொண்டிருக்கும் சமயம். ஒழுங்காகத்
தேர்வு எழுதவே முடியாது. சத்தத்தால் யோசிக்கவே முடியாது.
ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.


                     வெளிநாடுகளிலெல்லாம் பொது இடங்களில்
இதுபோன்றெல்லாம் செய்யக்கூடாது என சட்டம் உள்ளது.
அதை மக்கள் அங்கு ஒழுங்காக பின்பற்றுகின்றனர். மீறினால்
கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அங்கு பொது
இடங்களில் ஹாரன் கூட ஒலிப்பதில்லை. நமது நாட்டிலும்
இது போலச் சட்டமிருந்தாலும் யாரும் பின்பற்றுவதில்லை.
இரவு பத்து மணிக்கு மேல் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக்
கூடாது எனவும் சட்டம் உள்ளது. யாருமே இதைப்
பின்பற்றுவதில்லை. இனி அடுத்து தீபாவளி வரப்போகிறது.
அதற்காவது, இதுபோல ஒலிப்பெருக்கிகளைப்
பயன்படுத்தாமலும், இரவு பத்து மணிக்கு மேல் வெடிகளை
வெடிக்காமலும் ஒலிச் சீர்கேட்டைத் தவிர்ப்போம்.

சாக்லேட் பிரியர்களுக்கு...

வெள்ளி, அக்டோபர் 15, 2010


                அடுப்பு இல்லாமல், அதிக நேரமும் செலவிடாமல் மிக
எளிதாக சாக்லேட் செய்வதற்கான மிக எளிய முறை இது. இதைச்
செய்ய அதிக பொருட்கள் தேவையில்லை.
தேவையான் பொருட்கள்:
பால் பவுடர் - 3 கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
வெண்ணெய் - 1/4 கப்
பால் - சிறிதளவு
            பால் பவுடருடன் பவுடர் சுகர், கோகோ பவுடர், வெண்ணெய் கலந்து எடுத்துக்கொள்ளவும்.                   அதில் பாலை, ஸ்பூனால் சிறிது சிறிதாக ஊற்றி , சப்பாத்தி மாவு போல் பிசையவும்.


              பின் ஒரு தட்டில் பட்டர் பேப்பர் அல்லது
வெண்ணையைத் தடவிக்கொண்டு ,  நமக்குத் தேவையான
வடிவத்தில் சதுர, சதுரமாகவோ அல்லது சிறு
உருண்டைகளாகவோ செய்து வைக்கவும். இதை ஃப்ரீசரில்
சுமார் 3லிருந்து 5மணி நேரம் வரை வைத்து எடுத்தால்,
அருமையான, சுத்தமான சாக்லேட் ரெடி. வீட்டில்
குழந்தைகள் கேட்டவுடனேயே இதை செய்து கொடுக்கலாம்.
இன்றைய தினம் இனிப்பான தினமாக இருக்கட்டும்.
இதை செய்து பார்த்துவிட்டு, உங்கள் கமெண்ட்ஸை சொல்லுங்க.

இப்படியும் சில மனிதர்கள்

புதன், அக்டோபர் 13, 2010

              சில பேர் இருக்காங்க, நம்ம தினசரி வாழ்க்கையில கண்டிப்பா நாம அவங்கள சந்திச்சிருப்போம். நம்மைப் பேசவே விடமாட்டாங்க, நான் சொன்ன அந்த சில பேர். நாம நேர்லயோ அல்லது ஃபோன்லயோ அவங்ககிட்ட பேசும்போது நம்மைப்   பேசவேவிடமாட்டங்க; அவங்களேதான் பேசிட்டிருப்பாங்க. அவங்களே கேள்வியும் கேட்டுப்பாங்க, பதிலும் அவங்களே சொல்லிப்பாங்க. நம்ம ஏதாவது சொல்ல வந்தாக்கூட,  என்ன பேசறோம்னு கேக்காம, அவங்களே பேசிட்டிருப்பாங்க. கொஞ்சம் நான் சொல்றதயும் கேளுங்கன்னு நாம் ஏதாவது சொன்னோம்னா, அந்த நேரத்துக்கு பேசாம இருந்தாலும், நம்ம பேசவந்தத முழுசா பேசவிடமாட்டாங்க. நாமளும் என்ன பேச நெனச்சோம்னு தெரியாம மறந்துடுவோம். அப்புறம் அவங்களே பேச்சை முடிச்சுவச்சிருவாங்க.


            தெரியாம , அவங்களுக்கு ஃபோன் பண்ணிட்டாப் போச்சு! செத்தோம்! அவங்களே பேசி, நாம் சொல்ல வந்த விஷயத்தையே, மறந்துட வச்சிருவாங்க. ஏன் தான் கால் பண்ணினோம்னு ஆயிடும் நமக்கு. எனக்குத் தெரிஞ்சு ஒரு குடும்பமே இந்த மாதிரி இருக்கு. அந்தக் குடும்பத்துல யாரைக் கண்டாலும் எங்க நாம மாட்டிக்குவோமோனு, எனக்கு பயமாவே இருக்கும். இப்படித்தான் ஒரு தடவ, நான் காலேஜ் சேர்ந்திருந்த சமயம், அந்தக் குடும்பத்துல ஒருத்தர் எங்க வீட்டுக்கு வந்திருந்தார். 'என்னம்மா படிக்கிற?'னு கேட்டார். நான், 'காலேஜ்ல இப்பதான் சேர்ந்திருக்கேன்'னு  சொல்லி முடிக்கக்கூட இல்ல, அவரோட காலேஜ் கதைய சொல்ல ஆரம்பிச்சுட்டார். இதை ஏற்கனவே  நான் பல தடவை கேட்டிருக்கேன்.ஆனாலும் அவர் என்னை பேசவிடவே இல்லை. இந்த மாதிரி தற்பெருமை பேசிக்கொல்றவங்களும் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களை
எல்லாம் என்ன பண்ணுறது? இவங்ககிட்ட இருந்து எப்படித்
தப்பிக்கிறது? இவங்களை நேர்ல சந்திக்கிற மாதிரி இருந்தால்,
கண்டுக்காம நாம போயிடணும். அவங்க கண்ணுல படாம,
எதிர்திசையில ஓடிடனும். இந்த மாதிரி உள்ளவங்ககிட்ட இருந்து
ஃபோன் கால் வந்தா அதை தயவுசெஞ்சு அட்டெண்ட் பண்ணிடக்கூடாது. அப்படியே அட்டெண்ட் பண்ற மாதிரி நிலைமை வந்தாலும், ஹலோ, ஹலோன்னு சொல்லி ஃபோனை வச்சிடனும்.


              இந்த மாதிரி பேசியே கொல்றவங்களுக்கு நேர்மாறாவும் சில பேர் இருக்காங்க. அவங்க குணம்  அப்படியே தலைகீழா இருக்கும். வாயே திறக்க மாட்டாங்க. நாம எதுவும் கேட்டாலும் பதில் சொல்லமாட்டாங்க. நம்ம பேசுனாலும் அத காதுல வாங்காம, வேற எதாவது யோசிச்சிட்டு இருப்பாங்க; டிவி இல்லைனா வேற எங்கயாவது வேடிக்கை பார்த்திட்டு இருப்பங்க அல்லது பேப்பர் படிச்சிட்டு இருப்பாங்க. இந்த மாதிரி இருக்கிறவங்ககிட்ட எல்லாம் ஏன் தான் பேசறோம்னு இருக்கும். அவங்க கேட்கலைன்னா நாம பேசறதுக்கே யோசிப்போம். ஏன்னா அவங்கள மாதிரி நம்மையும் பேசாம மாத்திடுவாங்க. இப்படியும் சில மனிதர்கள் இருக்கறாங்க. இந்த மாதிரியும் இருக்க வேண்டாம். நாமும் பேசணும்; நம்ம கிட்ட பேசுறவங்களையும் பேச விட்டு அவங்க என்ன சொல்றங்க அப்படிங்கறதையும் கேட்கணும்.

தஞ்சைப் பெரியகோவில்

ஞாயிறு, அக்டோபர் 10, 2010

              தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயில் கட்டிமுடித்து, 1000 வருஷம் ஆகிவிட்டது. இது நம் தமிழர்களின் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.


               போன மாதம் கூட, 22.09.2010 முதல் 26.09.2010 வரை ஐந்து நாட்கள், " பெரியகோயில் 1000 ஆண்டுகள் நிறைவு விழா " தமிழக அரசால் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. ஐந்து நாட்கள் நிகழ்ச்சியின் நிறைவு நாள் அன்று, பத்மா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் 1000 பரதக் கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜராஜ சோழனால் கி.பி. 1009-1010 -ல் கட்டப்பட்ட இந்த பெரிய கோயில் எனப்படும் ' பெருவுடையார் கோவில்' -ன் கோபுரம் 200 அடி உயரம் உடையது. இதன் 60மீ உயர விமானம் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரியது.  இது பல்லவர்கால சிற்பக் கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. மேலும் இது 130000டன் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் உட்பிரகாரம் 500அடி நீளமும், 250அடி அகலமும் உடையது. இங்குள்ள நந்தி 25டன் எடையும், 12அடி உயரமும், 20அடி நீளமும் கொண்டது. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தியாகும். இந்த நந்தி நாளுக்கு நாள், வளர்ந்துகொண்டே போவதாகவும், இதனால் அது இருக்கும் மண்டபம் இடிந்துவிடும் வாய்ப்பு உள்ளதால், நந்தியின் தலையில் ஆணி அடித்து அதன் வளர்ச்சியை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபோல, இங்குள்ள கோபுரத்தின் நிழல், தரையில் விழாதவாறு கட்டப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இதன் வீடியோ தொகுப்பு :


                                                                                                                (நன்றி: you tube)

இந்தக்கோயிலுக்கு போனபோது அங்கு சிறப்பு அனுமதி வாங்கி,
என் தம்பி கிளுக்கிய படங்கள்:
இரட்டைச் சுவர்களால் கட்டப்பட்டுள்ள உட்புரக் கோபுரம்கோபுரத்திலுள்ள தொப்பி அணிந்த வெளிநாட்டவரின் சிற்பம்

 இந்தப் படங்களுக்காக தொகுத்த சுருக்கமான பதிவு இது.Related Posts with Thumbnails