பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மகளிர் தினம்...

செவ்வாய், மார்ச் 08, 2011

     

      இன்று மகளிர் தினம். “மங்கையராய்ப் பிறப்பதற்கே 
நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற 
பாரதியாருடைய வாக்கை பொன்னாக்கும் வகையில் 
இன்றைக்கு மகளிர் எல்லாத் துறைகளிலும் முன்னேறி, 
மங்கையர் இனத்துக்கே பெருமை சேர்க்கிறார்கள்.

      ஆனால் எவ்வளவுதான் முன்னேறினாலும் இன்றும் 
பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் நடந்து கொண்டுதான் 
இருக்கிறது. இன்னமும், பெண்குழந்தைகளைக் கொல்லும் 
அவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

             21 ஆம் நூற்றாண்டு, பெண்சுதந்திரம், பெண்களுக்கு 
இடஒதுக்கீடு பற்றி இப்போது நாம் விவாதித்துக் 
கொண்டிருந்தாலும் தங்களுக்கான அடிப்படை உரிமைகள் 
கூட கிடைக்காமல் எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர்.

   என்னுடன் ஸ்கூலில் படித்த எத்தனையோ மாணவிகள்,
நல்ல மார்க் எடுத்தும், தங்களுக்கு வசதி இருந்தும் அவங்க 
அப்பா சொன்னாங்க, அண்ணன் சொன்னாங்கன்னு அவங்களுக்கு விருப்பப்பட்டதைப் படிக்காமல், தங்கள் குடும்பத்தின் விருப்பத்திற்காக, அவர்களுக்குப் பிடித்ததைப் படித்தார்கள். சிலர் 12ஆம் வகுப்போடு நிறுத்தப்பட்டு, திருமணம் செய்துவைக்கப்பட்டார்கள். இவர்களுக்கெல்லாம் படிக்க வசதி இல்லாமல் இல்லை. ஏழை மாணவர்கள் என்றால் நம்மாலான உதவி செய்து படிக்க வைக்கலாம். இவர்கள் எல்லாம் இருந்தும் படிக்க வைக்கப்படவில்லை. சிலர் நல்ல திறமை இருந்தும் பன்னிரண்டாம் வகுப்பில் ஒழுங்காக படிப்பது இல்லை. பத்தாம் வகுப்பு வரை நன்றாக படித்தவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் என் ஒழுங்காக படிப்பதில்லை எனக் கேட்டால், "எப்படியும் எங்க வீட்டுல மேல படிக்க வைக்கப் போறது இல்லை. அதுக்கு எதுக்கு கஷ்டப்பட்டு படிக்கணும்?"னு சொன்ன காரணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.

      என்னுடைய தோழி ஒருத்தி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் 200 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியிலேயே முதலாவதாக வந்தாள். அவளது அப்பா மிலிட்டரியில் இருந்தார். அம்மா ஸ்கூல் டீச்சர். அண்ணன் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்தான். அவளுக்கும் இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் அவள் பிஎஸ்சி கணிதம் படிக்க வைக்கப்பட்டாள். அவள் அம்மாவிடம் அவளை இன்ஜினியரிங் படிக்க வைக்கலாமே என நான் கேட்டதற்கு, “நாலு வருஷம் அதுக்கு செலவழிக்கிற காசுக்கு அவளுக்கு கல்யாணம் பண்ணிடலாம். கல்யாணப் பத்திரிக்கையில போடுறதுக்கு எங்களுக்குத் தேவை ஒரு டிகிரி. அதுக்குத்தான் படிக்க வைக்கிறோம். அவள நாங்க வேலைக்கெல்லாம் அனுப்பப் போறது இல்லை. அவள நாங்க படிக்க வைக்காம இல்லியே? படிக்க வைக்கிறோமே?” என என்னிடம் திருப்பிக் கேட்டார். ஒரு டீச்சருக்கு இதற்குமேல் நான் என்ன சொல்வது என வந்துவிட்டேன்.

      இன்று அவளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இன்றும் அவள், “நானும் இன்ஜினியரிங் படிச்சிருந்தா, ஏதாவது பெரிய கம்பனியில வேலை பார்த்திருப்பேன். எங்க அப்பாவும் அண்ணனும் சேர்ந்துதான் இப்படிப் பண்ணிட்டாங்க”ன்னு சொல்லி ஆதங்கப்படுகிறாள். 

     இது ஒரு உதாரணம் தான். இதுபோல எத்தனையோ சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆணாதிக்கத்தாலும், பாலியல் தொல்லைகளாலும் எவ்வளவோ திறமைகள் இருந்தும் பெண்கள் பலர் முன்னேறாமல் இருக்கின்றனர்.

     அதுபோல, கணவன் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல், குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு, தானும் முன்னேற பாடுபடும் பெண்கள் இன்று எத்தனை பேர்?அவர்கள் படும் துன்பங்கள்தான் எத்தனை? எத்தனை? கணவன் வெளிநாட்டில் இருந்தாலோ, அல்லது கணவன் இறந்துவிட்டாலோ ஒரு பெண்ணால் இன்று தனியாக வாழும் சூழல் இல்லை. அவளுக்கு மனத்தைரியம் இருந்தாலும் சமூகம் அவளை வேறு ஒரு பார்வையில்தான் பார்க்கிறது. 

      மகளிர்தினம் வருடம்தோறும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் என்ன பலன் கிடைத்திருக்கிறது? இன்று நமது முதல் குடிமகள் ஒரு பெண். அந்த அளவுக்கு பல துறைகளில் முன்னேறினாலும், மறுபுறம் பெண்களுக்கு அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை முற்றிலும் களையப்படும் தினம்தான் உண்மையில் மகளிருக்கான தினம். அந்த தினத்திற்காகத்தான் ஒவ்வொரு பெண்ணும் காத்துக்கொண்டிருக்கிறாள்.
.




ஆஸ்திரேலியத் தேர்தலில் முதல் தமிழ்ப் பெண்! -பிராமி ஜெகன்

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

              சில மாதங்களுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர்; அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என்பது டிவி, பத்திரிகைகள் மூலமாக நாமறிந்த செய்தி. இன்று 30 வயதுப் பெண்மணி ஆஸ்திரேலிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், மேலவைக்கு (செனட்) 'கிரீன்ஸ் கட்சி'யின் சார்பாகப் போட்டியிடுகிறார்!
            பொதுவாக, புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வரும் தமிழர்கள், அரசியல் அமைப்புகளில் அதிகம் பங்கேற்பதில்லை. பொது அமைப்புகளில் பணியாற்ற விரும்பினால், தமிழ்ச் சங்கங்கள் அமைப்பார்கள்..கோவில் கட்டுவார்கள். அவ்வளவுதான். ஆனால், தமிழ்ப் பெண் ஒருவர், வெள்ளைக்காரர்கள் மட்டுமே போட்டியிடும் பொதுத் தேர்தலில், அவர்களுக்குச் சமமாக அரசியல் களம் இறங்கியிருப்பது ஆச்சரியம்தானே!
           1988 -ல் குடும்பத்துடன் எட்டு வயதுக் குழந்தையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தவர் பிராமி ஜெகன். இவரின் தந்தை அருணாசலம் ஜெகன், சிவில் எஞ்சினியர். தாய் கிருஷ்ணா, ஆசிரியை.

 
                சிட்னியில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் ' இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்' பட்டப் படிப்பை முடித்து, மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான் 'மேக்குவாரி வங்கி'யில் பணியில் சேர்ந்தார் பிராமி ஜெகன். பின்னர், உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான, ஜே.பி.மார்கனில், ஆஸ்திரேலியாவிலும் மற்றும் 2002 -ஆம் ஆண்டு முதல் லண்டனிலும் பணியாற்றினார். லண்டனில் இருந்த பொழுது இதழியல் துறையில் ஆர்வம் ஏற்பட்டு, 'லண்டன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிச'த்தில் இதழியல் பட்டம் பெற்றார். மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி, வங்கி வேலையை விட்டு விட்டு எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியில் பணியாற்றியவர், தற்போது ' அஃபிடா' என்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவனத்தில் தகவல் தொடர்புத் துறை அதிகாரி!

                 இவர் இலங்கையில் பிறந்திருந்தாலும், 2002 வரை..அதாவது அவருக்கு 22 வயதாகும் வரை இலங்கைக்குச் சென்றதில்லையாம். "இலங்கையின் நிகழ்வுகளைச் செய்திகளாகப் படித்திருந்தாலும், போரின் கோரத்தாண்டவத்தை நேரில் சென்று பார்த்தபோது நிலைகுலைந்து போனேன். அதன் தாக்கத்தால் தான், உலகில் தங்கள் வாழ்க்கையில் கொடுமைகளைத் தவிர வேறு எதையுமே சந்தித்திராத இலங்கைத் தமிழர் உள்ளிட்ட மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே இதழியல் படித்தேன்" என்று கூறுகிறார்.


              இவர் சேர்ந்துள்ள கிரீன்ஸ் கட்சி ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய கட்சி. சராசரியாக 12 முதல் 16 சதவிகிதம் வரை வாக்குகளைக் கொண்டது. "நேர்மை, மனிதநேயம், சுற்றுச்சூழல், வறியவர்களைச் சுரண்டுதலை எதிர்த்தல், எல்லார்க்கும் எல்லாமும்" போன்ற கொள்கைகளைத் தன உயிர் நாடியாகக் கொண்ட கட்சி. இதன் தலைவர், செனட்டர் பாப் பிரவுன். "போராடும் குணமும், கொள்கைப் பிடிப்பும் கொண்ட கட்சியாக கிரீன்ஸ் கட்சி இருப்பதால் தான் அதில் சேர்ந்தேன்" என பிராமி கூறியுள்ளார். எப்படியிருந்தாலும் ஆஸ்திரேலியத் தேர்தலில் முதல் தமிழ்ப் பெண் கலந்து  கொள்வது நமக்குப் பெருமைமிக்க விஷயம் தானே! அவர் தேர்தலில் ஜெயித்து சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்!

நன்றி: ஜூ.வி.

        
Related Posts with Thumbnails