பிறந்த நாள்...

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010


    

குழந்தைக்கு முதலாவது 
       பிறந்தநாளைக் 
             கொண்டாடுகிறார்கள்...
 உண்மையில் தாய்க்கும் இது,
       இரண்டாவதாகப் 
              பிறந்த, நாள்தானே!!!
 ஏன் அறியவில்லை 
            இதை எவரும்???
 எவருந்தான் அறியவில்லை, 
    நீயுமா உணரவில்லை???

                                      

டைபாய்டு

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

               போன பதிவில் என் குழந்தைக்கு நேர்ந்த 'Viral Diarrhoea' பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இதற்குப் பின்னர், குழந்தைக்குப் பத்துமாதம் இருக்கும் பொழுது, கடுமையான காய்ச்சல் வந்தது. அப்பொழுதும் ' All India Institute of Medical Sciences' (AIIMS)- க்குத் தூக்கிச்சென்றோம். அங்கு நிமோனியாக் காய்ச்சலாக இருக்கலாம் என்று எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப்பார்த்துக் கடைசியில் ' Viral Fever'  என்று அங்குள்ள டாக்டர்கள் கூறிவிட்டனர்.  பின் நாங்களும் வீட்டிற்கு அருகிலுள்ள டாக்டரிடம் காண்பித்து, குழந்தைக்கு Injection போட்டு, மருந்துகள் எல்லாம் கொடுத்து வந்தோம். ஆனால் ஒரு வாரமாகியும் காய்ச்சல் கொஞ்சம்கூடக் குறையவேயில்லை.                அப்பொழுது, டெல்லியில் வெயில் வேறு, பகலில் 50டிகிரியும் இரவில் 39டிகிரியும் இருந்து வந்தது. இதனால் டாக்டர் இந்த க்ளைமேட்டினால்தான் Temperature குறையவில்லை என்றுகூறி, தமிழ்நாட்டிலுள்ள சொந்த ஊருக்குக் குழந்தையைத் தூக்கிச்செல்லுமாறு கூறினார். குழந்தைக்கு நன்கு குணமான பிறகும், டெல்லியில் வெயில் குறைந்த பிறகும் வருமாறு கூறினார்.

எனவே ஊருக்குக் குழந்தையைத் தூக்கிச்சென்று அங்குள்ள டாக்டரிடம் காண்பித்தோம். அங்கு சென்றும் 2 நாட்களாக Temperature குறையாததால், டாக்டர் Blood test, Urine test எடுத்துப் பார்த்து எல்லாம் நார்மல்தான் எனக்கூறி, தண்ணீரில் துணியை நனைத்து உடம்பை அடிக்கடித் துடைத்து விடச் சொன்னார். நடுராத்திரி கூட Temperature அதிகமாக இருந்தால், இவ்வாறு செய்யச்சொன்னார். அப்படித் துடைக்கும்போது குழந்தை கதறி அழும். பார்க்க ரொம்பக் கஷ்டமாக இருந்தது. பின்னர் அந்த டாக்டர் வேறு ஒரு  டாக்டரிடம் காண்பிக்கச் சொன்னார். இவ்வாறாக, ஒவ்வொருவராக 3  டாக்டர்கள் பார்த்துக் கடைசியில் 17 நாட்களாகியும் காய்ச்சல் குறையாததால், குழந்தை Critical Situation-ல் இருக்கிறது; Temperature 103 டிகிரிக்குக் கீழ் குறையவே இல்லை; இன்னும் 1 டிகிரி அதிகமானால் கூட Fits வர வாய்ப்புள்ளது என்றுகூறி, உடம்பை Full Scan பண்ண வெண்டும் அந்த வசதி இந்த ஊரில் இல்லை, அருகிலுள்ள பெரிய ஊரில், ஒரு பெரிய ஹாஸ்பிட்டலுக்குப் போகுமாறு எழுதிக்கொடுத்தார்.

 அங்கு சென்றால், அங்கும் Blood test, Urine test மற்றும் Full Scan எல்லாம் எடுத்தார்கள். குழந்தைக்கு நரம்பு வெளியே தெரியாததால், Blood test எடுப்பதற்கும் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கும் குத்திக் குத்தி, பாவம்! அழுது, கதறவிட்டார்கள். பின்னர் அங்கு அட்மிட் பண்ணச்சொன்னார்கள். மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் என எல்லா டெஸ்ட்டும் எடுத்துப்பார்த்து, 3 நாட்கள் கழித்து, 20வது நாள் ' டைபாய்டு' என உறுதிப்படுத்தினார்கள்.     
அதற்குள் குழந்தை, 20நாட்கள் தொடர்ந்து அடித்த காய்ச்சலால் சோர்ந்து, வெளிறிப் போய்விட்டது. அதன்பின் டைபாய்டுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, காய்ச்சல் முற்றிலுமாக விட்டது.2 நாட்கள் முழுவதுமாகக் காய்ச்சல் இல்லாமல் ஆன பின்புதான், 'டிஸ்சார்ஜ்' செய்தார்கள்.
               Chief டாக்டர், " குழந்தைக்குப் பொதுவாக டைபாய்டு வராது; அதுவும் 10மாதக் குழந்தைக்கு வாய்ப்பே இல்லை; 2 வயதில்தான் குழந்தைகளுக்கு டைபாய்டுக்கான தடுப்பூசியே போடப்படுகிறது. ஏனெனில், அதன்பின்தான் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்; இப்பொழுது 10 மாதக் குழந்தைக்கு வந்திருக்கிறதென்றால், மிக ஆச்சரியமாக உள்ளது. இது தண்ணீரால்தான் பரவியிருக்கிறது" என்று கூறினார். திரும்பவும் டைபாய்டு வராமலிருக்க, 10 மாதத்திலேயே தடுப்பூசி குழந்தைக்குப் போடப்பட்டது. அதன்பின்தான் முழுவதுமாகக் குணமாகியது.
              எனக்கு என்ன ஆதங்கம் என்றால், இதை 20 நாட்களாக கண்டுபிடிக்காமல் விட்டதுதான். டெல்லியில் ஒரு 10 மாதக் குழந்தைக்குத் தொடர்ந்து 10 நாட்களாகக் காய்ச்சல் இருந்தும், எந்த டாக்டரும் ஒரு Blood test கூட எடுக்கச் சொல்லவில்லை . ஊருக்கு வந்து, தொடர்ந்து 20 நாட்களாகக் காய்ச்சல் இருக்கிறது என Blood test எடுத்தும் டைபாய்டுதான் என எந்த டாக்டராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை . 10 மாதக் குழந்தைக்கு வராது என்பதால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிறார்கள். ஆனால் 20 நாட்களாக குழந்தைப் பட்ட அவஸ்தையை சொல்லிமுடியாது. குழந்தையையும், குழந்தைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும் எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தும், கொதிக்க வைத்தத் தண்ணீரையே ஃப்ளாஸ்கில் ஊற்றிப் பயன்படுத்தியும், Viral Diarrhoeaவாலும் டைபாய்டாலும் குழந்தை ஒரு வயதிற்குள் 2முறை பாதிக்கப்பட்டது மிகப் பெரிய கொடுமை! 

எனது குழந்தையின் வயிற்றுப்போக்கு...

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

               எனது குழந்தைக்கு எட்டு மாதமாக  இருக்கும்பொழுது ஒருநாள் திடீரென்று வாந்தியும், பின் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. உடனே வீட்டிற்கு அருகிலுள்ள டாக்டரிடம் காண்பித்தோம். மருந்துகள் கொடுத்தும் இரவெல்லாம் வயிற்றுவலியால் துடித்து அழுதது. வயிற்றுப்போக்கும் நிற்கவில்லை. ஏழாவது மாதத்திலிருந்தே இட்லி,பருப்பு சாதம் மற்றும் பவுடர் பாலும் பாக்கெட் பாலும் கொடுத்து வந்தேன். ஆனால் அன்று பவுடர் பாலோ, பாக்கெட் பாலோ எது கொடுத்தாலும் பால் திரிந்த மாதிரி 'motion' போக ஆரம்பித்துவிட்டது.
              டெல்லியில் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள கிளினிக்குகளில் எல்லாம் மாலை 6 to 9 மட்டுமே டாக்டர்களின் பார்க்கும் நேரம். இதனால் நடுஇரவில் குழந்தை அழுதவுடன் All India Institute of Medical Sciences (AIIMS) -க்குத் தூக்கிச் சென்றோம். அங்கு அவசரப் பிரிவில் உள்ள டாக்டர் பரிசோதித்துவிட்டு, குழந்தைக்கு 'Viral Diarrhoea ' என்று கூறினார். "இது எந்த மருந்து கொடுத்தாலும் உடனே நிற்காது; ஐந்து நாட்கள் வரை இருக்கும்; அதன்பின்தான் குணமாகும்" என்றார். குழந்தைக்குப் பவுடர் பாலோ, பாகெட் பாலோ எதுவும் கொடுக்கக் கூடாது என்று கூறிவிட்டார். இட்லி, சாதம் என்று எதுவும் குழந்தை சாப்பிட மறுத்துவிட்டதால் என்ன கொடுப்பதென்றே தெரியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டேன். ஊருக்கு ஃபோன் செய்து கேட்டால் 'ஆரோ ரூட் மாவு' அல்லது ஜவ்வரிசியை வறுத்துப் பொடி பண்ணிக் கஞ்சியாகக் கொடுக்கச் சொன்னார்கள். இங்கு ஆரோ ரூட் மாவு கிடைக்காததால் ஜவ்வரிசிக் கஞ்சி, சத்துமாவுக் கஞ்சி இவற்றைத்தான் மாற்றி, மாற்றிக் கொடுத்து வந்தேன். Dehydrate ஆகி விடாமல் இருக்க டாக்டர் 'Pedialite ' கொடுக்கச் சொன்னார். இரவெல்லாம் வயிற்றுவலியால் தூங்காமல் துடித்துப் பின், நிறைய antibiotics , தினமும் ஒரு ஊசி என நான்கு injection போட்ட பிறகு ஐந்து நாட்கள் கழித்துதான் குணமாகியது. ஒரு வாரமாக பாவம் குழந்தை படாதபாடு பட்டுவிட்டது. 
               
                  பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து, தமிழ்நாட்டிற்கு சொந்த ஊருக்குப் போன போது, அங்கும் இதே போல ஒருநாள், பால் திரிந்தது போல வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே அங்குள்ள டாக்டரிடம் தூக்கிச்சென்றோம். அவர் எந்த மருந்தும் கொடுக்கவில்லை. முதலில் Nestle - யின் Nestum -stage 1 (Rice flavour ) சிறிது உப்பு போட்டுக் குழந்தைக்குக் கொடுக்கச் சொன்னார். பாலோ, மற்ற எந்த உணவோ கொடுக்க முடியாத நிலையில், Nestum -மையே பாலுக்குப் பதிலாகக் கொஞ்சம் தண்ணியாக கஞ்சிபோல கொடுக்கச் சொன்னார். என்ன ஆச்சர்யம்! அவ்வாறு இரண்டு முறைக் கொடுத்ததும் ஒரே நாளில் வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது. இதேபோல அப்பொழுதும் கொடுத்திருந்தால் ஒருவேளை ஒரே நாளில் நின்றிருக்குமோ, என்னவோ? அங்கு இதுபோல் எந்த டாக்டரும் சொல்லவில்லை. குழந்தையும் பாவம் ஒருவாரம் கஷ்டப்பட்டிருக்காது; நாங்களும் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம். இதை நான் அனுபவத்தில் கண்டதால், கைகுழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எழுதுகிறேன்.                 

விளம்பரங்கள்...

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

               இன்று விளம்பரங்கள் நமது வாழ்வின் ஓர் அங்கமாகவே வளர்ந்துவிட்டன. அந்த அளவிற்கு விளம்பரத்துறை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைத்துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறது. நாமே விளம்பரங்களைப் பார்த்துத்தான் பல பொருட்களை வாங்குகிறோம். புதிதாகச் சந்தையில் வந்திருக்கும் பொருட்களையும் தெரிந்துகொள்ள இந்த விளம்பரங்களே உதவுகின்றன. இவ்வாறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில், சில மோசமானவையாகவும் முகம் சுளிக்கும் வண்ணமும்  உள்ளன. இதனால் திரைப்படத்துறைக்கு உள்ளது போலவே விளம்பரத்துறைக்கும் தணிக்கைக்குழு வேண்டும் என்ற வேண்டுகோள் நீண்ட நாட்களாக உள்ளது. இத்தகைய மோசமானவைகளைத் தவிர பல நல்ல விளம்பரங்களும் உள்ளன. அதில் குறிப்பிடும்படியாக சாக்லேட் விளம்பரங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள், ஊட்டச்சத்து பானங்கள் இவற்றின் விளம்பரங்கள் உள்ளன. 

               சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனக்குப் பிடித்த சில விளம்பரங்கள்: 
 • Sleepwell மெத்தைக்கான விளம்பரம்:               

              இதில் இரண்டு, மூன்று வகையான விளம்பரங்களை ஒளிபரப்புகிறார்கள். "தூக்கம் குறைவாக இருந்தால் நமக்குரியவை கூடத் தெரியாது; ஞாபகமறதி உண்டாகும். Sleepwell மெத்தையில் உறங்கினால் நன்கு தூக்கம் வரும். எனவே தவறுகள் நடக்காது" என்று ஒளிபரப்புகிறார்கள். இவை அனைத்துமே நகைச்சுவையாகவும் யோசிக்கும்படியாகவும் உள்ளன.

 • Dairy Milk Chocolate விளம்பரம்:


                  ஒரு பரதநாட்டியக் குழுவிலுள்ள பெண்கள் மேடையில் ஆடுவதற்கு முன்பாக திரைமறைவில் சாக்லேட்டை ருசித்து சாப்பிடுவது மிக அருமையாக உள்ளது. இதைப்பார்த்ததும், உடனே சாக்லேட் சாப்பிடவேண்டும் என்ற ஆசை வந்துவிடும். பழைய Dairy Milk Chocolate விளம்பரங்கள் முதல் இப்பொழுது ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் வரை அனைத்துமே நன்கு ரசிக்கும்படியாக எடுத்துள்ளனர்.

 • Kitkat Chocolate விளம்பரம்: 


                நண்பர்கள் இருவர் பார்க்கில் உட்கார்ந்திருக்கும்போது ஒருவர்  Kitkat சாப்பிடுகிறார். அப்போது அவருக்கு மட்டும் அங்குள்ள மரத்திலிருந்து இரண்டு அணில்கள் இறங்கிவந்து டூயட் பாடுவது போலத் தெரிகிறது. இந்த விளம்பரம் மிக மிக அருமையாக உள்ளது. அனிமேஷனில் அணில்களின் டூயட் குழந்தைகளையும் கவரும்வண்ணம் உள்ளது.

              இந்த விளம்பரங்கள் அனைத்தும் எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். இவற்றைப் பார்க்கும் பொழுதே மனதுக்கு சந்தோஷமாகவும், திரும்பத்திரும்பப் பார்க்கவும் தூண்டுகிறது. எனவே இவற்றின் வீடியோவை இணைத்துள்ளேன். பலர் இவ்விளம்பரங்களைப் பார்த்திருந்தாலும் பார்க்காதவர்கள் இதனைப் பார்க்கட்டும்.   

பள்ளி விடுமுறைநாட்களும் பாட்டி வீடும்...

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

                எங்களுடைய அம்மாவுக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர்ப் பக்கம். அவர்களுடன் பிறந்தவர்கள் நிறையப் பேர் என்பதால் பெரிய குடும்பம். அவர்கள் எல்லாரும் வெவ்வேறு ஊரில் இருந்ததால் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை விடுமுறைகளில் தான் பாட்டி வீட்டுக்குச்செல்வது வழக்கம். நாங்கள் குழந்தைகள் எல்லாரும் வருடா வருடம் அந்த சம்மர் லீவுக்காகக் காத்திருப்போம். அந்த ஒரு மாதமும் போவதே தெரியாது; அவ்வளவு ஜாலியாக இருக்கும்!


               எங்கள் ஊரில் இருந்து பாட்டி ஊருக்குப் பஸ்சில் போகும் பொழுதே குதூகலம் தொற்றிக்கொள்ளும். அதுவும் அந்த ஊர்ப் பச்சையான வயல்கள், ஆறு, குளம் இவற்றையெல்லாம் பஸ்சின் ஜன்னல் வழியே  பார்த்துக் கொண்டே போவது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!                  அந்தக் காலத்து ஓடு போட்ட, முற்றங்களும் தூண்களும், நடுவே பெரிய ஊஞ்சலும் உள்ள வீடு எங்கள் பாட்டி வீடு. வீட்டின் முன்புறம் தூண்களும் திண்ணைகளும், பின்புறம் பெரிய தோட்டமும் இருக்கும். அந்தத் திண்ணையில் உட்கார்ந்து பல்லாங்குழி, தாயம் விளையாடுவோம்; முற்றத்தைச் சுற்றிச்சுற்றி ஓடிப் பிடித்து விளையாடுவோம். யாராவது சேட்டைகள் பண்ணினால் முற்றத்துக் கம்பிகளில் தொங்கவிடும் தண்டனையும் உண்டு. கீழே இறங்க முடியாமல் தவித்து, கை வலித்து அழுகை வரும். எங்களுக்குள் சண்டைகளும் பல வரும். அதற்காக அவரவர் அம்மாவிடம் அடி வாங்குவோம். உடனே சமாதானமும் ஆகிவிடுவோம். நாங்கள் லீவுக்கு வருவது தெரிந்தவுடன் பாட்டி நிறைய பலகாரங்கள் செய்து வைத்திருப்பார்கள். அவற்றையெல்லாம் பெரிய ஊஞ்சலில் எல்லாரும் உட்கார்ந்து கொண்டு ஊஞ்சலாடிக்கொண்டே சாப்பிடுவோம்.


 வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் தென்னை முதல் மாமரம் வரை நிறைய மரங்களும், மல்லிகை, கனகாம்பரம், செம்பருத்தி போன்ற பூச்செடிகளும் உண்டு. அங்கு பாம்பு, கீரிப்பிள்ளை மற்றும் பலவகையான பறவைகளும் வரும். நான் நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, கட்டு விரியன் எனப் பல வகையான பாம்புகளையும் பார்த்ததே அங்குதான். மதியச்சாப்பாடு முடிந்ததும் தோட்டத்தில் வட்டமாக உட்கார்ந்து ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டே சீட்டு, கேரம், தாயம் விளையாடுவோம்; சொப்புச் சாமான் வைத்து விளையாடுவோம்; கிரிக்கெட், டென்னிஸ் விளையாடுவோம்; மரங்களிடையே கயிற்று ஊஞ்சல் ஆடுவோம்.

பின்னர், பக்கத்திலுள்ள ஆற்றிற்கு அல்லது குளத்திற்கு குளிக்கச்செல்வோம். அங்கு எனக்குப் படித்துறையில் உட்கார்ந்து எல்லாருடைய துணிகளையும் காவல் காப்பதுதான் வேலை.

              பாட்டி வீட்டின் முன்புறம் ஒரு கோவிலும், அதன் பின்னால் ஒரு குளமும் உண்டு. அந்தத் தெருவும் ரதவீதி போல பெரியதாக இருக்கும். அவ்வளவு பெரிய தெருவில் பெரிய வண்டிகள் எதுவும் போகாது. அதனால் மாலைவேளையில், தெருவில் மற்ற வீட்டுப்பிள்ளைகளுடன் நாங்களும் சேர்ந்து இருட்டும் வரை விளையாடுவோம். இருட்டிய பின், தெருவிலேயே வட்டமாக உட்கார்ந்து பேய்க்கதைகள் பேசுவோம். அதனால் இரவில் பேய்க்கனவுகள் வந்து பயமுறுத்தியதும் உண்டு. இவ்வாறு நேரம் போவதே தெரியாமல் சாப்பாடு, தூக்கம் கூட இல்லாமல் எப்போதும் விளையாட்டுதான் எங்கள் உலகமாக இருந்தது. லீவு முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது அழுகை அழுகையாக வரும். பஸ்சில் அழுது கொண்டே வருவேன். லீவு முடிந்து பள்ளி ஆரம்பித்ததும், முதல்நாள் புதுவகுப்பில் நாங்கள் தோழிகள் ஒவ்வொருவரும் அவரவர் ஊர்க்கதைகளைப் பேசுவோம். ஒவ்வொரு வருடமும் அடுத்த விடுமுறைக்கான காத்திருப்புடன் இது தொடரும். இன்று பாட்டியும் இல்லை; பாட்டி வீடும் இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் எங்கள் மனதிலிருந்து நீங்கவில்லை.
              நாங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது வெவேறு ஊர்களிலும், வெளிநாடுகளிலும் இருப்பதால், முன்பு போல வருடத்துக்கு ஒருமுறைகூட சந்தித்துக்கொள்ள முடிவதில்லை. மீண்டும் அந்தப் பள்ளி விடுமுறைநாட்கள் வரப்போவதில்லை; அந்த இன்பம் இனி உலகின் எதற்கும் ஈடாவதுமில்லை. இனி வரும் காலத்தில் எங்கள் பிள்ளைகளுக்கு அவை எல்லாம் கிடைக்குமா எனத்தெரியவில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்மயமாகி வருவதால் விளையாட்டுக்களும் கம்ப்யூட்டர்மயமாகி விட்டன. எனவே வாய்ப்புகளும் குறைவாகத்தான் உள்ளது.

ஆஸ்திரேலியத் தேர்தலில் முதல் தமிழ்ப் பெண்! -பிராமி ஜெகன்

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

              சில மாதங்களுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர்; அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என்பது டிவி, பத்திரிகைகள் மூலமாக நாமறிந்த செய்தி. இன்று 30 வயதுப் பெண்மணி ஆஸ்திரேலிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், மேலவைக்கு (செனட்) 'கிரீன்ஸ் கட்சி'யின் சார்பாகப் போட்டியிடுகிறார்!
            பொதுவாக, புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வரும் தமிழர்கள், அரசியல் அமைப்புகளில் அதிகம் பங்கேற்பதில்லை. பொது அமைப்புகளில் பணியாற்ற விரும்பினால், தமிழ்ச் சங்கங்கள் அமைப்பார்கள்..கோவில் கட்டுவார்கள். அவ்வளவுதான். ஆனால், தமிழ்ப் பெண் ஒருவர், வெள்ளைக்காரர்கள் மட்டுமே போட்டியிடும் பொதுத் தேர்தலில், அவர்களுக்குச் சமமாக அரசியல் களம் இறங்கியிருப்பது ஆச்சரியம்தானே!
           1988 -ல் குடும்பத்துடன் எட்டு வயதுக் குழந்தையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தவர் பிராமி ஜெகன். இவரின் தந்தை அருணாசலம் ஜெகன், சிவில் எஞ்சினியர். தாய் கிருஷ்ணா, ஆசிரியை.

 
                சிட்னியில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் ' இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்' பட்டப் படிப்பை முடித்து, மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான் 'மேக்குவாரி வங்கி'யில் பணியில் சேர்ந்தார் பிராமி ஜெகன். பின்னர், உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான, ஜே.பி.மார்கனில், ஆஸ்திரேலியாவிலும் மற்றும் 2002 -ஆம் ஆண்டு முதல் லண்டனிலும் பணியாற்றினார். லண்டனில் இருந்த பொழுது இதழியல் துறையில் ஆர்வம் ஏற்பட்டு, 'லண்டன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிச'த்தில் இதழியல் பட்டம் பெற்றார். மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி, வங்கி வேலையை விட்டு விட்டு எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியில் பணியாற்றியவர், தற்போது ' அஃபிடா' என்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவனத்தில் தகவல் தொடர்புத் துறை அதிகாரி!

                 இவர் இலங்கையில் பிறந்திருந்தாலும், 2002 வரை..அதாவது அவருக்கு 22 வயதாகும் வரை இலங்கைக்குச் சென்றதில்லையாம். "இலங்கையின் நிகழ்வுகளைச் செய்திகளாகப் படித்திருந்தாலும், போரின் கோரத்தாண்டவத்தை நேரில் சென்று பார்த்தபோது நிலைகுலைந்து போனேன். அதன் தாக்கத்தால் தான், உலகில் தங்கள் வாழ்க்கையில் கொடுமைகளைத் தவிர வேறு எதையுமே சந்தித்திராத இலங்கைத் தமிழர் உள்ளிட்ட மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே இதழியல் படித்தேன்" என்று கூறுகிறார்.


              இவர் சேர்ந்துள்ள கிரீன்ஸ் கட்சி ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய கட்சி. சராசரியாக 12 முதல் 16 சதவிகிதம் வரை வாக்குகளைக் கொண்டது. "நேர்மை, மனிதநேயம், சுற்றுச்சூழல், வறியவர்களைச் சுரண்டுதலை எதிர்த்தல், எல்லார்க்கும் எல்லாமும்" போன்ற கொள்கைகளைத் தன உயிர் நாடியாகக் கொண்ட கட்சி. இதன் தலைவர், செனட்டர் பாப் பிரவுன். "போராடும் குணமும், கொள்கைப் பிடிப்பும் கொண்ட கட்சியாக கிரீன்ஸ் கட்சி இருப்பதால் தான் அதில் சேர்ந்தேன்" என பிராமி கூறியுள்ளார். எப்படியிருந்தாலும் ஆஸ்திரேலியத் தேர்தலில் முதல் தமிழ்ப் பெண் கலந்து  கொள்வது நமக்குப் பெருமைமிக்க விஷயம் தானே! அவர் தேர்தலில் ஜெயித்து சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்!

நன்றி: ஜூ.வி.

        

எந்திரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா

புதன், ஆகஸ்ட் 18, 2010

            
               இறுதியாக கடந்த ஞாயிறன்று சுதந்திரத்தினத்தை முன்னிட்டு ஹிந்தியிலும் "ரோபோ" பட இசை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக ஹிந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டார் திரு. அமிதாப்பச்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

   
             அதே போல சில நாட்களுக்கு முன்பு தெலுங்கிலும் "ரோபோ" இசை வெளியீட்டு விழா தெலுங்கு சூப்பர் ஸ்டார் திரு. சிரஞ்சீவி அவர்கள் இசைத்தட்டு வெளியிட மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


               தமிழில் கேட்கவே வேண்டாம். கடந்த ஜூலை 31 - ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக மிகக் கோலாகலமாக நடைபெற்றது. அதில் எண்ணற்றோர் கலந்து கொண்டனர். சன் டிவி திரு. கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில், திரு. ஷங்கர் டைரக்சனில், திரு. வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளில், நமது ஆஸ்கர் நாயகன் திரு. A.R.ரகுமான் இசையில் மிகுந்த எதிர்பார்ப்போடு "எந்திரன்" திரைப்படம் வெளிவரத் தயாராக இருக்கிறது. செப்டம்பரில் படம் வெளிவரப்போவதாகத் தெரிவித்துள்ளனர். ஆக எந்திரன் (ரோபோ) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவரத் தயாராக உள்ளது. அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போலப் படம் இருக்குமா எனத் தெரியவில்லை. "சிவாஜி" பட ரெக்கார்டை முறியடிக்குமா எனவும் தெரியவில்லை. படம் வருவதற்கு  இன்னும் சில நாட்களே உள்ளன.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

                 அதற்குள்ளாக இன்டர்நெட்டில் படத்தின் கதைப் பற்றி ஒவ்வொரு விதமாக ஏகப்பட்ட மெயில்கள் குவிந்தவண்ணம் உள்ளன. எல்லாப் பத்திரிக்கைகளிலும் இப்பொழுது முக்கியச் செய்தியே எந்திரன் படப் பாடல்களைப் பற்றித்தான். அதேபோல் "தேவதை" இதழிலும் 'தேவதை டாக்கீஸ்' பகுதியில் எந்திரன் படப் பாடல்களைப் பற்றி எஞ்சினியர்களின் டெக்னிக்கல் கண்ணோட்டத்தில் பிடித்த பாடல் வரிகளை விமர்சித்து எழுதச் சொல்லியிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய " அரிமா அரிமா" பாடலின்
"அஃறினையின் அரசன் நான்;
காமுற்ற கணினி நான்;

சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும் 
சிலிகான் சிங்கம் நான்;"  வரிகள் இந்த இதழ் தேவதைப் பதிப்பில் வந்துள்ளது. அதைத் தொகுத்து அனுப்பிய திருமதி.விக்னேஷ்வரிக்கும் தேவதை இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.

சுதந்திர தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒரு பார்வை...

திங்கள், ஆகஸ்ட் 16, 2010

நேற்று சுதந்திர தினத்திற்காக எல்லா டிவி சேனல்களிலும் திரைப்படங்களும், புதிய திரைப்படங்கள் உருவாகும் விதம் மற்றும் நடிகர்களின் பேட்டி போன்றவை தான் ஒளிபரப்பாகின. அதிலும் விதிவிலக்காக ஒன்றிரண்டு நல்ல ப்ரொக்ராம்களும் ஒளிபரப்பாகின. அவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

 • சன் டிவியில் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் பட்டி மன்றம் மிகவும் ரசிக்கத் தகுந்ததாக  இருந்தது.  


              பட்டிமன்றத்தின் தலைப்பு "இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் இன்பம் என்பது திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா" என்பது. இரு தரப்பு வாதங்களுமே மிக நன்றாக இருந்தது. கடைசியில் நடுவர் திரு.பாப்பையா அவர்கள் , அவரது காதல் திருமண வாழ்க்கை அனுபவத்தினால் இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் இன்பம் என்பது திருமணத்திற்குப்  பின்பே என்று தீர்ப்பு வழங்கினார். 


 • விஜய் டிவியில் நடிகர் திரு. சூர்யா அவர்களின் அகரம் Foundation சார்பில் நடைபெற்ற  "விதை"  என்னும் நிகழ்ச்சி மனதைத் தொடும்படி இருந்தது.


                    நடிகர். சூர்யா ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் திட்டத்தை இதன் மூலம் தெரிவித்தார். அதன்படி ஒரு மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடமும், SRM Engineering College-ல் ஐந்து இடங்களும் பெற்றுத் தந்துள்ளார். அதைத் தவிர பலர் இத் திட்டத்திற்கு நிதி உதவியும் அளித்துள்ளனர். எத்தனையோ மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண் வாங்கியும் அவர்களுக்கு பிடித்த மேற்படிப்பை படிக்க முடியாமல் கஷ்டப்படுவதை அந்த நிகழ்ச்சியின் மூலமாக பார்க்க முடிந்தது. மிகவும் வருத்தமாக இருந்தது. நாமும் நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும் எனத் தோன்றியது.


 • அடுத்து அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான "நீயா நானா" நிகழ்ச்சி. 

    

  இது சிறப்பு நிகழ்ச்சி என்பதால், திரு.ஞானி, திரு. சோம.வள்ளியப்பன், திரு. அமுதன், திரு. முத்துக்குமார், திரு.ராமசாமி மற்றும் பல பிரபலமானவர்கள் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்பு " உலகமயமாதல்". இரு தரப்பினரின் விவாதமும் மிக சூடாக, யோசிக்கும் படியாக இருந்தது.

  அழகு நிலையங்களின் அலட்சியம்...

  ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010


             போன blog-ல் பெருகிவரும் அழகுநிலையங்களில் எத்தனை  அங்கீகாரம் பெற்றவை, முறையான பயிற்சியோடு ஆரம்பிக்கப்பட்டவை எனத் தெரியவில்லை என்று எழுதியிருந்தேன். இப்படி முறையான பயிற்சி இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட அழகு நிலையங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர். இதைப் பற்றிய செய்திகளை நாம் தினம்தினம் பத்திரிகைகளில் படித்துக்கொண்டிருக்கிறோம். ISRO- ல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் என் தோழிக்கு இதே போல ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. தோழி, அவங்க கல்யாணத்துக்கு இரண்டு  நாள் முன்பு ஒரு பிரபலமான பார்லருக்கு பேஷியல் செய்துகொள்ளப் போனாங்க. முடித்துவிட்டு வீட்டுக்குப்போன இரண்டு மணி நேரத்திலேயே  முகமெல்லாம்  சிவப்பு சிவப்பாய்ப் புள்ளிகள்.  கூடவே அரிப்பும்,எரிச்சலும் வேறு. ஆசை ஆசையாய் பேஷியல் செய்து கொண்ட அவங்களுக்கு பயங்கர ஷாக். இரண்டு நாளில் கல்யாணம் என்பதால்  ரொம்ப அழுதுட்டாங்க. உடனே வீட்டில் இருந்தவர்களெல்லாம் திட்டி ஆளாளுக்கு யோசனை சொன்னார்கள். கடைசியில் டாக்டரிடம் காண்பித்து அலர்ஜிக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்ட பிறகு, முக எரிச்சல் மட்டும் நின்றது. பாவம்! கல்யாணத்தன்றும் அவங்க முகத்தில் சிவப்புப் புள்ளிகள் இருந்தன.ஒரு வாரம் கழித்துதான் அந்தப் புள்ளிகள் மறைந்தன. இது வாழ்க்கையில் மிக மிக மறக்க முடியாத சம்பவமாக அவங்களுக்கு ஆகிவிட்டது. அதற்குப்பிறகு அவங்க பார்லருக்குப் போவதற்கு ரொம்ப பயப்படுறாங்க.
                   மிகப் பிரபலமான பெரிய பார்லர்களே இப்படி என்றால் தெருவுக்கு இரண்டு, எனப் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் பார்லர்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது. அங்கு வருபவர்களுக்கு எல்லாம் அவர்கள் தாங்கள் உபயோகிக்கும் கிரீம்கள் மற்றும் மற்ற அழகு சாதனப் பொருட்களெல்லாம் ஒத்துக்கொள்கிறதா என்று ஸ்கின் டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது இல்லை. மேலும் அவர்கள் பயன்படுத்தும் பிரஷ், டவல் இவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வதுமில்லை. இதனால் சரும நோய்களும்,அலர்ஜியும் உண்டாகிறது. இது தெரியாமல் பலர் இத்தகைய பார்லர்களுக்குச் சென்று பணத்தையும் செலவழித்து அவதியும் படுகின்றனர். விலை மலிவாக இருக்கிறதென்று இத்தகைய பார்லருக்கெல்லாம் போகக்கூடாது. ஒரு பார்லருக்குப் போனால் அங்கு அவர்கள் எந்த மாதிரியான பொருட்கள் உபயோகிக்கிறார்கள்; அவை நமக்கு ஒத்துக்கொள்ளுமா என்பதைத் தெரிந்து கொண்டே செல்ல வேண்டும்.கவனமாக இல்லை என்றால் ஆபத்து நமக்குத்தான். நான் அனுபவத்தில் இந்தக் கஷ்டத்தைப் பார்த்ததால் கண்டிப்பாக இந்த சம்பவத்தை எழுதவேண்டுமெனத் தோன்றியது.   

  அழகுக்குறிப்புகள்

  வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

                தற்போது பெரிய நகரங்களிலிருந்து,கிராமங்கள் வரை அழகு நிலையங்கள் இல்லாத  ஊரே இல்லை எனலாம். தெருவுக்கு ஒன்று அல்லது இரண்டு ப்யூட்டி பார்லர்கள் இருக்கின்றன.இவற்றில் எத்தனை அங்கீகாரம் பெற்றவை என்பது வேறு விஷயம். முன்பு பார்லர் என்பது பணக்கார பெண்களுக்கும் நடிகைகளுக்கும் மட்டுமே உரியதாக இருந்து வந்தது. ஆனால் இன்று தினக்கூலி முதல் கவர்னர் வரை பார்லர் போகாத பெண்களே இல்லை எனலாம். அத்தகைய பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் செல்கின்றனர். அவர்களுக்கெனத்  தனி பார்லர்களும்  உள்ளன. அந்த அளவிற்கு அழகு பற்றிய விழிப்புணர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளும் செல்கின்றனர். இந்த அளவுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட டிவி சேனல்கள், பத்திரிகைகள் போன்ற ஊடகங்களும் உறுதுணையாக உள்ளன. நான் அழகுக்கலை நிபுணர் இல்லை என்றாலும் என் பங்குக்கு எனக்குத் தெரிந்த, படித்த அழகுக் குறிப்புகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  • காய்ச்சாத பாலை முகத்தில் பூசி,சில நிமிடம் கழித்துப் பஞ்சால் துடைத்தால் முகம் பளிச்சென்றும், மிருதுவாகவும் இருக்கும்,
  • ஒரு டீஸ்பூன் பாலுடன் சில துளி கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டர் சேர்த்துப் பூசினால் முகம் பொலிவு பெறும்.
  • பாசிப் பயறு மாவு அல்லது முல்தானிமட்டியுடன் ரோஸ்வாட்டர் கலந்துப் பூசினால் முகம் பொலிவுறும்.
  • உருளைக்கிழங்கு சாறு அல்லது கேரட் சாறு எடுத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
  • கடலை மாவுடன் பால் ஏடு கலந்து பூசி வந்தால் பருக்கள் மறையும்.
  • சோம்பைப் பவுடராக்கி  ரோஸ்வாட்டர் கலந்துப் பூசினாலும் பருக்கள் குறையும்.
  • புதினா இலையை அரைத்து பரு உள்ள இடங்களில் தடவலாம்.
  • தேனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து தேய்த்து வந்தால் கழுத்தின் கருமை நிறம் நீங்கும்.
  • அன்னாசிப் பழச்சாறுடன் முல்தானிமட்டி கலந்துப் பூசினால் கழுத்தில் கறுப்பு  நிறம் மறையும்.
  • புளித்தத் தயிரை முகம் மற்றும் கைகளில் தேய்த்து வந்தால் வெயிலினால் ஏற்படும் கருமை மாறும்.

  ஆரம்பம் .......

  ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2010

  வணக்கம். ரொம்ப நாளா blog எழுதணும்னு ஆசை. ஆனா என்ன எழுதறது, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு.  சரி எழுதிதான் பார்ப்போம்னு நானும் களத்துல இறங்கிட்டேன்.
  எழுத ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகப்போகுதுன்னு.
  Related Posts with Thumbnails