நாகர்கோவில் - முட்டம் பீச்

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

          முட்டம் பீச் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது
சினிமாதான். இங்கே கடலோரக் கவிதைகள், அலைகள்
ஓய்வதில்லை போன்ற பல படங்கள் எடுத்திருக்காங்க.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில்
இதுவும் ஒன்று. இந்த பீச் நாகர்கோவிலில் இருந்து 16 கி.மீ 
தூரத்தில் உள்ளது.  நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 
நிறைய பஸ்கள் அடிக்கடி இருக்கின்றன.
        
                  சொத்தவிளை பீச்சைப் போல இது குளிப்பதற்கு ஏற்ற
கடற்கரை இல்லை. இங்க அலையின் வேகம் அதிகமாக இருக்கு.
பாறைகள் அதிகமா இருக்குற இந்த  பீச்சுல, அலைகள் வேகமா
வந்து பாறைகளில் மோதறது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கு, பெரிய பெரிய அலைகளாக, ஆள் உயர  அலைகளாக
வருது. அலைகள் ஒவ்வொன்றும் ஆக்ரோஷமா வந்தது.
பார்ப்பதற்கே பயமா இருந்தது. அதையும் மீறி, தைரியமா கால்
நனைக்கப் போனா, என் கால் கொலுசை அலை எடுத்திட்டு
போயிடுச்சு. எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியலை.
குளிப்பதற்காக வந்து வாரம் ஒருத்தராவது, கடலில் மூழ்கி
இறந்துடராங்கன்னு அந்த ஊர்க்காரர் ஒருவர் எங்களை
எச்சரித்தார். அலைகளின் சீற்றத்தினால், கடலுக்குள் போகக்
கூடாது என்பதற்காக ஆங்காங்கு இரும்புக் கம்பியால் வேலிகள் போடப்பட்டிருக்கிறது. அந்த வலிமையான இரும்புக் கம்பிகள்
வளைந்தும், உடைந்தும் போயிருப்பதைப் பார்த்தாலே, அது
நமக்குப் புரியும்.


             
 
 
           இங்க ரொம்ப பழமையான கலங்கரைவிளக்கம் ஒன்று
இருக்கு. மேலும் கரையிலிருந்து பீச்சைப் பார்க்க, நிறைய
சிமென்ட் பெஞ்சுகள் அழகாக கட்டப்பட்டிருக்கின்றன. குடில்கள்
போல அமைத்து, அதுல வட்ட வடிவ பெஞ்சுகள்
கட்டியிருக்காங்க. இதனால பீச் அழகாகவும், சுத்தமாகவும்
இருக்கு. முட்டம் பீச்சுக்குப் போற வழியில் செம்மண் கரடு
ஒன்று இருக்கு. செக்கச்செவேல்னு பார்க்கவே அவ்வளவு
அழகாக இருக்கிற இங்கும் நிறைய சினிமா ஷூட்டிங்
எடுத்திருக்காங்க.

          முட்டத்திற்கு அடுத்தாற்போல , கடியாப்பட்டினம் என்ற
பீச் இருக்கு. அங்க, நாங்க முட்டத்திற்கு போனதற்கு சில நாட்கள்
முன்பு, ஒரு  வெளிநாட்டுக் கப்பல் பாறையில் மோதி உடைந்து, மூழ்கிவிட்டதாம். மூழ்கியதால் சேதம் எதுவும் இல்லை என
அங்கிருந்தவங்க சொன்னாங்க. நேரமில்லாததால போய்ப்பார்க்க
முடியலை. முட்டத்திலிருந்து பார்த்தால், உடைந்த கப்பலின்
மேல் பாகம் மட்டும் தெரிந்தது. அதை மட்டும் பார்த்துவிட்டு
வந்தோம்.
நன்றி !!!

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

          
                  இன்றோடு வார்த்தைச்சித்திரங்கள் என்ற இந்த 
வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.. இந்த ஒரு
வருடத்தில், பலரது நட்பும், 74 ஃபாலோவர்களும் கிடைத்திருப்பது
மிகவும் மகிழ்ச்சி . இந்த வலைத்தளம் மூலம் பலரின் அன்பும், நட்பும், அறிமுகமும், பின்னூட்டங்களும் கிடைத்திருப்பது மனதை நெகிழவும், பெருமைப்படவும் வைக்கிறது. இந்த வலைத்தளத்தை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தவர் திருமதி.விக்னேஷ்வரி அவர்கள். முதலில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
        இதுவரை 71 இடுகைகள் எழுதி இருக்கிறேன். என்னையும்
எழுதவைத்து எனக்கு எழுத்தார்வத்தை உருவாக்கியவர் அவர்.
முதல் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வார்த்தைச்சித்திரங்களுக்கு உங்களது ஆதரவும் ஆசீர்வாதமும்
கண்டிப்பாக வேண்டும். இதுவரை எனது பதிவுகளை
பொறுமையாக வாசித்து பின்னூட்டங்கள் இட்டதற்கும், இன்ட்லி,
தமிழ்மணம் போன்றவற்றில் ஓட்டுக்கள் போட்டு என்னை உற்சாகப்படுத்தியதற்கும் மிகவும் நன்றி. இந்த ஆதரவும்
ஊக்கமளிப்பும் இனியும் தொடரவேண்டும் என  விரும்புகிறேன்.

நன்றியுடன்,
ஜிஜி.

நாகர்கோவில் - சொத்தவிளை பீச்

புதன், ஆகஸ்ட் 03, 2011

            கடல்னாலே அழகுதான். கடல்னு சொல்லும்போதே மனசு குழந்தை மாதிரி குதூகலிக்குது. இந்த தடவை ஊருக்குப் போனபோது, நான்கு பீச்சுக்கு போனோம். அவ்வளவு ஜாலியா இருந்தது.
             முதலில் நாங்க போனது, சொத்தவிளை பீச். இது நாகர்கோவிலில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கடற்கரையைப் பற்றி நாகர்கோவிலில் உள்ளவர்கள் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. இது நான்கு கி.மீ. நீளமுள்ள இந்தியப் பெருங்கடலின் கடற்கரை. முன்பெல்லாம் இந்த பீச்சுக்கு யாரும் வர மாட்டார்களாம். இங்கு வருபவர்களிடம் வழிப்பறி, கொலை போன்ற சமூக சீர்கேடுகள் நடக்கும் இடமாக இருந்திருக்கிறது . மேலும் சுனாமியினாலும் இந்த பீச் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போதுதான் இம் மாவட்டக் கலெக்டரின் உதவியால், இது செப்பனிடப் பட்டு, சிறுவர் பூங்காக்களும் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பலரும் வருமாறு, வழிசெய்யப்பட்டுள்ளது.            வெள்ளை மணல் பரப்புடன் பார்ப்பதற்கு அழகாக , மிக நீளமாக இந்தக் கடற்கரை இருக்கிறது. கடல் தண்ணீரும் பார்ப்பதற்கு நீலக் கலரில் ஜொலிக்கிறது.             கரையோரத்தில் நிறைய குடில்களும், செடிகளும் அழகாக
இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில்
ஒன்றாக இது மாறிவருகிறது.

            நாங்கள் போனது ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால்,
கூட்டம் அதிகமாக இருந்தது.  பேருந்தில் செல்வதானால்,
புத்தளம் என்ற ஊருக்கு அடுத்த ஸ்டாப்பான சொத்தவிளையில்
இறங்கி, பீச்சிற்கு , அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து செல்ல
வேண்டும். கடலைப் பார்த்ததும் கால் நனைக்கலாமென
ஆசையாகப் போனால்,  கடலுக்கு என்மேல என்ன கோபமோ
தெரியலை. ஒரு பெரிய அலை வந்து கீழ தள்ளிடுச்சு. அப்புறம்
என்ன? முழுக்க நனைஞ்சாச்சு. நனைஞ்சது நனைஞ்சாச்சு,
அப்படியே குளிச்சிடுவோம்னு, சூப்பரா ஒரு குளியலையும்
போட்டாச்சு. ஜாலியா இருந்தது.  இந்த சொத்தவிளை பீச்
அவ்வளவாக ஆழமில்லாததால், குளிப்பதற்கு ஏற்றதாக
இருக்கிறது. நிறைய பேர் நீச்சல் அடித்து குளித்தார்கள்.
இருட்டும்வரை இருந்துவிட்டு, பின் திரும்பிவிட்டோம்.
           கேமரா கொண்டுபோக மறந்துவிட்டதால்,  கூகுள்
மூலம்தான் இந்தப் படங்களை எடுக்க முடிந்தது.
நன்றி AdmirableIndia.comRelated Posts with Thumbnails