அட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (ADVENTURES OF TINTIN-2011)

செவ்வாய், நவம்பர் 29, 2011

                        
                                           (1907 - 1983 )

                       பெல்ஜியமைச் சேர்ந்த கலைஞர் ஜார்ஜஸ் ரெமி
என்பவர் 'ஹெர்ஜ்' என்ற புனைப்பெயரில் எழுதிய காமிக்ஸ்
கதைகள்தான் டின்டின்னின் சாகசங்கள். 


டின்டின் 
  
                    முதன்முதலில் 1929 ஆம் ஆண்டுதான் டின்டின் என்ற
கதாப்பாத்திரம் உருவானது. இருபதாம் நூற்றாண்டில்,
ஐரோப்பிய மொழிகளில் வெளியான  மிகப் புகழ்பெற்ற காமிக்ஸ்
கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதைகள் கிட்டத்தட்ட 80
மொழிகளில் உலகெங்கும் வெளிவந்தது. அனேகமாக நம்மில்
பலர் இந்தக் கதைகளைப் படித்திருப்போம். பின்னர் இந்தக்
கதைகள் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும்
எடுக்கப்பட்டன. இதில் டின்டின் தான் ஹீரோ. அவன் மிகவும்
புத்திசாலியான இளம் நிருபர். துப்பறியும் நிபுணரும் கூட.
அவனுக்கு ஸ்னோவி என்றொரு நாயும் உண்டு. கேப்டன்
ஹட்டோக், டின்டின்னின் நெருங்கிய நண்பன். அவர் ஒரு
குடிகாரர். அவர் செய்யும் செயல்கள் அனைத்தும்
நகைச்சுவையாக இருக்கும். இவர்கள் மூவரும்தான்
கதையின் முக்கியக் கதாப்பாத்திரங்கள்.

                   இந்த வருடம் எடுக்கப்பட்டிருக்கும் 'அட்வென்ச்சர்ஸ்
ஆப் டின்டின்' என்கிற இந்த அனிமேஷன் திரைப் படத்தை
எடுத்தவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
மேலும் இந்தப் படம் 3டி யிலும் வெளிவந்துள்ளதால்
போய்ப்பார்த்தோம்.
               பலவருடங்களுக்கு முன் மூழ்கிய யூனிகார்ன் என்ற
கப்பலில் இருந்த புதையலைத் தேடிச் செல்லும் டின்டினுக்கும்
வில்லனுக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை. புதையலை
யார் எடுக்கிறார்கள், எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பதுதான்
கிளைமாக்ஸ்.
குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம். அதுவும் 3டி யில்
பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. எனது 2வயது பையனே பொறுமையாக உட்கார்ந்து, ரசித்துப் பார்த்தான்.

டெல்லி குளிர்

புதன், நவம்பர் 02, 2011

                      டெல்லியில குளிர் ஆரம்பமாயிடுச்சு. இனி பிப்ரவரி
வரை இங்க இருக்குறங்கவங்க எல்லாம் எந்திரன் தான்.
அதாங்க ரோபோ. முகம் மட்டும்தான் வெளியில் தெரியும்.
தலையில இருந்து கால் வரை உல்லன்னால மூடி, குல்லா,
மப்ளர், ஸ்வட்டர், தெர்மல்ஸ், சாக்ஸ் என ரோபோ மாதிரி
அலைய வேண்டி இருக்கும். வெறும் காலால் நடக்க முடியாது.
தரையெல்லாம் அவ்வளவு சில்லென்று இருக்கும்.தண்ணீரில்
கை வைக்க முடியாது. கை நனைத்த பிறகு கொஞ்ச நேரத்திற்கு
பல் டைப் அடித்துக் கொண்டு இருக்கும். காலையில
எழுந்திருக்கவே கஷ்டமாக இருக்கும். இன்னும் கொஞ்ச நேரம்
இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க மாட்டோமா என்று
இருக்கும்.                   நான் கல்யாணமாகி முதன்முதலில் டெல்லி வந்தது
டிசம்பர் மாதக் குளிரில். குழந்தை பிறந்து முதன்முதலில்
குழந்தையைத் தூக்கி வந்ததும் ஜனவரி மாதம் குளிரில்தான். அதனால்தானோ என்னவோ எங்களுக்கு குளிர் பழகிவிட்டது.
சம்மர்தான் எங்களைப் பாடாய் படுத்துகிறதே தவிர, குளிர்
பழகித்தான் விட்டது.  சம்மருக்கு பயந்துதான் ஊருக்குப் போக
வேண்டியதாய் உள்ளது.


 

                 இந்தக் குளிரில் டெல்லி பார்க்கவே அழகாய் இருக்கும்.
'இண்டியா கேட்'டை பனிமூட்டத்தில் பார்க்கும்போது அழகாக
இருக்கும். தூசி குறைந்து காற்று சுத்தமானதாக இருக்கும்.
பூங்காக்களில் எல்லாம் பூக்கள் கண்காட்சி நடக்கும்.முக்கியமாக
இந்த சீசனில் காய்கறிகளும் பழங்களும் விலை மலிவாகக்
கிடைக்கும். கேரட், பட்டாணி, கத்தரிக்காய்,கீரைகள் எல்லாம்
பிரெஷ்ஷாக பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். 
                     கோதுமை உணவுகள் உஷ்ணத்தைக் கொடுக்கும்
என்பதால்,  இந்த சீசனில் கோதுமை ரொட்டிதான்
பெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். அதுபோல கடுகு எண்ணெய்
உடலுக்கு சூட்டைக் கொடுக்கும் என்பதால், சாப்பாட்டிற்கு
பெரும்பாலும் கடுகு எண்ணெய் தான். குழந்தைகளுக்குக் கூட
இந்த எண்ணையைக் கொண்டு மசாஜ் செய்யச்
சொல்லுகிறார்கள். இதனால் உடல் சூடாகுமாம். 
குழந்தைகளுக்கு குளிர் தெரியாது. ஜலதோஷம் பிடிக்காது 
எனக் கூறுகிறார்கள். 
                  இந்த சீசனில் பிளாட்பாரவாசிகளின் நிலைமைதான் 
பாவமாக இருக்கும். ரோட்டிலேயே நெருப்பு பற்ற வைத்துக் 
குளிர்காய்வார்கள். வருடந்தோறும் குளிர்கால முடிவில் 
பத்து நாட்களுக்கு குடியரசு மாளிகையில் உள்ள மொகல் 
கார்டனைப் பொதுமக்கள் பார்வைக்கு விடுவார்கள். 
அப்போது அங்குள்ள பூக்களைப் பார்ப்பதற்குக் 
கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதேபோல குளிர்கால
முடிவில்தான் இங்கு ஹோலிப் பண்டிகையும்  
கொண்டாடப்படுகிறது.
                 டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடு இரவில் குளிர் 
மைனசில் செல்லும். டெல்லிக்கு வடக்கில் உள்ள இடங்களில், 
இமாச்சல பிரதேசங்களில் எல்லாம் பனிப் பொழிவைக் 
காணலாம். இவ்வாறு குளிரை ரசிக்க விரும்புபவர்கள் 
முன்பனிக் காலமாகிய அக்டோபர், நவம்பரிலும், பின்பனிக் 
காலமாகிய பிப்ரவரி, மார்ச்சிலும் இங்கு வந்து ரசிக்கலாம்.
 

 

 
Related Posts with Thumbnails