யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே...

ஞாயிறு, ஜனவரி 30, 2011

        
              சின்ன வயதில் யானையைப் பிடிக்காதவங்க
இருக்கமாட்டாங்க. நான் சிறு வயதில் மிகவும் ரசித்த, மலைத்த,
பிரம்மாண்டமான மிருகம் அது. கோயிலில் பார்க்கும் போதும்,
தெருவில் காசு வாங்க வரும் போதும், அதனிடம் ஆசிர்வாதம்
வாங்கத் தவறுவதில்லை. ஆனால் அதன் மேல் ஏறுவதற்கு
பயம். இப்போதுகூட ஊரில், தெருவிற்கு யானை வரும்போது,
மணிச்சத்தம் கேட்டால் வெளியே வந்து பார்க்கத் தோணுகிறது. 
கோவிலில் பார்க்கும்போது கூட ஒரு நிமிடமாவது அதன்
அழகை, கம்பீரத்தை நின்று பார்த்துவிட்டுத்தான் செல்லத்
தோணும். இப்படி நமக்கெல்லாம் பிடித்த யானையைப் பற்றி
நான் சேகரித்த தகவல்கள் இவை.
               ஆசிய யானை என அன்பாக அழைக்கப்படும், இந்திய
யானைகளில் பல, தமிழக - கேரள எல்லையில் மேற்குத்
தொடர்ச்சி மலைகளில் வசிக்கின்றன. ஆப்ரிக்க யானைகளை
விட, உயரம் குறைவாகவும், காதுகள் சிறியதாகவும் இவை
இருக்கும். அதிகபட்சம் 6.6 அடி முதல் 11.8 அடி உயரம் வரை
வளரும். 3000 முதல் 5000 கிலோ வரை எடை இருக்கும். ஆண்
யானைக்கு மட்டுமே பெரிய தந்தங்கள் இருக்கும். பெண்
யானைக்கு வெளியே தெரியாத வகையில் சிறு தந்தம் இருக்கும்.
சில ஆண் யானைகளுக்கு தந்தம் இருக்காது, இவை ' மக்னா '
யானைகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தோல் 3
முதல் 5 செ.மீ., வரை தடிப்பானவை. ஒரு நாளைக்கு 150 கிலோ
முதல் 170 கிலோ வரை உட்கொள்ளும்.                சீசனுக்கு ஏற்ப இடம் மாறும் இவை, தங்களுக்கு என
தனி பாதையை வைத்திருக்கும். இந்தப் பாதையை மனிதர்கள்
ஆக்கிரமிக்கும் போது தான், குடியிருப்புகளுக்குள் யானைகள் புக
வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கூட்டம் கூட்டமாக வாழும்
தன்மையுடைய யானைகளுக்கு, மூத்த ஆண்யானை தலைமை 
ஏற்று நடத்திச் செல்லும். கெல்லும் பாதையை நினைவு வைத்துக்
கொள்ள வேண்டிய பொறுப்பு, தலைமை யானைக்கு உண்டு.
நன்கு வளர்ந்த யானைக்கு மனிதர்களைத் தவிர, வேறு எதிரிகள்
கிடையாது. குட்டி யானைகளைத்தான் புலி வேட்டையாடும்.
காட்டில் அதிகபட்சம் 60 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
யானைகள், வளர்க்கப்படும்போது, 80 ஆண்டுகள் வரை
உயிர்வாழும். ஒருநாளைக்கு 80 முதல் 200 லிட்டர் தண்ணீர்
இவற்றுக்குத் தேவை. இதில் பெரும்பாலனதை குளிக்கப்
பயன்படுத்தும்.


            ' இன்ஃப்ரா சவுண்ட் ' மூலம் தங்களுக்குள் யானைகள்
பேசிக்கொள்ளும். இந்திய ஆராய்ச்சியாளர் எம்.கிருஷ்ணன்
என்பவர்தான் இதை முதலில் கண்டுபிடித்தார். பெண் யானை,
9 முதல் 15 ஆண்டுகளுக்குள் பருவத்தை எட்டும். 18 முதல் 22
மாதங்கள், இதற்கு கர்ப்பகாலம். 19 மாதங்களிலேயே, தாய்
வயிற்றில் குட்டி, முழு வளர்ச்சியை எட்டிவிடும். இருப்பினும்,
அதன்பிறகும் சில மாதங்கள் கழித்துதான், குட்டியை தாய் ஈனும்.
இது ஒரு இயற்கை விநோதம். இதற்குக் காரணம், ஈன்ற உடனே,
எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்கும் உயரத்தை குட்டி எட்ட
வேண்டும் என்பதற்காக.


             பிறந்த உடன், யானைக்குட்டி  100 கிலோ எடை
இருக்கும். ஒருமுறைக்கு ஒன்று அல்லது அரிதாக இரண்டு
குட்டிகளைத் தாய் ஈனும். குட்டி ஓரளவு பெரிதாகும் வரை தாய்
மீண்டும் கருத்தரிக்காது. இதற்கு ஐந்து ஆண்டுகள் வரை
ஆகுமாம். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் யானைக்கு
' ஹார்மோன் ' அதிகம் சுரக்கும் போது, ' மதம் ' பிடிக்கிறது.
ஜோடி கிடைக்காவிட்டால், மூர்க்கத்தனமாக மற்ற
யானைகளைத் தாக்கும். சில நேரங்களில், இதற்கு பெண்
யானைகள் பலியாவது உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை தான்
இது நிகழும்.

             நாமெல்லாம் ஊர்களில், கோவில்களில், தெருக்களில்
பார்த்த யானையை, இப்போதுள்ள சந்ததியினரால் வெறும்
புத்தகங்களில் படமாகவும், டிவியிலும் மிருகக்காட்சி
சாலையிலும் மட்டுமே பார்க்க முடிகிறது. சிறுவயதில்
நமக்கெல்லாம் மிகவும் பிடித்த, யானை இனம் கொஞ்ச
கொஞ்சமாக அழிந்து வருவது மிகுந்த வேதனைக்கு உரிய
விஷயம்.

குடியரசு தின அணிவகுப்பு

புதன், ஜனவரி 26, 2011

             
              இன்று நம் நாட்டின்  62 ஆவது குடியரசு தினம்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!  இதையொட்டி,
பல்வேறு துறைகளில் நம் நாடு கண்டுள்ள வளர்ச்சியை
பிரதிபலிக்கும் வகையில் டெல்லியில், அணிவகுப்பு
நடப்பது வழக்கம். ராஜ பாதையில் தொடங்கி செங்கோட்டை
வரை 8 கி.மீ. தூரம் இந்த அணிவகுப்பு நடக்கும். ராஜபாதையில்
இருந்து செங்கோட்டை வரை நடைபெறும் இந்த அணிவகுப்பும்,
அலங்கார ஊர்திகளின் ஊர்வலமும், கலை நிகழ்ச்சிகளும்
கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும். 
              முதன் முதலாக 2009 ஆம் ஆண்டு இந்த அணிவகுப்பைப் 
பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.  அது 60 வது குடியரசு 
தினம். காலையில் அந்தக் குளிரில் ஆறு மணிக்கே புறப்பட்டுச்
சென்றோம். நான், என் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என 
12 பேர் சென்றோம். இந்த அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பிற்காக 
பல ரோடுகள் ப்ளாக் பண்ணப்பட்டிருந்தன. சுற்றி சுற்றி ஒரு 
வழியாக போய்ச் சேர்ந்து, செக்யூரிட்டி சோதனைகளெல்லாம் 
முடித்து, எங்களுக்கான இடங்களில் போய் உட்கார்ந்து 
கொண்டோம். மொபைல், கேமரா, உணவுப் பண்டங்கள் எதுவும்
எடுத்துச் செல்லக்கூடாது. குழந்தைகளுக்கான பால்
பாட்டிலைக்கூட, பாலை வாயில் ஊற்றிக் காண்பித்தபிறகே 
அனுமதிக்கின்றனர். அந்த அளவிற்கு கடுமையான பாதுகாப்பு.          ள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளின் ஆடல், 
பாடல் நிகழ்ச்சிகளும், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. 
ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பம்சங்களுடனும், அந்தந்த 
மாநிலத்தின் நடனங்களும் அருமையாக இருந்தது. 
விமானப் படை வீரர்களின் சாகசத்தைப் பார்க்கக் 
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மொத்த நிகழ்ச்சியின் 
சிறப்பம்சமே இதுதான். ராணுவப்படை, கடற்படை, விமானப் 
படை, எல்லைப் பாதுகாப்புப் படை முதலிய படைகளின் 
அணிவகுப்பு பார்க்கவே மெய்சிலிர்க்க வைத்தது. இறுதியாக 
வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு பதக்கம் மற்றும் விருது
வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
             குடியரசுத்தலைவர் கடைசியில் நமது நாட்டின்
மூவண்ணக் கொடியை குண்டுகள் முழங்க ஏற்றும்போது,
மெய் சிலிர்த்துவிட்டது. இந்த அணிவகுப்பைப் பார்க்கும் போது,
இந்தியன் என்ற உணர்வு தலைதூக்கிற்று. வார்த்தைகளால்
அதை விவரிக்க முடியவில்லை. அப்படி ஒரு அனுபவம்.
திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் அனுபவம். இந்த இரண்டு
வருடங்களாக பார்க்க செல்ல முடியவில்லை. அடுத்த
வருடமாவது சென்று பார்க்கும் ஆவலில் இருக்கிறேன்.

பொங்கல்

சனி, ஜனவரி 15, 2011

           

             இன்று தைத்திருநாள் ;தமிழர்த்திருநாள். அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


            இன்று பானைப் பொங்கல் இல்லை.சூரியப் பொங்கலும்
இல்லை. சின்ன வயதில் பொங்கல்னாலே ரொம்ப ஜாலியா
இருக்கும். பாட்டிவீட்டுக்குப் போவோம். பொங்கலன்று
காலையில் பொங்கல் வச்சதும், நாங்க சாப்பிடறோமோ
இல்லையோ, அதை கொண்டு போய் தெருவில் உள்ள
பக்கத்து வீடுகளுக்கெல்லாம் கொடுக்க ஓடுவோம். பொங்கலுக்கு
முந்தின நாள் மாமா ஒரு தள்ளு வண்டியில் ஒரு கட்டு அல்லது
இரண்டு கட்டு கரும்பு வாங்கி கொடுத்து விடுவாங்க. அதைக்
காலி பண்ண ஒரு போட்டியே நடக்கும். பொங்கலன்று புது
ட்ரெஸ் போட்டு, பக்கத்து வீடுகளின் பொங்கலை சாப்பிடவே
சரியாக இருக்கும். பாட்டி வீட்டுக்கு முன்னாடி இருக்குற அம்மன்
கோவிலிலும் பிரசாதம் கொடுப்பாங்க. கோவில் பிரசாதம்னாலே
அதுக்கு தனி டேஸ்ட்தான். அதானால பிரசாதம் வாங்குறதுக்கும்
போட்டி நடக்கும்.
              பொங்கல் அன்று மதியம் வெண் பொங்கல் சாதம்
செய்வாங்க. வெண் பொங்கல்னா, மிளகுப் பொங்கல் இல்லை.
பச்சரிசி சாதம் வைத்து. 13 வகை அல்லது 15 வகை  காய்கள்
போட்டு அன்று மட்டும் வித்தியாசமான ஒரு வகை சாம்பார்
வைப்பாங்க. அதுக்கு 'கிள்ளிப் போட்ட சாம்பார்'ன்னு பேர். நல்ல
சுவையா இருக்கும். வெள்ளை வெளேர்ன்னு பச்சரிசி சாதத்துக்கு
அந்த கிள்ளிப் போட்ட சாம்பார் சாப்பிட ஆசையா இருக்கும்.
மத்தியானம் தலை வாழை இலையில இந்த விருந்தை
முடிச்சிட்டு, சாயங்காலம் சின்னப் பிள்ளைகள் எல்லாரும்
சேர்ந்து உட்கார்ந்து கரும்பு சாப்பிடுவோம். அதுலயும் போட்டி
நடக்கும் யாரு முதலில் ஒரு துண்டு கரும்பை சாப்பிடறதுன்னு.
 

               மறுநாள் மாட்டுப் பொங்கல் ரொம்ப விசேஷமாக
இருக்கும்.பாட்டி வீட்டில் மாடு கிடையாது. ஆனால் பக்கத்து
வீடுகளிலெல்லாம் மாடுகள் உண்டு. அன்று அந்தத் தெருவில்
உள்ளகுளத்தில் மாடுகளை எல்லாம் குளிப்பாட்டி, கொம்புக்கு
எல்லாம் வண்ணம் பூசுவார்கள். மாட்டுக்கு அலங்காரம்
ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதை
வேடிக்கை பார்ப்பதற்காகவே போவோம். சாயங்காலம்தான்
மாட்டுப்பொங்கல் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும்
ஒரு நேரம் வைத்து கொண்டாடுவார்கள். அதனால் சாயங்காலம்
இத்தனை மணிக்கு பொங்கல் கொண்டாட வந்துடுங்கன்னு,
எங்களுக்கெல்லாம் அழைப்பு வந்திடும். இது மாடுகளுக்கு
மட்டுமல்ல.சின்ன பிள்ளைகளான எங்களுக்கும் பொங்கல்தான்.
              சாயங்காலம் ஆனதும், அழைப்பு வந்த வீடுகளுக்கு , ஒரு
தாம்பாளமும் ஒரு குச்சியும் கொண்டு செல்வோம். அந்த வீட்டில்
மாடுகளுக்கு அலங்காரம் பண்ணி, மாட்டிற்கு முன்பாக,
மாட்டுக்காகவே ஸ்பெஷல்லாக உப்பில்லாத பச்சரிசி சாதம்
செய்வார்கள். அப்போது பொங்கல் பொங்கி வரும்போது,
கொண்டு போயிருந்த தாம்பாளத்தில் குச்சியால் தட்டிக்கொண்டே
'பொங்கலோ பொங்கல்' ன்னு கத்த வேண்டும். பிள்ளைகள்
நிறைய பேர் போயிருந்தோமானால், சத்தம் பயங்கரமாக
இருக்கும். மாடே மிரண்டு விடும். பின்னர் மாட்டிற்கு மாலை
எல்லாம் போட்டு, பூஜை  எல்லாம் செய்து விட்டு , அந்த
சாதத்தை மாட்டிற்கு ஊட்டி விடுவார்கள். ஒரு வீட்டில் இது
முடிந்ததும்,  அடுத்த வீட்டிற்கு செல்வோம். அந்த வயதில் இது
பயங்கர ஜாலியாக, விளையாட்டாக இருக்கும்.            அடுத்த நாள் காணும் பொங்கலன்று, புளி சாதம்,
எலுமிச்சை சாதம் என ஐந்து வகை அல்லது ஏழு வகை கலவை
சாதங்கள் செய்து, சாயங்காலமாக ஆற்றங்கரையில் உட்கார்ந்து
கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம். கடல் உள்ள ஊர்களில்
கடற்கரைக்குப் போவார்கள். அல்லது பூங்காக்கள்,
அணைக்கட்டுக்களுக்குப் போவார்கள். சாப்பிட்டு விட்டு, சிறிது
நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்கு வருவோம்.அந்த மூன்று
பொங்கல் நாட்களுமே, மிக ஜாலியாக இருக்கும். அடுத்த
பொங்கலுக்காக மனம் ஏங்கும்.
           ஆனால் இன்று, இவற்றில் எதுவுமே இல்லை. டெல்லியில்
எல்லாம் அப்பார்ட்மென்ட் வீட்டில், சூரியனைக் கூடப் பார்க்க
முடியவில்லை. குளிர் காலம் வேறு. கேட்கவே வேண்டாம்.
பொங்கலன்று ஒரு மஞ்சள் கொத்து வாங்க முடியவில்லை.
ஆசையாக வாழை இலையில் சாப்பிட முடியவில்லை. நல்ல
கரும்புகூட  சாப்பிட முடியவில்லை. இப்பொழுதெல்லாம்
பொங்கல்த்திருநாள் இப்படித்தான் கழிகிறது.

சென்னையின் 34வது புத்தகக் கண்காட்சி

செவ்வாய், ஜனவரி 11, 2011

             
            சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நடக்கும்
34வது புத்தகக் கண்காட்சிக்கு முதல்முறையாக சென்ற
சனிக்கிழமை மாலை சென்றிருந்தேன். சனிக்கிழமை மாலை
என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. அரங்கத்தின் வாசலில்
ஒரு புறம், மேடைபோட்டு, திரு.ராஜா போன்ற
பிரபலமானவர்களின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்தப் பக்கமே செல்ல
முடியவில்லை. மறுபுறம் பந்தல் போட்டு  ஜூஸ் கடைகளும்,
ஐஸ்க்ரீம் கடைகளும் இருந்தன. அங்கு குழந்தைகள் அதிகமாக
இருந்தனர். பின்னர் அரங்க வாசலில் நுழைவுச்சீட்டு
எடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம். இந்த நுழைவுச்சீட்டுக்கான
பணமும் நலிந்த பதிப்பகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும்
போய்ச்சேரும் என்று கூறினார்கள்.                முதலிலேயே வாங்க வேண்டிய புத்தகங்களையும்,
அவற்றின் பதிப்பகத்தின் பெயர்களையும் பட்டியல் போட்டுக்
கொண்டுசென்றிருந்தது, வாங்குவதற்கு எளிதாக இருந்தது.
ஆனால் ஒவ்வொரு பதிப்பகத்தின் ஸ்டால் நம்பர்களைக்
கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஔவையார் பாதை,
திருவள்ளுவர் பாதை என ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பெயர்
வைத்து அதன் வாசலில் பதிப்பக பெயர் மற்றும் ஸ்டால்
எண்களைக் குறிப்பிட்டிருந்தார்கள். நாங்கள் முதலில் போனது,
உயிர்மை பதிப்பகம். அங்கு சில புத்தகங்கள் வாங்கினோம்.
உயிர்மைப் பதிப்பகம் என்பதால், அங்கு திரு.மனுஷ்யபுத்திரன்
இருந்தார். மேலும் ஸ்டாலின் வாசலில், திரு.சாருநிவேதிதா
அவர்களும் அமர்ந்திருந்தார். அன்று இவர்கள் இருவரையும்
தவிர மற்ற எழுத்தாளர்கள் எவரையும் காணமுடியவில்லை.
அதனால் இந்த ஸ்டாலில் கூட்டம் அதிகமாக இருந்தது.


              அடுத்ததாக நாங்கள் நுழைந்தது விடியல் பதிப்பகம்.
அங்கும் கூட்டமாகத்தான் இருந்தது. பிரபல பதிப்பகங்களான,
உயிர்மை, விடியல், தமிழினி, விகடன், கிழக்கு,கீழைக்காற்று,
உடுமலை, காலச்சுவடு, வானதி, திருமகள் போன்ற
பதிப்பகங்களில்தான் மக்கள் அதிகமாக இருந்தனர். மேலும் VAO,
TNPSC Group-I மற்றும் Group II தேர்வுகளுக்கான புத்தகங்கள்
அதிகம் விற்பனையாகின. சில ஸ்டாலகளில் ஆட்களே இல்லை.
குழந்தைகளுக்காக நிறைய க்களும் புத்தகங்களும் இருந்தன.
குழந்தைகளுக்காகவே ஸ்டால்கள் நிறைய இருந்தன. வாங்க
வேண்டிய புத்தகங்களுக்காக சில ஸ்டால்களுக்கு மட்டுமே
சென்றோம். இதற்கே மூன்று மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது.
எல்லா ஸ்டால்களுக்கும் சென்று பார்ப்பதற்கு ஒருநாள் பற்றாது.
புத்தகங்கள் வாங்கி வந்தாகிவிட்டது. இனி அதைப் படிக்க
வேண்டும். படித்துவிட்டு, அவற்றைப் பற்றி வரும் பதிவுகளில்
எழுதுகிறேன்.

அம்மா! எனக்காக... - புத்தகத்தைப் பற்றி...

வெள்ளி, ஜனவரி 07, 2011            
               இந்தப் புத்தகத்தைப் போன வாரம் படித்தேன். இதன்
ஆசிரியர் லக்ஷ்மி. என்னுடைய அம்மாவிற்கு பிடித்த
எழுத்தாளர்களுள் லக்ஷ்மியும் ஒருவர். இவரைப் பற்றியும்,
இவரின் கதைகள் பற்றியும் அம்மா நிறைய என்னிடம்
சொல்லியிருக்கிறாங்க. ஆனால் எனக்குதான் படிப்பதற்கு
சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. இவருடைய புத்தகங்களில் நான்
படித்த முதல் புத்தகம் இதுதான். லக்ஷ்மி அவர்களுடைய
கதைகள் பெரும்பாலும் குடும்பக் கதைகளாகத் தான்
இருக்கின்றன. அந்த வரிசையில் இதுவும் ஒரு குடும்பக்
கதைதான். மிக எளிமையான வரிகளில் எழுதியிருக்கிறார்.
இந்தக் கதை முழுவதும் சரயு, அனுபமா, யோகநாதன் என்ற
மூன்று பேரைச் சுற்றியே அமைந்திருக்கிறது. ஒரு சின்னப்
பெண்ணின் ஏக்கமும், அம்மா பாசமும் மிக அழகாகக்
கூறப்பட்டிருக்கிறது. சாதாரண குடும்பக் கதைதான்
என்றாலும் இவர் எழுதியிருக்கும்விதம் நன்றாக உள்ளது.

புத்தகத்தின் பெயர் : அம்மா! எனக்காக...
பதிப்பகம்                : திருமகள் நிலையம், சென்னை
முதல் பதிப்பு          : டிசம்பர் 1986
ஐந்தாம் பதிப்பு       : ஜூலை 2007
விலை                    : ரூ.55 /-

சாலை பாதுகாப்பு வாரம்

வியாழன், ஜனவரி 06, 2011

           
               ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி
வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. 
இந்த வருடம் 22வது வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதற்காக, எல்லாப் பஸ்ஸிலும் சாலை பாதுகாப்பு வாரம் என்று
நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருக்கிறது. இதையொட்டி
வருடாவருடம், சாலை விதிகளைப் பற்றியும், வாகன
விபத்துகளைத் தடுப்பது பற்றியும் மக்களுக்கு அரசாலும்
போலீசாலும் எச்சரிக்கை விடப்படுகிறது. ஆனாலும்
ஆண்டுதோறும் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை
அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.


            இதற்கு முக்கியக் காரணம் வெளிநாடுகளைப் போல, நம்
நாட்டில் சாலைவிதிகளைப் பின்பற்றாததுதான். எங்கள் வீடு
தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. இச்சாலையில் 2
மாதத்திற்கு ஒருமுறை விபத்து நடக்கிறது. அதுவும் இரவு
நேரங்களில், பஸ்களும் கார்களும் போகும் வேகத்தைப்
பார்த்தால், சாலையில் நடக்கவே ரொம்ப பயமாக இருக்கும். 
இதுபோல, இரவில் எதிர்வரும் வாகனங்களில் வருபவர்கள்,
கண்கள் கூசும் அளவுக்கு ஹெட்லைட் போடுவதாலும் விபத்து
அபாயம் உள்ளது.             பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவிலும், வேன்களிலும்
ஏற்றிச் செல்லும் போது விதிமுறை மீறப்படுகிறது. நிறைய
குழந்தைகளை ஒரே ஆட்டோவில் ஏற்றிச் செல்வது, திருவிழா
போன்ற விசேஷங்களுக்கு லாரிகளில் கும்பலாக ஆட்கள் ஏறிச்
செல்வது போன்ற தவறுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்.
அதிகாரிகளும் அனுமதிக்கக்கூடாது. அதிகமான நபர்களை
ஏற்றும் வாகனத்தை அதே இடத்தில் நிறுத்தி உரிமத்தை ரத்து
செய்யவேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வதாலும்,
குடிபோதையில் வண்டி ஓட்டுவதாலும் விபத்துகளின்
எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. குழந்தைகளுக்கும்
சாலை விதிமுறைகளை பின்பற்ற சொல்லிக் கொடுக்க
வேண்டும். சாலைகளை கடக்கும் போதும், ஆளில்லா ரயில்வே
லெவல் கிராசிங்கில் கடக்கும் போதும்  இருபுறமும் பார்த்து
செல்ல வேண்டும். 
இதுபோல ஆளில்லா லெவல் கிராசிங்கை மக்கள் கடக்கும்
இந்த வீடியோ, எனக்கு மெயிலில் வந்தது.


              இவ்வாறு நடக்கும் விபத்துகளை எப்படித் தடுப்பது?
சாலை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, விதிமுறை
மீறல்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படுகிறதா என்பது
போன்ற பல்வேறு கேள்விகள் நமக்குள் எழுந்தாலும், சாலை
விதிகளை கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு மக்களான
நம்மிடமும் உள்ளது. அதே நேரத்தில் விதிமுறை மீறல்களுக்கு
டிராஃபிக் போலீசார் துவங்கி போக்குவரத்து உயர் அலுவலர்கள்
வரை பாரபட்சமின்றி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை போலீசாரின் ரோந்துப் பணியும் மக்களைப்
பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும். வெளிநாடுகளைப்
போல, விதிமுறைகளை மீறுபவர்கள், விபத்துக்கு
காரணமானவர்களின் உரிமம் ரத்து செய்ய அதிரடி நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இந்தப் புத்தாண்டிலாவது,
ஓரளவேனும் விபத்துகளை நாம் குறைக்கலாம்.
Related Posts with Thumbnails