நாகர்கோவில் - III

சனி, நவம்பர் 27, 2010

தொட்டிப்பாலம் 
            திருவட்டாறுக்கு அடுத்ததாக, அதற்கு அருகில், 3கிமீ
தூரத்தில், மாத்தூரிலுள்ள தொட்டிப்பாலத்திற்கு சென்றோம்.
இந்தத் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிக நீளமான
மற்றும் உயரமான பாலமான இது பரழியாறுக்குக் குறுக்கே
உள்ளது. பாலம் என்பது பெரும்பாலும் ஆற்றின் அல்லது
ஏதாவது ஒரு நீர்நிலையின் இருகரைகளை இணைப்பதாக
இருக்கும்;  பாலத்துக்கு மேலே நிலவழிப்போக்குவரத்தும்,
பாலத்துக்கு அடியில் நீரோட்டமும் இருக்கும். ஆனால் இந்தத்
தொட்டிப்பாலத்தில், ஒரு கால்வாயாக நீர் செல்கிறது. இது ஒரு
பெரிய அதிசயமாக எனக்குத் தெரிந்தது.  இது 115 அடி உயரமும்,
ஒரு கிமீ தூரமுமாக இரண்டு மலைகளுக்கு இடையில்
கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை மொத்தம் 28 பெரிய தூண்கள்
தாங்கியுள்ளன. 1966ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர்
திரு. காமராசர் அவர்களால் இந்தத் தொட்டிப்பாலம் கட்டப்பட்டு
இருக்கிறது. ஒருவர் பின் ஒருவராகத்தான் இந்தப் பாலத்தில்
போக முடிகிறது. அதிக எடையுள்ள மூட்டையைத் தூக்கிக்
கொண்டு, ஒருவர் மிக வேகமாக இதில் நடந்து சாதனை
செய்ததாக கூறப்படுகிறது. தொட்டிப்பாலத்திற்கு கீழிருந்து மேல்
வரை படிக்கட்டுகள் போடப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்கள்
விளையாட ஒரு பூங்காவும் இருக்கிறது. இது சிறந்த சுற்றுலாத்
தலமாகவும், படப்பிடிப்பு இடமாகவும் உள்ளது.

திற்பரப்பு
             மாத்தூருக்கு அடுத்ததாக, சென்ற இடம் திற்பரப்பு
நீர்வீழ்ச்சி. இந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர்
விழுந்து கொண்டே இருக்குமாம். நாங்கள் சென்ற சமயம்
மழை பெய்து கொண்டிருந்ததால், அருவியில் நிறைய
தண்ணீர் வரத்து இருந்தது. குளிக்கும்போது இருந்ததைவிட,
குளித்து முடித்து வெளியேறும் போது  மிக அதிகமாக
தண்ணீர் விழுந்தது. கோதையாறு என்ற ஆறுதான் திற்பரப்பு
அருவியாக விழுகிறது. அருவியின் மேலே இந்த ஆறு
சமதளத்தில் ஓடிவருகிறது. அங்கு ஒரு யானையைக்
குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அதை வேடிக்கைப் பார்ப்பது
நன்றாக இருந்தது. இங்கு ஒரு சிவாலயம் உள்ளது. மேலும் ஒரு
சிறுவர் பூங்காவும் உள்ளது. இதுவும் ஒரு சிறந்த சுற்றுலாத்
தலமாகவும், படப்பிடிப்பு இடமாகவும் உள்ளது.

நாகர்கோவில் - II

சனி, நவம்பர் 20, 2010

மேலங்கோடு

 
              மேலங்கோடு என்கிற இடத்திற்கு அடுத்ததாக
சென்றோம். இது குமாரகோவிலில் இருந்து ஒரு கி.மீ
தொலைவில் உள்ளது. இங்கு ஒரு சிவன் கோவில்
உள்ளது. இது 12 சிவாலயங்களில் எட்டாவது சிவாலயம்
ஆகும். இந்தக் கோவிலில் மாதாமாதம் சிவராத்திரியன்று
கூட்டம் நிறைந்து காணப்படும்.மேலும் இங்கு இசக்கி
அம்மன்களான அக்கா, தங்கச்சி கோயில்கள் உள்ளன.
இரண்டு இசக்கியம்மன் கோயில்கள், சிவன்கோயில் என
மூன்று சந்நிதிகள் ஒரே இடத்தில் தனித்தனி கோயில்களாக
உள்ளது. அந்த இரண்டு அம்மன் கோவில்களில், ஒரு கோவில்
அக்காவினுடைய கோவிலாம். மற்றொன்று
தங்கையினுடையதாம். அக்கா அம்மன் பெயர் செண்பகவல்லி
அம்மன். தங்கை அம்மன் பெயர் நீலாவதியம்மன். போனால்
அந்த இரண்டு கோவில்களுக்கும் போக வேண்டுமாம். ஒரு
கோவிலுக்குப் போய்விட்டு  மற்றொரு கோவிலுக்குப் போகாமல்
வரக்கூடாது என்று சொல்கிறார்கள். அதிலும் அக்காக்
கோவிலுக்குத்தான் முதலில் போய்விட்டு, பின்னர்தான் தங்கைக்
கோவிலுக்குப் போகவேண்டுமாம். அக்காவான செண்பகவல்லி
அம்மன் சாதுவான அம்மன் என்றும், தங்கையான நீலாவதி
அம்மன் ஆக்ரோஷமான அம்மன் என்றும் சொல்லப்படுகிறது.


 திருவட்டாறு             அடுத்தது திருவட்டாறு. இங்கு உள்ள கோவில்
ஆதிகேசவப்பெருமாள் கோவில். இது 108 வைணவத்
தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தக் கோவில்
தரையிலிருந்து 55அடி உயரத்தில் அமைந்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து 30 கிமீ தொலைவில் இந்தத்
திருவட்டாறு உள்ளது. இந்தக் கோவில் கோதை, பரளி
மற்றும் தாமிரபரணி என்ற மூன்று ஆறுகளால்
சூழப்பட்டுள்ளது. பரளியாறு இந்த இடத்தைச் சுற்றி ஓடுவதால்,
'வட்டாறு' என்றும், ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளதால்
'திருவட்டாறு' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில்
திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவிலை ஒத்துள்ளது.
மேலும் இந்தக் கோவில் பத்மனாப சுவாமி கோவிலை விடப்
பழமையானது. பத்மனாப சுவாமி சிலையும் ஆதிகேசவப்
பெருமாள் சுவாமியின் சிலையும் ஆதிசேஷனான பாம்பின்
மேல் சயன நிலையில், ஆனால் எதிரெதிர் திசையில்
அமைந்துள்ளது. அதாவது பத்மனாப சுவாமி சிலை சயன
நிலையில் கிழக்கு நோக்கியும், பத்மனாப சுவாமி சிலை சயன
நிலையில் மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இந்த
ஆதிகேசவப் பெருமாள் சிலை கல்லால் ஆன சிலையல்ல.
கருப்பட்டி,எள் மற்றும் பல பொருட்களால் செய்யப்பட்டது.
அதேபோல நாம் சுவாமியை மூன்று வாசல் மூலமாக, தலை
பாகம், உடல் பாகம் மற்றும் கால் பாகமாகத்தான் தரிசிக்க முடியும்.
                நாங்கள் கோவிலுக்குப் போன சமயம் 'ஷீவேலி'
என்ற பூஜை நடந்துகொண்டிருந்தது. அதனால் நடை
சாத்தப்பட்டிருந்தது. இந்தப் பூஜையின் போது, பெருமாளைத்
தூக்கிக் கொண்டு ஒருவர் பிரகாரத்தைச் சுற்றிவர,
மற்றொருவர் பிரகாரத்தைச் சுற்றியுள்ள பலிபீடங்களில்
மந்திரத்தைச் சொல்லி, சாதத்தாலும், பூவாலும் அர்ச்சனை
செய்தார். இது முடிந்த பிறகே சுவாமியைத் தரிசிக்க முடிந்தது.
இப்பூஜை தினமும் மதியம் 12 அல்லது 1 மணிக்கு நடக்குமாம்.
இங்கு ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் மிகவும்
சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மேலும் இங்குள்ள உதய
மார்த்தாண்ட மண்டபத்தில் கல்யாணகோலத்தில் உள்ள
வினாயகர் சிற்பமும், வெவ்வேறு கோலத்தில் உள்ள 222
பாவைவிளக்குகளும், பாற்கடலைக் கடையும் தேவர்கள்
மற்றும் அசுரர்கள் சிற்பமும் மிகச்சிறப்பு வாய்ந்ததாக
இருக்கிறது. பங்குனி உத்சவம் அன்று தங்கக் கருடன்
வாகனத்தில் சுவாமி ஆற்றில் இறங்குவது மிகச் சிறப்பாக
இருக்குமாம் .பால் பாயசமும், அவல் மற்றும் அப்பமும் இங்கு
பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நாகர்கோவில் - I

புதன், நவம்பர் 17, 2010

               நாகர்கோவிலுக்கு போனபோது நாகர்கோவிலிலும்
அதைச் சுற்றியும் சில இடங்களுக்குச் சென்றோம்.

கிருஷ்ணன்கோவில்
              முதலில் நாங்கள் சென்ற இடம் கிருஷ்ணன்கோவில்.
இந்தக் கோவில் நாகர்கோவிலில், ஊருக்குள்ளேயே உள்ளது.
 நாகர்கோவிலில் நாகராஜா கோவில்தான் மிகவும் பிரசித்தி
பெற்ற கோவில். அதனால் இந்தக் கோவிலைப் பற்றி
பலபேருக்குத் தெரியவில்லை. இந்தக் கிருஷ்ணன்கோவிலில்
உள்ள மூலவர் பாலகிருஷ்ணர். குழந்தை வடிவிலான இவர்
தோற்றத்திலும் மிகச் சிறிய சிலையாக உள்ளார். இந்தச் சிலை
கேரளாவிலுள்ள குருவாயூரப்பனை ஒத்துள்ளது.

 மேலும் இந்தக் கோவிலும் குருவாயூர் கோவிலின் சிறிய
வடிவமாகும். குருவாயூர் கோவிலைப் போன்றே சிறிய
வடிவில் கட்டப்பட்டுள்ளது. கேரளா குருவாயூருக்கு செல்ல
முடியாதவர்கள், கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரும்புபவர்கள்,
இந்தக் கோவிலுக்கு வந்து குட்டிக் கிருஷ்ணனை தரிசிக்கலாம்.

குமாரகோவில் 
அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் குமாரகோவில்.
இக்கோவில் 200 அடி உயரமான ஒரு மலையின் மேல்
கட்டப்பட்டுள்ளது.


               இந்தக் குமாரகோவில் கன்னியாகுமரியில் இருந்து
34 கிமீ தொலைவில் பத்மநாபபுரம் என்ற ஊரில் உள்ளது.
இங்குதான் முருகன் வள்ளியை மணந்ததாகக் கூறப்படுகிறது.
அதனால் இந்தமலை 'வேளிமலை' , 'மணமலை',
'கல்யாண மலை' என்றெல்லாம் கூறப்படுகிறது. முருகனும்
வள்ளியும் தான் இங்கு மூல விக்கிரகங்கள்.  வள்ளியை மணந்த
முருகன்ஆதலால் இங்குள்ள முருகனுக்கு 'மணவாள குமரன்'
என்று பெயர். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி திருவிழாவிற்கு
இந்த  மணவாள குமரன், பத்மநாபபுர அரண்மனையிலுள்ள
சரஸ்வதிமற்றும் பகவதி அம்மனுடன் திருவனந்தபுரத்திற்கு
எடுத்துச் செல்லப்படுகிறார். மேலும் வருடாவருடம் மார்கழி
மாதம், நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள சுசீந்திரம் கோவில்
திருவிழாவிற்கும் இந்த மணவாள முருகன் கொண்டு
செல்லப்படுகிறார். அங்கு திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.

 
            இந்தக் குமாரகோவில்  முருகனும், நாகர்கோவிலைச்
சுற்றியுள்ள ஊர்களான, மருங்கூர் என்கிற ஊரிலுள்ள முருகனும்,
கோட்டார் என்கிற ஊரிலுள்ள பிள்ளையாரும் சேர்ந்து அந்த 10
நாட்கள் திருவிழாவுக்கு சுசீந்திரம் சிவன் கோவிலுக்கு கொண்டு
செல்லப்படுகிறார்கள்.  இந்த மூன்று சாமிகளும் சுசீந்திரம் செல்ல
3 நாட்கள் ஆகுமாம். திருவிழா நாட்களில், தினமும் மாலையில்,
இந்த 3 சாமிகள் மற்றும் சுசீந்திரத்திலுள்ள சிவனும் பார்வதியும்
சேர்த்து, ஐந்து சாமிகளும் ஊர் முழுவதும் சுற்றிவரும். எட்டாவது
நாள் திருவிழா அன்று மாலை பூஜை முடிந்து,  முருகரும்,
பிள்ளையாரும், சிவன் பார்வதியிடம் பிரியாவிடை பெற்று
அவரவர் ஊருக்குத் திரும்பிவிடுவராம். இந்தப் பிரியாவிடை
காட்சி மிகவும் அருமையாக இருக்குமாம்.மேலும் எல்லா
முருகன் கோவிலிலும்  கொண்டாடப்படுகின்ற தைப்பூசம்,
கந்தசஷ்டி, வைகாசி விசாகம் போன்றவையும் இங்கு
கொண்டாடப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கது
முருகன்-வள்ளி திருமணம். ஒவ்வொரு தமிழ்மாதக்
கடைசி வெள்ளிக்கிழமையும் இங்கு விசேஷமாக
உள்ளது. இங்கு பிரசாதமாக கஞ்சி கொடுக்கப்படுகிறது.

இடைவெளி...

திங்கள், நவம்பர் 15, 2010


               இந்த வருடம் தீபாவளிப் பண்டிகையை எனது
கணவருடன் அவரது சொந்த ஊரான நாகர்கோயிலில்
கொண்டாடினோம். அதனால் பத்து நாட்களாக பதிவு
எதுவும் எழுத முடியவில்லை. நாகர்கோயிலைச்
சுற்றியுள்ள நிறைய இடங்களுக்குப் போனோம்.
அங்கு நிறைய கோவில்களுக்கும் போனோம் .
அவற்றைப் பற்றி எனது அடுத்த பதிவில் எழுதறேன்.

பென்னிங்டன் நூலகம் - ஸ்ரீவில்லிபுத்தூர்

சனி, நவம்பர் 06, 2010

             எனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் 135 ஆண்டு
பழமைவாய்ந்த நூலகம் ஒன்று உள்ளது. பென்னிங்டன்
நூலகம் எனப் பெயர்பெற்ற இந்த நூலகம் தமிழகத்திலுள்ள
பெரிய நூலகங்களில் 2-வது இடத்தை வகிக்கிறது. 1875-ம்
ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த
பென்னிங்டன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம்,
அதன்பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த
சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமச்சந்திரராவ், டி. ராமஸ்வாமி
ஐயர், டி. கிருஷ்ணராவ், முத்து ஐயங்கார் மற்றும்
முத்துச்சாமி பிள்ளை ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது.


               மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், நகரில்
தர்மசிந்தனை உள்ளவர்களையும், நூலக வளர்ச்சிக்குப்
பாடுபடும் மனப் பக்குவம் கொண்டவர்களையும்
உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்களில்
துணைத்தலைவர், செயலர், பொருளாளர் கொண்ட குழு
இந்நூலகத்தை நிர்வகித்து வருகிறது. தற்போது மாவட்ட
ஆட்சியரையும் சேர்த்து 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
                இந்நூலகத்தில், 1951-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த
தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன. மேலும் இங்கு தமிழில் 27800 புத்தகங்களும்,
ஆங்கிலத்தில் 25200 புத்தகங்களும் என மொத்தம் 53000
புத்தகங்கள் உள்ளன. நூலகத்தில்  கலித்தொகை (1887),
த்ருவ சரித்திர கீர்த்தனை (1890), இங்கித மாலை மூலமும்
உரையும் (1904), தியாகராச லீலை (1905), வள்ளலார்
சாஸ்திரம் (1907), திருமந்திரம் (1912) போன்ற அரிய தமிழ்ப்
புத்தகங்கள் உள்ளன. மேலும் 'பென்னி சைக்ளோபீடியா(1833)'
என்ற மிக அரிய வகை நூல் மொத்தம் 26 பாகங்களாக இங்கு
மட்டும்தான் உள்ளது. இதுபோக பல அபூர்வமான தமிழ்
மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.

             தினசரி சராசரியாக 360 வாசகர்கள் நூலகத்துக்கு வந்து
பயனடைந்து செல்கின்றனர். நூலகத்துக்கு தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் 17 நாளிதழ்களும், மாத மற்றும் வார இதழ்கள்
தமிழில் 69-ம் வருகின்றன. ஆங்கிலத்தில் மாத மற்றும் வார
இதழ்கள் 47-ம், ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்புடைய
இதழ்கள் 46-ம் வருகின்றன. இந்த எண்ணிக்கை வருடாவருடம்
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.            1344 சதுர அடியில் சொந்தக்கட்டடத்தில் இயங்கிவரும்
இந்த நூலகத்தில், ஆங்கிலப்பிரிவும், அரிய புத்தகங்கள்
அடங்கிய பிரிவும், பழைய இலக்கியங்களைத்
தேடுபவர்களுக்கும்,போட்டித் தேர்வுக்குத் தயார்
செய்பவர்களுக்கும் மிகப்பெரும் புதையலாக உள்ளது.
வாசகர் உபயோகத்திற்காக, பழமையான அரிய புத்தகங்கள்
சிடியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நூலகத்தின் கீழ்த்தளத்தில் மாத, வாரபத்திரிக்கைகளும்,
தமிழ் நாவல்களும் வைக்கப்பட்டுள்ளன.மேல்தளத்தில்
ஆங்கிலப்புத்தகங்களும், போட்டித்தேர்வுக்கான
புத்தகங்களும், அரிய வகைப் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவுகள் உள்ளன.
            சிறுவர்களுக்கெனத் தனிப்பிரிவு அமைத்து அவர்களே
நூலகளை எடுத்துப் படிக்கும் விதத்தில் வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. மேலும். இவர்களுக்கு நல்லறிவையும்,
ஒருமைப்பாட்டினையும் வளர்க்கும் பொருட்டு வாரந்தோறும்
நீதிக்கதைகள், ஆன்மீகக்கதைகள், சுதந்திரப் போராட்டக்
காலக்கதைகள் ஆகியன தொலைக்காட்சியில் படமாகக்
காட்டப்படுகின்றன.             குடியரசுத்தலைவராக இருந்தபோது
டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் நூலகத்தைப் பார்வையிட்டு,
பார்வையாளர்கள் பதிவேட்டில் நூலகத்தின் செயல்பாடுகள்
மிக நன்றாக இருப்பதாக தன் கைப்பட எழுதியுள்ளார்.
இதுபோல, திரு.தென்கச்சி சுவாமிநாதன், திரு. வேலுக்குடி
க்ருஷ்ணன் மற்றும் பல பிரபலங்கள் இந்நூலகத்திற்கு வந்து
நூலகத்தைப் பற்றி தங்கள் கருத்துக்களை தங்கள் கைப்படப்
பதிந்துள்ளனர். மேலும், இந்த நூலகத்துக்கு உயர்நீதிமன்ற
நீதிபதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இன்றும் வருகின்றனர்.

மேலும் இந்த நூலகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள,
http://www.penningtonlibrary.com/home.aspx 

மருத்துவமனையில் ஓர் அனுபவம்

புதன், நவம்பர் 03, 2010

             "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற
இந்த பழமொழிக்கு ஏற்ற மாதிரி நம்ம  வாழ்க்கையும்
அமைந்துவிட்டால் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைக்
கேட்டால், பெயர் தெரியாத பலவித நோய்கள் பரவிக்
கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், நோயற்ற வாழ்வை
விடப்பெரிய செல்வம் வேறு இல்லை என்றே சொல்வேன்.
இப்படி நான் சொல்வதற்குக் காரணம், என் குழந்தைக்கு
உடம்பு சரியில்லாத சமயத்தில் மருத்துவமனையில் அட்மிட்
செய்யும் நிலை ஏற்பட்டது. அப்போது அது, குழந்தைகள் நல
மருத்துவமனை என்பதால், நோயுற்றப் பல குழந்தைகளைப்
பார்க்க நேரிட்டது.


              ஆறு மாதக் குழந்தை ஒன்று, வெந்நீரில் விழுந்து
விட்டதாகத் தீப்புண்களோடு தூக்கி வந்திருந்தார்கள்; டெங்கு
காய்ச்சலால் பாதிக்கப்பட்டக் குழந்தைகள்,
வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டக் குழந்தைகள் எனப் பல
குழந்தைகளை அங்கு அட்மிட் செய்திருந்தார்கள். அந்தக்
குழந்தைகள் வலியினால் துடித்து அழுவதைப் பார்க்க, ரொம்பக்
கஷ்டமாக இருந்தது. குழந்தைகள் என்ன செய்யும் பாவம்!
பெரியவர்களாலேயே இவற்றையெல்லாம் தாங்கிக்
கொள்ளமுடியாது. ஆனால் அங்குள்ள நர்ஸ்களுக்கும்,
டாக்டர்களுக்கும் இது பழகிவிட்டதால், எந்தக்
கவலையுமில்லாமல் சிகிச்சையளிக்கிறார்கள். நாம்தான்
குழந்தைக்கு வலிக்குமோ எனப் பயந்து, பயந்து செய்கிறோம்.
அவர்கள் இதை மிக எளிதாக செய்கிறார்கள்.

            
              அதுபோல, 2மாதக் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு
என அந்தக் குழந்தையின் அப்பா ஒரு அழுக்குத்துணியில்
குழந்தையைச் சுற்றி எடுத்துவந்திருந்தார். அவர்
பார்ப்பதற்கு மிகவும் ஏழ்மையான, படிப்பறிவில்லாத,
கிராமத்து மனிதர் போல இருந்தார். அந்தக் குழந்தையை
அவர்பாட்டிற்கு தரையில் படுக்க வைத்துவிட்டு
மருந்து வாங்கப்போய்விட்டார். இதனால் அந்தக்
குழந்தையை ஈ மொய்த்துக்கொண்டிருந்தது. பக்கத்தில்
அதற்குக் கொடுக்கும் பால் பாட்டிலும் மூடி இல்லாமல்
இருந்தது. அந்தப் பாட்டில் ரப்பரையும் ஈ மொய்த்துக்
கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்தக்குழந்தை அழ
ஆரம்பித்தது. உடனே அவர் வந்து, அந்த பால் பாட்டிலில்,
கொண்டு வந்திருந்த பால்பவுடரைப் போட்டு, ஒரு அழுக்கு
தண்ணீர் பாட்டிலில் தான் குடிக்க வைத்திருந்த தண்ணீரை
ஊற்றி,  பால் பாட்டிலை நன்கு குலுக்கி, அதை குழந்தையின்
வாயில் வைத்தார். அதுவும் குடித்துவிட்டு தூங்கிவிட்டது.
அவர் வைத்திருந்த பால் பாட்டிலும் சுத்தம் இல்லை;
தண்ணீர் பாட்டிலும் சுத்தம் இல்லை. பின் எப்படி அந்தக்
குழந்தைக்கு வயிற்றுப்போக்கு குணமாகும்? அங்குள்ள
நர்ஸ்களோ, இதை வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு
இருந்தார்களே தவிர, ஒருவரும் இதைப் பற்றி
அத்தந்தையிடம் சொல்லவில்லை. படிப்பறிவில்லாத
அவருக்கு சொன்னால்தானே தெரியும்? அதுவும்,
டாக்டரோ அல்லது நர்ஸ்களோ முறையாக எடுத்துச்
சொன்னால்தான் இவரைப் போன்றவர்களுக்குப் புரியும்.
 

              பல மருத்துவமனைகளில், இதுபோன்ற
படிக்காதவர்களை மிகச்சுலபமாக ஏமாற்றியும்
விடுகிறார்கள். அவர்களுக்கு புரியாதமுறையில்
நோயின் பெயரைச் சொல்லி, பணத்தைக் கறந்து
விடுகிறார்கள். இப்படி அங்கு இருந்த ஒரு வாரத்தில்
பல சம்பவங்களைப் பார்க்க நேரிட்டது. இதனால்
மனதிற்கு மிகவும் கவலைதான் ஏற்பட்டது.
இப்பொழுதெல்லாம், கோவிலுக்குப் போனால்
நோயற்ற வாழ்வு  வேண்டும் என்றுதான் வேண்டிக்
கொள்ளத் தோன்றுகிறது. அனுபவப்பட்டதால்,
அதுவே மிகப்பெரும் செல்வமாக எண்ணத் தோன்றுகிறது.
Related Posts with Thumbnails