மருத்துவமனையில் ஓர் அனுபவம்

புதன், நவம்பர் 03, 2010

             "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற
இந்த பழமொழிக்கு ஏற்ற மாதிரி நம்ம  வாழ்க்கையும்
அமைந்துவிட்டால் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைக்
கேட்டால், பெயர் தெரியாத பலவித நோய்கள் பரவிக்
கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், நோயற்ற வாழ்வை
விடப்பெரிய செல்வம் வேறு இல்லை என்றே சொல்வேன்.
இப்படி நான் சொல்வதற்குக் காரணம், என் குழந்தைக்கு
உடம்பு சரியில்லாத சமயத்தில் மருத்துவமனையில் அட்மிட்
செய்யும் நிலை ஏற்பட்டது. அப்போது அது, குழந்தைகள் நல
மருத்துவமனை என்பதால், நோயுற்றப் பல குழந்தைகளைப்
பார்க்க நேரிட்டது.


              ஆறு மாதக் குழந்தை ஒன்று, வெந்நீரில் விழுந்து
விட்டதாகத் தீப்புண்களோடு தூக்கி வந்திருந்தார்கள்; டெங்கு
காய்ச்சலால் பாதிக்கப்பட்டக் குழந்தைகள்,
வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டக் குழந்தைகள் எனப் பல
குழந்தைகளை அங்கு அட்மிட் செய்திருந்தார்கள். அந்தக்
குழந்தைகள் வலியினால் துடித்து அழுவதைப் பார்க்க, ரொம்பக்
கஷ்டமாக இருந்தது. குழந்தைகள் என்ன செய்யும் பாவம்!
பெரியவர்களாலேயே இவற்றையெல்லாம் தாங்கிக்
கொள்ளமுடியாது. ஆனால் அங்குள்ள நர்ஸ்களுக்கும்,
டாக்டர்களுக்கும் இது பழகிவிட்டதால், எந்தக்
கவலையுமில்லாமல் சிகிச்சையளிக்கிறார்கள். நாம்தான்
குழந்தைக்கு வலிக்குமோ எனப் பயந்து, பயந்து செய்கிறோம்.
அவர்கள் இதை மிக எளிதாக செய்கிறார்கள்.

            
              அதுபோல, 2மாதக் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு
என அந்தக் குழந்தையின் அப்பா ஒரு அழுக்குத்துணியில்
குழந்தையைச் சுற்றி எடுத்துவந்திருந்தார். அவர்
பார்ப்பதற்கு மிகவும் ஏழ்மையான, படிப்பறிவில்லாத,
கிராமத்து மனிதர் போல இருந்தார். அந்தக் குழந்தையை
அவர்பாட்டிற்கு தரையில் படுக்க வைத்துவிட்டு
மருந்து வாங்கப்போய்விட்டார். இதனால் அந்தக்
குழந்தையை ஈ மொய்த்துக்கொண்டிருந்தது. பக்கத்தில்
அதற்குக் கொடுக்கும் பால் பாட்டிலும் மூடி இல்லாமல்
இருந்தது. அந்தப் பாட்டில் ரப்பரையும் ஈ மொய்த்துக்
கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்தக்குழந்தை அழ
ஆரம்பித்தது. உடனே அவர் வந்து, அந்த பால் பாட்டிலில்,
கொண்டு வந்திருந்த பால்பவுடரைப் போட்டு, ஒரு அழுக்கு
தண்ணீர் பாட்டிலில் தான் குடிக்க வைத்திருந்த தண்ணீரை
ஊற்றி,  பால் பாட்டிலை நன்கு குலுக்கி, அதை குழந்தையின்
வாயில் வைத்தார். அதுவும் குடித்துவிட்டு தூங்கிவிட்டது.
அவர் வைத்திருந்த பால் பாட்டிலும் சுத்தம் இல்லை;
தண்ணீர் பாட்டிலும் சுத்தம் இல்லை. பின் எப்படி அந்தக்
குழந்தைக்கு வயிற்றுப்போக்கு குணமாகும்? அங்குள்ள
நர்ஸ்களோ, இதை வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு
இருந்தார்களே தவிர, ஒருவரும் இதைப் பற்றி
அத்தந்தையிடம் சொல்லவில்லை. படிப்பறிவில்லாத
அவருக்கு சொன்னால்தானே தெரியும்? அதுவும்,
டாக்டரோ அல்லது நர்ஸ்களோ முறையாக எடுத்துச்
சொன்னால்தான் இவரைப் போன்றவர்களுக்குப் புரியும்.
 

              பல மருத்துவமனைகளில், இதுபோன்ற
படிக்காதவர்களை மிகச்சுலபமாக ஏமாற்றியும்
விடுகிறார்கள். அவர்களுக்கு புரியாதமுறையில்
நோயின் பெயரைச் சொல்லி, பணத்தைக் கறந்து
விடுகிறார்கள். இப்படி அங்கு இருந்த ஒரு வாரத்தில்
பல சம்பவங்களைப் பார்க்க நேரிட்டது. இதனால்
மனதிற்கு மிகவும் கவலைதான் ஏற்பட்டது.
இப்பொழுதெல்லாம், கோவிலுக்குப் போனால்
நோயற்ற வாழ்வு  வேண்டும் என்றுதான் வேண்டிக்
கொள்ளத் தோன்றுகிறது. அனுபவப்பட்டதால்,
அதுவே மிகப்பெரும் செல்வமாக எண்ணத் தோன்றுகிறது.

19 comments:

தாராபுரத்தான் சொன்னது…

நல்ல தகவலுங்க

LK சொன்னது…

ஜிஜி , ஒரு காலத்தில் சேவை என்று கருதப் பட்டது மருத்துவத் தொழில். அதேபோல் கல்வி அளிப்பதும், உணவு இடுதலும் செவையாகதான் கருதப் பட்டன . இன்றைக்கு எல்லாமே பணம்தான். எவ்ளோ கொள்ளை அடிக்க முடியும் ஒருத்தன்கிட்ட அப்படிங்கரதுலதான் குறியா இருக்காங்க எல்லாரும்

துளசி கோபால் சொன்னது…

பழமொழி ரொம்ப உண்மை.

இப்பெல்லாம் எங்கும் எதிலும் 'பணம்'தான் :(

புஷ்பா சொன்னது…

உண்மையான கருத்து ஜிஜி.... அதுவும் அரசு மருத்துவமனையில் வேலை புரியும் செவிலியரின் தொண்டு மிகவும் கேவலமாக நடத்த படுகின்றது...

வெறும்பய சொன்னது…

அரசு மருத்துவமனைகளில் தான் இது போன்று நடக்கிறது என்றால் தனியார் மருத்துவமனைகளில் பல விசயங்களில் இதனையும் மிஞ்சி விடுகிறார்கள்...

சுகாதாரமே சுகமான வாழ்வு...

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ம் நான் கூட என் பையனுக்கு ரொம்ப முடியாம மருத்துவமனை அனுபவத்தை எழுதி இருக்கேன் ஜிஜி..அ து கொடுமை மேலும் அங்க பார்த்ததெல்லாம் அதை விட கொடுமை.. ஒரு குழந்தை மஸ்கிட்டோ மேட்டை சாப்பிட்டுட்டான்னு கூட்டிட்டு வந்தாங்க.. :(

Chitra சொன்னது…

பல மருத்துவமனைகளில், இதுபோன்ற
படிக்காதவர்களை மிகச்சுலபமாக ஏமாற்றியும்
விடுகிறார்கள். அவர்களுக்கு புரியாதமுறையில்
நோயின் பெயரைச் சொல்லி, பணத்தைக் கறந்து
விடுகிறார்கள். இப்படி அங்கு இருந்த ஒரு வாரத்தில்
பல சம்பவங்களைப் பார்க்க நேரிட்டது.


.....மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குதுங்க... என்ன இருந்தாலும், குழந்தைகள் கஷ்டப்படுரத்தை பார்த்தும் கண்டுக்காமல் இருக்க எப்படித்தான் மனது வருதோ? :-(

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வருத்தமான விஷயம். எல்லா துறையிலும் பணம் சம்பாதிப்பதே பிரதானமாய் போய்விட்டது. :(

சேவை

RVS சொன்னது…

கவுண்டர்ல காசைக் கட்டிட்டு... அப்படியே போய்கிட்டே இருக்க வேண்டியது தான்... வருத்தமான விஷயம்.. ;-)

அமைதிச்சாரல் சொன்னது…

வருத்தமா இருக்குதுப்பா.. எங்கியும் பணதேவனே ஆட்சிபுரிகிறான் :-(

வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

மருத்துவ சேவை........ பணத்தின் கைகளில் சிக்கி பல நாட்கள் ஆகின்றன.......

ஜிஜி சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி தாராபுரத்தான்.

ஜிஜி சொன்னது…

வாங்க LK.
நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
வருகைக்கு நன்றி.

ஜிஜி சொன்னது…

வாங்க துளசி கோபால்.
வருகைக்கு ரொம்ப நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

@ புஷ்பா,
அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் இப்படி அரசு சார்ந்த எல்லா இடங்களிலும் இதே நிலைமைதான்.
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

@ வெறும்பய,
ஆமாங்க.நிஜம்தாங்க.
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

@முத்துலெட்சுமி,
சின்னக் குழந்தைங்களுக்கு உடம்பு சரியில்லைனா ரொம்ப கஷ்டம்தாங்க.
உங்க பதிவை படிக்கிறேன்.வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

@ சித்ரா ,
ஆமாங்க.இதுதான் இன்றைய நிலைமை..
வருகைக்கு நன்றிங்க.

ஜிஜி சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ்,
RVS,
அமைதிச்சாரல்,
வழிப்போக்கன் - யோகேஷ்

நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
வருகைக்கு நன்றி.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails