ஆஸ்திரேலியத் தேர்தலில் முதல் தமிழ்ப் பெண்! -பிராமி ஜெகன்

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

              சில மாதங்களுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர்; அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என்பது டிவி, பத்திரிகைகள் மூலமாக நாமறிந்த செய்தி. இன்று 30 வயதுப் பெண்மணி ஆஸ்திரேலிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், மேலவைக்கு (செனட்) 'கிரீன்ஸ் கட்சி'யின் சார்பாகப் போட்டியிடுகிறார்!
            பொதுவாக, புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வரும் தமிழர்கள், அரசியல் அமைப்புகளில் அதிகம் பங்கேற்பதில்லை. பொது அமைப்புகளில் பணியாற்ற விரும்பினால், தமிழ்ச் சங்கங்கள் அமைப்பார்கள்..கோவில் கட்டுவார்கள். அவ்வளவுதான். ஆனால், தமிழ்ப் பெண் ஒருவர், வெள்ளைக்காரர்கள் மட்டுமே போட்டியிடும் பொதுத் தேர்தலில், அவர்களுக்குச் சமமாக அரசியல் களம் இறங்கியிருப்பது ஆச்சரியம்தானே!
           1988 -ல் குடும்பத்துடன் எட்டு வயதுக் குழந்தையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தவர் பிராமி ஜெகன். இவரின் தந்தை அருணாசலம் ஜெகன், சிவில் எஞ்சினியர். தாய் கிருஷ்ணா, ஆசிரியை.

 
                சிட்னியில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் ' இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்' பட்டப் படிப்பை முடித்து, மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான் 'மேக்குவாரி வங்கி'யில் பணியில் சேர்ந்தார் பிராமி ஜெகன். பின்னர், உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றான, ஜே.பி.மார்கனில், ஆஸ்திரேலியாவிலும் மற்றும் 2002 -ஆம் ஆண்டு முதல் லண்டனிலும் பணியாற்றினார். லண்டனில் இருந்த பொழுது இதழியல் துறையில் ஆர்வம் ஏற்பட்டு, 'லண்டன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிச'த்தில் இதழியல் பட்டம் பெற்றார். மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி, வங்கி வேலையை விட்டு விட்டு எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியில் பணியாற்றியவர், தற்போது ' அஃபிடா' என்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவனத்தில் தகவல் தொடர்புத் துறை அதிகாரி!

                 இவர் இலங்கையில் பிறந்திருந்தாலும், 2002 வரை..அதாவது அவருக்கு 22 வயதாகும் வரை இலங்கைக்குச் சென்றதில்லையாம். "இலங்கையின் நிகழ்வுகளைச் செய்திகளாகப் படித்திருந்தாலும், போரின் கோரத்தாண்டவத்தை நேரில் சென்று பார்த்தபோது நிலைகுலைந்து போனேன். அதன் தாக்கத்தால் தான், உலகில் தங்கள் வாழ்க்கையில் கொடுமைகளைத் தவிர வேறு எதையுமே சந்தித்திராத இலங்கைத் தமிழர் உள்ளிட்ட மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே இதழியல் படித்தேன்" என்று கூறுகிறார்.


              இவர் சேர்ந்துள்ள கிரீன்ஸ் கட்சி ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய கட்சி. சராசரியாக 12 முதல் 16 சதவிகிதம் வரை வாக்குகளைக் கொண்டது. "நேர்மை, மனிதநேயம், சுற்றுச்சூழல், வறியவர்களைச் சுரண்டுதலை எதிர்த்தல், எல்லார்க்கும் எல்லாமும்" போன்ற கொள்கைகளைத் தன உயிர் நாடியாகக் கொண்ட கட்சி. இதன் தலைவர், செனட்டர் பாப் பிரவுன். "போராடும் குணமும், கொள்கைப் பிடிப்பும் கொண்ட கட்சியாக கிரீன்ஸ் கட்சி இருப்பதால் தான் அதில் சேர்ந்தேன்" என பிராமி கூறியுள்ளார். எப்படியிருந்தாலும் ஆஸ்திரேலியத் தேர்தலில் முதல் தமிழ்ப் பெண் கலந்து  கொள்வது நமக்குப் பெருமைமிக்க விஷயம் தானே! அவர் தேர்தலில் ஜெயித்து சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்!

நன்றி: ஜூ.வி.

        

1 comments:

விநாயகதாசன் சொன்னது…

இருள்வதால் முடியாது
இரவியின் கதை
என்பதை நிரூபிக்கும் செய்தி
பிராமி ஜெகன் வெற்றி பெற வாழ்த்துவோம்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails