தேவை... ரயிலில் போதிய மருத்துவ வசதி...

புதன், டிசம்பர் 29, 2010

                                                           
                 இது நடந்தது 2007 பிப்ரவரியில். நானும் என் 
அப்பாவும் எனது ஊரிலிருந்து சென்னைக்குச் சென்று 
கொண்டிருந்தோம். பின் அங்கிருந்து நான் ஹைதராபாத்தில் 
ஒரு இன்டர்வியூவுக்குச் செல்வதாக இருந்தது. எனக்கு சிறு 
வயதிலிருந்தே வீசிங் தொல்லை உண்டு. அன்றும் அந்த 
தொல்லையால் ஊரிலேயே டாக்டரிடம் காண்பித்துவிட்டு 
இன்டர்வியூ கண்டிப்பாக அட்டென்ட் பண்ண வேண்டுமென 
அன்றிரவே சென்னைக்குச் சென்று கொண்டிருந்தோம். 
நள்ளிரவில் திடீரென எனக்கு வீசிங் அதிகமாகியது. மற்ற 
பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பாவுக்கு 
என்ன செய்வதென்று தெரியவில்லை. கடுமையான மூச்சுத் 
திணறலுடன் இருந்த என்னைத் தனியாக விட்டுப் போக 
மனமின்றி, ரயிலில் உள்ள டாக்டரை ஒவ்வொரு பெட்டியாகத்
தேடிப் போனார். ரயிலில் டாக்டர் இல்லை. 
               பின் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. அப்பா 
அந்த ஸ்டேஷனில் இறங்கி ரயில்வே டாக்டரை அழைத்து வர 
ஓடினார். அங்கும் எவரும் இல்லை. ஸ்டேஷனில் அனைவரும் 
உறங்கிக் கொண்டிருந்தனர். ரயிலும் கிளம்பி விட்டது. எனவே 
அப்பா வண்டியில் ஏறி விட்டார். ஒரு வழியாக உயிரைக் 
கையில் பிடித்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன். பின்னர் 
சித்தப்பாவின் உதவியால் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை 
எடுத்துவிட்டு அன்றிரவே ஹைதராபாத் இன்டர்வியூவுக்குச் 
சென்றேன். என்னால் அந்த இரவுப் பயணத்தை முழுவதுமாக 
மறக்க முடியவில்லை.
               என் நிலைமை வயதானவர்களுக்கு நடந்திருந்தால் 
எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட 
பார்க்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து , நடிகரும் ,செய்தி
வாசிப்பாளருமான திரு. வரதராஜன் அவர்களின் பேட்டியை ஒரு 
பத்திரிகையில்  படித்தேன். கிட்டத்தட்ட இதே நிலையில், 
ரயிலில் போதிய மருத்துவ வசதி இல்லாமல், அவரது 
மனைவியை இழந்ததை அறிந்தேன். மிகவும் வருத்தமாக 
இருந்தது.
             இது நடந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகப் 
போகிறது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால்,
போன மாதம் கூட, என் அப்பா சென்னைக்கு சென்று 
கொண்டிருக்கும் போது இதே போல,ரயிலில் நெஞ்சு 
வலியால் கஷ்டப்பட்டிருக்கிறார். அப்போதும் ரயிலில்
மருத்துவர் யாரும் இல்லை. நாம் தேடும்போது, டிக்கட் 
பரிசோதகர் கூட இருப்பதில்லை. சிறிது நேரத்தில், வலி 
தானாகவே சரியானதால் பெரிதாகப் பிரச்சனை இல்லை 
அப்பாவுக்கு. இதே ஹார்ட் அட்டாக் போல, பெரியதாக 
ஏதும் இருந்திருந்தால் , நினைத்துக் கூடப் பார்க்க 
முடியவில்லை.
              ரயிலில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு டிக்கட் 
பரிசோதகர் இருக்கிறார். சில நேரங்களில்தான் அவர்கள் 
அந்தப் பெட்டியிலேயே தங்குகின்றனர். இந்த நிலை மாறி, 
அவர்கள் கண்டிப்பாக பெட்டியில்தான் இருக்க வேண்டும்.
அதே போல சில பெட்டிகளில்தான் போலீசும் இருக்கின்றனர்.
ஒவ்வொரு பெட்டியிலும் இருந்தால் தானே மக்கள் 
பாதுகாப்புடன் பயணிக்க முடியும்? கண்டிப்பாக ஒவ்வொரு 
பெட்டிக்கும் ஒரு மருத்துவரும், ஒரு முதலுதவிப்
பெட்டியும் அவசியம் தேவை.
            முன்பெல்லாம் ரயில் டிக்கெட் எடுக்கும்போதே  
டிக்கெட் எடுக்கும் பார்மில், மருத்துவராக இருந்தால்,
மருத்துவர் என்று குறிப்பிட வேண்டும். அப்படியாவது,
ரயிலில் ஒன்றிரண்டு மருத்துவர்கள், ஏதாவது ஒரு 
பெட்டியிலாவது இருந்தனர். இப்போது அதுவும் இல்லை.   
               வருடா வருடம் ரயில்வே பட்ஜெட்டில் பல புதிய 
திட்டங்கள் அறிமுகமாகின்றன; வசதிகள் 
மேம்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்றும் ரயில்களில் 
போதிய மருத்துவ வசதிகள் இல்லை.  கால் ஊனமுற்றவர்கள் 
மிகவும் கஷ்டப்பட்டுதான் இன்னமும் ரயிலில் ஏறுகிறார்கள். 
என்று மாறும் இந்த நிலை?

20 comments:

ஹுஸைனம்மா சொன்னது…

முக்கியமான விஷயத்தை எழுதிருக்கீங்க. கண்டிப்பா டிடிஆர், ரயிலில் இருக்கும் மருத்துவர்களைத் தெரிந்திருக்க வேண்டும். டிடிஆர்கள் அவர்களுக்குரிய குறிப்பிட்ட இடத்தில் இருக்கவும் வேண்டும்.

உங்களுக்கு, சக பயணிகள் யாரும் கவனம் செலுத்தவில்லை என்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

கோவை2தில்லி சொன்னது…

அனுபவப்பட்ட விஷயத்தை பற்றி எழுதியுள்ளீர்கள். இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமும் கூட. அவசியமான மருந்துகளை கையில் கொண்டு செல்லலாம். இது ஓரளவு உதவியாய் இருக்கும். மற்றபடி மருத்துவரும், டி.டி.ஆரும் பெட்டியில் இருப்பது அவசியம். பகிர்வுக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

ம்.. நினைக்கவே பயமா இருக்கு ஜிஜி..
நீங்க சொல்வது போல இப்பல்லாம் டாக்டர்கள் என்று யாரும் எழுதிக்கொடுத்து பயணித்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு அனவுன்ஸ் செய்ய ஒரு மைக் அண்ட் எல்லா பெட்டிக்கும் அது ஒலிக்கும் வகை என்று வைத்தாலும் கூட பயனுள்ளது தான்.

நேசமித்ரன் சொன்னது…

தார்மீக உணர்வுடன் எழுதியிருக்கும் பதிவு. தொடர்க .. மாற்றங்கள் மீதான நம்பிக்கைதான் நகர்த்துகிறது அந்தியை விடியலுக்கு.

Thekkikattan|தெகா சொன்னது…

பெட்டிக்கு ஒரு மருத்தவர், காவலர் என்பதெல்லாம் என்றுமே நடவாத காரியம்.

ஒவ்வொரு ட்ரிப்பிற்கும் வேண்டுமானால் சிறப்பு காவலர் ஒருவரும், மருத்துவரும் அமைத்துக் கொடுப்பது இது போன்ற சூழ்நிலைகளில் மிக்க பயனளிக்கும். ஒவ்வொரு சந்திப்பிலும் நல்ல ஒர்க்கிங் கண்டிஷனில் இருக்கு காவல் நிலையமும், மருத்துவ க்ளினிக்கும் அமைத்துக் கொடுத்தாலே ஓரளவிற்கு நிலமையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

முத்து, கூறியிருக்கும் மாற்று ஐடியா மேக் மோர் சென்ஸ்!

அவசியமானதொரு பதிவு!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. 2007-ல் அல்ல இன்றும் அந்த நிலைமை தான் நம் ரயில் துறையில். ஓரிரு வருடங்களுக்கு முன் நான் தமிழ்நாடு விரைவு வண்டியில் வந்து கொண்டு இருக்கும்போது சக பயணி ஒருவர் போதிய மருத்துவ வசதி இல்லாமையால் இறந்து விட்டார். தடுக்கப்படக்கூடிய ஒன்று.

ஜிஜி சொன்னது…

வாங்க ஹுஸைனம்மா,
வருகைக்கு நன்றி.
ஆமாம்.சக பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
ஒருவரை எழுப்பியபோது, ரயிலில் டாக்டர் இருப்பார் பாருங்கள் என சொல்லிவிட்டு மறுபடி உறங்கிவிட்டார்.

ஜிஜி சொன்னது…

வாங்க கோவை2தில்லி,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜிஜி சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி,
நீங்க சொல்வது மிகவும் பயனுள்ளது.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜிஜி சொன்னது…

வாங்க நேசமித்ரன்,
//மாற்றங்கள் மீதான நம்பிக்கைதான் நகர்த்துகிறது அந்தியை விடியலுக்கு. //
மிகவும் சரி.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜிஜி சொன்னது…

வாங்க தெகா,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜிஜி சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ்,
ஆமாம் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்.மேலும் மாற்று நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

asiya omar சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றி.ஏதாவது நாளிதழில் பகிர்ந்தால் விழிப்புணர்ச்சி அதிகம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.

கனாக்காதலன் சொன்னது…

You are very correct GG. Your father's position would be worser than yours at that time. hmmmm

அமுதா கிருஷ்ணா சொன்னது…

இப்பொழுது எல்லாம் சில மருத்துவர்கள் இரவில் தொந்தரவு என்று தங்களை பற்றி ஃபாரத்தில் குறிப்பிடுவது இல்லை.

ஜிஜி சொன்னது…

வாங்க ஆசியா,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜிஜி சொன்னது…

வாங்க கனாக்காதலன்,
ஆமாம்.மிகவும் சரி.
நினைத்துக் கூடப் பார்க்க
முடியவில்லை.
வருகைக்கு நன்றி.

ஜிஜி சொன்னது…

வாங்க அமுதா கிருஷ்ணா,
//இப்பொழுது எல்லாம் சில மருத்துவர்கள் இரவில் தொந்தரவு என்று தங்களை பற்றி ஃபாரத்தில் குறிப்பிடுவது இல்லை. //
ஆமாங்க.தொந்தரவுன்னுதான் நினைக்கிறாங்க.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க ஜிஜி. நிச்சயம் ஒரு டாக்டராவது ஒரு ட்ரெயினில் இருக்கணும். டிடிஆர் காவலர்கள் போல கட்டாயமா ஒரு ஜெனரல் பிசிஷியனும் இருக்கணும்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ஆமாம் ஜிஜி. கட்டாயம் ஒரு மருத்துவர் இருக்கணும்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails