சின்ன வயதில் யானையைப் பிடிக்காதவங்க
இருக்கமாட்டாங்க. நான் சிறு வயதில் மிகவும் ரசித்த, மலைத்த,
பிரம்மாண்டமான மிருகம் அது. கோயிலில் பார்க்கும் போதும்,
தெருவில் காசு வாங்க வரும் போதும், அதனிடம் ஆசிர்வாதம்
வாங்கத் தவறுவதில்லை. ஆனால் அதன் மேல் ஏறுவதற்கு
பயம். இப்போதுகூட ஊரில், தெருவிற்கு யானை வரும்போது,
மணிச்சத்தம் கேட்டால் வெளியே வந்து பார்க்கத் தோணுகிறது.
கோவிலில் பார்க்கும்போது கூட ஒரு நிமிடமாவது அதன்
அழகை, கம்பீரத்தை நின்று பார்த்துவிட்டுத்தான் செல்லத்
தோணும். இப்படி நமக்கெல்லாம் பிடித்த யானையைப் பற்றி
நான் சேகரித்த தகவல்கள் இவை.
ஆசிய யானை என அன்பாக அழைக்கப்படும், இந்திய
யானைகளில் பல, தமிழக - கேரள எல்லையில் மேற்குத்
தொடர்ச்சி மலைகளில் வசிக்கின்றன. ஆப்ரிக்க யானைகளை
விட, உயரம் குறைவாகவும், காதுகள் சிறியதாகவும் இவை
இருக்கும். அதிகபட்சம் 6.6 அடி முதல் 11.8 அடி உயரம் வரை
வளரும். 3000 முதல் 5000 கிலோ வரை எடை இருக்கும். ஆண்
யானைக்கு மட்டுமே பெரிய தந்தங்கள் இருக்கும். பெண்
யானைக்கு வெளியே தெரியாத வகையில் சிறு தந்தம் இருக்கும்.
சில ஆண் யானைகளுக்கு தந்தம் இருக்காது, இவை ' மக்னா '
யானைகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தோல் 3
முதல் 5 செ.மீ., வரை தடிப்பானவை. ஒரு நாளைக்கு 150 கிலோ
முதல் 170 கிலோ வரை உட்கொள்ளும்.
சீசனுக்கு ஏற்ப இடம் மாறும் இவை, தங்களுக்கு என
தனி பாதையை வைத்திருக்கும். இந்தப் பாதையை மனிதர்கள்
ஆக்கிரமிக்கும் போது தான், குடியிருப்புகளுக்குள் யானைகள் புக
வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கூட்டம் கூட்டமாக வாழும்
தன்மையுடைய யானைகளுக்கு, மூத்த ஆண்யானை தலைமை
ஏற்று நடத்திச் செல்லும். கெல்லும் பாதையை நினைவு வைத்துக்
கொள்ள வேண்டிய பொறுப்பு, தலைமை யானைக்கு உண்டு.
நன்கு வளர்ந்த யானைக்கு மனிதர்களைத் தவிர, வேறு எதிரிகள்
கிடையாது. குட்டி யானைகளைத்தான் புலி வேட்டையாடும்.
காட்டில் அதிகபட்சம் 60 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
யானைகள், வளர்க்கப்படும்போது, 80 ஆண்டுகள் வரை
உயிர்வாழும். ஒருநாளைக்கு 80 முதல் 200 லிட்டர் தண்ணீர்
இவற்றுக்குத் தேவை. இதில் பெரும்பாலனதை குளிக்கப்
பயன்படுத்தும்.
' இன்ஃப்ரா சவுண்ட் ' மூலம் தங்களுக்குள் யானைகள்
பேசிக்கொள்ளும். இந்திய ஆராய்ச்சியாளர் எம்.கிருஷ்ணன்
என்பவர்தான் இதை முதலில் கண்டுபிடித்தார். பெண் யானை,
9 முதல் 15 ஆண்டுகளுக்குள் பருவத்தை எட்டும். 18 முதல் 22
மாதங்கள், இதற்கு கர்ப்பகாலம். 19 மாதங்களிலேயே, தாய்
வயிற்றில் குட்டி, முழு வளர்ச்சியை எட்டிவிடும். இருப்பினும்,
அதன்பிறகும் சில மாதங்கள் கழித்துதான், குட்டியை தாய் ஈனும்.
இது ஒரு இயற்கை விநோதம். இதற்குக் காரணம், ஈன்ற உடனே,
எழுந்து நின்று தாயிடம் பால் குடிக்கும் உயரத்தை குட்டி எட்ட
வேண்டும் என்பதற்காக.
பிறந்த உடன், யானைக்குட்டி 100 கிலோ எடை
இருக்கும். ஒருமுறைக்கு ஒன்று அல்லது அரிதாக இரண்டு
குட்டிகளைத் தாய் ஈனும். குட்டி ஓரளவு பெரிதாகும் வரை தாய்
மீண்டும் கருத்தரிக்காது. இதற்கு ஐந்து ஆண்டுகள் வரை
ஆகுமாம். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் யானைக்கு
' ஹார்மோன் ' அதிகம் சுரக்கும் போது, ' மதம் ' பிடிக்கிறது.
ஜோடி கிடைக்காவிட்டால், மூர்க்கத்தனமாக மற்ற
யானைகளைத் தாக்கும். சில நேரங்களில், இதற்கு பெண்
யானைகள் பலியாவது உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை தான்
இது நிகழும்.
நாமெல்லாம் ஊர்களில், கோவில்களில், தெருக்களில்
பார்த்த யானையை, இப்போதுள்ள சந்ததியினரால் வெறும்
புத்தகங்களில் படமாகவும், டிவியிலும் மிருகக்காட்சி
சாலையிலும் மட்டுமே பார்க்க முடிகிறது. சிறுவயதில்
நமக்கெல்லாம் மிகவும் பிடித்த, யானை இனம் கொஞ்ச
கொஞ்சமாக அழிந்து வருவது மிகுந்த வேதனைக்கு உரிய
விஷயம்.
