அன்னை ஸ்ரீ சாரதாதேவி

வியாழன், செப்டம்பர் 16, 2010

              எனது கல்யாணத்திற்கு, அன்பளிப்பாக வந்த அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, கொஞ்ச நாள் முன்புதான் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரையும், அவரது சீடரான சுவாமி விவேகானந்தரையும்
பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த எனக்கு, அந்தப் புத்தகத்தின் பதிப்புரையிலேயே, "இந்த நூலைத் தமிழன்பர்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆவல்" என்று கொடுத்திருந்தது ஆர்வத்தைத் தூண்டியது.
             அந்தப் புத்தகம் பக்தையாகவும், கர்ம வீராங்கனையாகவும், யோகினியாகவும், ஞானியாகவும் வாழ்ந்த ஒரு பெண்மணியின் வரலாறு. "அந்தப் பெண்தான் ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரோட மனைவி ஸ்ரீ சாரதா தேவி. ஒரு பெண்ணுக்கு அஞ்சு வயசுல கல்யாணம் ஆகுது. பதினாறு வயசு வரைக்கும்  பிறந்த வீட்டுலதான் வாழ்க்கை. அதுக்கப்புறம் அவளை அழைச்சுட்டுப் போய் புருஷன் வீட்டுல விடறாங்க. ஆனா, அதுக்குள்ள அவ புருஷன், மகாபுருஷரா ஆகியிருக்கார். ஒரு யோகி மாதிரி கடவுளுக்குப் பக்கத்துல நின்னு பல பேருக்கு ஞானம் தர்றார். 'சுவாமி'னு கூப்பிட வேண்டிய ஆளு, நிஜமாவே சாமி மாதிரி பேசறார். இவ வீட்டுக்கு வந்த உடனே 'நீ என் மனைவி இல்ல.. அம்பிகை'னு சொல்லி பூஜை செய்யறார். அந்தப் பதினாறு வயசுப் பொண்ணு பாவம்! என்ன பண்ணுவா? ஸ்ரீ சாரதா தேவி அம்மாவோட வாழ்க்கையில நடந்தது இதுதான்.
.


            அந்த வயசுல அவங்க எடுத்த முடிவை என்னால கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியலை. ' நான் ராமகிருஷ்ணருக்கு மனைவியாதானே இருக்க முடியாது... அவருக்கு அம்மாவா இருக்கலாமே'னு கடைசிவரைக்கும் ஒரு தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்காங்க அந்தம்மா! ஸ்ரீராமகிருஷ்ணரின் மனைவியாக இருந்தாலும் ஆயிரக்கணக்கானோர் 'அம்மா' என்று அழைக்கிற கன்னித்தாயாக வாழ்ந்தார். அவர் காலத்துக்கு அப்புறம் அவரோட நல்ல காரியங்களைத் தொடர்ந்து செஞ்சு, இன்னிக்கு 'ராமகிருஷ்ணா மிஷன்'னு ஒரு சாம்ராஜ்யமே உருவாகறதுக்கு விதையா இருந்தவங்க அவங்கதான். இன்று உலகமெல்லாம் பரவி நிற்கின்ற 'ராமகிருஷ்ண மடம்' மற்றும் 'ராமகிருஷ்ணா மிஷன்' தோற்றத்திலும், வளர்ச்சியிலும் அன்னையின் பங்கு மகத்தானது.
 


              துறவியா இருக்குறது கஷ்டம்தான். ஆனா, அதைவிட துறவியோட மனைவியா இருக்குறது ரொம்பக் கஷ்டம். இதேபோலத்தான் சீதையின் தியாகமும். காட்டுக்குப்போகனும்னு இருந்தது ராமரோட விதி; சீதையும் கூடப்போனதுதான் மனோதிடம். லக்ஷ்மணன் காட்டுக்கு வந்தது அவரோட ரத்தப்பாசம்; ஆனா, ஊர்மிளா அவரை அனுப்பிவைத்ததுதான் அவளது தியாகம். இப்படி வாழ்க்கையையே தியாகம் பண்ணி நம்ம நாட்டுல நிறைய பெண்கள் வாழ்ந்திருக்காங்க. அந்த வரிசையில்தான் சாரதாதேவி அன்னையும் வாழ்ந்திருக்காங்க. அதனால் ஸ்ரீசாரதா தேவி அன்னை, என்னைப் பொருத்தவரை, ராமகிருஷ்ணபரமஹம்சருக்கும் ஒரு படி மேலதான் தெரியறாங்க!"


                                                  

0 comments:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails