பீப்ளி- லைவ் (PEEPLI- Live)

செவ்வாய், செப்டம்பர் 07, 2010

              அமீர்கான் தயாரிப்பில், அனுஷா ரிஸ்வி அன்ற அறிமுகப்பெண் இயக்குனரின் படைப்பில், புதிதாக வெளியாகி இருக்கும் ஹிந்தித் திரைப்படம் " பீப்ளி- லைவ் " (Peepli- Live). இந்தத் திரைப்படத்தை நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், தனது பிரதமர் வேலையில் இருந்து, சிறு விடுப்பு எடுத்துக்கொண்டு பார்த்தார், என்பது கடந்த வாரம் முழுக்க மீடியாக்களின் ஹாட் நியூஸ்!வட இந்தியாவில் ' பீப்ளி ' என்ற பெயரில் பல கிராமங்கள் இருக்கின்றன. அவ்வாறு உள்ள ' பீப்ளி ' என்ற ஒரு சிறிய கிராமத்தில் வாழும் நத்தா, புதியா என்ற இரண்டு சகோதர, விவசாயிகளைப் பற்றியக் கதை! இது சிறிய படம்தான் என்றாலும், சொல்லும் செய்தி மிகப்பெரியது! இந்த இரண்டு விவசாயிகளும் கடும் வறுமையில் வாடுகின்றனர். அவர்கள் நிலத்தை அடகு வைத்து அரசிடம் கடன் வாங்குகின்றனர். ஆனால் அந்தக்கடனை அவர்களால் திருப்பிச்செலுத்த முடியவில்லை. உடனே அரசு நிலத்தைக் கையகப்படுத்தப் போவதாக அறிவிக்கிறது. நிலத்தைத் தக்க வைத்துக்கொள்ள நத்தாவும், புதியாவும் போராடுகின்றனர். என்ன செய்தும் அவர்களால் பணம் புரட்ட முடியவில்லை. அந்த நிலையில், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு அரசு, நஷ்ட ஈடாகப் பணம், ஒரு லட்சம் ரூபாய்  என அறிவிக்கிறது. உடனே, யாராவது ஒருவர் தற்கொலை செய்துகொண்டு அந்த லட்சரூபாயை வாங்குவது என்றும், இன்னொருவர் அந்தப் பணத்தைக் கொண்டு நிலத்தைத் தக்க வைத்துக் கொள்வது எனவும் முடிவு செய்கின்றனர்.
நத்தா தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிடுகிறார். இந்த விஷயம் வெளியில் பரவ, அந்த கிராமத்தை நோக்கி மீடியாக்கள் படையெடுக்கின்றனர். ஒரு தற்கொலையை 'லைவ் டெலிகாஸ்ட்' செய்வதுதான் அவர்களது திட்டம்! அதன்படி, நத்தாவின் ஒவ்வொரு நடவடிக்கையும், டிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு, மீடியாக்கள் அங்கேயே தங்கிவிட, திருவிழா மாதிரி அந்தக் கிராமம் புதியக் கடைகளுடன் காட்சியளிக்கிறது. "ஒரு தற்கொலையை நீங்கள் நேரடியாகப் பார்க்கப்போகிறீர்கள்; உலகத்தொலைக்காட்சிகளிலேயே இவ்வாறு ஒளிபரப்பு செய்வது இதுதான் முதல்முறை" என டிவி ரிப்போர்ட்டர்கள் மைக்கைப் பிடித்துக்கொண்டு பேசுகின்றனர்.


video

இதற்கிடையே, அரசியல்வாதிகளும், சாதிக்கட்சியைச் சேர்ந்தவர்களும் நத்தாவைச் சந்தித்து, டிவிக்களுக்குப் பேட்டி கொடுத்து, தங்களுக்குப் பரபரப்பைத் தேடிக்கொள்கின்றனர். சாப்பிடவே வழியில்லாத நத்தாவின் குடும்பத்திற்கு 'பெரிய டிவி' ஒன்று பரிசாக வழங்கப்படுகிறது. இவ்வாறு நத்தாவின் எல்லா செய்கைகளும் படமாக்கப்படுவதால், ஒருநாள் அவர் இதிலிருந்துத் தப்பித்து ஓடிக் காணாமல் போகிறார். அவரை எல்லோரும் தேடிக் கடைசியில், அந்தக் கிராமத்திலிருந்து மீடியாக்கள் வெளியேறுகின்றன.கேமரா கிராமத்திலிருந்து பின்னோக்கி நகர்ந்து நகரத்துக்குள் நுழைகிறது. அங்கு பெரியக் கட்டடம் ஒன்றின் கட்டுமான வேலைகள்
நடக்குமிடத்தில் பரிதாபமாக நத்தா கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். 'இந்தியாவில் 1991 முதல் 2001 வரை எட்டுமில்லியன் விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்' என்ற செய்தியுடன் படம் முடிகிறது.
               உயிரோடு இருக்கும்போது பணத்துக்காக நிலத்தைப் பிடுங்கும் அரசு, செத்தால் லட்சரூபாய் பணம் தருகிறது என்ற முரண்பாடுதான் படத்தின் கதை. விவசயிகளின் கஷ்டங்களைப் பறைசாற்றும் படம் என்றாலும், அரசாங்கத்தின் சுயநலத்தையும்,
மீடியாக்களின் சில போலித்தனங்களையும் நகைச்சுவையாக, கிண்டலாகப் படத்தில் கூறப்பட்டுள்ளது. 'நத்தாவின் இந்த நிலைக்குக் காரணம், முஸ்லிம் தீவிரவாதிகள்தான்' என ஒரு கேரக்டர் பேசுவது இந்தக் கிண்டலுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!  டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காக தொலைக்காட்சிகள் அடிக்கும் கூத்துகளையும் சொல்லியிருக்கிறார்கள்.


ஆரம்பத்தில் நத்தா கேரக்டரில், அமீர்கான் தான் நடிப்பதாக இருந்ததாம். பின் கதைக்குப் பொருத்தமாக 'ஓம்கார் தாஸ் மானிக்புரி' என்ற புது நடிகர் கிடைத்ததும் அவரையே நடிக்க வைத்துவிட்டனர். 'லகான்', 'ரங் தே பசந்தி',  'தாரே ஜமீன் பர்', '3 இடியட்ஸ்' என்று வரிசையாக சமூகநலப் பார்வை கொண்ட படங்களில் நடித்துவரும் அமீர்கான் தயாரித்த இந்தப் படமும் அவர் இதில் நடிக்காவிட்டாலும் அவருக்கு ஒரு மைல்கல்லாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

4 comments:

SugandhSathiamoorthi சொன்னது…

உங்கள் கோர்ப்புகள் மிகவும் அற்புதமாக உள்ளது .

இப்படிக்கு ,
சுகந்த்

விக்னேஷ்வரி சொன்னது…

அழகான கச்சிதமான விமர்சனம் ஜிஜி.

ரகுநாதன் சொன்னது…

விமர்சனம் நல்லா இருக்கு...

கடைசியில் அந்த களேபரத்தில் அந்த ஸ்டிங்கர் நிருபர் ராகேஷ் தீயில் எரிந்து விடுவார்.

http://krnathan.blogspot.com/2010/09/blog-post_29.html

இதையும் படிங்க...

ஜிஜி சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி
SugandhSathiamoorthi
விக்னேஷ்வரி
ரகுநாதன்..

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails