தொட்டிப்பாலம்
திருவட்டாறுக்கு அடுத்ததாக, அதற்கு அருகில், 3கிமீ
தூரத்தில், மாத்தூரிலுள்ள தொட்டிப்பாலத்திற்கு சென்றோம்.
இந்தத் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிக நீளமான
மற்றும் உயரமான பாலமான இது பரழியாறுக்குக் குறுக்கே
உள்ளது. பாலம் என்பது பெரும்பாலும் ஆற்றின் அல்லது
ஏதாவது ஒரு நீர்நிலையின் இருகரைகளை இணைப்பதாக
இருக்கும்; பாலத்துக்கு மேலே நிலவழிப்போக்குவரத்தும்,
பாலத்துக்கு அடியில் நீரோட்டமும் இருக்கும். ஆனால் இந்தத்
தொட்டிப்பாலத்தில், ஒரு கால்வாயாக நீர் செல்கிறது. இது ஒரு
பெரிய அதிசயமாக எனக்குத் தெரிந்தது. இது 115 அடி உயரமும்,
ஒரு கிமீ தூரமுமாக இரண்டு மலைகளுக்கு இடையில்
கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை மொத்தம் 28 பெரிய தூண்கள்
தாங்கியுள்ளன. 1966ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர்
திரு. காமராசர் அவர்களால் இந்தத் தொட்டிப்பாலம் கட்டப்பட்டு
இருக்கிறது. ஒருவர் பின் ஒருவராகத்தான் இந்தப் பாலத்தில்
போக முடிகிறது. அதிக எடையுள்ள மூட்டையைத் தூக்கிக்
கொண்டு, ஒருவர் மிக வேகமாக இதில் நடந்து சாதனை
செய்ததாக கூறப்படுகிறது. தொட்டிப்பாலத்திற்கு கீழிருந்து மேல்
வரை படிக்கட்டுகள் போடப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்கள்
விளையாட ஒரு பூங்காவும் இருக்கிறது. இது சிறந்த சுற்றுலாத்
தலமாகவும், படப்பிடிப்பு இடமாகவும் உள்ளது.
திற்பரப்பு
மாத்தூருக்கு அடுத்ததாக, சென்ற இடம் திற்பரப்பு
நீர்வீழ்ச்சி. இந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர்
விழுந்து கொண்டே இருக்குமாம். நாங்கள் சென்ற சமயம்
மழை பெய்து கொண்டிருந்ததால், அருவியில் நிறைய
தண்ணீர் வரத்து இருந்தது. குளிக்கும்போது இருந்ததைவிட,
குளித்து முடித்து வெளியேறும் போது மிக அதிகமாக
தண்ணீர் விழுந்தது. கோதையாறு என்ற ஆறுதான் திற்பரப்பு
அருவியாக விழுகிறது. அருவியின் மேலே இந்த ஆறு
சமதளத்தில் ஓடிவருகிறது. அங்கு ஒரு யானையைக்
குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அதை வேடிக்கைப் பார்ப்பது
நன்றாக இருந்தது. இங்கு ஒரு சிவாலயம் உள்ளது. மேலும் ஒரு
சிறுவர் பூங்காவும் உள்ளது. இதுவும் ஒரு சிறந்த சுற்றுலாத்
தலமாகவும், படப்பிடிப்பு இடமாகவும் உள்ளது.
