காதல் கல்யாணம் - II

சனி, செப்டம்பர் 04, 2010

                போன பதிவின் தொடர்ச்சியாக, என் தோழியின் காதல் வாழ்க்கைக் கதையின் மீதிப்பகுதியை இதில் எழுதுகிறேன்.
இனி அவள் கூறியவை, " குழந்தைப் பிறந்ததுக்கப்புறமாவது, எல்லாம் சரியாகும்னு நெனச்சேன். அந்த நம்பிக்கையிலதான், டெலிவரிக்கப்புறம் குழந்தையத் தூக்கிக்கிட்டுப் போனேன். அதுக்கப்புறமும் மாறவேயில்லை. அவர் செய்றதுதான் சரின்னு சொல்வார்; நான் ஏதாவது நல்ல விஷயம் சொன்னாக்கூட, அவர் நல்லதுக்குத்தான சொல்றோம்னு ஏத்துக்கமாட்டார்; பதிலுக்கு வார்த்தைகளாலக் காயப்படுத்துவார்; இதுவரைக்கும் என் வாழ்நாளில், அப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டிருக்கவே மாட்டேன். என் பணம், நான் சம்பாதிக்கிறேன்; அதவச்சு நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு சொல்வார். அவர் ஒண்ணு முடிவுபண்ணிட்டா, இடியே விழுந்தாலும் அத மாத்தவும் மாட்டார்; மாத்திக்கவும் மாட்டார். இப்படி ஒருநாள் எங்களுக்குள்ளப் பேச்சுவார்த்தை முற்றி, கடுமையான வார்த்தைகளை, ' நான் சொல்லாதீங்க எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு' னு சொல்லியும், சொன்னார். எனக்கு ரொம்ப மனசுக்குக் குத்திக்குத்திக் காண்பிக்குற மாதிரி இருந்தது. சொல்லாதீங்கன்னு கெஞ்சியும் அவர் கேட்கல. உன்மையிலயே, என் மேல பாசம் அவருக்கு இருக்கானு தெரியல. எதிரி மாதிரிதான் நடத்தினார். இதக்கேட்டா, 'நான் உனக்கு அது வாங்கிக்குடுக்கலையா? இது வாங்கிக்குடுக்கலையா?' னு சொல்றார். ' உங்ககிட்ட அன்பையும், பாசத்தையும்தான எதிர்ப்பாக்குறேன்; அதவிட வேற எனக்கு என்ன பெரிசு?' னு சொன்னா, அதக்கேட்கல. அதனால, குழந்தையத்தூக்கிக்கிட்டு, அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.

 படிக்கிற காலத்துல, எங்கூடப் படித்த ஒரு பையன், அவரோட Friend. அந்தப் பையன் என்னைக் காதலித்ததாகவும், அவனிடம் இவர், ' அவள் உனக்குக் கிடைக்கமாட்டாள்; நான் அவளைக் காதலித்துக் கல்யாணம் செஞ்சுகாட்டறேன்' னு Bet கட்டியிருக்கார். ' இதெல்லாம் விளையாட்டுக்குத்தான் அவனிடம் சொன்னேன். ஆனா, உண்மையிலயே உன்னைக் காதலிக்கிறேன்' னு ஒருநாள் சொன்னார். அவர் இப்படி நடந்துக்கிறதையெல்லாம் பார்க்கும்போது, அது உண்மையோனு எனக்குத் தோணுதுடி; ரொம்பப் பயமாயிருக்கு. இப்போ ரெண்டு வீட்டுலயும் பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு. ஒரு முன்னேற்றமும் இல்ல. நான் வந்து ரொம்ப நாளாகியும்,  ஃபோன்ல பேசும்போதுகூட, அன்பா, ஆதரவா பேசுறதில்ல. ஃபோன் பேசினாக்கூட சண்டதான்; சமாதானமாப் பேசமாட்டேங்கிறார்" என அவளுடைய நீண்ட கதையை, சொல்லிமுடித்தாள்.
 

               நானும் அவளிடம், " சண்ட வரும்போது நீயாவது விட்டுக்குடுத்துப் போயிருக்கலாமே" என்று கேட்டேன். அதற்கு அவள், " உனக்குத்தான் என்னப்பத்தித் தெரியுமேடி, நான் விட்டுக்குடுத்தாலும் அவர் என்னை  வார்த்தைகளாலக் கொல்லுறார்" எனக் கூறினாள். "இப்போ என்ன முடிவு பண்ணியிருக்க? அவர்கிட்டயிருந்து பிரியப்போறியா? இப்படிப்பட்டவரோட நீ வாழ்ந்து காலம்பூரா அழுதுக்கிட்டிருக்கப் போறியா?" எனக் கேட்டேன். "ஆசை ஆசையாக் கல்யாணம் பண்ணினது, பிரியறதுக்குத்தானா? அப்புறம் இந்தக் குழந்தையோட எதிர்காலம் என்ன ஆகும்?                 
               என்னடா, அவரப்பத்திக் குறையா சொல்றேன்னு நீ நெனைக்கலாம். நல்ல விஷயங்கள் நிறைய செஞ்சாலும், அவர் பேசற வார்த்தைகள் முன்னாடி அதெல்லாம் அழிஞ்சு போயிடுது. எங்கிட்டயும் நிறைய தவறுகள் இருக்கு. அதையெல்லாம் நானும் மாத்திக்கிட்டு, அவரோட சேர்ந்து வாழணும்னுதான் ஆசை. தினமும் அவர்கிட்டயிருந்து ஒரு SMS வராதா,  Phone call வராதானு காத்துக்கிட்டிருக்கேன். அவர் பிசியா இருக்கறதால், நான் அவருக்கு Call பண்ணாலோ, SMS பண்ணாலோ அவருக்குக் கோபம்தான் வரும்; சண்ட போடுவார். திரும்பத்திரும்ப அவர்கிட்ட நான் கெஞ்சிக்கேட்குறது இதுதான், கடுமையான, மனசுப்புண்படும்படியான வார்த்தைகளைச் சொல்லாதீங்க; என்னைப் புரிஞ்சிக்கோங்கன்னுதான். அவருக்கு அந்தச்சொற்கள் சாதாரணமா இருந்தாலும், கேட்குற எனக்கு ரொம்பக் காயப்படுத்துதுடி. எவ்வளவு நாளானாலும், அவர் மனசுமாறி, என்னைத்தேடி வருவார்; அவரை நம்பி, அவருக்காகவே நான் இருக்கேங்கிறதப் புரிஞ்சிக்கிட்டு, நான் தேவைனு வருவார்; அதுக்காகக் காத்துட்டிருக்கேன்" என அவரை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

 நானும் அவளிடம், " உன் நம்பிக்கை வீண்போகாது; கண்டிப்பாகச் சீக்கிரம் அவர் உன்னைப் புரிந்துகொண்டு உன்னைத்தேடி வருவார்; நீயும் சந்தோஷமாக அவருடன் போகப்போகிறாய்" என ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். வீட்டிற்கு வந்ததும் இரவெல்லாம் அவளை நினைத்துத் தூக்கமே வரவில்லை. நானும் அவளும் சேர்ந்துப் படிக்கும்போது, அவள் ரொம்ப அமைதியான, பயந்த சுபாவமுள்ள பெண்; யாரிடமும், அதிர்ந்தும் பேசமாட்டாள்; அதிகமாகவும் பேசமாட்டாள். எல்லா ஆசிரியர்களிடமும் நன்கு படிக்கும் பெண்; நல்ல ஒழுக்கமுள்ள மாணவி என்று பெயரெடுத்தவள். அவளுக்கா இந்த நிலைமை? என நினைக்கும்போது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. இப்படி எல்லாரிடமும் நல்ல பெயர் எடுத்து என்ன பிரயோஜனம்? கணவனிடம் அவளால் நல்ல பெயர் எடுக்கமுடியவில்லையே? இருப்பினும், அவளது நம்பிக்கை வீண்போகாது. இன்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் விவாகரத்துத் தொடர்பாக ஏகப்பட்ட செய்திகள் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை காதல் கல்யாணங்கள்தான். காதலித்துக் கல்யாணமும் பண்ணி, பிரிவதற்குத்தானா வாழ்க்கை? இந்தத் தோல்வியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் தான் மறக்கமுடியுமா? இதைப் புரிந்துகொள்ளுமா. இன்றைய சமுதாயம்? இந்த நிலைமை என் தோழிக்கு வந்துவிடக்கூடாது. அவளது நம்பிக்கையின்படி, அவளது கணவன் சீக்கிரம் மனது மாறி, அவளைக் கூட்டிச்செல்ல வேண்டுமெனத் தினமும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். என்னைப் பொருத்தவரை லவ் மேரேஜோ, அரேஞ்ஜுடு மேரேஜோ ஒருவருக்கொருவர் நன்குப் புரிந்து கொண்டால் சண்டைகள் வராது; வாழ்க்கையும் இனிக்கும். இதற்காக தினமும் சிறிது நேரமாவது அவர்கள் ஒதுக்க வேண்டும். அதைச் செய்வார்களா?

3 comments:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ரொம்ப நல்லவங்களா இருந்தாலும் இதுதான் கதி..

பேசாதீங்க னு கெஞ்சுவதை விட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் போக பழகிக்கலாம்..

துணையை அதிக்மாய் கெஞ்சி மாற்ற முயலாமல் , நம் செயல் மூலம் மாற்ற முயலலாம்.

இவர் கெத்தை ஏன் விட்டுத்தந்தார்..

அன்பெல்லாம் அன்பா இருப்பவங்களுக்குத்தான் உதவும்..

கொஞ்சம் துணிவை வரவழைக்க சொல்லுங்க..

கெஞ்சினா மிஞ்சுவார்.. மிஞ்சினா கெஞ்சுவார்..:)

மீண்டும் இணைய வாழ்த்துகள்

விக்னேஷ்வரி சொன்னது…

பாவம் உங்கள் தோழி. செண்டியா பேசிட்டிருக்காம, பொறுக்க முடியலைன்னா, எல்லை மீறுச்சுன்னா போடான்னு வர சொல்லுங்க. யாராலேயும் யாரோட வாழ்க்கையும் நிக்கப் போறதில்லை. அவங்கவங்க வாழ்க்கை தான் அவங்கவங்களுக்கு. அதுல இப்போல்லாம், புருஷன் - பொண்டாட்டி கூட அந்நியமாகிடறாங்க.

Samuthra Senthil சொன்னது…

நிறையபேர் இப்படித்தான் இருக்கிறார்கள். என்ன செய்வது? காலம்தான் உங்கள் தோழியைப் போன்றவர்களுக்கு ஆறுதலையும், தோழியின் காதல் கணவரைப் போன்றவர்களுக்கு அறிவுரையும் சொல்ல வேண்டும்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails