பள்ளி விடுமுறைநாட்களும் பாட்டி வீடும்...

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

                எங்களுடைய அம்மாவுக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர்ப் பக்கம். அவர்களுடன் பிறந்தவர்கள் நிறையப் பேர் என்பதால் பெரிய குடும்பம். அவர்கள் எல்லாரும் வெவ்வேறு ஊரில் இருந்ததால் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை விடுமுறைகளில் தான் பாட்டி வீட்டுக்குச்செல்வது வழக்கம். நாங்கள் குழந்தைகள் எல்லாரும் வருடா வருடம் அந்த சம்மர் லீவுக்காகக் காத்திருப்போம். அந்த ஒரு மாதமும் போவதே தெரியாது; அவ்வளவு ஜாலியாக இருக்கும்!


               எங்கள் ஊரில் இருந்து பாட்டி ஊருக்குப் பஸ்சில் போகும் பொழுதே குதூகலம் தொற்றிக்கொள்ளும். அதுவும் அந்த ஊர்ப் பச்சையான வயல்கள், ஆறு, குளம் இவற்றையெல்லாம் பஸ்சின் ஜன்னல் வழியே  பார்த்துக் கொண்டே போவது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!



                  அந்தக் காலத்து ஓடு போட்ட, முற்றங்களும் தூண்களும், நடுவே பெரிய ஊஞ்சலும் உள்ள வீடு எங்கள் பாட்டி வீடு. வீட்டின் முன்புறம் தூண்களும் திண்ணைகளும், பின்புறம் பெரிய தோட்டமும் இருக்கும். அந்தத் திண்ணையில் உட்கார்ந்து பல்லாங்குழி, தாயம் விளையாடுவோம்; முற்றத்தைச் சுற்றிச்சுற்றி ஓடிப் பிடித்து விளையாடுவோம். யாராவது சேட்டைகள் பண்ணினால் முற்றத்துக் கம்பிகளில் தொங்கவிடும் தண்டனையும் உண்டு. கீழே இறங்க முடியாமல் தவித்து, கை வலித்து அழுகை வரும். எங்களுக்குள் சண்டைகளும் பல வரும். அதற்காக அவரவர் அம்மாவிடம் அடி வாங்குவோம். உடனே சமாதானமும் ஆகிவிடுவோம். நாங்கள் லீவுக்கு வருவது தெரிந்தவுடன் பாட்டி நிறைய பலகாரங்கள் செய்து வைத்திருப்பார்கள். அவற்றையெல்லாம் பெரிய ஊஞ்சலில் எல்லாரும் உட்கார்ந்து கொண்டு ஊஞ்சலாடிக்கொண்டே சாப்பிடுவோம்.


 வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் தென்னை முதல் மாமரம் வரை நிறைய மரங்களும், மல்லிகை, கனகாம்பரம், செம்பருத்தி போன்ற பூச்செடிகளும் உண்டு. அங்கு பாம்பு, கீரிப்பிள்ளை மற்றும் பலவகையான பறவைகளும் வரும். நான் நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, கட்டு விரியன் எனப் பல வகையான பாம்புகளையும் பார்த்ததே அங்குதான். மதியச்சாப்பாடு முடிந்ததும் தோட்டத்தில் வட்டமாக உட்கார்ந்து ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டே சீட்டு, கேரம், தாயம் விளையாடுவோம்; சொப்புச் சாமான் வைத்து விளையாடுவோம்; கிரிக்கெட், டென்னிஸ் விளையாடுவோம்; மரங்களிடையே கயிற்று ஊஞ்சல் ஆடுவோம்.

பின்னர், பக்கத்திலுள்ள ஆற்றிற்கு அல்லது குளத்திற்கு குளிக்கச்செல்வோம். அங்கு எனக்குப் படித்துறையில் உட்கார்ந்து எல்லாருடைய துணிகளையும் காவல் காப்பதுதான் வேலை.

              பாட்டி வீட்டின் முன்புறம் ஒரு கோவிலும், அதன் பின்னால் ஒரு குளமும் உண்டு. அந்தத் தெருவும் ரதவீதி போல பெரியதாக இருக்கும். அவ்வளவு பெரிய தெருவில் பெரிய வண்டிகள் எதுவும் போகாது. அதனால் மாலைவேளையில், தெருவில் மற்ற வீட்டுப்பிள்ளைகளுடன் நாங்களும் சேர்ந்து இருட்டும் வரை விளையாடுவோம். இருட்டிய பின், தெருவிலேயே வட்டமாக உட்கார்ந்து பேய்க்கதைகள் பேசுவோம். அதனால் இரவில் பேய்க்கனவுகள் வந்து பயமுறுத்தியதும் உண்டு. இவ்வாறு நேரம் போவதே தெரியாமல் சாப்பாடு, தூக்கம் கூட இல்லாமல் எப்போதும் விளையாட்டுதான் எங்கள் உலகமாக இருந்தது. லீவு முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது அழுகை அழுகையாக வரும். பஸ்சில் அழுது கொண்டே வருவேன். லீவு முடிந்து பள்ளி ஆரம்பித்ததும், முதல்நாள் புதுவகுப்பில் நாங்கள் தோழிகள் ஒவ்வொருவரும் அவரவர் ஊர்க்கதைகளைப் பேசுவோம். ஒவ்வொரு வருடமும் அடுத்த விடுமுறைக்கான காத்திருப்புடன் இது தொடரும். இன்று பாட்டியும் இல்லை; பாட்டி வீடும் இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் எங்கள் மனதிலிருந்து நீங்கவில்லை.
              நாங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது வெவேறு ஊர்களிலும், வெளிநாடுகளிலும் இருப்பதால், முன்பு போல வருடத்துக்கு ஒருமுறைகூட சந்தித்துக்கொள்ள முடிவதில்லை. மீண்டும் அந்தப் பள்ளி விடுமுறைநாட்கள் வரப்போவதில்லை; அந்த இன்பம் இனி உலகின் எதற்கும் ஈடாவதுமில்லை. இனி வரும் காலத்தில் எங்கள் பிள்ளைகளுக்கு அவை எல்லாம் கிடைக்குமா எனத்தெரியவில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்மயமாகி வருவதால் விளையாட்டுக்களும் கம்ப்யூட்டர்மயமாகி விட்டன. எனவே வாய்ப்புகளும் குறைவாகத்தான் உள்ளது.

1 comments:

prenitha சொன்னது…

nice

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails